கடற்கரையோர  சூழல் அமைவைச் சீரழிக்கும் முடிவைக் கைவிடுக

கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும்,  ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 09.01.2023 அன்று கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞானரீதியாக சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம், சுரங்கப்பணி மேற்கொண்டு, அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தை பெருக்கவும்,  கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  தொலைநோக்கு பார்வையாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (Ilmenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனமும்,  ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழ் நாடு அரசு கூறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரி மணல் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் குதிரைமொழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழ் நாடு அரசு  திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும் என அரசு தெரிவித்துள்ளது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை குறிப்பாக கனிம வளங்களைக் கொண்டு அரசின் வருவாயை அதிகரிப்பதில் முகவும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கொள்கை முடிவு முற்றிலும் தவறான பார்வையாகும். அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதைப்போல  கனிம வளங்களை சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம் அகழ்ந்தெடுக்கவே முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேரி மணல் மற்றும் தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெரிடுக்கும் நடைமுறை அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுவரை பாதுகாப்பான தொழில்நுட்ப செயல்முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

கடந்த காலங்களில் தென்மாவட்டங்களில் நடந்த சட்டவிரோதமான தாது மணல் கொள்ளை பற்றி விசாரித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி மாநில அரசுக்கு  2013-2014 ஆண்டில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். வைகுண்டராஜன் என்கிற நபருக்குச் சொந்தமான வி.வி. மினரல்ஸ் அனுமதியின்றி தாதுக்களை பிரித்தெடுத்து விற்றதில் 1 லட்சம் கோடி ரூபாய் வரை  ஊழல் நடந்ததாக அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.  ” தாது மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக மோனோசைட் கனிமத்தை வெட்டி எடுப்பது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அப்போதைய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அந்த அறிக்கையில் “இந்த தாது மணல் எடுப்பது அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேட்டையும் விளைவிக்கிறது. இந்த தாது மணல் குவாரிகள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் சிறுநீரக நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்” எனவும் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து மிகவும் முக்கியமானதும் உண்மையானதும்கூட. IREL நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் அப்பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களில் கனிமம் பிரித்தெடுக்கப்பட்ட இடங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும்.

கடற்கரையோரம் பிரித்தெடுக்கப்படும் கனிமங்களில் பல கனிமங்கள் அபாயகரமான கதிரியக்க வீச்சு(RADIATION) கொண்டவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் சட்டவிரோத தாது மணல் விற்பனை தொடர்ந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்களுக்கோ, அரசிற்கு சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிற நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தமிழ் நாடு அரசு தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவானது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகும். அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேரிக்காடுகள் பார்ப்பதற்குப் பாலைபோலத் தெரிந்தாலும் அது மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அமைவுகள் ஆகும். தேரி நிலத்தில் உள்ள பொறை மண், மழைக்காலங்களில் தண்ணீரை முழுவதுமாக ஊடுருவச் செய்து உள்வாங்கிக்கொள்கிறது. இதன் காரணமாக அதிகளவில் மழை பெய்தாலும் அவை வழிந்தோடி வீணாகாமல் சேகரிக்கப்படுகிறது. பொறை மண்ணுக்கு அடியில் இருக்கும் காய்ந்த களிமண் பரப்பும் அதற்கு அடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையும் மழைநீரை நிறுத்தி வைத்து தேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்கின்றன.

5152.51 ஹெக்டேர் கொண்ட குதிரைமொழித்தேரியும், 899.08 ஹெக்டேர் கொண்ட சாத்தான்குளம் தேரியும் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியான ஒரு சூழல் முக்கியத்தும் வாய்ந்த இடத்தை கனிம வள வருவாய்க்காக சீரழிப்பது வேதனைக்குரியது. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த தேரியிலிருந்து டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதற்காக டாடா நிறுவனம் செய்த முயற்சி தென் மாவட்ட மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.  தற்போது தமிழ் நாடு அரசின் முயற்சிக்கும் நிச்சயமாக மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

மேலும் 2019ஆம் ஆண்டில், தனியார் நிறுவனங்களுக்குக் கடற்கரையோர கனிமங்களை எடுக்க விதிக்கப்பட்ட தடையை  நீக்குவதற்கு கடந்த ஆண்டு ஒன்றிய அரசு முடிவெடுத்தது. இதற்காக 25.05.2022 அன்று ஒன்றிய அரசின் சுரங்கங்கள் துறை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் 1975ல் (MMDR ACT) ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரியது.

இச்சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 2022ல் முடிந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலையும் பெற திட்டமிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 27, 2022ல் அதானி நிறுவனம் ஆந்திராவில் Alluvial Heavy Minerals Limited, ஒடிஷாவில் Puri Natural Resources Limited ஆகிய இரண்டு நிறுவனங்களையும் மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்தது.

இந்த இரண்டு நிறுவனங்களுமே கடற்கரையோர கனிம வளங்களைக் குறிப்பாக டைட்டானியம் டையாக்சைடை பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் ஆகும். அதானியின் லாபத்திற்காகவே ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்கள் மீதான தடையை நீக்குவதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, National Monetization Pipeline எனும் திட்டத்தின்கீழ் பல பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.  நாளை IREL நிறுவனமும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அப்படி நிகழ்ந்தால் தமிழ் நாட்டின் கடற்கரையோர கனிம வளங்களைச் சுரண்டி, அதானியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தனியார் நிறுவனமோ லாபம் ஈட்டும். நம் மக்களோ கதிரியக்க பாதிப்பிலும் கடலரிப்பு பாதிப்பிலும் துன்பமுற நேரும்.

ஒன்றிய அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% அதாவது 402.94 கிலோமீட்டர் தூரமானது கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல இடங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குளச்சல், மணவாளக்குறிச்சி, பூந்துறை, மேல்மிடாலம், முருங்கவிளை, புத்தந்துறை ஆகிய இடங்கள் கடும் கடலரிப்பைச் சந்தித்து வருவதாக ஒன்றிய புவி அறிவியல் துறையின் NATIONAL ASSESMENT OF SHORELINE CHANGES ALONG INDIAN COAST அறிக்கை தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றம் தமிழ்  நாட்டின் நிலவமைப்பில் தீவிரமான மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த நிலை மிகவும் மோசமடையக்கூடும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நம்மால் எவ்வளவு தூரம் இயற்கை அமைவுகளை சிதைக்காமல் பாதுக்காக்க முடியுமோ அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். ஆனால், தமிழ்நாடு அரசின் மேற்கண்ட முடிவு சூழல் பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். ஆகவே, தமிழ் நாட்டின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட  கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் சீரழிக்கும் முயற்சிகளை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S Janakarajan
S Janakarajan
1 year ago

Brilliant note. This is an important issue which the Govt of Tamil Nadu should take seriously

Sankar Narayanan
Sankar Narayanan
1 year ago

Indian Rare Earths Ltd has already created hell of a lot of health hazards to local people in Gopalpur in Odisha’s Ganjam dist.