தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக’ அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது.
141_Ex_II_2_202621.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகள் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டன.
பெரிய பரப்பளவிலானத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது திட்ட அமைவிடத்திற்குள் நீர்நிலை இருக்கும்பட்சத்தில் அதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுகிறது. இதற்குத் தீர்வாகவும் திட்டங்களுக்குச் சார்பாகவும் நில ஒருங்கினைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும்.
இச்சட்டத்தின்படி புதிதாக தொழிற் திட்டம் தொடங்க விரும்புபவர் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு (water storage) குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் அரசு மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அவ்வரைவுத் திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும்.
இந்நடைமுறை முழுவதும் முழுக்க முழுக்க திட்டங்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் உருவாக்கப்பட்டதாகும். திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் என்கிற வாய்ப்பே இங்கு இல்லை. அரசும் ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயும் திட்டத்தை சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் நிராகரிக்கலாம் என்கிற சரத்தே இல்லை.
ஈரநிலங்கள், நீர்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் வேளாண் நிலங்களை உள்ளடக்கிய வகையில் 13 கிராமங்களைச் சார்ந்த சுமார் 2172 எக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரந்தூர் விமான நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது. இது இயற்கை வடிகால்கள், வெள்ளத் தடுப்பு அமைப்புகள், நிலத்தடி நீர் மற்றும் தாழ்வான பகுதிகளை மிகப்பெரும் அளவில் பாதிக்கவல்லது. விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள நிலத்தில் 63.81 விழுக்காடு நன்செய் மற்றும் புன்செய் விவசாய நிலங்களாகும், இதுதவிர 26.54 விழுக்காடு நிலத்தில் குளம், குட்டை மற்றும் ஏரி போன்ற நீராதாரங்கள் அமைந்துள்ளன.
மேலும், கேசவரம் அணைக்கட்டுப் பகுதி பகுதியிலிருந்து வரும் நீரை கூவம் ஆறு, கூவம் ஏரி மற்றும் பல்வேறு ஏரிகளுடன் இணைக்கும் இயற்கை வடிகால் ஒன்றும், பாலாறு அணைக்கட்டில் தொடங்கி அடையாறு ஆற்றுப்படுகையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கு நீரை கொண்டு சேர்க்கும் 42 கி.மீ நீளமுள்ள கம்பன் கால்வாயின் பெரும்பகுதியும் இந்த பகுதியில் உள்ளன.
பரந்தூர் விமான நிலையத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த பெரும் தடையாக இருந்தன. அத்தடையை அகற்றவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டதென 21.04.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் தெரிவித்திருந்தோம். நாங்கள் சந்தேகித்ததைப் போலவே தற்போது வருவாய்த்துறை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் கீழ் சிறப்புத் திட்டமாக அறிவித்துள்ளது.
ஒரு நீர்நிலையை, ஓடையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகாமல் உருவாக்கப்பட்டதுதான் நில ஒருங்கிணைப்புச் சட்டம். ஒரு நீர்நிலை என்பது தனித்த சூழல் அமைவு கிடையாது. அருகிலுள்ள வேளாண் நிலத்தோடோ, மேய்ச்சல் நிலத்தோடோ அல்லது கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாகவோ எனப் பல பயன்பாடுகளை உள்ளடக்கிய பெரும் சூழல் சங்கிலியின் கண்ணியாக நீர்நிலை உள்ளது. திட்ட அமைவிடத்தில் உள்ள ஒட்டுமொத்த நீர்நிலைகளின் கொள்ளளவை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டு அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்நீர்நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
விமான நிலையம் அமையுவுள்ள இப்பகுதியில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட மொத்தம் 40 நீராதாரங்கள் உள்ளன. இவற்றில் 34 நீராதாரங்கள் முழுவதும் விமான நிலைய எல்லைக்குள்ளும் பிற சுற்றுபுறத்திலும் அமைந்துள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 90 லட்சம் கன அடியாகும். அண்மையில் உவகை ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் திட்ட அமைவிடத்தில் உள்ள நெல்வாய் ஏரியைத் தவிர மற்ற அனைத்து நீர்நிலைகளையும் புறக்கணிப்பது என்பது இப்பகுதியின் வேளாண்மை, நிலத்தடி நீர், சுற்றுபுறக் கிராமங்களுக்கான நீர்த் தேவைகள் போன்றவற்றை நீண்டகால அளவில் கடுமையாக பாதிக்கக்கூடியது. மேலும், வெள்ள பாதிப்பை மட்டுபடுத்துவதிலும், நிலத்தடி நீரை தக்க வைப்பதிலும் முக்கியப் பங்காற்றும் 1040 ஹெக்டேருக்கும் மேலான விவசாய நிலங்கள் முற்றிலும் அழிய நேரிடும்.” என எச்சரிக்கிறது.
புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.
