சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கியது தேசிய அணுமின் கழகம்.

Amirtharaj-Stephen-
Fishermen proceeding towards the Koodankulam Nuclear Power Plant to lay a siege on World Fishermen Day, 2011.

சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கியது தேசிய அணுமின் கழகம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

 

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட இரண்டு அணுமின் நிலைய அலகுகள் செயல்பட்டு வருகின்றன. 3 மற்றும் 4வது அலகுகள் அமைக்கும் பணி 2017ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 மற்றும் 6வது அலகுகள் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது.

 

1 மற்றும் 2வது உலைகளில் இருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை உலைக்கு அருகாமையிலேயே Away From Reactor எனும் சேமிப்பு வசதியை ஏற்படுத்தி சேமிக்க தேசிய அணுமின் கழகம் திட்டமிட்டிருந்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள், அமைப்புகளின் எதிர்ப்பால் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் 3 மற்றும் 4 உலைகளின் கட்டுமானப் பணியுடன் சேர்த்தே அவ்வுலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகளை உலைக்கு அருகாமையிலே சேமித்து வைப்பதற்கான Away from Reactor வசதியை கட்டமைக்கும் நடவடிக்கைகளை தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டு வருகிறது. இவ்வுலைகளுக்கான Away From Reactor Spent Fuel Storage Facility (SFSF) அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தேசிய அணுமின் சக்திக் கழகம் கடந்த 2021 டிசம்பர் மாதம் கோரியுள்ளது. பிப்ரவரி 24ம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை இணையம் வாயிலாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

NPCIL e-Tenders _ Public Tenders _ Offline Tenders _ Online Tenders _ Nuclear Power Corporation of India Limited

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் 2013ஆம் ஆண்டு அணு உலையை இயக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அணுக்கழிவுகளை பத்திரமாக வைக்கும் ஆழ்நில கருவூலம் (DGR- Deep Geological Repositiry) ஒன்றை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

 

2014ஆம் ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய தேசிய அணுமின் சக்தி கழகம் கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளிவரும் கழிவுகளை ஏழு ஆண்டுகள் வரைக்கும் அணு உலைக்கு கீழே இருக்கும் தொட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்றும் அதற்குப் பின்னர் அணு உலையில் இருந்து சற்று அப்பால் away from reactor என்ற அமைப்பை ஏற்படுத்தி சில ஆண்டுகள் வரைக்கும் அதில் அணுக்கழிவுகளை பத்திரப்படுத்தி வைக்க முடியும் என்பதால் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு ஆழ் நில கருவூலம் அமைப்பதற்கான அவசியம் எழாது என்றும் இருப்பினும் கூட ஆழ்நிலை கருவூலம் ஒன்றை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய அணுமின்சக்தி கழகம் தெரிவித்திருந்தது.

 

ஆனால் 5ஆண்டுகள் கால அவகாசம் கடந்த 2018ஆம் ஆண்டே முடிந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகிய தேசிய அணுமின் கழகம் கூடங்குளத்தில் away from reactor அமைப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் இருப்பதால் மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி அதற்குள் நிச்சயமாக away from reactor அமைப்பை கட்டி முடிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.

இந்த அணுக்கழிவு சேமிப்பு மையம் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் இத்திட்டத்திற்கு கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழகத்தின் அப்போதைய பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாள் குறிப்பிடாமல் பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

 

ஒரு வேளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைத்தாலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து அந்தக் கழிவுகள் எங்கு கொண்டு செல்லப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கூடங்குளம் அணு உலை குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்த இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். மென்நீர் அணு உலைகளில்(PWR/LWR) இருந்து வெளியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வசதி இந்தியாவில் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அணுவுலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சிமையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகாமையில் உள்ள மையத்தில் (away from reactor) வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

இதன் மூலம் கூடங்குளம் போன்ற அணுவுலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை அமைச்சர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் . மேலும் அவர் தனது பதிலில் இந்தியாவிற்கான “ஆழ்நில அணுக்கழிவு மையம்” (DGR) இபோதைக்கு தேவை இல்லை என்றும் கூறியிருந்தார். இது உச்சநீதி மன்றம் 2103ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் டிஜிஆர் அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும் 2014ஆம் ஆண்டும் வழங்கிய தீர்ப்பிலும் டிஜிஆர் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும் உள்ளது.

 

இந்தியாவில் DGR எங்கு அமைக்கப்படவுள்ளது என்பதை இன்னமும் முடிவு செய்யாததால் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள் நிரந்தரமாக அங்கே வைக்கப்பட்டு விடும் என்கிற அச்சத்தை தொடர்ந்து நாம் வெளிப்படுத்தி வரும் நிலையில்தான் 3 மற்றும் 4ம் உலைகளுக்கான அணுக்கழிவு சேமிப்பு மையத்தை கூடங்குள வளாகத்திற்குள்ளாகவே அமைக்கும் வேலையை தேசிய அணுமின் கழகம் தொடங்கியுள்ளது.

 

கூடங்குளம் 1,2 மற்றும் 3,4 உலைகளில் வெளியாகும் கழிவுகளை கூடங்குளத்திலேயே Away from Reactor அமைப்பு ஏற்படுத்தி சேமித்து வைக்க AERB வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி 7.10.2021 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் 1 மற்றும் 2 உலைகளில் உருவாகும் அணுக் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவிற்கே அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் DGR அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

20.10.2021 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின், SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் அச. உமர்பாரூக், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மதிமுக கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்த்தித்தனர். அப்போது இந்தியாவில் அணுக்கழிவுகளின் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) எங்கே கட்டப் போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

 

நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகளே திணறி வருகின்றன. ஆழ்நில கருவூலம் அமைப்பதற்கான இடத்தேர்வைக் கூட இன்னும் செய்யாமல் தொடர்ந்து கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க முயல்வது எந்த வகையில் நியாயம். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னரும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கான வேலைகளை செய்வது தமிழ்நாட்டு அரசையும் அதன் மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

 

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு தனது வலிமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். 3 மற்றும் 4 உலைகளை கட்டுவதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அளித்த சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டிக்கும்போது அணு உலையில் உள்ள பல்வேறு கட்டுமானங்களின் வரிசையில் அணுக்கழிவு சேமிப்பு மையமும் ஒரு கட்டுமானமாக குறிப்பிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்கின்ற அணுவுலை கட்டுமானத்தையும் அதிக அணுக்கதிர்வீச்சை வெளியேற்றக் கூடிய அணுக்கழிவு மையமும் சேமிப்பு மைய கட்டுமானத்தையும் ஒரே செயல்பாடாக கருத முடியாது.

 

கூடங்குளம் அணுவுலை அமைக்கப்படும்போது நடைபெற்ற பொதுமக்கள் கலந்தாலோசனை கூட்டங்களில் இங்கு உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் கூடங்குளத்தில் வைக்கப்படாது என்கிற வாக்குறுதியைத்தான் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுத்தது. தற்போது அதற்கு மாறாக அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக 3 மற்றும் 4 உலைகள் அமைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்த இசைவாணையை நிறுத்தி வைக்க வேண்டும்.

 

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டு வரும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாட்டின் அனைத்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments