2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடு 20.03.2023 அன்றும், வேளாண் நிதிநிலை அறிக்கை 21.03.2023 அன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கும், பெண்கள் மேம்பாட்டிற்கும், விவசாயம் மற்றும் வேளாண் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் நடப்பாண்டு பட்ஜெட்டை பூவுலகின் நண்பர்கள் வரவேற்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம் , காலநிலை மாற்றத் துறைக்கு மட்டும் ரூ.1,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது. இதுமட்டுமல்லாமல் புதுபிக்கத்தக்க மின்னுற்பத்தி, நீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, பொதுப் போக்குவரத்ததுக் கட்டமைப்பு, காட்டுயிர் நலன் என பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்:
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் எனும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காலநிலை மாற்றத்தின் விளைவாக வேகமாக கடல்நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் 1076கிமீ கடற்கரையில் 402.94கி.மீ தூரத்திற்கு கடல் அரிப்பினால் பாதிப்படைந்துள்ளது. கடற்கரை, கடல் உயிர்ப்பன்மயம், மீனவர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் இத்திட்டம் முழுக்க முழுக்க உள்ளூர் மீனவ மக்களின் ஆலோசனை, கருத்துகள் மற்றும் அவர்களின் பாரம்பரிய அறிவை உள்வாங்கி ஒப்புதலோடு தயாரிக்கப்பட வேண்டும் என்பது பூவுலகின் நண்பர்களின் எதிர்பார்ப்பாகும்.
தந்தை பெரியார் காட்டுயிர் சரணாலயம்:
நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தை, தென் காவிரி காட்டுயிர் சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் கான்பரப்பில் “தந்தை பெரியார் காட்டுயிர் சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் 18வது காட்டுயிர் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 9 வகை இருவாழ்விகள், 136 வகை பறவைகள்,118 பட்டாம்பூச்சி வகைகள், 12 மீன்வகைகள், 21 பாலூட்டி இனங்கள், 26 ஊர்வன உயிரினங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக புலிகளுக்கு உகந்த வாழிடமாகக் கருதப்படும் இவ்விடம் காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் அதற்கு தந்தை பெரியார் எனப் பெயரிடப்பட்டுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.
நூறாண்டுகளாக வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களும், உலகெங்கும் நில பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமுமே தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் எனவும் இதைச் சரி செய்ய உலகில் உள்ள காடுகள், நீர் நிலைகள் , கடல் ஆகிய இயற்கை அமைவுகளில் 30-50% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என அண்மையில் வெளியான IPCC யின் ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காட்டுயிர் சரணாலய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
பன்னாட்டுப் பறவைகள் மையம்:
மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில் “பன்னாட்டுப் பறவைகள் மையத்தை” அரசு அமைக்கவுள்ளது.
காலநிலை மாற்ற வீராங்கனைகள்:
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் பங்கு முக்கியமானது, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் “காலநிலை மாற்ற வீராங்கனைகள்” என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். இதற்காக, அவர்களுக்கு 20 கோடி ரூபாய் செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை:
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என தெரிவிகப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீண்டகால வெள்ளத் தணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, இரண்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 12 வெள்ளத் தணிப்புப் பணிகள் 434 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் 462 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
259 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 309 ஏரிகளில் பழுதுபார்த்தல், புனரமைத்தல், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனக் குறிபிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி:
மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்திட பசுமை ஆற்றல் வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, 2030 ஆம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மின்னுற்பத்தியினை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநில மின்னுற்பத்தியில் தற்போது 20.88 விழுக்காடாக இருக்கும் பசுமை ஆற்றலின் பங்களிப்பை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காடாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரிதும் வரவேற்கத்தக்க முயற்சியாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னோடி மாநிலமாக ஆக்கும் இம்முயற்சியை பூவுலகின் நண்பர்கள் வரவேற்கிறது. ஆனால் அதே சமயம் சூழலை அதிகம் பாதிக்கும் புனல் மின்திட்டங்களும் பசுமை திட்டங்களாக பாவிக்கப்படுவது வருத்தமளிக்கிறது,
2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீரேற்று மின் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும் என கூறப்பட்டுள்ளது. புனல் மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த நீரியல் போக்கினையும் இயற்கை அமைப்புகளையும் மாற்றி அமைத்ததனால் ஏற்படும் பாதிப்ப்புகளை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் பகுதியில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். புனல் மின் நிலையத்திற்காக நடைபெறும் ‘சார் ஆணை’ கட்டுமான பணிகளின் தாக்கத்தினால் நிலம் சரிந்து ஜோஷிமத் பகுதியில் பல நூறு வீடுகள் பூமியில் புதைந்துவிட்டன. இதுமட்டுமல்லாமல் இது போன்ற பெரிய புனல் மின் திட்டங்களினால் நீரியல் போக்கு மாறுவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயங்களும் காடுகள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு,
- 2017ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 3000MW அளவிலான டிபாங் ஹைட்ரோ எலெக்ட்ரிக் (Dibang Hydro Electric) திட்டத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 4500 ஹெக்டர் காடுகள் அழிக்கபட்டிருக்கிறது.
- 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்-பெட்வா (Ken-Betwa) நதி நீர் இணைப்பிற்க்காக மத்திய பிரதேசத்தில் புலிகள் சரணாலயமாக இருக்கும் சுமார் 89 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது.
- 2015ம் ஆகஸ்ட் மாதம் குட்கு மண்டல் (kutku Mandal) அணை கட்ட அனுமதி வழங்கியதன் மூலம் 119 சதுர கிலோ மீட்டர் அளவிலான காடுகளை இழந்திருக்கிறோம்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் 4,100 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனல்மின் நிலையங்களினால் சுற்றுச்சூழலும் மக்களின் வாழ்வாதாரமும், ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதிக செலவு பிடிக்கும் அனல்மின் நிலையங்களினால் அரசிற்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக அனல் மின் நிலையங்கள் கட்டமைப்பது வரும் காலத்திற்கு ஆரோக்கியமான திட்டம் இல்லை என்பதைப் பூவுலகின் நண்பர்கள் சார்பாக சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
பாதுகாப்பான குடிநீர் :
குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புரங்களை உருவாக்குதல் போன்றவற்றை செய்ய 9,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 5,960 கோடி ரூபாய் மாநில அரசாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் (jal jeevan mission) செயல்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான இலவச குடிநீரை வழங்க 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ள மேலாண்மை:
வருங்காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் வகையில், கட்டமைப்புகளை வலுப்படுத்த, வரும் ஆண்டில் வெள்ளத் தடுப்புப் பணிகளும், நீர் வழிகளைத் தூர்வாரும் பணிகளும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் இது மேலும் விரிவுபடுத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
போக்குவரத்து:
1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.500 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. , ரயில் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்க, மாநிலத்தில் புதிய இரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது. பொதுபோக்குவரத்தை மேம்படுத்த இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தால் காற்று மாசுபாடு குறையும், எரிபொருள் பயன்பாடும், உமிழ்வும் குறையும் என்கிற வகையில் இந்த அறிவிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை
நடப்பாண்டிலும் வேளாண்துறைக்கென தனி நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2023 ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியிலும் செழித்து வளரும் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க பூவுலகின் நண்பர்கள் தொடக்கம் முதலாகவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. சென்னையில் மட்டுமே 4 முறை மிகப்பெரிய அளவில் சிறுதானிய உணவுத் திருவிழாவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் நடத்தியிருந்தோம். அதேபோலதொரு முயற்சியை தமிழ்நாடு அரசு எடுக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மா, கொய்யா, நெல்லி போன்ற பல்லாண்டு பலன் தரக்கூடிய பழமரக்கன்றுகள் நடவு செய்யவும் தரிசு நிலங்கள் அடையாளம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் சிறு முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்படுவது அவசியம். தரிசு நிலங்கள் அனைத்திலும் அதன் இயல்பான உயிர்ப்பன்மயத்தையும் பயன்பாட்டையும் ஆராயாமல் வேளாண் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடாது. நான் தேவையில்லை என நினைக்கின்ற தரிசு நிலங்களிலெல்லாம் தனித்த உயிர்ச்சூழல் நிலவுகிறது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்துப் பரவலாக்கிட, 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிய வேளாண் பட்ஜெட்டில் ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மறைந்த திரு.நெல் ஜெயராமன். அவரது பெயரில் 2021ல் தொடங்கப்பட்ட மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலமாக ஒரு தனிமனிதனின் கனவை தமிழ்நாடெங்கும் கொண்டு செல்லும் அரசின் முயற்சி போற்றுதலுக்குரியது.
இந்த நடவடிக்கைகள் மூலம் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்களின் நுகர்வு அதிகரிக்கும். அதன் காரணமாக உற்பத்தியும் அதிகரிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கி பயன்படக்கூடிய அளவில் விலையும் குறையும் வாய்ப்புள்ளது. அதிக செலவு ஏற்படக்கூடிய விவசாய முறையிலிருந்து குறைந்த செலவு ஏற்படக்கூடிய விவசாய முறைகளுக்கு மாறுவது உழவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இம்முயற்சிகளை படிப்படியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதால் வேளாண்மையில் வேதியியல் பொருட்களின் பயன்பாடு குறைந்து மண்ணும் நீரும் நச்சாகாமல் பாதுகாக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா, பனை மேம்பாட்டு இயக்கம், பனை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், தொன்மை சார் உணவகங்கள், பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல், சிறுதானிய சிற்றுண்டி உணவகம், வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு, காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் போன்ற அறிவிப்புகளையும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்.