தொழிற்சாலைகளுக்குச் சாதகமாக மாசுத் தடுப்பு விதிகளைத் தளர்த்திய பா.ஜ.க. அரசு

delhi ohkla incinerator
delhi ohkla incinerator

நீர் மற்றும் காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட விதிகளில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமாகச் சில தளர்வுகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தளர்வுகளினால் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுபாடுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் அண்மையில் நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டங்களின் கீழ் தொழிற்சாலைகளை நிறுவுதல், இயக்குதல் தொடர்பான இசைவானைகளை வழங்குவதற்காக இயற்றப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் (Guidelines for the Grant, Refusal or Cancellation of Consent under the Air (Prevention and Control of Pollution) Act, 1981, and Water (Prevention and Control of Pollution) Act, 1974)  திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இப்புதிய திருத்தங்களின்படி தொழிற்சாலைகள் ஒருமுறை மட்டும் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையைப் (Consent to Operate – CTE) பெற்றால் போதுமானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இசைவாணை ரத்து செய்யப்படும் வரை அதற்கான கால அவகாசம் உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனவரி 28 அன்று வெளியான செய்திக் குறிப்பில் நடைமுறைத் தாமதங்களைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இத்திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற கட்டமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்புதல், இயக்குவதற்கான ஒப்புதல் வழங்கல், மறுப்பு  தெரிவித்தல் அல்லது ரத்து செய்தல் ஆகியவற்றுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இவ்விதிகளே தொழிற்சாலைகளுக்கு மிகவும் சாதகமாகவும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களின் பல்வேறு உரிமைகளையும் பறிக்கும் வகையில் இருந்தன.

இந்நிலையில் அவ்விதிகளில் மேலும் சில திருத்தங்களை ஒன்றிய அரசு ஜனவரி 28ஆம் தேதி மேற்கொண்டுள்ளது. அதன்படி இனி ஒரு தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை கோரி காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகியவற்றின் கீழ் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஒரே விண்ணப்பத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் பிற கழிவு மேலாண்மை விதிகளின்கீழ் பெற வேண்டிய இசைவாணைகளைப் நிறுவனங்கள் பெற முடியும்.

மேலும், அதிக மாசை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான கால அவகாசம் 120 நாட்களிலிருந்து 90 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு தொழிற்சாலை முதல் முறையாக இயங்கத் தொடங்கும்போது மட்டும் CTE அனுமதி பெற்றால் போதுமானது. ஏதாவது விதிமீறலுக்காக அது ரத்து செய்யப்படும் வரையில் அவ்வனுமதி செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி ஒரு தொழிற்சாலையின் வகைப்பாடைப் பொறுத்துக் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் அனைத்து விதிகளையும் ஆலை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியைப் (CTE) புதுப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொழிற்சாலை CTE புதுப்பிக்கக்கோரி விண்ணப்பிக்கும்போது ஆலையைச் சோதனை செய்து அனைத்து நிபந்தனைகளும் பின்பற்றப்படுகிறதா என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அதில் குளறுபடிகள் இருந்தால் CTE புதுப்பிக்கப்படாது. CTE புதுப்பிக்கப்படவில்லை என்றால் ஆலையை இயக்க முடியாது என்கிற நிலை ஏற்படும் என்பதற்குப் பயந்து ஆலை நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றும். ஆனால், தற்போது ஆலைகள் CTE அனுமதியைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருப்பது தொழிற்சாலை மாசுபாடுகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு கடும் போராட்டங்களுக்குப் பின்னர் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இப்படி தனது CTE அனுமதியை புதுப்பிக்கக்கோரி விண்ணப்பித்தபோது மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில்தான் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க மறுத்தது மாசு கட்டுப்பாடு வாரியம். இதை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியங்களில் பாதிக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அனைத்துத் தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாடு வாரியங்களால் கண்காணிக்க முடியாது. கண்காணிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் தொழிற்சாலைகள் விதிமீறலில் ஈடுபட்டு மாசு மற்றும் கழிவுகளை அதிகம் வெளியிடும் அபாயமுள்ளது.

வடசென்னையில் அரசால இயக்கப்படும் அனல்மின் நிலையங்களே பல நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நச்சு மிகுந்த வாயுக்களை வெளியிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அரசு தாக்கல் செய்த அறிக்கை வாயிலாக அம்பலமானதை நான் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். சூழல் பாதுகாப்பையும், பொதுமக்கள் ஆரோக்கியத்தையும் காவு கொடுத்து தொழிற்சலைகளுக்குச் சாதகமாகச் சட்டங்களைத் திருத்துவது பேராபத்தில் முடியும்.

புதிதாகக் கொண்டுவரப்பட்ட இத்திருத்தங்களால் தொழிற்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இவ்விதிகளைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் இத்திருத்தங்களுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

புதிய திருத்தங்கள்:

Control Guidelines under Air Act 1981

Consent Guidelines under Water Act 1974

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments