தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

2010 இல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.ட்டி கத்தரிக்காய் நமக்குத் தேவை யில்லாதது, நாம் விரும்பாதது, பாதிக்கக்கூடியது என்பன போன்ற காரணங்களால் நம்முடைய கூட்டு முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது இன்னமும் உங்கள் நினைவிலிருந்து இருக்கும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.ட்டி கத்தரிக்காயை மத்திய அரசு பல்வேறு காரணங்களினால் விளைவிக்க அனுமதிக்க நிரந்தரத் தடையை விதித்தது. மத்திய அரசு இந்த நிரந்தரத் தடையை விதிக்கும் முன்னரே தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் பி.ட்டி கத்தரியைத் தடைசெய்தன. அப்போது மத்திய அரசு சமூகத்தின் கருத்திற்கும் அறிவியல் உண்மைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நிரந்தரத் தடை விதிப்பதாகத் தெரிவித்தது அந்த உத்திரவில். மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த மாயைகளை கடந்த 15 ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வரும் பி.டி. பருத்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. எந்தப் புழுவைக் கொல்ல வேண்டுமோ அந்தப் புழு எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொண்டது, விவசாயிகள் இப்போது முன்பு பயன்படுத்தியதை விட, இதுவரையில்லாத அளவிற்கு, பூச்சிக் கொல்லிகளை அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய பருத்தி விவசாயம் மற்றும் பருத்தி சந்தை மான்சான்டோ என்கிற அந்த ஒரேயரு பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதையும் நாம் காண்கிறோம். மேலும் இந்த நாட்டின் விவசாயிகள் இலட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டதும் அதில் பெரும் பாலானோர் பருத்தி விவசாயிகள் என்பதையும் நாம் அறிவோம். இப்போது 2016ல் வேறொரு மரபணு மாற்றுப் பயிர் நம் மீது திணிக்கப்படத் திட்டமிடப் படுள்ளது. மரபணு மாற்றப்பட்ட மூன்று கடுகு வகைகளை விளைவிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு இந்திய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவிடம் கேட்கப் பட்டுள்ளது. மரபணு மாற்று அங்கீகாரக் குழு என்பது மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் விஞ்ஞானிகளால், அதன் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்ட அமைப்பாகவும் உள்ளதை நாம் அறிவோம். இந்தியச் சுற்றுச்சூழல் சட்டம் 1989ன் படி அமைக்கப் பட்ட மரபணு மாற்று அங்கீகாரக் குழுவிடம் தேவைப்படும் அனைத்து சோதனைகளையும் செய்துள்ளோம், அதன் தாக்கங்களையும் ஆராய்ந்துள்ளோம் எனக் கூறி அந்த ஆய்வு விவரங்களுடன் மனு செய்யப் படுள்ளது. தாரா வீரிய ஒட்டு 11 (அ) டி.எச்.எம்11 என்று பெயரிடப்பட்டுள்ள ரகமும், மரபணு மாற்றும் செய்யப்பட்ட அதன் தாய், தந்தை ரகங்களும் என மூன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகங்களை வெளியீடு செய்ய தில்லிப் பல்கலைக் கழகத்தின் மரபணு மாற்றுப் பயிர்கள் ஆய்வு மையம் கோரியுள்ளது. இதன் உண்மையான பொருள் விளைநிலத்தில் விவசாயிகள் விளைவிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே.

அதிக விளைச்சலைப் பெறவே இந்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நம்மிடம் ஏற்கெனவே இந்த ரகங்கள் எவ்வளவு விளைச்சல் தருமோ அதைவிட அதிகமாக விளைச்சல் தரும் ரகங்கள் புழக்கத்தில் உள்ளன. மேலும் மரபணுக்களை மாற்றாமலேயே சி.எம்.எஸ் என்கிற தொழில் நுட்பம் மூலம் பல்வேறு நாடுகள் அதிக விளைச்சல் தரும் இரகங்களை உருவாக்கி வருகின்றன. ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் விதை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்களிடம் விவசாயிகள் விதையையும் அதனுடனே களைக்கொல்லியையும் சேர்த்து வாங்கிட வைக்கவேண்டும் என்பதே. இதைவிட இன்னும் மோசமானது என்னவெனில் சி.எம்.எஸ் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் தங்களுக்குள்ள சில பல இடர்பாடுகளைக் காட்டி, விளைச்சலை அதிகரிக்கக் கைவசம் உள்ள இதர பிற வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், விவசாய விஞ்ஞானிகளாக இல்லாத சில விஞ்ஞானிகள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் மட்டுமே ஒரே வழி என்று மரபணு மாற்று கடுகை உருவாக்கி அதை நம் தலைமீது கட்ட முயல்கிறார்கள். இவர்கள் சி.எம். எஸ் நுட்பத்தைப் பயன்படுத்தாமல் செடிகளில் ஆண்மலட்டுத் தன்மையை உருவாக்கும் பார்னஸ் (barnes) என்கிற மரபணுவையும் பாக்டீரியத்தில் உள்ள மரபணுக்களையும் திணித்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்கி அதனுடன். பார்ஸ்டார் (Barstar) என்ற மரபணு திணிக் கப்பட்ட இன்னொரு கடுகுடன் இணைத்து இந்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இரு வேறு பெற்றோர்கள் இணைவதால் ஏற்படும் வீரியத் தன்மை அவைகளின் பிள்ளைகளுக்குச் செல்லும். இந்த இரு பெற்றோரின் சிறப்புத் தன்மைகளுடன், திணிக்கப்பட்ட பார்ஸ்டார் மற்றும் பார்னஸ் என்ற மரபணுக்களின் பூச்சிக் கொல்லிகளைத் தாங்கிக் கொள்ளும் தன்மையும் செல்லும். இதன் விளைவாக இந்தக் கடுகு வகைகளானது வெறும் பி.டி. ரகக் கடுகாக மட்டுமின்றி களைக் கொல்லிகளைத் தாங்கும் வகைகளாகவும் இருக்கும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையின் நிதி உதவியாலும், தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் நிதி யுதவியும், பெற்றுதான் இந்த மரபணு மாற்றுக் கடுகு ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது மக்களின் வரிப்பணத்தால் எந்த விதத்திலும் தேவைப்படாதவை உருவாக்கப் பட்டு பல நூறுகோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பால்வள வளர்ச்சி வாரியம் ஏற்கெனவே தனது தாரா என்ற பெயரிலான எண்ணெய் வணிகத்தை நிறுத்தி விட்டதுதான் இதில் உள்ள முரண். தில்லிப் பல்கலைக் கழகம் உருவாக்கிய இந்த மரபணு மாற்றுக் கடுகை ஏன் மறுக்க வேண்டும் என்பதற்காகவும் மனித குலத்திற்கும், உலகிற்கும் தேவையேபடாத, ஆபத்தானதா அல்லவா என்பதை முழுமையாக அறியப்படாத மரபணு மாற்றுப் பயிர்களைச் சோதித்துப் பார்ப்பதற்கான சோதனைச்சாலை எலிகள் அல்ல நாமும் நம் வாழ்க்கையும் என்பதை உரக்கச் சொல்லவதற்காகவும் என 25 காரணங்கள் இதோ..

1. மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் துல்லியமானதல்ல. இது இயற்கைக்கு எதிரானது மட்டுமல்ல, உயிருள்ளவைகளின் மீது செய்துபார்க்கக்கூடிய துல்லியமான நுட்பமுமல்ல, நல்ல விதை இனப்பெருக்க நுட்பமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும் திணிக்கப்பட்ட மரபணுக்கள் இருக்கவேண்டிய இடத்திலேயே நிலைத்து இருப்பவையுமல்ல, அவைகளின் செயல் வெளிப்பாடுகளும் ஒரேமாதியாக இல்லை. தவறு நடந்துவிட்டால் திருப்பி அழைத்துக்கொள்ளக்கூடிய சாத்தியங் களுமில்லாத தொழிட்பமும், தாவரங்களுமாகும் இந்தத் தொழில்நுட்பமும் இந்த மரபணுமாற்று உயிரினங்களும். இவைகள்தான் நம்முடைய விவசாயத்திலும் நம்முடைய உணவிலும் திணிக்கப்படுகிறது. மேலும் இவை நம்முடைய உடல்நலத்தின் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி விவசாயத்தின்மீது கடுமையான தாக்கத்தை, பெருத்த சிக்கலையும் ஏற்படுத்தக் கூடியது என்பது எல்லோரும் அறிந்ததே. விவசாயிகளுக்கு மரபணு மாற்று விதைகளைத் தவிர வேறு விதைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும். நுகர்வோரின் கதியும் இதுவேவேறு மாற்று இல்லை என்ற நிலை. மரபணு மாற்றப் பயிர்கள், அந்த வகையான உணவுப் பண்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், http://indiag minfo.org/?p=657>என்ற இணைய இணைப்பில் காணக் கிடைக்கின்றன.

2.களைக்கொல்லி தாங்கு பயிர்கள் விவசாயத் திற்கு, விவசாயிகளுக்கு, பிற உயிரினங்களுக்கு, மனிதர்களுக்கு, நூகர்வோர்களுக்கு கடும் பாதிப்பை உருவாக்கும். எவ்வளவு களைக் கொல்லியை தெளித்தாலும் அதைத் தாங்கி வளரும் பயிர்களே களைக் கொல்லிகளைத் தாங்கி வளரும் பயிர்கள் எனப் படுபவை. எடுத்துக்காட்டாக மான்சான்டோவின் ரவுண்டப் களைக் கொல்லியை எத்தனை முறை, எவ்வளவு அதிகம் தெளித்தாலும் சாகாமல் தாங்கி வளரக்கூடியவை மான்சான்டோவின் ரவுண்டப் ரெடி மரபணுமாற்றுப் பயிர்கள். இந்த வகை களைக் கொல்லிகளைத் தாங்கும் பயிர்கள் (இனி க.கொ.தா.பயிர்கள்) மனிதர்களின், பிற உயிரினங்களின் உயிருக்கும் வாழ்விற்கும் மிக அதிகமான பாதிப்புகளை உருவாக்குகின்றன. ரவுண்டப் ரெடி வகை பயிர்களை அமெரிக்கா, பிரேசில், கனடா, அர்ஜெண்டீனா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்த பின் அந்த நாடுகளில் ரவுண்டப் ன் பயன்பாடு பன்மடங்கு பெருகியுள்ளது. (இதனால் விதைகள் மற்றும் ரவுண்டப் விற்றல் மூலம் மான்சான்டோவிற்கு இரட்டை லாபம் என்பது தனி கதை). இந்த ரவுண்டப் ல் உள்ள இரசாயன மூலமான கிளைப் போசேட் என்ற இரசாயனம் “மனிதர்களுக்கு புற்று நோயை உருவாக்கக் கூடியது” என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை 2015ல் எச்சரித்துள்ளது. இதில் கொடுமை என்னவெனில் இந்த கிளைப்போசேட் மிகவும் பாதுகாப்பானது என்றே மான்சான்டோ ஆரம்பம் முதம் எல்லோரையும் நம்ப வைத்துள்ளதே. இது மட்டுமல்ல. இந்தக் களைக் கொல்லிகளைத் தாங்கிடும் தன்மையைத் தரும் மரபணுக்கள் களைச் செடிகளுக்கும் சென்றுவிட்டது. விளைவு களைகள் இப்போது சூப்பர் களைகளாகிவிட்டன. களைக் கொல்லிகள் அவைகள் என்ன சேதி என்று கேட்கின்றன. இந்த நிலை உலகின் பல நாடுகளில் தெளிவுறப் பதிவு செய்யப்படுள்ளது. களைக் கொல்வதற்காக என்று அறிமுகப்படுத்தப் பட்ட இவை களைகள் மட்டுமின்றி பிற உயிரினங்களையும் கடுமையாக பாதிக்கிறது, மண்ணில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கச் செய்து மண் வளத்தை பாதிக்கின்றன. இந்திய விவசாயச் சூழலில் களை எடுப்பு என்பதன் மூலமாக கிராமப்புற பெண்களின் வருவாய் மூலம் அக்குடும்பங்களின் வருவாய் உயர்கிறது. இத்தகு களைக் கொல்லி தாங்கு பயிர்களால் இனி இக்கிராமப் பெண்களின் வருவாய் ஆதாரம் அழிக்கப்படும்.

3. உண்மையில் களைகளில் பல மூலிகைகளாக உள்ளன அல்லது கீரைகளாகவும் கால்நடைகளின் தீவனமாகவும் உள்ளன. களைக் கொல்லிகளைத் தாங்கி வளரும் பயிர்களை அறிமுகம் செய்வதால் இந்திய விவசாயப் பாரம்பரியமும் மண்வளப் பாதுகாப்பு வழியாகவும் உள்ள கலப்புப் பயிர்கள் என்ற வழக்கம் இல்லாமல் போய்விடும். கலப்புப் பயிர்களே பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்கச் செய்யும் வழியாகவும் இருந்து வருகின்றன. இது மட்டுமின்றி புதுவகையான சிக்கல்களைகளையும் இந்த மரபணுமாற்று களைக் கொல்லிகள் தாங்கு பயிர்கள் கொண்டுவந்துள்ளன. இந்த விதைகள், களைக் கொல்லி தெளிப்பு, காற்றின் மூலம் அவைகளின் பரவல் மூலம் பக்கத்து விவசாயியின் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால் அமெரிக்கா போன்ற நாடுகளில் நேற்றுவரை நண்பர்களாக இருந்த அக்கம் பக்கத்து விவசாயிகள் சண்டைக்காரர்களாகி நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற பெரும் பண்ணைகளாக உள்ள விவசாய சூழலில் அங்குள்ள விவசாயிகளே தாங்கமுடியவில்லையெனில் சிறுசிறு நிலங்களாக உள்ள இந்திய விவசாயிகளின் நிலை? மேலும் எவ்வளவு வேண்டுமானுலும் எப்போது வேண்டுமானாலும் என்ற நிலையில் களைக் கொல்லிகள் பயன்படுத்தப்படும் போது நுகர் வோரின் நிலை?

4. பின் கதவு வழியாக இக்கடுகைத் திணிக்க முயற்சி. தில்லிப் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள இம்மூன்று வகையான மரபீணிக் கடுகு வகைகளும் களைக் கொல்லியைத் தாங்கி வளரும் வகையைச் சேர்ந்தவை. அதிர்ச்சியூட்டும் வகையில் களைக்கொல்லி தாங்கு திறனைத் தரும் ‘பார்’ வகை மரபணுக்கள் இந்தக் கடுகு வகைக்குள் மரபணுக்களாக திணிக்கப்பட்டுள்ளது. அதாவது நேரிடையாக களைக் கொல்லி தாங்கும் பயிர்கள் என்று தெரிவிக்காமல் செய்யப் படுள்ளது. அனுமதிக்காக அளிக்கப்பட்ட மனுவில் இவைகள் களைக் கொல்லி தாங்கு கடுகு வகைகள் என்று தெரிவிக்காமலேயே அனுமதி பெற முயற்சிக்கப்படுகிறது. அப்படி தெரிவிக்கப்படாத காரணத்தால் இந்தக் கடுகு வகைகளை களைக் கொல்லி தாங்கு திறுனுடைய பயிர்களுக்குச் செய்ய வேண்டிய சோதனைகளைச் செய்யாமலேயே அனுமதி வேண்டப்படுகிறது. உண்மையில் களைக் கொல்லி தாங்கு மரபணுக்களால் வரக்கூடிய பாதிப்புகள் மட்டுமின்றி அதிகம் களைக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டியிருக்கும் நிலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், இவைகளின் கூட்டு விளைவால் ஏற்படும் பாதிப்புகளையும் ஆராய்ந்து பாதிப்பால்லாதவைகள் என்று நிரூ பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பார்த்தால் தில்லி பல்கலைக் கழகத்தின் நோக்கம் வேறாக இருப்பது தெரிகிறது. அதிக விளைச்சலுக்கான மரபணு மாற்றுப் பயிர்கள் என்ற பெயரில் களைக் கொல்லிகளைத் தாங்கும் பயிர்களை இந்திய விவசாயத்தில் திணிப்பதே அந்த நோக்கமாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மரபீணிக் கடுகு ரகங்கள் களைக் கொல்லி களைத் தாங்கும் திறனைக் கொடுக்கும் மரபணுக்கள் திணிக்கப்பட்டிருப்பினும் வெறும் விளைச்சலுக்கானவை என்றே கூறுகிறது. பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் களைக் கொல்லிகளைத் தாங்கும் மரபணு மாற்று விதைகளைப் புகுத்த ஓநாயாகக் காத்திருப்பதை நாம் அறிவோம். இப்படி களைக் கொல்லிகளைது தாங்கும் கடுகு வகைகளை அறிமுகம் செய்து விட்டால் அவைகளுக்கான இந்தியக் கதவி திறக்கப்பட்டு இராஜபாட்டையில் சிவப்புக் கம்பளம் விரித்து விட்டதாகிவிடும். இந்தப்பன்னாட்டு விதை நிறுவனங்கள் மரபணு மாற்றங்கள். திணிப்புகளுக்கான காப்புரிமைகளை வைத்துள்ளதும் அவைகளே களைக் கொல்லிகளைத் தயாரிப்பவைகளாகவும் உள்ளதையும் இந்துக் கூட்டு உரிமையின் பின்னால் அவற்றின் லாப நோக்கமும் வெறியும் புதைந்துள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த மரபீணிக் கடுகு வகைகளை இந்திய மக்களின் பணத்தால் இயங்கும் பல்கலைக் கழகங்கள் உருவாக்கியவையா அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கியவையா என்ற விவாதம் தேவையற்றது. நம் வீட்டுக் கொள்ளிக் கட்டை என்பதற்காக தலையில் சொரிந்து கொள்ள முடியுமா?

5. மரபீணிக் கடுகு வகைகள் அதிக விளைச் சலைத் தரும் என்பதும் உண்மையல்ல, உறுதிப் படுத்தப்படவில்லை. இந்த டி.எச்.எம் 11 வகை மரபீணிக் கடுகு அதிக விளைச்சல் தருவதாகக் காட்டுவதற்கேற்ற வகையில் குறைந்த விளைச்சல் தரும் ரகங்களுடன் ஒப்பிட்டுக் காட்டுப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள அதிக விளைச்சல் தரும் ரகங்களுடன் ஒப்பீட்டு ஆய்வுகளை நடத்தவேயில்லை. மேலும் டி.எச்.எம் 11 வகையை ஆய்வுக்குட்படுத்தக் கேட்ட அனுமதிக் கடிதத்தில் கூறப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளையும், மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் பல கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் வேண்டுமென்றே மீறியுள்ளனர். இப்படிக் குறைந்த விளைச்சல் உள்ள ரகங்களுடன் ஒப்பீட்டு ஆய்வுகளை நடத்தி 28% அதிக விளைச்சல் என்று கூறப்பட்டுள்ளது. தவறான, பொருத்தமில்லாத ரகத்துடன் ஒப்பீடு செய்துவிட்டு அதிக விளைச்சல் தருகிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் தில்லிப் பல்கலைக் கழகமும் அதன் ஆய்வாளர்களும். அப்படி அது அதிகம் விளைந்திருப்பினும் வேறு பெற்றோர்களை இணைத்து உருவாக்கப்படும் கலப்பினத்தின் வீரியத்தால்  (“hybrid vigour”)  மரபணு மாற்றத்தால் அல்ல. ஆகவே இந்த மரபணு மாற்றக் கடுகால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ எந்த வகையிலும் உண்மையான பலனில்லை. ஏற்கெனவே இந்தியாவில் முழுமையாக சோதிக்கப்படாத, டி.எச்.எம் 11 ஐ விட அதிகம் விளைச்சல் தரும் ரகங்கள் பல வழக்கத்தில் உள்ளன.

6. இந்த மரபீணிக் கடுகு வகைகளால் கடுகு விளைச்சல் அதிகமாகி எண்ணெய் இறக்குமதி குறையும் என்பது உண்மையல்ல. டி.எச்.எம் 11 ரக மரபீணிக் கடுகை உருவாக்கிய விஞ்ஞானிகள் டி.எச்.எம் 11 ரகத்தால் கடுகு விளைச்சல் அதிகமாகும். அதன் கரணமாக இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதி குறையும் என்கின்றனர். இந்தக் கடுகு வகை வழகத்தில் உள்ள ரகங்களை விட அதிகம் விளையவில்லை என்பதுடன் இது வரை உருவாக்கித் தரப்பட்ட உயர் விளைச்சல் வீரிய வித்துகளாலும் இந்திய இறக்குமதி குறையவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

7. 2002ல் பேயர் நிறுவனத்தின் மரபணீக் கடுகை நிராகரித்தற்கான அதே காரணங்கள் இந்த மரபீணிக் கடுகிற்கும் பொருத்தமாகவே உள்ளன. 2002ல் பேயர் நிறுவனத்தின் துணை நிறுவனமான புரோஅக்ரோ விதை நிறுவனம் இப்போது உருவாக்கப்படுள்ள மரபீணிக் கடுகில் உள்ளது போலவே பார், பார்னேஸ், மற்றும் பார்ஸ்டார் மரபணுக்களைப் புகுத்தி உருவாக்கிய மரபீணிக் கடுகிற்கு அனுமதி கேட்டது. அப்போது இந்திய வேளாண் அறிவியல் கழகம் (Indian Council of Agricultural Research) புரோ அக்ரோ நிறுவனத்தின் மரபீணிக் கடுகை சோதித்த முறையிலும் அதன் முடிவுகள் மீதும் திருப்தி இல்லை என்று அறிவித்தது. கடுகு ஒரு எண்ணெய் வித்து மட்டுமல்ல, நேரடியாக உணவில் பயன்படுத்தப்படும் பொருளாகவும், அதன் இலைகள் கீரையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்போது எழுப்பப்பட்ட ‘மரபணு மாற்றுக் கடுகு விளைவிக்காத பகுதிகளுக்கு அதன் மகரந்தம் பரவுவதை எப்படிக் கட்டுப்படுத்தும்?’ என்ற கேள்விக்கு மரபணு மாற்று அங்கீகாரக் குழுவினரால் தெளிவான பதிலைத் தரமுடியவில்லை. மிக முக்கியமாக, களைக் கொல்லியைத் தாங்கும் தன்மைக்கான மரபணுக்களை கண்டறிதல் சோதனைக்காகவே (marker technology ) சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும் புரோஅக்ரோவின் மரபீணிக் கடுகு களைக் கொல்லியைத் தாங்கி வளரும் கடுகு என்று அறிவித்தது. இந்தக் காரணத்திற்காகவே புரோ அக்ரோவின் மரபீணிக் கடுகு நிராகரிக்கப் பட்டாலும் அப்போதைய அங்கீகாரக்குழுவினர் விவசாயம் செய்யப்படும் நிலையில் இந்த மரபணுக்களின் விளைவைக் கண்டறிவது மிகவும் கடினமான காரியம் என்பதை அறிந் திருந்த து. இதே காரணங்கள் இப்போது
தில்லிப் பல்கலைக்கழகத்தின் டி.எச்.உம் 11 ரகக் கடுகிற்கும் பொருந்தும்.

8. எடி.எச்.எம் மரபீணிக் கடுகு என்பது பசுத் தோல் போர்த்திய புலிகளே- மரபணு மாற்றுப் பயிர்களை இந்திய விவசாயத்திற்குள் புகுத்தத் துடிக்கும் ஆதரவாளர்கள் இந்தியப் பல்கலைக் கழகம் போன்ற பொதுத் துறை நிறுவனத்தின் தயாரிப்பு என்ற பெயரில் மரபணு மாற்றுப் பயிர்களைத் திணிக்கத் துடிக்கின்றனர். பொதுத் துறை நிறுவனத்தின் தயாரிப்பு உயிரிப் பாதுகாப்பு சோதனைகளைக் கடந்துவிட்டால் அதைக் காட்டியே பன்னாட்டு விதை நிறுவனங்களின் மரபணு மாற்றுப் பயிர்களை மிக எளிதில் திணித்து விடலாம் என்று கபட நாடகம் ஆடுகின்றனர். எரிக்கும் தீயில் உள்ளாட்டுத் தீ பன்னாட்டுத் தீ என்றெல்லாம் இல்லை. எல்லா தீயும் ஒன்றே. எல்லா மரபணு மாற்றுப் பயிர்களும் ஆபத்தானவையே. மேலும் இதை உருவாக்கியவர்கள் அனுமதி பெற்றதுமே அதன் காப்புரிமையை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அது மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்களாகவும் இருக்கலாம். இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு உள்ள மிகப் பெரிய எதிர்ப்புள்ள நிலையில் அனுமதிப் பெறுவதற்கான நிலைப்படி நிலையில் முன்படிகளில் மரபீணி மக்காச் சோளம் உள்ளிட்ட பல பயிர்களை வைத்துக் காத்திருக்கும் மான்சான்டோ உள்ளிட்ட பல பன்னாட்டு விதை நிறுவனங்கள் தில்லிப் பல்கலைக் கழகத்தின் மரபீணிக் கடுகை முந்த விட்டதின் காரணம். முதலில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் என்ற மன உணர்வில் இது அனுமதி பெறட்டும்.பின்னர் அதைக்காட்டியே நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதே. நம்மைப் பொறுத்த வரையில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் மரபீணிக் கடுகு என்பது புற்றீசல்கள் போல் வரக் காத்திருக்கும் புலித் தோல் போர்த்திய புலிகளில் முதல் புலி என்பதே.

9. தில்லிப் பல்கலைக் கழகத்தின் மரபீணிக் கடுகு விதை நிறுவனங்கள் இலாபம் பெறவே உதவும். ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் மான்சான்டோ நிறுவனத்தை வாங்கி உலகின் மிகப் பெரும் விதை நிறுவனமாகத் துடிக்கிறது. இந்தப் பேயர் நிறுவனம் தான் பார் வகை மரபணுக்கள் மீது பல்வேறு காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்ல; இந்த மரபீணிக் கடுகு தாங்கிடக் கூடிய களைக் கொல்லியான குல்ஃபோசினேட் அமோனியம் (Glufosinate ammonium) என்ற களைக் கொல்லியை இந்தியாவில் அதிக அளவில் விற்பது பேயர் நிறுவனம். பொதுத் துறை நிறுவனமான தில்லி பல்கலைக் கழகம் தனது மரபீணிக் கடுகின் கொல்லி தாங்கும் தன்மையை மறைத்திருப்பது பேயர் நிறுவனம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நலனுகளுக்காகவேயன்றி இந்திய விவசாயிகளுக்காவோ, மக்களின் நலனுக்காக அல்ல என்பதே உண்மை ஆகவே தொழில்நுட்பத்தைக்கூட இந்திய விவசாயிகள் நலனுக்காகவோ, இந்திய மக்களின் நலன்களுக்காக உருவாக்குவதற்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக் காகவே உருவாக்கப்படுகின்றன. உண்மையில் விவசாயிகள் மரபீணி இல்லாத அதிக விளைச்சல் தரும் கடுகை ஏற்கெனவே தம் கையில் வைத்துள்ளனர்.

10. கடுகு விளைவிக்கும் முக்கியமான மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களும், முக்கிய விவசாய சங்கங்களும், விஞ்ஞானிகளும் நுகர்வோரும் மரபணீக் கடுகைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அதிக பரப்பில் கடுகு விவசாயம் கொண்ட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஹரியானா ஆகியவை தங்கள் மாநிலத்தில் மரபீணிக் கடுகின் வயல் வெளி சோதனைகள் கூடக் கூடாது என்று அறிவித்து விட்டன. குஜராத், பீகார், ஒடிசா, மே.வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் வயல் வெளி சோதனைகள் மட்டுமல்ல; எந்த மரபீணி உணவுப் பயிர்களுக்கும் அனுமதியில்லை என இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி விவசாயம் என்பது மாநில பட்டியலில் உள்ள பொருளாகும். மரபணு மாற்றுப் பயிர்கள் மீதான அனுமதி விவகாரத்தில் இந்த முக்கியமான அம்சத்தை மறந்துவிட முடியாது. பி.ட்டிக் கத்தரி தடை விவகாரத்தில் இந்தக் காரணிகள் முக்கிய பங்கு வகித்தன. ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு பரவுவதைத் தடுக்க மத்திய அரசிடம் எந்த வகையான கொள்கையோ திட்டமோ இல்லை. இத்தகு நிலையில் இந்திய அரசின் முடிவு என்பது இந்தியக் கூட்டாட்சி முறைக்கே எதிரானதாக அமையும் என்கிறபோது மத்திய அரசு எப்படி இந்தியக் கூட்டாட்சி அமைப்பைத் தூக்கி நிறுத்தும் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இந்தியாவில் தீவிரமாக இயங்கி வரும் 55க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஏற்கெனவே மரபீணிக் கடுகிற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசிற்குத் தெரிவித்துள்ளன. நூற்றுக்கணக்கான விஞ் ஞானிகள் மரபீணிக் கடுகை அனுமதிக்க வேண்டாம் என்று கடிதங்கள் எழுதியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான இந்தியப் பொது மக்கள் தங்களுக்கு மரபீணிக் கடுகு வேண்டீம் என்பதைத் தெரிவித்துள்ளனர். இத்துணை எதிர்ப்பும் மறுப்பும் மரபீணிக் கடுகை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதற்கான காரணமாக அமையவில்லையா?

தொடரும்…

முருங்கை மர வேதாளம் மீண்டும் வருகிறது மரபணு மாற்றுக் கடுகு வடிவில்! விக்கிரமாதித்தியர்களே

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments