அணுக்கழிவு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரித்தது தேசிய அணுமின் சக்திக் கழகம்

Kudankulam-Nuclear-Power-Plant-

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் வளாகத்திற்குள்ளாகவே சேமிக்கப்படும் என்பதில் ஒன்றிய அரசு உறுதி.

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது தேசிய அணுமின் சக்திக் கழகம்.

 முதல் 2 உலைகளின் கழிவை 3 மற்றும் 4ம் உலைகளில் சேமித்து வைக்க ஒன்றிய அரசு முடிவு.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தொடுத்த வழக்கில் கூடங்குளத்தில் 1 மற்றும் 2ம் உலைகளுக்கான அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தேசிய அணுமின் சக்திக் கழகம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் முதல் இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு ஜூலை 2026 வரை கால அவகாசம் வேண்டும் எனவும் ஒருவேளை அதற்குள் கட்டி முடிக்காவிட்டால் 3 மற்றும் 4 உலைகளுக்காக அமைக்கப்படும் அணுக்கழிவு மையத்தில் 1 மற்றும் 2ம் உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  முதல் உலையில் தற்போது அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் Spent Fuel Pool எனப்படும் சேமிப்பு வசதி 2026 வரையிலும் இரண்டாம் உலையின் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் Spent Fuel Pool எனப்படும் சேமிப்பு வசதி 2028 வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பதால் 2026ம் ஆண்டில்தான் Away from reactor எனும் அணுக்கழிவு மையம் தேவைப்படும் எனவும் அதற்குள் 1, 2, 3 மற்றும் 4ம் அணுவுலைக்கான அணுக்கழிவு மையத்தை கட்டி முடித்து விடுவோம் எனவும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் கால தாமதம் ஏற்பட்டால் முதல் இரண்டு உலைகளின் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்படும் எனவும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான  ஆழ் நில கருவூலம் (DGR- Deep Geological Repository) அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அதுவரை அணுக்கழிவுகளை  உலைக்கு வெளியே பாதுகாப்பாக  வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும். 5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த  2018 பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 2022 ஏப்ரல் 30 வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கூடங்குளம் அணுவுலை வளாகத்திற்குள்ளாக அணுவுலை அலகுகள் 1 மற்றும் 2லிருந்து வெளியாகும் கழிவுகளை வைப்பதற்கான Away from reactor வசதியை உருவாக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி தேசிய அணுமின் சக்திக் கழகம் விண்ணப்பித்திருந்தது. இந்த அனுமதி பெறுவதற்கு பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என்பதால் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டால் கூடங்குளத்தின்  கழிவுகள் நிரந்தரமாக அங்கேயே வைக்கப்பட்டு விடும் என்பதால் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது 3 மற்றும் 4ம் அணுவுலை அலகுகளுக்கான அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான வேலைகளை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமோ, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வோ மேற்கொள்ளாமலே தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த உலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறும்போதே அணுவுலை வளாகத்திற்குள் அமைக்கப்படும் பல்வேறு கட்டிடங்களில் ஒரு கட்டிடமாக இந்த அணுக்கழிவு மையத்தைச் சேர்த்துச் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு விட்டது. எனவே கருத்துக் கேட்புக் கூட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகள் இல்லாமலே தற்போது  3 மற்றும் 4 உலைகளுக்கான அணுக்கழிவு மையத்தை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 1 மற்றும் 2ம் உலைகளுக்கான அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தேசிய அணுமின் சக்திக் கழகம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் முதல் இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு ஜூலை 2026 வரை கால அவகாசம் வேண்டும் எனவும் ஒருவேளை அதற்குள் கட்டி முடிக்காவிட்டால் 3 மற்றும் 4 உலைகளுக்காக அமைக்கப்படும் அணுக்கழிவு மையத்தில் 1 மற்றும் 2ம் உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல் உலையில் தற்போது அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் Spent Fuel Pool எனப்படும் சேமிப்பு வசதி 2026 வரையிலும் இரண்டாம் உலையின் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் Spent Fuel Pool எனப்படும் சேமிப்பு வசதி 2028 வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பதால் 2026ம் ஆண்டில்தான் Away from reactor எனும் அணுக்கழிவு மையம் தேவைப்படும் எனவும் அதற்குள் 1, 2, 3 மற்றும் 4ம் அணுவுலைக்கான அணுக்கழிவு மையத்தை கட்டி முடித்து விடுவோம் எனவும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் கால தாமதம் ஏற்பட்டால் முதல் இரண்டு உலைகளின் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்படும் எனவும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தெரிவித்துள்ளது.

அணுக்கழிவு என்பது மிக மிக ஆபத்தான கதிர்வீச்சு கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கூடங்குளம் அணுவுலைக் கட்டுமானம் தொடங்கியபோது அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கே கொண்டு சென்று விடுவோம் என்றுதான் ஒன்றிய அரசு கூறி வந்தது. அதன் பின்னர் கோலார் தங்கச் சுரங்கத்தில் வைப்போம் என்றது. அதற்கும் கர்நாடகாவில் பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே வைப்போம் எனக் கூறியது. தற்போது முதல் இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவு மையத்தை அமைக்க முடியவில்லை அதனால் 3 மற்றும் 4ம் உலைகளுக்கான அணுக்கழிவு மையத்தில் முதல் இரண்டு உலைகளில் இருந்து வரும் கழிவுகளை வைப்போம் என்கிறது ஒன்றிய அரசு. இப்படித் தொடர்ச்சியாக மிகவும் ஒரு ஆபத்தான அணுக்கழிவு விவகாரத்தை சிறுபிள்ளைத்தனமாக ஒன்றிய அரசு கையாள்வது அச்சத்தை அளிக்கிறது.

குஜராத் பா.ஜ.க. முதலமைச்சர் அணுவுலை வேண்டாம் என்றாலோ, கர்நாடக பா.ஜ.க . அணுக்கழிவு மையம் வேண்டாம் என்றாலோ அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மட்டும் அணுவுலைகளையும் அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் அமைத்து தமிழர்களை ஏமாளியாக்கி வருகிறது. மேலும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தங்களது இயலாமையால் செய்யும் தவறுக்கு தமிழர்களை பலியாக்க நினைக்கிறது. 3 மற்றும் 4ம் உலைகளுக்கான அணுக்கழிவு மைய கட்டுமானம் 2030ம் ஆண்டில் தான் முடியும் என முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது இக்கட்டுமனத்தை 2026ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளது. AFR கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என தேசிய அணுமின்சக்திக் கழகமே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அப்படி ஒரு சிக்கலான கட்டுமானத்தை அவசர அவசரமாக கட்டி முடித்தால் அதன் உறுதித்தன்மை எப்படி பலமாக அமையும் என்கிற கேள்வி எழுகிறது.

மேலும் தேசிய அணுமின் சக்திக் கழகம் தனது மனுவில் அணுக்கழிவுகளை நிரந்தரமாக வைக்கும் ஆழ் நில கருவூலம் (DGR- Deep Geological Repository) அமைப்பதற்கானத் தேவை இன்னும் சில பத்தாண்டுகளுக்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடங்குளத்தில் உண்டாகும் அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் , இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு 18-2-2022 அன்று எழுதிய கடிதத்தில் தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தான் விடுப்பதாகவும் கோரியிருந்தார். ஆனால், இவ்விவகாரத்தில் தொடர்ச்சியாக தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் ஒன்றிய அரசு அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே நிரந்தரமாக வைக்க திட்டமிட்டு வருகிறது.

மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு கூடங்குளத்தில் 3 மற்றும் 4ம் உலைகளைக் கட்டுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்துள்ள இசைவாணையை நிறுத்தி வைத்துவிட்டு அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆழ்நில அணுக்கழிவு சேமிப்பு மையம் (DGR- Deep Geological Repository) அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரையில் முதல் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் இந்த விவகாரத்தில் அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments