தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு மற்றும் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்பு நிலம் ஆகிய 5 இடங்களுக்கு சர்வதே முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தன் பேரழகையும் பல்லுயிரின வளத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் பிழைத்திருத்தலுக்காக, பெருநகரத்தின் வளர்ச்சி என்ற நெருக்கடிமிக்க முரணை எதிர்கொண்டபடி பல தசாப்தங்களாகப் போராடிவருகிறது தமிழகத்தின் ஒரே நன்னீர் சதுப்புநிலமான பள்ளிக்கரனை சதுப்புநிலம்.
குறுக்கும் நெடுக்குமாய் தன்னைக் கிழித்துச் செல்லும் சாலைகள், பிரம்மாண்ட குப்பைக் கிடங்கு, கட்டிடங்கள் என இந்த போராட்டத்தில் சதுப்புநிலம் இழந்ததே அதிகம். இவற்றைத் தொடர்ந்து இறுதித் தாக்குதலாக கடந்த 2021 ஆம் ஆண்டு, தமிழக அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தித் தூர்வாருவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இது சூழலியலாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆழம் குறைந்த – சதுப்புநிலத் தன்மையே வேறெந்த நீர்நிலைக்கும் இல்லாத சிறப்பையும் உயிர்ப் பன்மையத்தையும் பள்ளிக்கரணைக்குக் கொடுத்திருக்கிறது. வளமிக்க ஒரு சதுப்புநிலத்தை வெறும் தண்ணீர் தொட்டிபோலக் கையாள முயன்ற அப்போதைய அதிமுக அரசின் இந்த முன்னெடுப்பு மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சவக்குழியிலிட்டு அதற்கு அடிக்கப்பட்ட இறுதி ஆணியாக அத்திட்டம் இருந்திருக்கும்.
சூழல் குறித்த எந்த அக்கறையும் புரிதலுமற்ற அரசின் முடிவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று, கண்மூடித்தனமான இந்த சூழல் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. தற்போது பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, உலகளவிலான ஈரநிலங்களைப் பாதுகாக்கும் ‘ராம்சர்’பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் பட்டியலின்கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது நம்பிக்கை தருகிறது. அதேநேரத்தில் இந்த நடவடிக்கை மட்டுமே இந்த விலைமதிப்பற்ற இயற்கைச் சூழலைக் காக்கப் போதுமானதல்ல என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம்.
இந்த தருணத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களை நினைவு கூர்கிறோம். நீண்ட காலமாக பள்ளிக்கரணையின் முக்கியத்துவத்தைக் குறித்து ஏராளம் ஆய்வுகள் செய்தவரும் அதனை மீட்க முயற்சிகள் எடுத்தவருமான ‘கேர் எர்த்’ அமைப்பின் ஜெயஸ்ரீ வெங்கடேசன் மேலும் ஆர் ஜெ ரஞ்சித் டேனியல்ஸ், முத்து கார்த்திக், வினோத், ஸ்டீபன் ஜெயசீலன், அஞ்சனா, அவந்திகா, ரோசல்லா போன்ற தோழர்களையும், பள்ளிக்கரணை பிரச்சினைக்கு வெளிச்சம் பாய்ச்சிய ஊடக நண்பர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என ஒவ்வொருவரின் இடைவிடாத முயற்சிகளையும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறோம். தமிழ்நாடு சதுப்பு நில இயக்கத்தை ஆரம்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு,கஸ்டாலின் மற்றும் அத்திட்டத்தை சிறப்புடன் செயலாற்றி வரும் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எண்ணூர் கழிமுகம் போன்று இன்னும் பல்வேறு சூழலியல் சுரண்டல்களுக்கு ஆளாகி வரும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் அனைவரும் இணைந்து நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடினால் நிச்சயமாக ஒரு நாள் நல்லது நடக்கும் என்பதற்கு பள்ளிக்கரணை மேலும் ஒரு உதாரணம். தொடர்ந்து சூழலைக் காக்கும் எந்தவொரு போராட்டத்திலும் சமரசமின்றி கரம்கோர்த் துப் பயணிப்போம்.
Pallikaranai judgement