பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம்: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து

பள்ளிக்கரணை

ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்குப் பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 08.05.2026 அன்று ரத்து செய்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அப்பகுதியின் இயல்பை அழிக்கும் வகையில் சட்த்திற்குப் புறம்பாகப் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமமும் அனுமதி வழங்கியிருந்ததை  அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

சுற்றுச்சூழல் அமைப்புகள், அரசியல் எதிர்கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்ரத்தில் வழக்குகளும் தொடரப்படிருந்தது.  இந்நிலையில் மே 8 ஆம் தேதி நடந்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை

சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் என்டெர்பிரெய்சஸ் நிறுவனத்தின் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் திட்டத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி 2025 இல் அந்தந்த அரசுத் துறைகள் வழங்கி இருந்தன.

டிசம்பர் 11, 2024 அன்று நடந்த 517 ஆவது சந்திப்பில் மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு (State Expert Appraisal Committee – SEAC) சுற்றுசூழல் அனுமதிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஜனவரி 20, 2025 அன்று மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது. இதைத் தொடர்ந்து மிக விரைவாக பெருநகர சென்னை வளர்ச்சிக்குழுமம் (CMDA) சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் 23/01/2025 கட்டுமான அனுமதியை வழங்கியது. இம்மோசடி தொடர்பாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து குரலெழுப்பி வந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தமிழ் நாடு ஈரநில ஆணையத்தின் தடையில்லாச் சான்று பெறாமல் கட்டுமானத்தைத் துவங்கக் கூடாது என்கிற சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனையை மீறியதால் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விதிமீறல் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி தமிழ் நாடு ஈரநில ஆணையம் SEIAA க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

65 வகையான வலசைப் பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள். 50 வகை மீனினங்கள், 34 வகை வண்ணத்துப் பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டுடலிகள், 15 வகை பாம்புகள், 8 வகை கரப்பான்கள், 10 வகை பல்லிகள், 78 வகை மிதவை உயிரினங்கள், 11 வகை இருவாழ்விகள், 10 வகை பாலூட்டிகள் மற்றும் 167 வகையானத் தாவரங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை உயிர்ப்பன்மைய வளங்களைக் கொண்ட இப்பகுதி சென்னையின் வெள்ள அபாயத்தைத் தணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 50 ச.கி.மீ. ஆக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2007ஆம் ஆண்டில் 5.99 ச.கி.மீ. ஆகவும் இப்போது 3.17 ச.கி.மீ. ஆகவும் சுருங்கியுள்ளது. தனியார் கட்டுமானங்கள் மற்றும் NIOT, NIWE, ELCOT, குப்பைக் கிடங்கு, ரயில் நிலையம் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன.  இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் அப்பகுதியில் தொடர்ந்து சூழல் நடை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளைப் பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்டு வருகிறது.

மேற்கொண்டு பிரிகேட் நிறுவனம் புதிய சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்தால் அதைப் பரிசீலிக்கக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழ் நாடு அரசு சுற்றுச்சூழல் துறையை வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் ஈரநிலங்களை அடையாளம் காணும் பணியை அரசு விரைந்து முடிக்க வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 7ன் படி அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். ராம்சார் சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்ட 20 இடங்கள் உள்ளிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட பிற ஈரநிலங்களுக்கான ‘ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (Integrated Management Plan) தயாரிக்கப்பட வேண்டும். அனைத்து ராம்சார் பகுதிகளின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் வரை அறிவிக்கை செய்யப்பட்ட ஈரநிலங்கள் மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகள் உள்ளிட்ட Influence Zone பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

பூவுலகின் நண்பர்கள்
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted