இந்தியாவின் காடுகள் பரப்பை அறிய புதிய ஆய்வு முறை தேவை

Mukurthi Forest
Image: TamilNadu Forest Department

இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து ஒன்றிய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி  சமீபத்திய ஆய்வின் முடிவுகளை ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

India_State_of_Forest_Report__2021

அவ்றிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் காடுகள் மற்றும் மரங்கள் பரப்பு 2,261 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் காடுகளின் பரப்பு 1,540 சதுர கிலோமீட்டர் மற்றும் மரங்களின் பரப்பு 721 சதுர கிலோமீட்டர் ஆகும்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

• இந்தியாவின் தற்போதைய காடு மற்றும் மரங்களின் பரப்பு 8,09,537 சதுர கிலோமீட்டராகும். இதில் 7,13,789 சதுர கிலோமீட்டர்(21.71%) காடுகள் பரப்பு மற்றும் 95,748 சதுர கிலோமீட்டர்(2.91%) மரங்களின் பரப்பாகும்.
• இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 80.9 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு காடுகள் மற்றும் வனங்கள் பரப்பளவு உள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பில் 24.62% ஆகும்.
• கடந்த 2019 அறிக்கையுடன் ஒப்பிடும்போது ஆந்திரா(657sq km), தெலங்கானா(632 sq km), ஒடிஷா(537 sq km), கர்நாடகா(155 sq km), ஜார்கண்ட்(110sq km) ஆகிய மாநிலங்கள் வனப்பரப்பு அதிகரித்திருக்கும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளது.
• அலையாத்திக் காடுகளின் பரப்பு 17 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 4,992 சதுர கிலோமீட்டர் அளவிற்கு அலையாத்திக் காடுகள் உள்ளன.
• ஒடிஷா(8 sq km), மஹாராஷ்டிரா(4 sq km), கர்நாடகா(3sq km) ஆகிய மாநிலங்கள் அலையாத்திக் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ள மாநில பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
• இந்தியாவின் காடுகளில் உள்ள மொத்த கார்பன் இருப்பு 7,204 மில்லியன் டன்னாகும்.
• 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் நிலை

தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோமீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் 20.31 விழுக்காடு ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 55.21 சதுர கிலோமீட்டர் மட்டுமே தமிழ்நாட்டில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.

மரங்களின் பரப்பைப் பொறுத்தமட்டில் 2019ஆம் ஆண்டு 4,830 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில் தற்போது 406 சதுரகிலோமீட்டர் குறைந்து தற்போதைய கணக்கெடுப்பின்படி 4,424 சதுர கிலோமீட்டராக உள்ளது.

2019ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில் சென்னை, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம்,விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வனப்பரப்பு குறைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு 3,605 சதுர கிலோமீட்டராக இருந்த மிகவும் அடர்த்தியான காட்டின் பரப்பளவு 12 சதுர கிலோமீட்டர் குறைந்து 3,593 சதுர கிலோமீட்டராக உள்ளது.
கணக்கிடப்பட்ட வனப்பரப்பில் 1,515 சதுரகிலோமீட்டர் பரப்பில் Lantana Camara உள்ளிட்ட 5 வகையான அயல்தாவர வகைகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அயல் தாவரங்கள் காட்டின் சூழல் அமைப்பையே சிதைக்க வல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து வனப்பரப்பை இழந்த வடகிழக்கு மாநிலங்கள்

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 1,020 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காடுகளை இழந்துள்ளன. இந்த எட்டு மாநிலங்களும் இந்தியாவின் ஒட்டுமொத்த வனப்பரப்பில் 23.75% பரப்பைக் கொண்டுள்ளன. மணிப்பூரில் அதிகபட்சமாக 249 சதுர கிலோமீட்டருக்கும், நாகாலாந்தில் 235 சதுர கிலோமீட்டருக்கும் வனப்பரப்பு குறைந்துள்ளது. பயிரிடுதலில் ஏற்பட்ட மாற்றமே இந்த அளவிற்கு வனப்பரப்பு குறைந்தமைக்கு காரணம் என ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆய்வு முறையில் உள்ள குறைபாடுகள்

இவ்றிக்கையில் உள்ள பல்வேறு தரவுகளும் வருத்தமளிக்கின்ற வகையில் அமைந்துள்ள நிலையில் இந்த ஆய்வே முறையானது இல்லை என்கின்றனர் சில நிபுணர்கள். சூழலியல் ஆய்வாளர் மதுசூதன் இதுகுறித்து விரிவான தகவல்களை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது கருத்தின்படி அஸ்ஸாமின் சோனித்பூர், மேற்குவங்கத்தின் நக்சல்பாரி, தமிழ்நாட்டின் வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டங்கள், பொள்ளாச்சியின் தென்னை மரத்தோட்டங்கள், அந்தமானில் உள்ள கவரத்தி முழு தீவு, டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிகள் என பல பகுதிகளும் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன என்கிறார். மேற்கூறிய இடங்கள் அனைத்தும் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்தியா முழுவதும் பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் இவ்வாறாக காடுகளாக காட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஜெய்சால்மரின் பாலைவனப் பரப்பு, கட்ச் பகுதியில் உள்ள அயல்தாவரங்கள் கூட காடுகள் பரப்பாக கணக்கிடப்பட்டுள்ளதாக மதுசூதன் குறிப்பிடுகிறார்.

சென்னையில் கூட இதேபோன்று பல பகுதிகள் காடு என வரையறுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் புவியியல் தகவல் நிபுணர் ராஜ்பகத். குறிப்பாக சென்னையின் அண்ணா மேம்பாலம், ஜார்ஜ் கோட்டை, சாஸ்திரி பவன், அரசு அருங்காட்சியகம், அரசு கலைக் கல்லூரி போன்ற இடங்கள் அனைத்தும் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாக் கூறியுள்ளார்.

 

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களுக்காக காடுகளின் நிலப்பயன்பாட்டை மாற்றும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏதுவாக காடுகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்ளை திருத்தம் செய்து நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையினையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் காடழிப்பைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் கையெழுத்திட்ட ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திடவில்லை. ஒருபக்கம் வணிக லாபத்திற்காக வேகமாக காடுகளை அழித்துக் கொண்டே மறுபுறம் தவறான ஆய்வுகளைச் செய்து காடுகளின் பரப்பளவை அதிகரித்துக் காட்டும் மோசடியான வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்வது கண்டனத்திற்குரியதாகும்.

2001ஆம் ஆண்டிலிருந்தே காடுகளின் பரப்பளவை அதிகரித்துக் காட்டுவதற்கான மோசடி நடவடிக்கைகளை ஒன்றிய வனத்துறை செய்து வருகிறது. மூத்த பத்திரிகையாளர் நிதின் சேதி பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மோசடி குறித்து எழுதி வருகிறார்.  இந்தியாவின் காடுகள் குறித்த நேர்மையான ஆய்வை மேற்கொள்ள சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை நியமித்து ஆய்வு மேற்கொள்ளும் முறைகளை ஒன்றிய அரசு மாற்றியமைக்க வேண்டும். அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

முழு அறிக்கைக்கு: https://fsi.nic.in/forest-report-2021-details

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments