அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025
அணுசக்தியை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பு அணுசக்திச் சட்டம் 1962 (Atomic Energy Act), அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 (The Civil Liability for Nuclear Damage Act, 2010–CLNDA) ஆகிய இரு சட்டங்களால் கண்காணிக்கப்பட்டு வந்தன. இவ்விரு சட்டங்களையும் திரும்பப் பெற்றுவிட்டு இவற்றை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025-ஐ (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill, 2025 – SHANTI) அவசர அவசரமாக போதுமான விவாதங்களின்றி ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதாவின் பெயரில் ‘சாந்தி’ (Shanti) அமைதி இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் உயிருக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக அணு ஆற்றலைத் தனியார்மயமாக்குவது, அதிலும் யுரேனியம் செறிவூட்டல் (Uranium Enrichment) போன்ற தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல்பாடுகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்பது, 140 கோடி இந்தியர்களின் உயிரைச் சூதாட்டத்தில் வைக்கும் செயல் என்றால் அது மிகையல்ல.
அணுசக்தித் துறையை நவீனப்படுத்துவதற்காக இம்மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டாலும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்கும் முடிவுகளுடன் இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
முகவுரை:
இம்மசோதாவின் முகவுரையில் அணுசக்தி தூய்மையான எரிசக்தியென வரையறுக்கப்பட்டிருப்பதே தவறானது. அணுவுலையில் எரிபொருளாகப் பயன்படும் யுரேனியம், தோரியம் உள்ளிட்டவற்றை அகழ்ந்தெடுக்கும் பணி நச்சு அபாயம் மிகுந்த,இயற்கை வளங்களை அழித்து மேற்கொள்ளப்படுவதாகும். மேலும் சரிசெய்யவே முடியாத மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் கதிரியக்க அபாயம் மிகுந்தவை அணுவுலைகள், அணுவுலைக் கழிவுகளோ பல ஆயிரமாண்டுகளுக்கு கதிர்வீச்சுத் தன்மையுடையதாகவும் பாதுகாப்பாக மேலாண்மை செய்ய முடியாதவையாகவும் இருக்கின்றன. எரிபொருள் அகழ்வு முதல் மின்னுற்பத்தி, அணுவுலைக் கழிவு மற்றும் அதன் மேலாண்மையென முழு சுழற்சியையும் கருத்தில் கொண்டால் அணுவுலையோ, அணுசக்தியோ எந்தவிதத்திலும் தூய்மையான ஆற்றல் கிடையாது.
தனியார்மயம்:
இம்மசோதாவின் பிரிவு 3(1)(c) மற்றும் (e) தனியார் நிறுவனங்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கும் அணுவுலை மற்றும் அணுமின் நிலையம் சார்ந்த செயல்பாடுகளை இந்தியாவில் இயக்கிக் கொள்வதற்கான அனுமதியை வழங்குகிறது. 1962 சட்டத்தின்படி அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி கிடையாது. இம்மசோதாவின் கீழ் தனியாருக்கு அணுசக்தித் துறையில் வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவின் பிரிவு 3(2)) [1]ந் படி அணுமின்சார உற்பத்தில் உள்ள பல்வேறு படி நிலைப் பணிகளையும் மேற்கொள்ளத் தனியாருக்கு அனுமதியும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,
(அ) அணுமின் நிலையம் அல்லது உலையைக் கட்டுதல், உடமையாக நிர்வகித்தல், இயக்குதல் செயலிழக்கச் செய்தல்;
(ஆ) யுரேனியம்-235 ஐ ஒன்றிய அரசு அறிவிக்கக்கூடிய வரம்பு மதிப்புவரை மாற்றுதல், சுத்திகரித்தல் மற்றும் செறிவூட்டுதல், மற்றும் பிற தனிமப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, செயலாக்கம் அல்லது அகற்றல் உள்ளிட்ட அணு எரிபொருளின் தயாரிப்பு;
(இ) கதிரியக்க அபாயமிகுந்த அணுவுலை எரிபொருள், அணுக்கழிவு, வேறு ஏதேனும் வகுத்துரைக்கப்பட்ட தனிமங்களைச் சேமித்து வைத்தல் மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டு செல்லுதல்.
(ஈ) அணுவுலை எரிபொருள் அல்லது வகுத்துரைக்கப்பட்ட தனிமத்தின் இறக்குமதி, ஏற்றுமதி, கையகப்படுத்துதல், அல்லது வைத்திருத்தல்;
(உ) வகுத்துரைக்கப்பட்ட உபகரணங்களின் இறக்குமதி, ஏற்றுமதி, கையகப்படுத்துதல் அல்லது பயன்பாடு;
(ஊ) வகுத்துரைக்கப்பட்ட தனிமப் பொருள் அல்லது வகுத்துரைக்கப்பட்ட உபகரணங்களின் மேம்பாடு, உற்பத்தி அல்லது பயன்பாட்டிற்குத் தேவையான ஏதேனும் தொழில்நுட்பம் அல்லது மென்பொருளின் இறக்குமதி அல்லது ஏற்றுமதி.
மேற்கூறிய அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அணு ஆற்றல்: லாப நோக்கத்திற்கான துறை அல்ல:
அணு ஆற்றல் என்பது சாதாரண மின்னுற்பத்தித் துறை அல்ல. இது தேசப் பாதுகாப்பு, பன்னாட்டு அரசியல், பல்வேறு தலைமுறைகளின் இருத்தலியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆனால், இம்மசோதா, அணு ஆற்றலை ஒரு வணிக வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது. தனியார் நிறுவனங்களின் முதன்மை நோக்கம் லாபம் மட்டுமே. பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மனித உயிர் — இவை அனைத்தும் லாபக் கணக்கில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும்.
இதற்கு வரலாறே சாட்சி. புகுஷிமா அணு விபத்து (Fukushima Disaster) என்பது, வடிவமைப்புக் குறைபாடுகள் (design improvements) மற்றும் அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததின் விளைவு என்பதை ஜப்பான் நாடாளுமன்றக் குழுவே உறுதிசெய்து, “Fukushima is a man made disaster” என்று உறுதிபட அறிவித்துவிட்டது. செலவைக் குறைக்க, பாதுகாப்பை புறக்கணித்ததன் விளைவாக, இன்று வரை ஜப்பான் மக்கள் அதன் விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே பாதையை இந்தியா ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:
அணு ஆற்றல் போன்ற மிக மிக ஆபத்தான துறையைத் தனியார் நிறுவனங்களின் கையில் கொடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு கிராம் யுரேனியம் கூடத் தீவிரவாதிகளின் கைகளில் சென்றால், அது பேரழிவு அபாயத்தை எற்படுத்தவல்லது.
இத்தகு தனிமங்களைக் கையாளும் கட்டற்ற சுதந்திரத்தைத் தனியாருக்கு வழங்குவது தேசப் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலில் சென்று முடியும். ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கக் காரணமக இருந்த போபால் விஷ வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நீதிக்காகவும் உரிய இழப்பீட்டிற்காகவும் போராடி வருகின்றனர். அபாயகராமான கழிவுகளைக் கையாள சட்டப்படி பெற வேண்டிய அனுமதியைப் புதுப்பிக்காமல் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் சட்டவிரோதமாக நச்சுக் கழிவுகளை ஓடையில் கொட்டியிருந்தது. கொடைக்கானலில் செயல்பட்டு வந்த யுனிலீவர் நிறுவனம் தனது நச்சுமிகு பாதரசக் கழிவுகளைக் காட்டில் கொட்டி நிலத்தையும் நீரையும் நச்சாக்கியது. இப்படி எண்ணற்ற உதாரணங்கள் நம்முன் உள்ளன. மேற்கூறியவற்றுடன் ஒப்பிடுகையில் யுரேனியம், தோரியம் உள்ளிட்ட கதிரியக்க அபாயம் கொண்ட தனிமங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாள அனுமதிப்பது பல நூறு மடங்கு அபாயம் நிறைந்ததாகும்.
இந்தியாவிலேயே உச்சகட்ட ராணுவப் பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பெகல்காமில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஒன்றிய அரசின் பாதுகாப்பில் உள்ள நாட்டின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை அருகே வெடிபொருட்களைக் காரில் எடுத்துவந்து வெடிக்க வைத்த தீவிரவாத சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இப்படியாக அண்மைக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தீவிரவாதிகளின் கையில் குறைந்த அளவு யுரேனியம் கிடைத்தாலே அது தேசப் பாதுகாப்புக்கு பேராபத்தாகும். இந்நிலையில் கதிரியக்க அபாயமிகு தனிமங்களைத் தனியார் கையாள அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதுதவிர கதிரியக்கமிக்க முக்கியத் தனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதியும் ஏற்கெனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“Right to Recourse” நீக்கம் – குற்றவாளிகளுக்கு முழு பாதுகாப்பு:
இம்மசோதாவில் மிக ஆபத்தான, அதே நேரத்தில் மிகக் கேடான அம்சம் என்னவென்றால், “Right to Recourse” என்ற உரிமையை முழுமையாக நீக்கியிருப்பது. அதாவது, அணு விபத்து ஏற்பட்டால், உபகரணங்களை வழங்கியவர் அல்லது வடிவமைப்பாளர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள 2010 அணுவிபத்து இழப்பீடுச் சட்டத்தில் (The Civil Liability for Nuclear Damage Act, 2010–CLNDA) இந்தியாவில் இயக்கப்படும் அணுவுலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டுக்கு அணுவுலையை இந்தியாவுக்கு வழங்கிய நிறுவனத்தையும், உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தையும் பொறுப்பாக்கக்கூடிய பிரிவு 17(b) உள்ளது. இப்பிரிவை மாற்றும் முயற்சிகளை அப்போதைய பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மசோதாவில் இப்பிரிவு முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விவாதத்திற்குப் பின்னர் அணுவிபத்து இழப்பீடுச் சட்டம்நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது என்ன நியாயம்?
ஒரு தனியார் நிறுவனம் குறைபாடான வடிவமைப்பை வழங்கினாலும், பாதுகாப்பு விதிகளை மீறினாலும், அல்லது தெரிந்தே அலட்சியமாகச் செயல்பட்டாலும் — அவர்களை எதிர்த்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. இது அணுவுலை விநியோகஸ்தர்களுக்கான முழுப் பாதுகாப்புக் கவசம். மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
அலட்சியம் செய்தாலும் தண்டனை இல்லை – இது சட்டமா, அவலக்கூத்தா?
இம்மசோதாவின் மற்றொரு அதிர்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், அணுவுலையை இயக்கும் நிறுவனம் (operator) வேண்டுமென்றே (wilfully) அல்லது அலட்சியமாக (negligence) விபத்து ஏற்படக் காரணமாக இருந்தால் அவர்களுக்குரிய தண்டனை வழங்க முடியாது. ஒரு சிறிய தொழில்சாலையில் கூடப் பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். ஆனால் அணுமின் நிலையத்தில், லட்சக்கணக்கான மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளினாலும், தண்டனை இல்லை. யாருடைய கட்டாயத்திற்குப் பயந்து மக்களின் உயிரை ஒன்றிய அரசு பணயம் வைக்கிறது?
சிவில் நீதிமன்றங்களுக்கே இடமில்லை – அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்:
புதிய மசோதா அணுச் சேதம் (Nuclear Damage) தொடர்பான எந்த வழக்கையும் சிவில் நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது எனக் கூறுகிறது. மேலும், எந்த நீதிமன்றமும் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தடையாணை (injunction) வழங்க முடியாது என்றும் குறிப்பிடுகிறது.
இந்திய குடிமக்களுக்குள்ள நீதிமன்றம்/நீதி அணுகுவதற்கான அடிப்படை உரிமை (Right to Access Justice) இங்கு பறிக்கப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே (Basic Structure) அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றங்கள் இல்லாத இடத்தில், சட்டம் இல்லை. சட்டம் இல்லாத இடத்தில், ஜனநாயகம் இல்லை.
1 கோடி ரூபாய் அபராதமும், சொற்பமான காப்பீடும்:
அணு மின்னுற்பத்திச் செயல்பாடுகளில் சிறிய முதல் தீவிரமான விதிமீறல்களுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் மட்டுமெ அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் 1 கோடி ரூபாய் அபராதம் மற்றும் மிகக் குறைந்த அளவிலான காப்பீடு (insurance) என்பது மிகவும் சொற்பமானது. இது என்ன நியாயம்? ஒரு அணு மின்னுற்பத்திச் செயல்பாடுகளில் விதிமீறல் நடந்தால், அதன் விளைவு பல தலைமுறைகள்வரை நீடிக்கும். நிலம், நீர், காற்று — அனைத்தும் விஷமயமாகும். ஆனால், அதற்கான இழப்பீடு ஒரு நடுத்தர நிறுவனத்தின் ஆண்டு லாபத்திற்கும் குறைவானது.
பெரியளவிலான அணுவுலை விபத்து நடந்தால் அவ்வுலையின் உற்பத்தித் திறனைப் பொறுத்து ரூ. 100 கோடி முதல் ரூ. 3000 கோடிவரை இழப்பீடு செலுத்தினால் போதுமானது என்கிறது புதிய மசோதா. இழப்பீடானது சேதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படாமல் உலையின் திறனின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பது தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமானதாகும். குறிப்பாக 150 MW உலைக்கு 100 கோடி, 150 MW – 750 MW உலைக்கு 300 கோடி, 750 MW – 1500 MW உலைக்கு 750 கோடி, 1500 MW- 3600 MW உலைக்கு 1500 கோடி, 3600 MW மேல் திறன் கொண்ட உலைக்கு 3000 கோடி என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புகுஷிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பைச் சரிசெய்வதற்கு தற்போது வரை ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது இன்னும் உயரும் எனவும் கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கே செர்னோபில் அணுவுலை விபத்துதான் காரணம் எனக் கோர்பசேவ் கருதினார். ஒரு அணுவுலை விபத்து என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணங்கள் நம் கண்முன்னே இருந்தும் இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது அணுவுலையை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், உபகரணங்கள் வழங்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதுகாப்பு மேம்பாடுகளை (design improvements) அலட்சியம் செய்வதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும். என்ன நடந்தால் என்ன நம்மால் எளிதில் வழங்க முடிகிற குறைந்த அபராதம் செலுத்தினால் போதும் என்கிற மனநிலை உருவாகும். இதுதான் புகுஷிமா பேரழிவுக்கு வழிவகுத்த மனநிலை.
இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் தனியார் அணுசக்தி நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே உள்ளது.
வெளிப்படைத்தன்மையின்மை:
அணுவுலை மற்றும் கதியக்கத் தனிமங்கள் உள்ளிட்ட அணுமின் சக்தி தொடர்பான பல்வேறு தகவல் மற்றும் தரவுகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன, இவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. இது தனியார் நிறுவனங்களின் முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுக்கழிவு மேலாண்மை:
சிறிய ரக அணுவுலைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் பல இடங்களில் அணுக்கழிவுகள் உருவாகக்கூடும். இக்கழிவுகள் அனைத்தையும் மிகுந்த பாதுகாப்போடு கையாள்வது அவசியமாகும். கூடங்குளம் அணுவுலைக்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்தியாவில் உருவாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ்நில கருவூலம் (Deep Geological Repository) அமைப்பதற்கான இடம் கூட இன்னும் கண்டறியப்படவில்லை. அணுவுலைக்கு அருகிலேயே கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் (away from reactor) வசதியை உருவாக்குவதிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது தேசிய அணுமின் சக்திக் கழகம். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் அணுக்கழிவுகளை நாடு முழுவதும் உருவாக்குவது மிகப்பெரிய கதிர்வீச்சு அபாயத்தை உருவாக்கக்கூடும்.
இம்மசோதா என்பது வளர்ச்சிக்கானது அல்ல. இது தேசத்தின் பாதுகாப்பை விற்பனை செய்யும் மசோதா. அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்குவது, இந்தியாவின் எதிர்காலத்தை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளிகள் கைகளில் ஒப்படைப்பதுக்குச் சமம்.
இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறாவிட்டால், வரலாறு பா.ஜ.க. அரசை மன்னிக்காது. 140 கோடி மக்களின் உயிர், லாபக் கணக்கில் ஒரு வரியாக மாறிவிடக் கூடாது. இம்மசோதவை சட்டமாக அமல்படுத்தக் கூடாதென ஒன்றிய அரசை அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்த வேண்டுமெனக் கோருகிறோம்.
DOC-20251215-WA0084.
