IREL நிறுவனத்தின்  அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டுக்கு த.வெ.க. அரசு ஒப்புதல்.

IREL

IREL நிறுவனத்தின்  அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டுக்கு த.வெ.க. அரசு ஒப்புதல்.

 அரசானையை ரத்து செய்ய பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

 

IREL நிறுவனம் கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் பகுதிக்கான ஒதுக்கீட்டு அனுமதியை 11.06.2021 அன்று பெற்றிருந்தது. இந்த அனுமதியின் கால அவகாசம் 5 ஆண்டுகள் மட்டுமே. இந்த அவகாசம் 10.06.2026 உடன் முடிவடையவிருந்த நிலையில் அதே நாளன்று அவகாசத்தை மேலூம் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ் நாடு இயற்கை வளங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி(EC), கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி(CRZ) ஆகியவற்றைப் பெற்று IREL நிறுவனம் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளன. தமிழ் நாடு அரசின் இந்நடவடிக்கையைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கண்டிக்கிறோம்.

கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல். (indian Rare Earths Limited) கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் பரப்பில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டது.

இதற்காக 1144 எக்டேர் நிலத்தை IREL நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வதற்கான RESERVATION அனுமதியை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்(MMDR ACT) பிரிவு17ந் கீழ் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் 11.06.2021 அன்று வழங்கியது. இந்த அனுமதியின் கால அவகாசம் 5 ஆண்டுகளாகும். அதற்குள் மாநில அரசுடன் IREL நிறுவனம் சுரங்க குத்தகையை (MINING LEASE) மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த சுரங்க குத்தகை அனுமதியை மாநில அரசு வழங்க வேண்டுமென்றால் அதற்கு முன்னர் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் CRZ அனுமதியை IREL நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.

Mines Notification IREL

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி IREL நிறுவனம் விண்ணப்பித்து 2023ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளைப் பெற்றிருந்தது. அதில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என்றிருந்ததால் 01.10.2024 அன்று கன்னியாகுமரியில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது. பூவுலகின் நண்பர்களின் கண்டனம் மற்றும் பொதுமக்களின் கடும் போராட்டத்தால் இக்கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பிறகு இத்திட்டத்திற்கான CRZ அனுமதிகோரி 22.07.2025 IREL நிறுவனம் தமிழ் நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அதன் பின்னர் 08.09.2025 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக் கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. இதனால் IREL நிறுவனம் கன்னியாகுமரியில அணுக்கனிம சுரங்கம் அமைக்கத் தடை விலகியது.

இந்நிலையில் தங்களது அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய ஒதுக்கீட்டு ஆணையின் கால அவகாசம் 10.06.2026உடன் முடிவடைவதை உணர்ந்த IREL நிறுவனம் MMDR சட்டத்தின் பிரிவு 17A(4)கீழ் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு தமிழ் நாடு அரசுக்குக் 31.01.2026 அன்று கடிதம் எழுதியது. இந்த அனுமதியை ஓராண்டுக்கு நீட்டிக்கும் அதிகாரம் MMDR சட்டத்தின் பிரிவு 17A(4)கீழ் மாநில அரசுக்கும் உள்ளது. ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இக்கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த 16.04.2026 அன்று IREL நிறுவனத்தின் கால நீட்டிப்புக் கோரிக்கையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு தமிழ் நாடு சுரங்கங்கள் துறை இயக்குனர்  இயற்கை வளங்கள் துறைக்குக் கடிதம் எழுதினார்..

கால அவகாசம் முடிவடையவிருந்த 10.06.2026 அன்று சுரங்கங்கள் துறை இயக்குனரின் கோரிக்கையைப் பரிசீலித்து ஒதுக்கீட்டு ஆணையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது இயற்கை வளங்கள் துறை. ஒருவேளை இந்த கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றால் IREL நிறுவனத்துக்கான ஒதுக்கீட்டு ஆணை செல்லுபடியாகமல் போயிருக்கும். அவர்கள் மேலும் இத்திட்டத்தைத் தொடர வேண்டுமென்றால் மீண்டும் தொடக்கத்திலிருந்து பல அனுமதிகளையும் ஒப்புதலையும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். சட்டப்படி கால அவகாசம் நீட்டிப்பு கோரிக்கை வந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் கால நீட்டிப்பு குறித்து அரசு முடிவெடுத்திருக்க  வேண்டும். ஆனால், 31.01.2026 அன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு 5 மாதங்கள் கழித்து ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழ் நாடு அரசு.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் 03.11.2024 அன்று சென்னையில் நடந்தபோது இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை எனும் பெயரில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. “இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரியிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்ரிய அரசு முயற்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.” எனத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

 

IREL

 

ஆனால், இன்று தன் தீர்மானத்துக்கு எதிராக IREL நிறுவனத்துக்குச் சாதகமாக முக்கியமான ஒரு அனுமதியின் அவகாசம் காலாவதியாகும் நாளன்று அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் நாடு முதல்வர் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு  கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

 

IREL EXTENSION G.O
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Sethupathi
Sethupathi
1 month ago

What is impact?. Please explain in detail

Sathish
Sathish
1 month ago

This has just confirmed that the TVK is a B team of BJP