இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்

இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள்

உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ் மறைவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயம்; இவ்வுலகம் மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியுள்ள நிலப்பரப்பாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்காது என்றும் அதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடுகிறார்; அணுஆயுதங்கள், காலநிலை மாற்றம், எரிகற்கள்.  எரிக்கற்களை பற்றி நாம் எதுவும் செய்யமுடியாது,  மற்ற இரண்டிற்கும் மானுட சமூகமே பொறுப்பேற்கவேண்டும், அதுவும் குறிப்பாக அணுஆயுதங்கள்.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுகளின் கோரத்தை உலகம் பார்த்து அதிர்ந்தது, மற்றொரு அணுஆயுத போர் இவ்வுலகத்தில் நடைபெறக்கூடாது என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சாசனம். ஆனாலும் இன்னும் இவ்வுலகத்தில் 15,000 அணுகுண்டுகளுக்கு மேலே உள்ளன.

அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷியாவிற்கும் பணிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் கூட அணுஆயுதங்களுக்கு எதிராக இந்தியா பல நகர்வுகளை முன்னெடுத்தது. 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில், அணு ஆயுத ஒழிப்பிற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதுவரை விவாதிக்கப்பட்ட அறிக்கைகளில் முழுமையான ஒரு பாதையை அணு ஆயுத ஒழிப்பிற்கு வழிகாட்டுவதாக அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

சர்வதேச களத்தில் இந்தியாவின் இராஜதந்திர வலிமை அதன் தார்மீக அதிகாரமே என்பதை எல்லோருமே  ஒத்துக்கொள்வார்கள். இதன் தொடர்ச்சியாகவே வாஜ்பாய் அரசாங்கம் அணு குண்டுகள் சோதனைகளை நடத்திருந்தாலும் “முதலாவதாக அணு குண்டுகளை பயன்படுத்த மாட்டோம்” என்கிற கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது. குறைந்தபட்சம் அணுஆயுத ஒழிப்பிற்கு அணுஆயுத நாடுகளுடன் சேர்ந்து பயணிப்போம் என்றும் அறிவித்தது அன்றைய வாஜ்பாய் அரசு. மன்மோகன் ஆட்சி காலத்தில் அணுஆயுத ஒழிப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னர் ராஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அணுஆயுத ஒழிப்பிற்காக, ராஜீய உறவுகளின் மூலம் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமையுள்ள ஒரே நாடாக உலகிலேயே இந்தியா விளங்கியது. அணுஆயுதங்கள் தொடர்பாக இந்தியாவின் இந்த முன்னகர்வுகள்தான் உலக நாடுகள் இந்தியாவை “பொறுப்புள்ள அணுஆயுத” நாடாக கருதுவதற்கு வழிவகுத்து, இந்தியாவிற்கு பல அணுசக்தி தொழிநுட்பங்களை வழங்க அனுமதித்தது. ஆனால் மத்தியில் பா.ஜ அரசு மோடியின் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு நிலைமைகள் மாறத்துவங்கின. “அணு ஆயுதங்களை முதலாவதாக” பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையிலிருந்து மாற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் பரிக்கர், இப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்தியா தன்னுடைய தார்மீக நிலையை இழந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆணுஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஐக்கிய நாடுகள் சபையில் அணுஆயுதங்களை ஒழிக்க சட்டம் நிறைவேற்றி சாதனை படைத்த “ஐகான்” அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, அந்த விருது வழங்கப்பட்ட விழாவைக்கூட இந்தியா புறக்கணித்து மேலும் தன்னுடைய தார்மீக உரிமையை இழந்தது.

உலக அமைதியை நோக்கிய முக்கியமான ஒரு செயல்பாடாக அணு ஆயுத அழிப்பு இருக்கும் என்பதில் மனிதத்தில் நம்பிக்கை கொண்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கே முக்கியமான கேள்வி என்னவெனில், வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், அதுவும் எல்லையில் பதற்றமாக உள்ள சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது வருத்தம் அளிக்கிறது.

மகாத்மா காந்தி, புத்தர், மகாவீரர், கான் அப்துல் கபார் கான், அன்னை தெரசா என உலக அமைதியை விரும்பும் மனிதர்கள் உலாவிய மண் இன்று உலக அரங்கில் அவமானத்தை சுமந்து நிற்கிறது.

எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும், நாங்கள் தான் உலகத்தின் பழமையான நாகரீகம் என்று பறைசாற்றுவதை மெய்ப்பிக்கவும், காந்தியின் 150தாவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கடைபிக்கக்கூடிய இந்த தருணத்தில் “காந்தியின் தேசமான” இந்தியா அணுஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அணு ஆயுத ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments