குப்பை எரிஉலைகளால் வெப்பமாகும் நகரங்கள்; கொடுங்கையூர் குப்பை எரிஉலைத் திட்டத்தைக் கைவிடுக!

குப்பை எரிஉலைகள் அதிக மாசை உமிழும் என்றும் இதனால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்  தீங்கு உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளால் அவ்வுலை அமைந்திருக்கும் பகுதியின் வெப்பநிலை கணிசமாக உயரும் என்கிற அதிர்ச்சியளிக்கிற செய்தி ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

People’s Alliance for Waste Accountability (PAWA) என்கிற அமைப்பு 03.06.2025 அன்று “குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகள் மற்றும் நகர்ப்புற வெப்பம்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் (WTE) ஆலைகளை ஊக்குவிப்பதற்கான டெல்லியின் கழிவு மேலாண்மைக் கொள்கையின் குழப்பமான மற்றும் கவனிக்கப்படாத விளைவுகளை அம்பலப்படுத்துகிறது.

டெல்லியில் செயல்படும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகள் எவ்வாறு டெல்லியின் வெப்பத்தை அதிகரிக்கின்றன என்பது குறித்து முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவாகும். டெல்லியின் ஓக்லா, பாவனா, தெஷ்கண்ட், காசிப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் குப்பை எரிஉலைகள் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுக்கு (Urban Heat Island (UHI)) அளிக்கும் பங்கு குறித்து இவ்வாய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதிக பசுமைப் பரப்பைக் கொண்ட கிராமங்களைக் காட்டிலும் அடர்த்தியான நகர்ப்புறங்களில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அதிக வெப்பத்தைத் தக்கவைக்கின்றன. இதுவே நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு என்றழைக்கப்படுகிறது. நகரங்களில் உள்ள அதிகப்படியான கான்கிரீட் கட்டிடங்கள் வெப்பத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்வதாலும், தேவையான மரங்கள் மற்றும் பசுமையான இடங்கள் குறைவு என்பதாலும், வாகனங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளிலிருந்து கூடுதல் வெப்பம் உற்பத்தி ஆகிறது.

இவ்வாய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்:

இவ்வறிக்கையானது தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் பொதுமக்களின் வாக்குமூலங்களைக் கொண்டு குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உலைகளின் ஆபத்தைப் பதிவு செய்துள்ளது.

 

  • அனல்மின் நிலையங்களுக்கு அருகிலிருப்பதைவிட குப்பை எரிஉலைகளுக்கு அருகில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால் தங்களது வாழ்விடம் ஒரு வெப்பச்சிறை அல்லது எரிவாயு அறை போன்றிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
  • அன்றாடம் சுமார் 398 மில்லியன் கனமீட்டர் வாயுவானது 200 °C வெப்பநிலையில் வெளியேறுகிறது.
  • சுமார் 12,325 டன் கார்பன் டை ஆக்சைடு அன்றாடம் குப்பை எரிஉலைகளிலிருந்து உமிழப்படுகிறது.

இப்பாதிப்புகள் குறித்து பலர் எச்சரித்தும் டெல்லி மாநகராட்சி 2027ஆம் ஆண்டுக்குள் தனது குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகளின் திறனை 2 மடங்காக உயர்த்தவுள்ளது ”அதிகளவிலான வெப்பம் மற்றும் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதால் இவ்வுலைகள் தங்கள் பகுதிகளில் வெப்ப மண்டலங்களை உருவாக்குவதாகத் தெரிவிக்கிறார் குப்பைகள் சேகரிப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த வீரேந்தர் குமார்.

“டெல்லி ஐ.ஐ.டி.யின் ஆய்வுகள் பதார்பூர் அனல்மின் நிலையத்தால் அப்பகுதியின் வெப்பநிலை உயர்ந்ததாக நிறுவியிருந்தது. அனல் மின் நிலையத்தைவிட குப்பை எரிஉலைகளில் அதிக வெப்பம் வெளியாகும் என்பதால் இது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை அதிகரிக்கும்” என்கிறார் Centre for Financial Accountability யைச் சேர்ந்த சைத்தன்யன் தேவிகா குலசேகரன்.

டெல்லியில் உடனடியாக குப்பை எரிஉலைகளின் விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியுள்ளது கழிவு பொறுப்புடைமைக்கான மக்கள் கூட்டணி.

கடந்த 20 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பநிலை அதிகரிக்கும் போக்கு நிலவுவதாக 2024ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக்குழு வெளியிட்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நேர வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸாக பதிவாகும் பகுதிகளில் 59% வெப்பநிலை உயர்ந்துள்ளது. இப்போக்கானது அடர்த்தியான நகர்ப்புற இடங்களைக் கொண்ட சென்னை போன்ற நகரங்கள் பகல் நேர வெப்பத்தை இரவிலும் தக்க வைப்பதைக் காட்டுகிறது. அடர்த்தியான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குறைவான பசுமைப் பரப்பு ஆகியவற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவின் தீவிரமானது 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளதாக திட்டக்குழுவின் ஆய்வு எச்சரித்திருந்தது.

ஏற்கெனவே வடசென்னையில் 40க்கும் அதிகமான சிவப்பு நிற வகைப்பாடு கொண்டு அதிக மாசுக்களை உமிழும் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் கொடுங்கையூரில் குப்பை எரிஉலை அமைக்க முயல்வது அப்பகுதியின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கக்கூடும்.

முக்கியமான இவ்வாய்வறிக்கையைக் கவனத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி கொடுங்கையூரில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள குப்பை எரிஉலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரசிடம் வலியுறுத்துகிறோம்.

தொடர்புக்கு:

ஜீயோ டாமின் – 7708020668

முழு அறிக்கைக்கு: https://www.cenfa.org/burning-wastewarming-cities/

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments