நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்

நியூட்ரினோ திட்டத்திற்கு “தேசிய வன விலங்கு வாரியத்திடம்” அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்கால தடையை வரவேற்கிறோம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது : பூவுலகின் நண்பர்கள்

 

நியூட்ரினோ திட்டத்திற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “சுற்றுச் சூழல்” அனுமதியை ரத்து செய்து கடந்தாண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், இது பிரிவு “A” திட்டம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவாக குறிப்பிட்டிருந்தது. நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா திட்டம் அமையவுள்ள இடத்தின் அருகில் உள்ளதால் புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.

 

மேற்சொன்ன எல்லாவற்றையும் மீறி திட்டத்தை செயல்படுத்தக்கூடிய டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தினர் இதற்கான அனுமதி கேட்டு “B” பிரிவின், அதாவது “கட்டிடங்கள் கட்டுமான பிரிவின்” கீழ் தமிழக அரசின் “மாநில சுற்றுச்சூழல் தாக்கீது மதீப்பீட்டு நிறுவனத்திடம்” விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மாநில நிறுவனம் அனுமதி வழங்க மறுத்து அதற்கான காரணங்களையும் சொன்னது. இந்த ஆய்வகத்தை அமைக்க மலையைக் குடையும்போது சக்திவாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும், தவிர 6லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்படும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லூயிர்பெருக்க இடமாக உள்ளதாலும், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் வாழ்கிறது என்பதாலும், பொட்டிபுரம் மலைப்பகுதி வைகை நதியின் முக்கிய நீராதராமக விளங்குவதால் 5மாவட்ட நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதாலும் அனுமதி வழங்கபடவில்லை என்று சொன்னது. சரியான பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட அரசிடம் விண்ணப்பிக்க சொல்லி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிவிட்டது .

இதன் பிறகு இதே பிரிவு “B”யின் கீழ் மத்திய அரசிற்கு விண்ணப்பிக்கிறது டாடா அடிப்படை அறிவியல் நிறுவனம். மாநில அரசின் பரிந்துரையை கருத்தில்கொள்ளாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதை பிரிவு “B” யின் கீழ் ஆய்வு செய்யுமாறு “கட்டுமான திட்டங்களை” ஆய்வு செய்யும் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்புகிறது. இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிபுணர் குழு, இதைப்போன்ற திட்டங்கள் இந்தக்குழுவின் வரையறைகளுக்கு (Scope) அப்பாற்பட்டது என்றாலும், மத்திய அரசு இதை சிறப்பு திட்டமாக கருதச் சொல்லி இருப்பதால் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தரலாம் என்று பரிந்துரைத்தது. அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பது சட்டத்தின் கீழும் “சிறப்பு திட்டம்” என்கிற சரத்து எதிலும் இல்லை, பிறகு எப்படி சிறப்பு திட்டமாக கருதி அனுமதி வழங்கமுடியும் என்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், சட்டத்தை வளைத்து சுற்றுச்சூழல் சட்டங்களை புறந்தள்ளி நியூட்ரினோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்கு தொடர்ந்தோம்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அமைச்சகம் எப்போதெல்லாம் பிரிவு “B” கீழ் அனுமதி வழங்கமுடியும் என்று சட்டம் சொல்கிறது?

  1. மாநிலத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனம் செயல்படாமல் இருக்கும் சமயங்களில்
  2. பொது நிபந்தனைகள் பொருந்தும் திட்டங்கள்

மேற்சொன்ன இரண்டும் இல்லாத நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்திருக்க வேண்டும்.

இதைத்தவிர பல்வேறு காரணங்களையும் மேற்கோள்கட்டி இந்த வழக்கு நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டத்திற்காக இடைக்கால தடையை வழங்கி எங்கள் கோரிக்கையை நிராகரித்து சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பானது கூட. மாநில உரிமைகளை பறித்து மாநில அரசின் நிபுணர் குழு எழுப்பிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு வழங்கிய அனுமதியை, மாநில அரசு, தீர்ப்பாயத்தில் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்காமல் இருந்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த தீர்ப்பு சட்டத்தை மதிக்காமல் அரசுகள் சிறப்பு திட்டம் என்கிற பெயரில் எந்த திட்டத்தை வேண்டுமென்றாலும் நிறைவேற்றலாம் என்கிற போக்கை நாட்டில் உருவாக்கி சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பாகிவிடும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.

ஏற்கனவே தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி வழங்கவேண்டும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் “நிறுவுதலுக்கான ஒப்புதல்” வழங்கவேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ம.தி.மு.க பொதுச்செயலர் திரு.வைகோ தடை ஆணை பெற்றுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நீர்த்தேக்கங்கள் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும். காலநிலை மாற்றம் குறித்த ஐபிசிசி அறிக்கை வந்த பிறகு எல்லாவற்றையும் விட காடுகளையும் மலைகளையும் பாதுகாப்பதே பிரதானமாகிறது. இந்த சூழலில் அந்த பகுதியிலுள்ள மக்களிடம் கருத்தே கேட்காமல் நடைபெற இருக்கும் இந்த திட்டத்தை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசின் முதல்வராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் வரை இந்த திட்டத்திற்கான அனுமதியை வழங்கவில்லை.

தமிழக அரசு இந்த திட்டத்திற்கான அனுமதியை வழங்கக்கூடாது என்றும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இந்த திட்டத்திற்கான எதிர்ப்பை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையும், மேற்கு தொடர்ச்சி மலை குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்கிற தீர்ப்பாயத்தின் உத்தரவு மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துவைத்தாலும் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் எந்த திட்டம் என்றாலும் மக்களிடம் கருத்தை கேட்கவேண்டும் என்பது விதி. மக்களிடம் கருத்தை கேட்கவேண்டிய தேவை இல்லை என்று சொல்வது ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, மக்கள் விரோதமும் கூட.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments