ராமேஷ்வரத்தில் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ‘குப்பைகளை எரித்துச் சாம்பலாக்கி ஆற்றலாக மாற்றும் குப்பை எரிவுலைகளை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நிறுவவிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்காக ராமேஷ்வரத்தில் இந்த மாத இறுதிக்குள் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
கெடுவாய்ப்பாக சூழலியல் அடிப்படையில் பார்த்தால் இது மிகவும் ஆபத்தான முடிவாகும். சாம்பலாக்கிகள் அல்லது குப்பை எரிவுலைகள் என்று சொல்லப்படும் இந்த அமைப்புகளில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டோ அல்லது மொத்தமாகவோ எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து சில வேறுபாடுகளோடு பைராலிசிஸ், பிளாஸ்மா, கேசிபிகேஷன் போன்ற கவர்ச்சியான பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.
Incineration எனப்படும் சாம்பலாக்கிகளைவிட உயர் வெப்பநிலையில் குறைந்த ஆக்சிஜன் சூழலில் இவற்றில் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. எனினும் சூழல் பார்வையில் இவை சாம்பலாக்கிகளிலிருந்து பெரிதாய் வேறுபட்டவையல்ல. வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட சூழல் விழிப்புணர்வால் இத்தகைய தொழில்நுட்பங்கள் வீழ்ச்சியைச் சந்தித்துவரும் சூழலில் இவை வளரும் நாடுகளைக் குறிவைத்து அரசுகளைத் தம் வலையில் வீழ்த்துகின்றன. தமிழகத்திலும் குறிப்பாகச் சென்னையில் ஏராளமான பைராலிஸிஸ் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு அவை செயல்வடிவம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
மேலோட்டமாக இது குப்பைகளை முழுமையாக அழித்துவிட்டது போலத் தோன்றினாலும் உண்மையில் நெகிழி மற்றும் இதர குப்பைகளின் சிதைவுறாத நச்சு வேதி மாசுக்கள் சாம்பலாகவோ அல்லது கெட்டியான திடப்பொருளாகவோ இந்த உலைகளில் எஞ்சுகின்றன. இவற்றைப் பாதுகாப்பாக நம்மால் கையாள முடியாது. இன்னொருபுறம் ஆலையின் புகைபோக்கிகள் வழியாக வெளியேறும் புகை நேரடியாக சுற்றுப்புறத்தில் வாழும் மக்களைப் பாதிக்கிறது.
பல சதாப்தங்களுக்கு முன்பே காலாவதியாகிப்போன இந்த தொழில்நுட்பத்தை ஏதோ நவீன கண்டுபிடிப்பு போல அரசுகளும் தனியார் பெருநிறுவனங்களும் இந்தியாவில் முன்மொழிகின்றன. ஒன்றிய அரசும் ஏராளம் மானியங்களை இதற்கு அள்ளி வழங்குகிறது. நெகிழியில் கனவுலோகங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட தனிப்பண்புகளுக்காகச் சேர்க்கப்படுகின்றன என்பதும் அவற்றில் பல எரித்தாலும் புதைத்தாலும் சிதைவுறுவதில்லை எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சாம்பலாக்கிகள் ஏன் ஒழிக்கப்படவேண்டியவை?
1. சாம்பலாக்கிகள் குப்பைகளை ஒழிப்பதில்லை
சாம்பலாக்கிகள் குப்பைகளை ஒழிப்பதில்லை. ஆற்றலை எப்படி அழிக்கவோ ஒழிக்கவோ முடியாதோ – எப்படி அதை இன்னொரு வடிவத்துக்கு மட்டுமே மாற்ற முடியுமோ அதே போன்று நச்சுக் குப்பைகளை அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. மாறாக அவற்றை இன்னொரு வடிவத்துக்கு மாற்ற மட்டுமே முடியும். குறிப்பாக இந்த குப்பை எரிவுலைகள் குப்பைகளைச் சாம்பலாகவும் நச்சு வாயுக்களாகவும் மாற்றுகின்றன. இதில் வெளிப்பார்வைக்கு பெரிய பயனளிப்பதாகத் தெரிவது என்னெவென்றால் குப்பைகளின் கொள்ளளவு வெகுவாகக் குறைக்கப்படுகின்றது என்பது மட்டும்தான்.
2. சாம்பலாக்கிகள் இன்னும் அதிகச் செறிவூட்டப்பட்ட நச்சுச் சாம்பலை உருவாக்குகின்றன.
குப்பைகள் எரிக்கப்படும்போது அதன் கொள்ளளவு குறைவதால் மேலும் அதிகச் செறிவான நச்சுத்தன்மையுள்ள சாம்பல், தார், நீர்மம் போன்றவை எஞ்சுகின்றன. இவற்றைப் பாதுகாப்பாகக் கையாளவோ அழிக்கவோ இங்கு எந்த வழிமுறைகளும் இல்லை. எதற்காக கியான் சீ கப்பல் இந்த நச்சுக் குப்பையோடு உலகைச் சுற்றி வந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. எரிக்கப்படும்போது சில கழிவுப்பொருட்கள் நேரடியாகத் தீங்கற்ற சாம்பலாக மாற்றம் பெற்றாலும் கனவுலோகங்கள் போன்ற நச்சுப்பொருட்கள் எந்த மாற்றமும் அடைவதில்லை.
3. சாம்பலாக்கிகள் நச்சு வாயுக்களை உமிழ்கின்றன
சாம்பலாக்கிகள் டயாக்சின், பியூரான்கள் உட்பட பல நச்சு வாயுக்களை உமிழ்கின்றன. சாம்பலாக்கிகளின் வாயுக்களை ஓரளவுக்கு வடிகட்டித் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பம் பெயரளவில் இருந்தாலும் அது மிக அதிக செலவு பிடிக்கக்கூடியது என்பதோடு இந்தியா போன்ற நாடுகளில் இவை மீறப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை ஐஐடியின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் இந்துமதி தெரிவிக்கிறார். இதன் வடிகட்டிகள் எவ்வளவு திறன் வாய்ந்ததாக இருக்கின்றனவோ அவ்வளவு செறிவானதாக அதன் திடக்கழிவுகள் மாறுகின்றன. வடிகட்டிகளின் திறனைப் பொறுத்து வெளியேற்றப்படும் வாயுக்களிலோ அல்லது எஞ்சும் கழிவிலோ நச்சுப்பொருட்கள் சேர்கின்றன. முழுமையாக வடிகட்டப்படாத நிலையில் இவை நேரடியாகக் காற்றின் மூலம் நீர்நிலைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக உணவில் படிந்தோ பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
4. சாம்பலாக்கிகள் கொடுக்கும் மின்சாரம் மிக அதிக சூழல் மாசை உருவாக்குகிறது.
இன்று ‘குப்பையிலிருந்து மின்சாரம்’ (Energy from waste) என்பது ஏதோ ஒரு ஒளிமயமான உலகுக்கு இட்டுச்செல்லும் தொழில்நுட்பம் போல எங்கும் உச்சரிக்கப்படுகிறது. சாம்பலாக்கிகளிலிருந்து உருவாக்கப்படும் மின்சாரம் பசுமை மின்சாரம் அல்ல. நிலக்கரியைவிடப் பலமடங்கு கரிவளித்தடம்(carbon foot print) கொண்ட இந்த உற்பத்திச் செயல்பாடு சூழலுக்கு எவ்விதத்திலும் உகந்ததல்ல. தூய்மையான மின்சாரத்தை உருவாக்க இதைவிடச் சிறந்த பல மாற்றுகள் உள்ளன. இங்கு கழிவுகளை எரிக்கவே மின்சாரம் தேவைப்படுகிறது என்பதும் சில நேரங்களில் அவை பயன்படுத்தும் மின்சாரத்தைவிட உற்பத்தி செய்யும் மின்சாரம் குறைவாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. சாம்பலாக்கிகள் மூலப்பொருட்களை வீணாக்குகின்றன
சாம்பலாக்கிகளின் பயன்பாட்டால் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவதும் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தப்படுவதும் தடுக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் மீண்டும் பயன்படுத்தத்தக்க மதிப்புமிக்க மூலப்பொருட்கள் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றன.
6. சாம்பலாக்கிகள் குப்பைகளை அதிகரிக்கின்றன
சாம்பலாக்கிகளை சிறப்பாக இயங்கச் செய்யவேண்டுமானால் (குறிப்பாக மின்சாரம் அல்லது எரிபொருளுக்காக அவற்றைச் சார்ந்திருக்கும்போது) தொடர்ந்து குறிப்பிட்ட அளவுக்கான குப்பைகள் தினமும் தேவைப்படுகின்றன. சில ஐரோப்பிய நாடுகள் தம் சாம்பலாக்கிகளை இயங்கச் செய்ய அண்டை நாடுகளிலிருந்து குப்பையை இறக்குமதி செய்கின்றன. இதிலிருந்து கழிவில்லா உலகம் நோக்கிய பயணத்துக்கு சாம்பலாக்கிகள் எள்ளளவும் உதவாது என்று அறியலாம். இவை குப்பைகள் தொடர்ந்து பெருகுவதை ஊக்குவிக்க மட்டுமே செய்யும்.
7. சாம்பலாக்கிகள் மிகுந்த செலவு பிடிப்பவையாகவும் தொழில்நுட்ப போதாமையுடையவையாகவும் இருக்கின்றன.
பைராலிசிஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் கச்சா எண்ணெய் பெறமுடியும் என்பது உண்மைதான். ஆனால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நெகிழியின் மூலப்பொருளே கச்சா எண்ணெய்தான். எனவே மீண்டும் அதை எரித்து தரம்குறைந்த கச்சா எண்ணெயைப் பெறமுடியும். ஆனால் எண்ணெயை நெகிழியாக்கி நெகிழியை மீண்டும் எண்ணெயாக்கும் சிரமம் எதற்கு? அதற்கு ஏன் இத்தனைச் செலவுபிடிக்கும் கரி உமிழ்வு கொண்ட தொழில்நுட்பம்?
பல நாடுகள் குறிப்பாக மேலைநாடுகள் தம்முடைய நெகிழிக் குப்பையை எரிக்கும் சாம்பலாக்கிகளை மூடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இதுவரையிலும் நிறுவப்பட்ட எந்த சாம்பலாக்கியும் தொழில்நுட்ப ரீதியிலோ இல்லை சூழல் பார்வையிலோ சிறப்பாகச் செயல்படவில்லை. பொருளாதாரத்தில் நம்மைவிடப் பின்தங்கிய பாகிஸ்தானே சமீபத்தில் தன்னுடைய 13 பைராலிசிஸ் நிலையங்களை இடித்துத் தள்ளியிருக்கிறது. இம்மாதிரியானத் திட்டங்களை முளையிலேயே தமிழகம் கிள்ளி எறியவேண்டியது அவசியம்.
– ஜீயோ டாமின்
கூடுதல் தகவல்களுக்கு:
Gasification-Pyrolysis-and-Plasma-Incineration