அனல் மின் நிலையங்களில் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு மாசைக் குறைப்பதற்கான Flue Gas De-sulphurisation-FGD தொழில்நுட்பத்தை நிறுவ மேலும் 3 ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகம்.
அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல் மின் நிலையங்களுக்கான புதிய மாசு கட்டுப்பாடு விதிகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. புதிய விதிகளின்படி அனல் மின் நிலையங்களில் FGD(Flue Gas Desulfurizer) எனப்படும் காற்று மாசு கட்டுப்படுத்தும் அமைப்பை நிறுவ வேண்டியது கட்டாயம்.
புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முதலில் 2017ம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்து வந்த அறிவிப்புகளின் மூலம் அந்த காலக்கெடு 2024/25 வரை நீட்டிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த அறிவிப்புகளில் அனல் மின் நிலைய நிறுவனங்களுக்குச் சாதகமாக நிறைய தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.
கடந்த 01.04.2021 அன்று வெளியான அறிவிப்பில் அனல் மின் நிலையங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றால் போல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் காலநீட்டிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இதன் படி தலைநகர் டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அல்லது 10 இலட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் இருக்கும் அனல் மின் நிலையங்களை A பிரிவிலும், ஏற்கனவே அதிக காற்று மாசினால் அவதிப்படும் மாசடைந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் B பிரிவிலும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்கள் C பிரிவிலும் சேர்க்கப்பட்டன.
இதில் A பிரிவிற்கு 2022 வரையிலும், B பிரிவிற்கு 2023 வரையிலும், C பிரிவிற்கு 2024 வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 03.05.2022 அன்று, கொரோனா பொதுமுடக்கம், FGD கருவியின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டையும் காரணம் காட்டி, C பிரிவின் கீழ் வரும் அனல் மின் நிலையங்களுக்கு 2035 வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய எரிசக்தி அமைச்சகம் கோரியிருந்தது.
இதனையடுத்து 05.09.2022 அன்று அனல் மின் நிலையங்கள் FGD நிறுவுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்படி A பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2024 வரையிலும், B பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2025 வரையிலும், C பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2026 வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதிய எரிசக்தி அமைச்சகம் அனல் மின் நிலையங்களில் FGD பொருத்துவதற்கு மீண்டும் கால நீட்டிப்பு வேண்டும் எனக் கோரியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் இருந்து மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்தியாவில் FGD தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாக உள்ளதாகவும், FGD க்கு தேவையான பல மூலப் பொருட்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் உள்ள தட்டுப்பாடு காரணமாகவும், FGD கட்டுமானத்திற்கு மூன்று ஆண்டுகள் மேல் ஆகும் என்பதால் இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 33 முதல் 39 அனல் மின் நிலைய அலகுகளில் மட்டுமே FGD பணிகள் செய்யக்கூடிய திறன் உள்ளது எனவும் காரணம் கூறி மீண்டும் அவகாசம் கோரியுள்ளது ஒன்றிய எரிசக்தி அமைச்சகம்.
MoP OM dated 20 November 2024 - Copyஏற்கெனவே கால நீட்டிப்பு வழங்கியும் இந்தியாவில் உள்ள 600 அனல் மின் நிலைய அலகுகளில் வெறும் 44 அலகுகளில் மட்டும்தான் FGD நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான அனல் மின் நிலைய அலகுகளில் (323 அலகுகளில்) இன்னும் FGD நிறுவுவதற்கான ஏலத்தைக் கூட துவங்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில் 38 அனல் மின் நிலைய அலகுகளில் இன்னும் FGD கருவி பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலும் அனல் மின் நிலையத்தைச் சுற்றி (10கிமீ சுற்றளவில்) வசிக்கும் மக்கள் காற்று மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர், அனல் மின் நிலையங்களில் இருந்து வெறியேறும் நுண் துகள் கலந்த காற்றை மக்கள் சுவாசிப்பதனால் தங்களில் வாழ்நாளில் கணிசமான ஆண்டுகளை இலக்கின்றனர் என்கிறது AQLI ஆய்வறிக்கை. தலைநகர் டெல்லியில் மக்கள் மூச்சு விடவே திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லி காற்று மாசிற்கு டெல்லி NCR பகுதியைச் சுற்றி அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட அனல் மின் நிலைய அலகுகளும் முக்கியக் காரணம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
எரிசக்தி அமைச்சகத்தின் இந்தக் கோரிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் ஏற்றுக்கொண்டால் பொது மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனில் ஒன்றிய அரசிற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றே அர்த்தம். மேலும் கால அவகாசம் தந்து இன்னும் 4-5 ஆண்டுகள் வரை இந்த அனல் மின் நிலையங்கள் காற்றை மாசுபடுத்தப் போகிறது என்றால் இந்த விதி முறைகள் 2015ல் கொண்டு வந்ததற்கான அர்த்தமே இல்லை. இவர்கள் அடுத்த முறையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவகாசத்தை நீட்டிக்கத்தான் பார்பார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த அனல் மின் நிலையங்கள் காற்று மாசு கட்டுபாட்டுக் கருவிகள் பொருத்தாமலே செயல்படும் என்றால், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த பிரதமர் மோடி க்ளாஸ்கோ காலநிலை மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்ன அர்த்தம்?
பிரதமரின் பஞ்சமிர்த வாக்குறுதிகளின்படி இந்தியா 2030ம் ஆண்டிற்குள் 50% புதுபிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற வேண்டும். நாட்டின் 78% அனல் மின் நிலையங்கள் C பிரிவில் தான் உள்ளன. C பிரிவில் உள்ள அனல் மின் நிலையங்கள் 2030 வரை புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாது என்றால், நிச்சயம் இந்தியாவின் காலநிலை மாற்ற வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப் போவதில்லை என்றே அர்த்தம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் செயல்பாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில், 16 அனல் மின் நிலைய அலகுகள் C பிரிவில் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அனல் மின் நிலையக் காற்று மாசினால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகிவரும் சூழலில், இந்த 16 அலகுகளும் 2030 வரை இப்படியே காற்று மாசுடன் இயங்கினால் மக்களின் ஆரோக்கியதிற்கு யார் பொறுப்பு?
இந்த அறிவிப்பின் மூலம் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு இந்த அனல் மின் நிலையங்கள் சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கத் தான் போகிறது என ஒன்றிய அரசு மறைமுகமாகக் கூறி இருக்கிறது. இவ்வாறு அனல் மின் நிலையங்களின் வசதிக்காக மக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பலியாக்கும் இந்த கால அவகாச நீட்டிப்பினை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்