கொதிக்கும் பெருடங்கடல்கள்.. அதிகரிக்கும் பேரிடர்கள்… இந்தியாவின் முதல் காலநிலை அறிக்கை சொல்வது என்ன?

பூமியின் காலநிலை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றது. அதற்கான அடிப்படைக் காரணம், மனித இனம் மேற்கொள்கின்ற இயற்கைக்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகள்தாம். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. வளிமண்டலத்தில் தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களின் விகிதத்தை கூட்டிக் கொண்டேயிருக்கின்றோம். அதன் விளைவாக வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சியிலிருந்து அடி ஆழம் வரை வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படுகின்ற தாக்கத்தைக் கண்கூடாக நம்மால் காணமுடிகின்றது. உடல் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வியல் தரம், பொருளாதாரம் என்று அனைத்தையுமே அது பாதிக்கின்றது. காலநிலை மாற்றம் என்பது உலகளவில் அனைத்துப் பகுதிகளிலும் நடப்பதாக இருந்தாலும்கூட, அதற்கான தூண்டுதல் பூமி முழுக்கச் சமமாக நடைபெறுவதில்லை.

 

புவியின் ஏதோ ஓர் மூலையில் நடக்கின்ற செயல்பாடுகள், பசுமை இல்ல வாயுக்களின் அளவை அதிகரிக்கவே, அது வேறு ஏதோவோர் மூலையில் இருக்கின்ற வேறொரு பகுதியில் பாதிப்புகளை உண்டாக்குகின்றது. அதன் விளைவாக, கடந்த 8,03,719 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக நம்முடைய வளிமண்டலத்தில் இப்போது கரிம வாயுவின் அடர்த்தி அதிகரித்துள்ளது. ஆண்டுக்குச் சராசரியாக உலகளவில் 36 பில்லியன் டன் கரிம வாயுவை மனிதர்கள் வெளியேற்றுகின்றார்கள். அதில் இந்தியாவுடைய பங்கு சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 3 ஜிகாடன். இந்த விகிதத்தைக் குறைக்க வேண்டுமென்றும் வளிமண்டலத்தில் கரிம வாயுவின் அடர்த்தியைக் குறைக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களே, அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றது, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய நிலப்பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு (Assessment of Climate Change over the Indian Region) குறித்த ஆய்வறிக்கை.

 

இத்தகைய ஓர் ஆய்வை, இந்திய நிலவியல் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. இந்தியாவில் அரசு தரப்பிலிருந்து அப்படியோர் அறிக்கை வெளியாகியுள்ளது இதுவே முதல்முறை.

 

18-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டின் முதல் பாதி வரையிலுமே மனித இனம் பல்வேறு சவால்களைச் சந்தித்தன. ஆனால், 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, 21-ம் நூற்றாண்டில், தற்போதுவரை மனித இனம் சந்திக்கின்ற பெரிய சவால், மனிதத் தலையீடுகளால் ஏற்படுகின்ற இயற்கைச் சீர்குலைவுகளைக் கட்டுப்படுத்துவதுதான். இதை வேறு விதமாகவும் சொல்லலாம். மனித இனத்திடமிருந்து இயற்கை தன்னைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய சவாலாகவே இருந்துவருகின்றது. புவி வெப்பநிலை உயருதல், நேரடியாகக் கரிம வாயு மற்றும் மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. இதற்கான காரணங்கள்தாம் காற்று மாசுபாடு, காடழிப்பு, நிலவியல் மாற்றங்கள், நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்துமே.

 

19-ம் நூற்றாண்டிலிருந்தே அதற்கான பங்களிப்புகளை நம் முன்னோர்கள் சிறப்பாகச் செய்து வந்துள்ளனர். கரிமம், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஃப்ளூரினேடட் வாயுக்கள் போன்றவற்றை வளிமண்டலத்தில் அதிகரிக்கும் வேலையை அவர்கள் தொடங்கி வைத்தனர். அவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டுச் சென்ற பாதையில், அதை நாம் தொடர்ந்துகொண்டிருக்கின்றோம். இதில் அதிகளவில் வெளியேற்றப்படுவது கரிம வாயு. காடழிப்பு, புதைபடிம எரிபொருள், நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றம் மற்றும் இதர மனித நடவடிக்கைளான தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்ற பல்வேறு ‘வளர்ச்சி’த் திட்டங்கள் அதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. முன்னரே சொன்னதுபோல், கடந்த 8,03,719 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக நம்முடைய வளிமண்டலத்தில் இப்போது கரிம வாயுவின் அடர்த்தி அதிகமாக இருக்கின்றது. 8,03,719 ஆண்டுகளுக்கு முன்னர் வளிமண்டலத்தில் 207.29 ppm கரிம வாயு இருந்தது. 2018-ம் ஆண்டுக் கணக்குப்படி, 408.52 ppm ஆக உள்ளது. 1814-ம் ஆண்டின்போது, பூமியின் வளிமண்டலத்தில் 286.84 ppm கரிமம் இருந்தது. வெறும் 79.55 ppm அதிகரிக்க பூமி எடுத்துக் கொண்ட காலம், 8,03,515 ஆண்டுகள். அதுவே, அடுத்த 204 ஆண்டுகளில், வளிமண்டலத்திலிருந்த கரிம அடர்த்தியை மனித இனம் 121.68 ppm ஆக உயர்த்திவிட்டது.

 

800,000 ஆண்டுகளில் இருந்ததைவிடச் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகப் பூமியை நாம் வெறும் 200 ஆண்டுகளில் சூடாக்கிவிட்டோம். இந்தப் பிரச்னையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச காலநிலை உச்சி மாநாடு நடத்தி, பூமியின் நிலை குறித்த அறிக்கை வெளியிட்டு, ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தத் தொடங்கியது. அந்த எச்சரிக்கை மணியை ஜெர்மனி போன்ற சில நாடுகள் காது கொடுத்துக் கேட்டு, அதற்குரிய வகையில் செயல்படத் தொடங்கின. பிரான்ஸ், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டின் காற்றையும் நீரையும் சுத்தமாக வைத்துக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளுக்குத் தங்கள் ஆபத்தான, அதிகம் மாசுபடுத்துகின்ற தொழிற்சாலைகளை, அதிக இயற்கை வளங்களைப் பயன்படுத்தக்கூடிய திட்டங்களை இடம் மாற்றத் தொடங்கின. இந்நிலையில்தான், டென்மார்க் போன்ற சில நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் என்னென்ன மாதிரியான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்று, உள்நாட்டு நிலவியல் மற்றும் சூழலியல் அமைப்புகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடத் தொடங்கியது. அதைப் போன்றதொரு முயற்சியை இந்தியா முதன்முறையாக எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

 

அதை வரவேற்கின்ற அதேநேரம், ஆய்வாளர்கள் முன்வைக்கின்ற எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், மேன்மேலும் சூழலைச் சிதைக்கின்ற திட்டங்களுக்கே அரசு முன்னுரிமை அளித்து வருவதை விமர்சிக்காமலும் இருக்கமுடியாது. “எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்” என்று தமிழ் மொழியில் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக்கு நூறு சதவிகிதம் பொருந்திப் போகின்ற வகையில்தான், பெருமுதலாளிகளும் அவர்களுக்குச் சாதகமாக நிற்கின்ற அரசுகளும் இப்போது செயல்படுகின்றன. இதுபோன்ற அணுகுமுறைகளைத் தவிர்த்துவிட்டு, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இந்திய நிலவியலில் காலநிலை மாற்றப் பாதிப்புகள்’ ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுக்கவேண்டும்.

 

இந்திய நிலப்பகுதியின் தட்பவெப்பநிலை, பசுமை இல்ல வாயு வெளியீடு காரணமாக 1901 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 0.7 செல்ஷியஸ் உயர்ந்துள்ளது. இது, 2100-ம் ஆண்டின்போது, மேலும் 4.4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயரலாமென்று எச்சரிக்கின்றது இந்தியாவின் முதல் காலநிலை அறிக்கை. மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, இந்திய நிலப்பரப்பில் நடக்கும் இந்தத் தீவிர வெப்பநிலை அதிகரிப்பு, சூழலியல் சமநிலை மீது, விவசாய உற்பத்தியின் மீது, நீராதாரங்களின்மீது, பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகின்றது. இதன் விளைவுகள் நாட்டின் பல்லுயிரிய வளம், உணவு, நீர், ஆற்றல் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் என்று அனைத்திலுமே இருக்கும்.

 

இந்தியாவில் பல்வேறு பல்லுயிரிய வள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதையும் இந்த நிலப்பரப்பைத் தவிர வேறு எங்குமே காணமுடியாத ஓரிட வாழ்விகள் இங்கு வாழ்வதையும் குறிப்பிடும் அறிக்கை, தீவிரமாகி வருகின்ற காலநிலை மாற்றம் அவற்றின் வாழ்வியல் மீதும் சூழலியல் சமநிலை மீதும் மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக எச்சரிக்கின்றது.

 

தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து இப்போது வரை, புவியின் சராசரி தட்பவெப்பநிலை கூடுதலாக ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின்படி, உலக நாடுகள் பூமி சூடாகும் வேகத்தை இரண்டு டிகிரிக்கும் உள்ளாகவே தக்கவைக்கவும் 1.5-க்கும் மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும் ஒப்புக்கொண்டன. ஆனால், பசுமை இல்ல வாயு வெளியீட்டின் இப்போதைய வேகத்தை வைத்துப் பார்த்தால், பூமியின் சராசரி வெப்பநிலை கூடுதலாக 3 முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கலாம் அல்லது அதைவிடவே கூடுதலாகலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.

 

ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் ஏற்படுகின்ற வெப்பச்சலனங்கள் இப்போது நிகழ்வதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக 2100-ம் ஆண்டின் இறுதியில் நடைபெறும். அத்தகைய வெப்பச்சலனங்கள் நீண்டிருக்கும் காலகட்டம், எதிர்காலத்தில் இரண்டு மடங்காகும் என்றும் கணிக்கப்படுகின்றது. கங்கைச் சமவெளியில் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அறிக்கையின்படி, இந்தியப் பெருங்கடலின் கடல் மட்டத்திலுள்ள வெப்பநிலை, 1951 முதல் 2015-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் 0.7 டிகிரி அளவே இந்திய நிலப்பரப்பின் வெப்பநிலை அதிகரித்தது. இதன்மூலம், நிலப்பரப்பைவிட வேகமாகக் கடல் பரப்பினுடைய வெப்பநிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

 

இப்படித் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலை இந்தியாவின் பருவ மழையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால், பருவ மழையைச் சார்ந்திருக்கும் விவசாயத் துறையின் மீதும் அதைச் சார்ந்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கடந்த 65 ஆண்டுகளில், கங்கைச் சமவெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளுலும் கோடைக்கால மழைப்பொழிவு 6 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து சீராகக் குறைந்து கொண்டே வருகின்ற பருவ மழை காரணமாக, வறட்சி அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மத்திய இந்தியா, தென்மேற்குக் கடற்கரை பகுதி, தெற்கு தீபகற்பப் பகுதி மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளில் கோடைக்காலத்தில் வறட்சியும் பருவகாலங்களில் வெள்ளமும் அதிகமாகியிருப்பதாகக் குறிப்பிடுகின்றது இந்தியாவின் முதல் காலநிலை அறிக்கை. ஒவ்வோர் ஆண்டும் வறட்சியினால் பாதிக்கப்படக்கூடிய நிலப்பரப்பின் அளவு 1.3 சதவிகிதம் அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. காலநிலை மாதிரிகள், 21-ம் நூற்றாண்டின் இறுதியில் இவையனைத்துமே அதிகமாக இருக்குமென்று கூறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டின் அறிக்கை, உலகளாவிய ரீதியில்தான் பாதிப்புகளைக் கணித்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நிலப்பகுதியில் என்ன விதமான மாற்றங்கள் இருக்குமென்று கணிப்பதில்தான் பிரச்னையின் உண்மையான வீரியத்தைக் கணக்கிட முடியும். அதை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் அறிக்கை உணர்த்துகின்றது. இந்த ஆய்வுக்குழுவின் துணைத் தலைவராகச் செயல்பட்ட, காலநிலை ஆய்வாளர் ராக்சி மேத்யூ கோல் மங்காபே (Mongabay) இதழுக்கு பேட்டியளித்தபோது, “நமக்கு இத்தகைய ஓர் அறிக்கைதான் தேவைப்பட்டது. அதிதீவிர மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வானிலையைப் புரிந்துகொள்வதற்கான, ஏற்படக்கூடிய நிலவியல் மாற்றங்களைக் கணிக்கக்கூடிய, இந்திய நிலப்பரப்பில் காலநிலை மாற்றம் எப்படித்தான் நிகழ்கின்றது என்பன குறித்துப் புரிந்துகொள்வதற்கான இத்தகைய ஓர் ஆய்வறிக்கைதான் நமக்குத் தேவைப்பட்டது. இமயமலை மற்றும் கடலோரப் பகுதியின் நிலை, மழைப் பொழிவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்று அனைத்தையும் இந்த ஆய்வறிக்கை அளவிடுகின்றது. இதன்மூலம் இந்த நூற்றாண்டில் எந்தளவுக்குக் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் சந்திப்போம் என்ற தகவல்கள் தெளிவாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இமயமலையிலுள்ள ஹிந்துகுஷ் சிகரத்தின் வெப்பநிலை, 1951 முதல் 2014-ம் ஆண்டுக்குள்ளான காலகட்டத்தில் 1.3 டிகிரி உயர்ந்துள்ளது. பனிப்பாறை உருகும் வேகம் கடந்த சில பத்தாண்டுகளில், அதிகரித்துள்ளதை அறிக்கை குறிப்பிடுகின்றது. 21-ம் நூற்றாண்டின் இறுதியில், ஹிந்துகுஷ் சிகரத்தில் வெப்பநிலை 5.2 செல்ஷியஸாக உயர்ந்திருக்குமென்று அறிக்கை குறிப்பிடுகின்றது. அதேபோல், கரகோரம் பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவிலான பனிப்பொழிவு பதிவாகிக் கொண்டிருப்பதால், அப்பகுதியில் பனிப்பாறைகள் உருகிவிடாமல் அது தவிர்க்கின்றது. அதுகுறித்து அறிக்கையில், “மனிதத் தலையீடுகளால் ஏற்படுகின்ற மாற்றங்கள், இமயமலையிலும் திபெத்திய பள்ளத்தாக்கிலும் பத்து ஆண்டுகளுக்கு 0.2 டிகிரி என்ற விகிதத்தில் 1951 முதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “எதிர்காலத்தில் இந்த வேகம் 2.6 முதல் 4.6 டிகிரியாக அதிகரிக்கும் என்றும் ஒருபுறம் அதிகரிக்கும் பனிப்பொழிவு, மற்றொருபுறம் அதிகரிக்கும் பனிப்பாறை உருகுதல் ஆகியவை, நிலவியல் மற்றும் நீரியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அது நாட்டின் விவசாயப் பகுதிகளைப் பாதிப்பதோடு உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவதாக எச்சரித்துள்ளது. அதனால், இந்தியாவின் நீர், உணவு மற்றும் ஆற்றல் தேவை அனைத்துமே சிக்கலைச் சந்திக்கும்.

 

இந்த ஆய்வறிக்கை, இருப்பதிலேயே மிகப்பெரிய பிரச்னையாகக் குறிப்பிடுவது, எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் நன்னீர் பற்றாக்குறையைத்தான். மேற்பரப்பு மற்றும் நிலத்தடியிலுள்ள நன்னீர் இருப்பும் பெருமளவு குறைந்துவிடும் என்று அறிக்கை எச்சரிக்கின்றது. மழைப் பொழிவில் ஏற்படுகின்ற தாக்கம், வறட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தீவிரமாக்கும். இவை, நாட்டின் நீர்ப் பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாக்கும்.

 

இன்றைய நிலவரப்படி, விவசாயத்திற்குத்தான் பெருமளவு நன்னீர் பயன்படுகின்றது. ஆனால், அதற்குச் சமமாக அனல் மின் நிலையங்களும் அதீத நன்னீர் நுகர்வில் ஈடுபட்டிருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. அனல்மின் நிலையங்களில், மின்சார உற்பத்திச் செயல்முறையின்போது, குளிர்விப்பதற்காக அணைகள், நதிகள், கால்வாய்களிலிருந்து நன்னீர் பயன்படுத்தப்படுகின்றது. அனல்மின் நிலையங்களுடைய நீர்ப் பயன்பாடு விவசாயத் துறையின் பயன்பாட்டிற்கு நிகராக இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. குறிப்பாக, நீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில்தான் இது அதிகம் நடைபெறுகின்றது. மற்றொருபுறம், கடலோரங்களில் கடல்நீரைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தி இயங்குகின்ற அனல்மின் நிலையங்கள், கடல் மட்ட உயர்வினால், புயல், சூறாவளி போன்ற பேரிடர்களால் சேதங்களுக்கு உள்ளாகும். இதன்மூலம், நாட்டின் ஆற்றல் உற்பத்திக் கட்டுமானங்களும் ஆற்றல் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

 

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்படி, காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் அதற்கு எதிர்வினை ஆற்றவும் வேண்டுமென்றால், அதற்கு நாம் உள்ளூர் அளவிலான மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் கண்காணிக்க வேண்டுமென்று இந்தியாவின் காலநிலை அறிக்கை வலியுறுத்துகின்றது. அவற்றோடு கூடுதலாக, காலநிலை அவசரம் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

 

இந்தியக் கடலோரங்களில் கடல் மட்ட உயர்வையும், அலை ஏற்ற இறக்க நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அப்படிக் கண்காணிக்கையில், அலை ஏற்ற இறக்கங்களை மட்டுமின்றி, கடல் மட்ட உயர்வையும் கணிக்க முடியுமென்றும் அதன்மூலம் எதிர்கால மாற்றங்களைப் புரிந்துகொண்டு, இழப்புகளைத் தவிர்க்க முடியுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாவட்ட அளவில், கிராம அளவில் மக்கள் சமூகங்கள் மத்தியில் நீர் மேலாண்மை, விவசாயச் சீர்திருத்தம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தகவமைத்து வாழ முடியுமென்று கற்றுத்தர வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது.

 

நகரங்கள், அதிகளவிலான வெப்பச்சலன பாதிப்புகளையும் வெள்ளச் சேதங்களையும் சந்திக்குமென்று அறிக்கை அழுத்தமாகக் கூறுகின்றது. ஆகவே, இந்திய நகரங்களின் பேரிடர்க் கால எதிர் செயலாற்றும் திறனை, அதற்குரிய வியூகங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். மழைப்பொழிவு, சூறாவளி, வெப்பச்சலனம், கடல் மட்ட உயர்வு போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக இருப்பது, பெருங்கடல்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான். அதற்குக் காரணம் என்னவென்றால், பூமி சூடாவதால் உண்டாகும் பாதிப்புகளை முதலில் எதிர்கொள்வதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் கடல் பகுதிகள்தான். அதற்கான உதாரணமாக, கடலோரங்களில் புயல் மற்றும் சூறாவளிப் பேரிடர்கள் பெருமளவில் சேதங்களை விளைவித்துக் கொண்டிருப்பதைச் சொல்லலாம். இது புவி வெப்பமயமாதலினால் பூமியின் கடல் பகுதிகள் பாதிக்கப்படுவதன் விளைவே.

 

காலநிலை மாற்றத்தினுடைய நேரடி மாற்றங்களை இந்திய அரசாங்கத்தின் இந்த முதல் அறிக்கை கணித்துள்ளது. அடுத்த அறிக்கையில், காலநிலை மாற்றம் எப்படி விவசாயம், உணவு, நீர் மற்றும் ஆற்றல் தேவை ஆகியவற்றை மறைமுகமாகப் பாதிக்கின்றது என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென்று ராக்சி மேத்யூ போன்ற காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வறிக்கை, அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத பசுமைக் கட்டுமானங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. நகர்ப்புற வெப்பமயமாதல், காற்று மாசுபாடு அனைத்தையும் குறைக்கக்கூடிய வகையிலான பசுமைக் கட்டுமானங்களின் மீது நாம் கவனம் செலுத்தவேண்டும். அதன்மூலம், பாதுகாப்பான சுகாதாரம், தரமான சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கு வழி கிடைக்கும். அதோடு, ஆற்றல் தேவைக்காக சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது அதிகக் கவனம் செலுத்தவேண்டும். இவை, இயற்கை வளச் சுரண்டலைக் குறைப்பதோடு, பருவ மழை, வெப்பச்சலனம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் அதன் பாதிப்புகளையும் ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும் என்கின்றனர். அதேநேரம், நன்னீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நீர் சேகரிப்பில் ஈடுபட வேண்டுமென்றும் நிலத்தடி நீரைச் சுரண்டிக் கொண்டேயிருப்பதைத் தவிர்த்து, அதை மீள்நிரப்பு செய்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வறிக்கை மூலமாக, சுற்றுச்சூழல் மீதான மனித இனத்தின் தலையீடுகள் அனைத்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் அதன் பாதிப்புகளை நாம் சந்திப்பையும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கின்றது. அதேநேரம், அதைச் சரிக்கட்ட கொள்கை அளவிலிருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதையும் இந்த அறிக்கை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.

 

கொள்கைகளை உருவாக்கக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள், இயல் காடுகளைப் பாதுகாப்பதிலும் நகர்ப்புறப் பசுமையை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று பரிந்துரைக்கின்றது. அதன்மூலம், கரிம வாயு வெளியீட்டைக் குறைக்க, கரிமத் தன்மயமாக்கல் செயல்முறையை மேற்கொள்கின்ற காடுகளை அதிகரிக்க வேண்டுமென்று கூறும் அதேநேரம், வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு, வறட்சி போன்ற அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் காடுகள் பாதுகாப்பு உதவுமென்று அறிக்கை குறிப்பிடுகின்றது. இவற்றைவிட முக்கியமாக, காடுகள் பல்லுயிரிய வளம் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, உண்மையிலேயே நல்ல முயற்சிதான். இதில் காடுகள் பாதுகாப்பு மற்றும் பரப்பளவை அதிகரிப்பது, நகர்ப்புறப் பசுமையாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற அதேநேரம், அரசியல் கொள்கைகளிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதிலும் இயற்கை எரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறுவதிலும் அரசுகளின் கொள்கைகள் கவனம் செலுத்தவேண்டும். உதாரணத்திற்கு, சமீபத்தில் சூரிய மின்சக்தி குறித்த கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைக் கவனித்தால் புரியும்.

 

இதுநாள் வரை, சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் வீடுகளில், அவர்கள் எவ்வளவு சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்குகிறார்கள் என்பதை வைத்து, அவர்கள் மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ அதில் ஈடு செய்யும் விதமாக இருந்தது. அதாவது, ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 100 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால், அதில் அவர்கள் 40 யூனிட் மின்சாரத்தைப் பகலில் சூரிய மின்சக்தியின் மூலமாகப் பயன்படுத்துவார்கள். மீதி 60 யூனிட் மின்சாரத்தை இரவில் மின்சார வாரியத்தினுடைய மின் விநியோகத்திலிருந்து பயன்படுத்திக் கொள்வார்கள். பகலில், அவர்கள் அமைத்துள்ள சூரிய மின்சார உற்பத்தி அமைப்பு 60 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தாலும்கூட அவர்கள், 40 யூனிட் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனில், மீதமுள்ள 20 யூனிட் மின்சாரம் மின்சார வாரியத்திற்கு அனுப்பப்படும். அதற்கு ஈடாக, அந்தக் குடும்பம் பயன்படுத்திய 60 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில் 20 யூனிட்டுக்கான தொகையைக் கழித்துவிடுவார்கள். ஆனால், இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்திக் கொள்கை, ஒருவர் எவ்வளவு சூரிய மின்சாரத்தை, மின் வாரியத்திற்குக் கொடுத்தாலும் யூனிட்டுக்கு 2 ரூபாய் என்ற விலையில்தான் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அது, அவர்கள் பயன்படுத்துகின்ற மின்சார வாரியத்தினுடைய மின் விநியோகத்தோடு ஈடு செய்யப்படாது. அதற்குரிய தொகையை வழக்கமான விலையில் அவர்கள் மின் கட்டணம் செலுத்தவேண்டும். இதனால், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தினாலும்கூட, சராசரி மக்கள் பெரும் இழப்புகளைத்தான் சந்திப்பார்கள். அது அவர்களைச் சூரிய மின்சக்திப் பயன்பாட்டிற்குள் வருவதை நிச்சயமாக ஊக்குவிக்காது.

 

தங்களுக்குப் பயன்தரக்கூடிய வகையில் கொள்கைகள் இல்லையென்றால், அதில் நஷ்டப்பட்டுச் சூழலுக்கு நன்மை செய்ய எளிய மக்களால் முடியாது. அது அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். ஆகவே, இத்தகைய கொள்கைகளைத் தவிர்த்து மக்களுக்குப் பயன்தரக்கூடிய, அதேநேரம் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வல்ல கொள்கைகளை வகுக்கவேண்டும். அதுவே, எதிர்காலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

இன்றைய கொரோனா கொள்ளை நோய்ப் பேரிடர் காலகட்டத்தில், ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை, நெருக்கடியைச் சரி செய்வதில் நாம் கவனம் செலுத்துகின்றோம். இது மிகவும் இக்கட்டான காலகட்டம். குதிரைப் பந்தயத்தில் இழந்ததைப் பிடிக்க வேண்டுமென்ற வேகத்தோடு செயல்படுபவரைப் போன்ற அணுகுமுறை அனைத்துத் தொழில்துறையிலுமே நடைபெறும். பொருளாதார ரீதீயாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய, வளர்ச்சி என்ற பெயரில் மீண்டும் சந்தைப் பொருளாதாரத்தையே தூக்கிப் பிடிக்க, பக்க விளைவுகளைப் பற்றிய கவலையற்ற அணுகுமுறையைக் கையாளத் தொடங்குவார்கள். இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும்.

 

ஆனால், அரசாங்கமும் அதே அணுகுமுறையைக் கையாளும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சரி காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளும் சரி அப்படியே முடங்கியதைப் போன்ற தோற்றம் உண்டாகின்றது. அது சூழலியல் ஆர்வலர்களையும் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பேரிடர்களால் இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் எளிய மக்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றது.

 

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மிக நீண்ட பேரிடர்க் காலம், அனைவருக்குமே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நம்முடைய அணுகுமுறையை, சூழலியல் மீதான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற புரிதலை வழங்கியுள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020, ஹூபலி-அங்கோல ரயில்வே திட்டம், அதிரப்பள்ளி நீர்மின் திட்டம், டிபாங் பள்ளத்தாக்கில் வரவுள்ள இடாலின் நீர்மின் திட்டம் போன்ற மத்திய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு எதிரானவையாகவும் எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாகவும் இருக்கின்றன. இந்நிலையில், மக்களுக்கு இருக்கின்ற அதே புரிதலோடு அரசுகளும் செயல்பட வேண்டுமென்பதையே, இந்தியாவினுடைய இந்த முதல் காலநிலை அறிக்கை வலியுறுத்துகின்றது.

 

இவற்றையெல்லாம் காணும்போது, மனித இனம் சபிக்கப்பட்டதைப் போன்றதோர் உணர்வு ஏற்படலாம். ஆனால், இதை மனித இயல்பு என்றுதான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம், அதிகரிக்கும் மாசுபாடு, பசுமை இல்ல வாயு வெளியீடு என்பது உண்மைதான். அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது என்னவோ, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சிதான். சில ஆய்வாளர்கள் இந்தப் பாதைக்குள் நாம் நுழைவோம் என்பதையும் நுழைந்துவிட்டோம் என்பதையும் அழிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றி ஏற்கெனவே எச்சரித்தனர். நம்முடைய அரசுகள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

 

இப்போது நம் பூமி, அது பிழைத்திருப்பதற்காக மிக மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருக்கின்றது. பூமியினுடைய பரிணாமவியல் கோட்பாடு, அதைப் பிழைக்க வைப்பதற்காக, அதை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த மனித இனத்தை அதிலிருந்து அப்புறப்படுத்த முயல்கின்றது. பூமி அழிவதாக நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது அழியவில்லை. தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குச் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாதிப்புகளுக்குக் காரணமான நோயாக மனிதர்களாகிய நாம் நிற்கின்றோம்.

 

புவியில் உயிர்களுடைய தோற்றமும் வளர்ச்சியும் நிச்சயமாக மீண்டும் நடைபெறும். அதில் நம்முடைய பங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பூமிதான் முடிவு செய்யும்.

 

இப்போது, இந்தக் காலநிலை அறிக்கையை மையப்படுத்தி நம்முன் இருக்கின்ற கேள்வி என்னவென்றால், மத்திய மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பாதையில் இனியாவது செயல்படுமா? இந்திய நிலப்பரப்பைக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்குமா? நமக்கு பூமி மற்றுமொரு வாய்ப்பைக் கொடுப்பதற்கான சூழலை நாம் ஏற்படுத்துவோமா?

 

நன்றிக்குரிய தரவுகள்

Energy & Resource Institute

European Project for Ice Coring in Antartica EPICA (2015), NOAA (https://www.ncdc.noaa.gov/paleo-search/study/17975)

Assessment of Climate Change over the Indian Region, A report of the ministry of Earth Sciences (MoES), Government of India

 

-சின்ன கண்ணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments