அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கை, உலக வெப்பமயமாதல் குறித்தும், அதன் அச்சம் தரத்தக்க விளைவுகள் குறித்தும் பொதுவெளிக்கு அதிகம் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால், நம்மை நிலைகுலையச் செய்யும் அந்த ஆய்வறிக்கை முடிவுகளுக்கு குறைவான கவனமே தரப்பட்டது. இதன் காரணமாக, நிரூபிக்கப்படாத தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அணு ஆற்றல் பயன்பாட்டை இரட்டிப்பாக்குதல் ஆகியவற்றின் பக்கம் நம் கவனம் திரும்ப ஊக்குவிக்கப்பட்டது.

ஐபிசிசி அறிக்கையின் அடிப்படை சாராம்சம், தொழில்நுட்பம் மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு தீர்வு காணலாம் என நம்புவதே. ஆனால், அந்த தீர்வுகள் காலநிலை மாற்றத்தின் வேர் காரணத்தைக் கண்டறிய உதவாது.

முதலில் அந்த அறிக்கையில் எச்சரிக்கும் விளைவுகள் குறித்து ஆராயலாம். காலநிலை மாற்றத்தால் பேரழிவுகளைச் சந்திக்காமல் இருக்க உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு, இப்போது உமிழப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவானது, அடுத்து வரும் 10-15 ஆண்டுகளில் மீறாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண 4 பெரியளவிலான தொழில்நுட்ப தீர்வுகளையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில் சூரிய மின்னாற்றல் பயன்பாடு தவிர்த்து, நிரூபிக்கப்படாத உயிரி எரிசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்டனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார்பன் உறிஞ்சி தொழில்நுட்பம் மற்றும் கார்பன் சேகரிப்பு ஆகியவற்றுடன் கூடிய உயிரி எரிசக்தி ஏன்? ஏனென்றால், அடுத்த பத்தாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கார்பன் உமிழ்வானது நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லையை மீறிவிடும் என அந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. அதனால், அதிகப்படியான அளவில் கார்பன் டை ஆக்ஸைடை நீக்குதல் வளிமண்டலத்தில் வாயுக்களின் அளவை குறைக்கும் என நம்புகின்றனர். அதனால், பெருமளவில் அறியப்பட்ட வனபரப்பை அதிகரித்தல், கார்பன் சேகரிப்பு, உறிஞ்சு தொழில்நுட்பம், வருங்காலத்தில் நேரடியாக காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுதல்,  லைம்ஸ்டோன் துகளை கடலில் சேர்த்தல் உள்ளிட்டவை மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழ்வை கட்டுக்குள் வைக்க முடியும் என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னும் அச்சப்படத்தக்க வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “வளங்களையும், எரிசக்தியையும் அதிகளவில் பயன்படுத்தி அடையும் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை இன்னும் பரவலாக பசுமை இல்ல வாயுக்களை சார்ந்தே நமது வாழ்வியல் முறை மாறும்” என்வதே. அதாவது, போக்குவரத்திற்கான எரிசக்தி அதிகரிப்பு, வாழ்வாதார பொருட்கள் ஆகியவையும் இதில் அடங்கும். வேறொரு வார்த்தைகளில் சொல்வதானால், வழக்கமான அன்றாட வாழ்வியல் முறையே தொடரும். நிலைமை இப்படியிருக்கையில், தொழில்நுட்பம் நம்மை காப்பாற்றும் என்று நம்பும் இந்த கண்ணோட்டத்தை எப்படி நியாயப்படுத்துவது?

இந்த தொழில்நுட்பங்கள் பெரியளவில் பயன்படுத்தப்பட வேண்டும். 1,200 பில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட வேண்டும்.கார்பன் -டை-ஆக்ஸைடு சேகரிப்பு என்பது  வாயு மண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றி வேறோரு இடத்தில் தேக்கி வைக்கும் தொழில்நுட்பம் ஆகும். ஆக, இதுவரை கையாளப்படாத தொழில்நுட்பம் மூலம் இரண்டரை நூற்றாண்டுகளாக உமிழப்பட்ட கார்படன்-டை-ஆக்ஸைடின் சரிபாதிக்கும் மேலான அளவை வரும் 80 ஆண்டுகளுக்குள் சேகரிக்கப்பட்டு எரிக்க வேண்டும்.

இந்த வருங்கால தொழில்நுட்பங்களுடன் நம்மை காப்பாற்றுவதத்காக மற்றொன்றும் இணைந்திருக்கிறது. அதுதான் அணு ஆற்றல். நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் மீதான நேர்மறை சிந்தனையை புரிந்துகொள்வது என்பது,  தோல்வியடைந்த அணு ஆற்றல் மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் நம்பிக்கையை புரிந்துகொள்ளுவதை விட எளிதானது. 1950களில் இருந்து அணு ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் உள்ளது. இன்று வரை உலகம் முழுவதும் 400 அணு உலைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவே, அதன் பொருளாதார செலவுகள், ஆபத்துகள், பலன்களை மதிப்பிட போதுமானதாக உள்ளன.

காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்ட சமயத்தில், அணு ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு உலகளவில் குறைந்த அளவில்தான் இருந்தது, அதிகம் இல்லை. 1997 ஆம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கை கையெழுத்தானபோது, உலகளவில் அணு ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 17 சதவீதம் தான்.20 ஆண்டுகள் கழித்து, 2017 ஆம் ஆண்டில் அதன் அளவு வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவானதுதான். அணு தொழில்நுட்பம் மறுமலர்ச்சி பெற்ற காலமும் இதனுள் அடக்கம். அணு ஆற்றலின் இந்த வீழ்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகளின் அரசாங்கங்கள் அணு ஆற்றல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க எத்தனையோ சலுகைகளை பல வழிகளில் வழங்கினாலும், அணு ஆற்றல் சார்ந்த பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாகவே  உள்ளது. அணு உலைகள் கட்டமைப்பு மிகவும் செலவுகரமானது. நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிக செலவுகளை இட்டுச் செல்லும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட அணு உலைகள் கட்டமைப்பு தாமதமாகும். ஐரோப்பிய நாடுகளில் பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அணு உலை பணிகள், பிரான்ஸின் நவீன அணு உலை, அமெரிக்காவில் ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணம் ஆகியவற்றில் தொடங்கப்பட்ட அணு உலை பணிகள் மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிக செலவுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிலும், தெற்கு கரோலினாவில் கட்டமைக்கப்பட்ட அணு உலை பல பில்லியன்கள் செலவிடப்பட்ட பின்னர் அதிக செலவீனத்தால் கைவிடப்பட்டது.

 

இந்த போக்கு, கொள்கை வகுப்பாளர்கள் அணு ஆற்றல் தொழில்நுட்பத்தை கைவிடுவதற்குத்தான் வழிவகுக்கும். ஆனால், இந்த தோல்விகள் சரிசெய்யப்பட்டுவிடும் என நம்புவது,  மேம்படுத்தப்பட்ட அணு உலைகள், சிறிய மாட்யூலர் அணு உலைகள், 5 ஆம் தலைமுறை அணு உலைகள் போன்ற புதிய தலைமுறை அணு உலை தொழில்நுட்பத்தில் அரசு மற்றும் தனியார் ஆகியவை முதலீடு செய்வதை அதிகரிக்கவே செய்யும். இபிஆர் உலை மற்றும் ஏபி 1000 போன்றாயெல்லாம் ஆவணங்களில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும் அணு உலைகளை விட இவை குறைந்த செலவில் கட்டமைக்கப்படும் என நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. பாதுகாப்பை பொருட்டில் கொள்ளாமல் இருந்தால் ஒழிய மட்டுமே அவை குறைந்த செலவுகளில் அமைக்க வழியுண்டு. அப்படி செய்தால், அந்த உலை செர்னோபில், புகுஷிமா போன்று வருங்காலத்தில் ஆபத்துகளையே உருவாக்கும்.

இப்போது மீண்டும் அந்த ஆய்வறிக்கை முடிவுகளுக்கு வருவோம். அந்த ஆய்வறிக்கையில் அணு ஆற்றல் சார்ந்த பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. அறிக்கை தயாரித்தவர்கள், அணு உலைகளை மிக எளிதில் அமைக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வை மட்டும் நோக்கத்தில் கொண்டதால், வளர்ந்துவரும் அணுக்கழிவுகள் குறித்து அதில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்த அணுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மனிதர்களுடன் தொடர்பில்லாத வண்ணம் நூறாயிரம் ஆண்டுகளுக்கு வைக்கப்பட வேண்டும்.

இங்கே உள்ள மிக முக்கிய பிரச்சினை “தொழில்நுட்ப அடிப்படைவாதம்”. அதிநவீன, அதி ஆற்றல் கொண்ட, மேம்பட்ட தொழில்நுட்பம் எந்த பிரச்சினையையும் தீர்த்துவிடும் என நம்பும் ” தொழில்நுட்ப அடிப்படைவாதம்”.

இந்த நம்பிக்கை, அன்றாட நடைமுறைகள் தொடரவே வழிவகுக்கும். நிலக்கரி, எரிவாயு, அணு உலைகள் ஆகியவற்றுக்குல் பதிலாக சூரிய ஆற்றல், காற்றாலைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களே தீர்வாக அமையும். புதைபொருள் எரிபொருள் தொழில்நுட்பம் கூட அணு உலை தொழில்நுட்பத்தைப் போன்றே சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகளைக் கொண்டது. இந்த பூகோளத்தில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் நிலைத்து வாழ தொழில்நுட்ப பயன்பாடு குறைக்கப்படுதல் வேண்டும்.

காலநிலை மாற்றம் குறித்த எந்தவொரு காட்டமான விவாதமும், உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியாது என ஒப்புக்கொள்வதில் தான் முடியும். அப்பட்டமாக சொல்ல வேண்டுமென்றால், காலநிலை குறித்த பிரச்சினையை முதலாளித்துவ யுகத்தில் தீர்க்க முடியாது.

முதலாளித்துவம் குறித்த வாதம் என்பது, முதலாளித்துவம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தை விட பழமையானது. அடிப்படையில் பொருளாதார மாற்றம் குறித்த வாதத்தை உருவாக்க வேண்டும் என்பதே, இந்த சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

எம்.வி.ரமணா மற்றும் ராபர்ட் ஜென்சென்

தமிழில்: ஜீவா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments