ராம்சார் சதுப்பு நிலங்கள் அனைத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைத் தடை செய்க!

27.10.2025

 

ராம்சார் சதுப்பு நிலங்கள் அனைத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைத் தடை செய்க!.  

ஈர நிலங்கள் அனைத்திற்கும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயார் செய்க!  

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்க! 

பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

 

சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அப்பகுதியின் இயல்பை அழிக்கும் வகையில் சட்த்திற்குப் புறம்பாகப் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமமும் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

தன் பேரழகையும் உயிர்ப்பன்மய வளத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் பிழைத்திருத்தலுக்காக, பெருநகரத்தின் வளர்ச்சி என்ற நெருக்கடிமிக்க முரணை எதிர்கொண்டபடி பல தசாப்தங்களாகப் போராடிவருகிறது தமிழ்நாட்டின் ஒரே நன்னீர் சதுப்புநிலமான பள்ளிக்கரனை சதுப்புநிலம்.

குறுக்கும் நெடுக்குமாய் தன்னைக் கிழித்துச் செல்லும் சாலைகள், பிரம்மாண்ட குப்பைக் கிடங்கு, கட்டிடங்கள் என இப்போராட்டத்தில் சதுப்புநிலம் இழந்ததே அதிகம். இவற்றைத் தொடர்ந்து பெரும் தாக்குதலாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தித் தூர்வாருவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இது சூழலியலாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆழம் குறைந்த – சதுப்புநிலத் தன்மையே வேறெந்த நீர்நிலைக்கும் இல்லாத சிறப்பையும் உயிர்ப் பன்மையத்தையும் பள்ளிக்கரணைக்குக் கொடுத்திருக்கிறது. வளமிக்க ஒரு சதுப்புநிலத்தை வெறும் தண்ணீர் தொட்டிபோலக் கையாள முயன்ற அப்போதைய அ.தி.மு.க. அரசின் இம்முன்னெடுப்பு மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சவக்குழியிலிட்டு அதற்கு அடிக்கப்பட்ட இறுதி ஆணியாக அத்திட்டம் இருந்திருக்கும்.

சூழல்குறித்த எந்த அக்கறையும் புரிதலுமற்ற அரசின் முடிவை எதிர்த்துப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று, கண்மூடித்தனமான சூழல் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. 2022ஆம் ஆண்டு பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, உலகளவிலான ஈரநிலங்களைப் பாதுகாக்கும் ‘ராம்சார்’ பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டது பெரும் நம்பிக்கை அளித்தது. அதேநேரத்தில் இந்த நடவடிக்கை மட்டுமே இவ்விலைமதிப்பற்ற இயற்கைச் சூழலைக் காக்கப் போதுமானதல்ல என்பதையும் நம் உணர்ந்தே இருக்கிறோம்.

கடந்த ஆண்டு பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுத்த 93 ஏக்கர் நிலத்தில் பல்லுயிர்ப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி முயன்றது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

65 வகையான வலசைப் பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள். 50 வகை மீனினங்கள், 34 வகை வண்ணத்துப் பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டுடலிகள், 15 வகை பாம்புகள், 8 வகை கரப்பான்கள், 10 வகை பல்லிகள், 78 வகை மிதவை உயிரினங்கள், 11 வகை இருவாழ்விகள், 10 வகை பாலூட்டிகள் மற்றும் 167 வகையானத் தாவரங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை உயிர்ப்பன்மைய வளங்களைக் கொண்ட இப்பகுதி சென்னையின் வெள்ள அபாயத்தைத் தணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 50 ச.கி.மீ. ஆக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2007ஆம் ஆண்டில் 5.99 ச.கி.மீ. ஆகவும் இப்போது 3.17 ச.கி.மீ. ஆகவும் சுருங்கியுள்ளது. தனியார் கட்டுமானங்கள் மற்றும் NIOT, NIWE, ELCOT, குப்பைக் கிடங்கு, ரயில் நிலையம் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன.  இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் அப்பகுதியில் தொடர்ந்து சூழல் நடை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளைப் பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்டு வருகிறது.

இப்படி சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை அனைத்து விதமான ஆக்கிரமிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அரசின் சில மோசமான திட்டங்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சதுப்பு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, குறிப்பாக ராம்சார் தளமாக அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுத்து சதுப்பு நிலத்தின் இயல்பு நிலைக்கு அவற்றை மறுசீரமைப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

2024ஆம் ஆண்டில் வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்தபோது” பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசுக் கட்டிடங்களை அகற்றி அதைக் கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம், அல்லது ரேஸ் கிளப் நிலத்தைப் புதிய நீர்நிலையாக மாற்றலாம்” எனத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை வழங்கி அரசை இதுகுறித்து முடிவெடுக்குமாறு கூறியது. அரசு கட்டிடங்களையே பள்ளிக்கரனை சதுப்பு நிலத்திலிருந்து அகற்றுவது குறித்து பசுமைத் தீர்ப்பாயமே கருத்து தெரிவித்தது என்றால் அச்சதுப்பு நிலத்தில் எப்படிப் புதிய கட்டுமானங்களை அனுமதிக்க முடியும்.

20 ஈரநிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால், வெறும் அங்கீகாரங்கள் மற்றும் அறிவிக்கைகளால் மட்டுமே இயற்கை வளங்களைப் பாதுகாத்திட முடிகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அண்மையில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காடு ஏரிப் பகுதிக்குள் அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்ததை நாளிதழ் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தது. தி.மு.க. அரசு திட்டங்களையும், அறிவிக்கைகளையும் வெளியிடுவது மட்டும் போதாது. உண்மையாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இவ்வறிவுப்புகள் அனைத்தும் வெறும் விளம்பரங்களாக மட்டுமேயிருக்கும்.

ஒன்றிய அரசின் ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017ன் படி ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஈரநிலங்களாகும். இவற்றுள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற நிரந்தரக் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது.

இதனைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கிறோம்.

  1. தமிழ்நாட்டில் ஈரநிலங்களை அடையாளம் காணும் பணியை அரசு விரைந்து முடிக்க வேண்டும்.
  2. ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 7ன் படி அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்.
  3. ராம்சார் சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்ட 20 இடங்கள் உள்ளிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட பிற ஈரநிலங்களுக்கான ‘ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (Integrated Management Plan) தயாரிக்கப்பட வேண்டும்.
  4. அனைத்து ராம்சார் பகுதிகளின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் வரை அறிவிக்கை செய்யப்பட்ட ஈரநிலங்கள் மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகள் உள்ளிட்ட Influence Zone பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
  5. பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கப்படும் நிலங்களை அரசு உரிய விதிகளின்படி ஈர/சதுப்பு நிலங்களாக அறிவிக்கை செய்ய வேண்டும்.
  6. உடனடியாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்- SEIAA பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments