ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி; பூவுலகின் நண்பர்கள் கண்டனம்!

ஹைட்ரோகார்பன்

 

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கினறுகள் அமைக்க ONGCக்கு மாநில அரசு அனுமதி.

 

விவசாயிகளை ஏமாற்றும் செயலுக்கு வன்மையான கண்டனம்!

 

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ என் ஜி சி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்தது.

06.11.2023 அன்றே இவ்விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்திப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தோம். விவசாய அமைப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், அனைத்தையும் மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப்(HELP) அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம்(OALP) மூலம் ONGC நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

தற்போது அந்த பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி தாலுகா மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாலுகா பகுதிகளில் புதிதாக கிணறுகள் அமைக்க ONGC அனுமதி சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை. இதனடிப்படையில்தான் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ONGC நிறுவனத்திற்கு 11.03.2025 அன்று இச்சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.

வழக்கமாக ஒன்றிய அரசின் புதிய PARIVESH தளத்தில் இந்த அனுமதி ஆவணத்தைப் பதிவேற்றம் செய்யாமல் யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய சுற்றுச்சூழல் அனுமதிக்கான தளத்தில் (environmentclearance.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யாரை ஏமாற்ற, யாரை யாரிடமிருந்து பாதுகாக்க இதெல்லாம் செய்யப்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துச் சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பதால் இச்சட்டத்தால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து கூறி வருகிறோம்.

மேலும், இச்சட்டம் அறிவித்தபடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டத்தில் 5 வட்டாரங்களையும் (காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை), புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் (அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி) ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டம் ஆனதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அதை குறிப்பதற்காக, 2020- ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்து மயிலாடுதுறை மாவட்டம் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தில் விடுபட்ட ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அமையவுள்ள ஹைட்ரோகார்பன் கிணறுகள் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரகள் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது கூற்றுக்கு மாறாக இப்போது புதிய ஆய்வுக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வேளாண் மக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் 2022 பிப்ரவரியிலேயே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் யாருடைய வணிக நலனைப் பாதுகாக்க காப்பாற்ற இவ்வறிக்கையை தமிழ்நாடு அரசு மூடி மறைக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் இயற்கை வளங்களின் நலன் கருதி கீழ்காணும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

  1. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி,க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  2. இக்கிணறுகளுக்கான Petroleum Exploration License (PEL) அனுமதியை தமிழ்நாடு வழங்கக் கூடாது.
  3. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையை வெளியிட வேண்டும். அவ்வறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
  4. 2020 காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும்.

அனைத்தையும் மீறி ONGC நிறுவனம் இக்கிணறுகளை அமைக்கும் பணியை மேற்கொண்டால் களத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ECLSEIAA_227503_28O449_SIA_TN_IND2_449571_2023 (1)

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments