உலகத்திற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க் நாடு

2019 ஆம் ஆண்டு கோடை காலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப்போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள “சேவியர் பெத்தேல்” அறிவித்துள்ளார்.

அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது, “சுற்றுச்சூழலும் போக்குவரத்தும்தான்”.

தொடர்வண்டி, பேருந்து, டிராம் என அனைத்து வகையான பொதுப்போக்குவரத்து பயணங்களும் இனிமேல் இலவசம் தான், ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்கு, அவர்களின் வீடு முதல் பள்ளி வரையான பயணங்கள் இலவசமாக உள்ளன. பெரியவர்கள் இரண்டு மணி நேர பயணத்திற்கு மிகக்குறைந்த அளவில்தான் பணம் செலுத்திவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் முழுமையான வெற்றியை பெறவில்லை, அதனால் “பெத்தேலின்” ஆட்சியை இடதுசாரி சோசியலிச தொழிலாளர் கட்சியும், பசுமை கட்சியும் ஆதரிக்கின்றன.

“கிராண்ட் டச்சியின்” தலைநகரமான லக்ஸம்பர்க், உலகத்தில் மிக அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடிகளை சந்தித்து வரக்கூடிய நகரமாகவுள்ளது. ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேர் வசிக்கக்கூடிய நகரத்திற்கு நாள் ஒன்றிற்கு 4 லட்சம் மக்கள் வேலைக்காக வந்துபோகிறார்கள். மொத்த நாட்டின் மக்கள் தொகையே 6 லட்சமாக இருந்தாலும், நாளொன்றிற்கு சுமார் 2 லட்சம் மக்கள் அருகிலுள்ள பிரான்ஸ், ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளிலிருந்து வேலைக்கு வருகிறார்கள், அதனால் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.

இந்த அறிவிப்புகள் மூலம் மக்கள் அதிக அளவில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்றும், அதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது. சில விசயங்கள் இன்னமும் தெளிவில்லை என்பதையும் அரசு ஒத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக தொடர்வண்டிகளில் முதல் வகுப்புகளில் பயணம் செய்யப்போகிறவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாமா வேண்டாமா போன்ற விஷயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கிறது, ஆனாலும் 2019 ஆம் ஆண்டு பொதுப்போக்குவரத்து முழுவதும் இலவசமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் போக்குவரத்து நெரிசல் குறைவது மட்டுமல்ல, மாசு குறைவதால் மக்களின் உடல்நலம் நன்றாக இருக்குமென்றும், சுகாதாரத் துறையில் தேவைப்படும் முதலீடுகள் கணிசமாக குறையும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இங்கே தமிழகத்தில், 2070 ஆம் ஆண்டு சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே 1 லட்சம் கார்கள் செல்லவேண்டிய தேவை இருக்கும் என்பதற்காக 8 வழிச்சாலை கொண்டுவரப்போகிறோம் என்கிறது அரசு.

மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் யாரும் பயணம் செய்துவிடக்கூடாது என்பதற்காக கட்டணங்கள் மிக அதிகமாகவுள்ளன. பொதுப்பயன்பாட்டிற்க்கு முதலீடு செய்வதில் அரசுகள் லாப-நஷ்ட கணக்குகள் பார்க்கக்கூடாது. நெடுங்காலக்கட்டத்தில் மாசு இல்லாத சூழலால் மக்களின் உடல்நலம் நன்றாக இருக்கும் அதனால் சுகாதாரத்திற்கு தேவைப்படும் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளன.

எந்த மாதிரியான திட்டங்கள் சூழலுக்கு உகந்தவை என்பதை வைத்துதான் இனிமேல் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments