தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (M-TIPB) கடந்த 26ஆம் தேதி ஏல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில் விரிவான திட்ட அறிக்கை ஒன்றைத் தயார் செய்வதற்கான ஏல அறிவிப்புதான் வெளியிடப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் Chennai Petroleum Corporation Limited நிறுவனம் ஏற்கெனவே ஆண்டிற்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வந்தது. இந்த ஆலை தனது உற்பத்தித் திறனை 9 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்துவதற்கு 35 ஆயிரம் கோடி செலவில் பணிகளை கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியினையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அரசிடமிருந்து CPCL நிறுவனம் பெற்றிருந்தது. இந்தப் பணிகள் அடுத்த 48 மாதங்களுக்குள் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கப் பணிகள் முடிவடையும் நேரத்தில் ஆலையைச் சுற்றி ஒரு பெட்ரோலிய கெமிக்கல் சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஆலைகளின் தொகுப்பு இருந்தால் சுத்திகரிப்பு ஆலையின் துணை அலகுகளாக பல சிறு, குறு நிறுவனங்கள் அமையும் என தமிழ்நாடு அரசு தனது ஏல அறிவிப்பு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
TN MTIPB_PETROCHEM_TENDERஇந்த நோக்கத்திற்காகத்தான் ஒரு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுப்பதற்கான ஏல அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏல அறிவிப்பை கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம் https://www.bharat-electronictender.com/etshome/NitCorr/NitPfView.aspx.
ஒன்றிய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வேதாந்தா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு காவிரி டெல்டாவில் அதிகளவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதிகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டது. இதை எதிர்த்து விவசாய அமைப்புகள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தின் பலனாக 2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கும் நோக்கில் ”Tamil Nadu Protected Agricultural Zone Development Act, 2020 எனும் சட்டத்தைக் கொண்டு வந்தது.
ஆனால், இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்ற ஹைட்ரோகார்பன் கிணறுகளையோ, சுத்திகரிப்பு ஆலைகளையோ தடுக்க முடியவில்லை. புதிதாக வரும் கிணறுகளை மட்டும்தான் தடுக்க முடிந்தது. ஆகவே, இந்தச் சட்டத்தின் பலன்கள் மிகவும் குறைவு என்பதே பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கருத்தாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிசாமி அவர்கள் ‘ தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டமுன்வடிவு ( சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 17/2020) அறிமுகம் செய்தபோது அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இச்சட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை அவையில் பேசியிருந்தார். குறிப்பாக ” பிரிவு 4 (2) (b)-ன்கீழ் உட்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், pipelines, சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் பயன்பாடுகளுக்கான other Utilities திட்டங்களை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் other utilities என்பதன்கீழ், பெட்ரோல், கியாஸ் எல்லாம் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சட்டமுன்வடிவின் நோக்கத்திற்கு எதிராகவே இரு பிரிவுகளை இதில் ஏன் சேர்த்திருக்கிறீர்கள்? ” எனப் பேசியிருந்தார். தற்போது தமிழ்நாடு அரசு காவிரி டெல்டாவில் பெட்ரொலிய கெமிக்கல் தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது 2020ஆம் ஆண்டில் எதிர்கட்சியாக இருந்தபோது எடுத்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
MK STALIN SPEECHகடந்த 2017ஆம் ஆண்டு கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சிகளை உள்ளடக்கிய 22,938 ஹெக்டேர் பரப்பளவில் பெட்ரொலியம், கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலம் (PCPIR) எனும் திட்டத்தை ஒன்றிய அரசுடன் இணைந்து அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இதற்காக வழங்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்பும் இத்திட்டத்திற்கு அதிகமான காரணத்தால் 2020ஆம் ஆண்டு அதிமுக அரசு இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே போலொரு திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக அரசு கொண்டு வர நினைப்பது அம்மாவட்ட விவசாயத்தை பெரிதும் பாதிக்கும்.
அண்மையில் Council on Energy, Environment and Water எனும் அமைப்பு இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12ஆம் இடத்தில் இருப்பதாகவும் தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையும் மாவட்டங்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச்சூழல் திட்டம்(UNEP) அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ”Emissions Gap Report 2021” எனும் கார்பன் உமிழ்வு குறித்த ஆய்வறிக்கையில் புவி வெப்பமடைதலை 1.5° செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பாரிஸ் ஒப்பந்த இலக்கை அடைய வேண்டுமானால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அடுத்த 8 ஆண்டுகளுக்கு பாதியாகக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் அது சார்ந்த எந்தத் தொழிலையும் தொடங்குவது புவி வெப்பமடைதலின் தீவிரத்தையே அதிகப்படுத்தும். புதிதாக பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு காலநிலை மாற்றத்திற்கென தனியாக பிரிவை ஏற்படுத்தி நிதி ஒதுக்கி செயல்பட்டு வருவதை பூவுலகின் நண்பர்கள் சார்பாக தொடர்ந்து வரவேற்று வந்துள்ளோம். மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே நடைபெற்று வரும் ஹைட்ரோகார்பன் எடுப்பு பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமெனவும் 2020ஆம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்தபோது திமுக எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் ”தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் 2020”ல் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து காவிரி டெல்டாவை காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.