தில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்!

தில்லிப் பல்கலைக்கழகம் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை ஏன் மறுக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் கடந்த இதழில் பார்த்தோம். மேலும் சில காரணங்கள் இதோ.

• மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆண் மலட்டுத் தன்மை விவசாயிகளை அழித்துவிடும். மரபணு மாற்றத்தின் மூலம் பார்னேஸ் என்ற ஆண் மலட்டுத் தன்மை உருவாக்கும் மரபணு புகுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண் மலட்டுத் தன்மைக்கான மரபணு, இந்த டி.எச்.எம் – 11 கடுகோடு நிற்காது பிற சாதாரண ரகக் கடுகு வகைகளுடனும் கலந்துவிடும். விதைக் கலப்பு, மகரந்தச் சேர்க்கை மூலம் கலப்பு என பல வகைகளில் இந்தக் கலப்பு நேரிடலாம். அப்போது மரபணுக் கலப்படத்திற்குள்ளான கடுகு விதைகள் அனைத்தும் ஆண் மலடுகளாகி விளைச்சலை வெகுவாகப் பாதிக்கும். நாளாவட்டத்தில் விவசாயிகளின் பாரம்பரிய ரகங்களுடன் இந்த பார்னேஸ் – பார்ஸ்டார் – பார் மரபணுக்கள் கலந்துவிடக்கூடும். இது போன்ற சூழலில் விவசாயிகள் தங்களின் விதைச் சுதந்திரத்தை இழப்பதுடன் விளைச்சலும் பாதிக்கப்படும். ஒவ்வொரு முறையும் விதையை வெளியில் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். இது மட்டுமின்றி மரபணு மாற்றப்பட்ட கடுகை விளைவிக்கும் விவசாயி பல முறை தெளிக்கும் களைக் கொல்லி களால் அக்கம் பக்கத்து விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும். அதாவது எல்லா விவசாயிகளும் மரபணு மாற்றப்பட்ட விதைகளையே வாங்கிப் பயிரிடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

• இந்தியாவே கடுகின் தாயகம்:

கத்திரியைப் போலவே கடுகிற்கும் இந்தியாதான் தாயகம் எனப் பல விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். பி.டி. கத்தரியைத் தடைசெய்ததற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட பயிர்களில் அதன் வகையினங்கள் எப்போதும் அதிகமாக இருக்கும். விவசாய நிலங்களில் மட்டுமல்லாது காடுகளிலும் விவசாயம் நடக்காத பகுதிகளிலும்கூட அவை இருக்கும். ஆகவே இவ்வகைப் பயிர்களில் மரபணு மாற்றங்களை அனுமதித்தால் அவை விவசாய நிலத்தில் உள்ள பயிர் ரகங்களை மட்டுமின்றி விவசாயிகளால் வளர்க்கப்படாத, கானகங்களில் உள்ள அதே வகைத் தாவரங்களையும் மரபணு கலப்படத்தில் தள்ளிவிடும். இப்பயிர்களின் பல்லுயிர் தன்மை அழிந்துவிடும். இந்திய வேளாண்மை அமைச்சகம் எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் அமைத்த குழு 2004ல் அளித்த அறிக்கையும் 2013ல் உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுனர் குழுவும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட பயிர்களில் மரபணு மாற்றங்களை அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளன.

• மரபணு மாற்றப்பட்ட கடுகை கட்டுப் பாட்டுன் வளர்ப்பது இயலாத ஒன்று: டி.எச்.எம்-11 இரக மரபணு மாற்றப்பட்ட கடுகை உருவாக்கிய விஞ்ஞானி, ”‘மரபணு மாற்றுப் பயிர்களில் இருந்து மகரந்தங்கள் பரவாத வகையில் வளர்ப்பதோ மரபணுக் கலப்படம் ஆகாமல் தடுப்பதோ இயலாத ஒன்ற” எனக் கூறியுள்ளார். மகரந்தக் கலப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளாலோ, விதைகள் கலப்பு போன்ற மனிதத் தவறுகளாலோ மரபணுக் கடுகோ, மரபணுக் கூறுகளோ கலப்படமாவது தடுக்க இயலாத நிலையில் பாரம்பரிய விதைகளைக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் விதைகள் கலப்படமாவதை தடுக்க முடியாது. 12 முதல் 19 சதவீத அளவிற்கு பக்கத்து விவசாயின் விதைகள் கலப்படமாகிடும். 2007ல் உச்ச நீதிமன்றம் ஒரு பொது நல வழக்கில் (கீறி 260/2005) வயல்வெளி சோதனைகள் முதற்கொண்டு எந்த வகையிலும் மரபணுக் கலப்படம் நடப்பதை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மரபணுக் கடுகுகளை அனுமதிப்பதால், இயற்கை வழியில் விவசாயம் செய்வோரின் இயற்கை விவசாயி என்ற நிலையும் அவர்களது விவசாயமும் பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகும். இவை மட்டுமின்றி சூப்பர் களைகள் எனப்படும் அழிக்கவே முடியாத களைகளும் அதிக களைகள் என்ற நிலையும் உருவாகும்.

• இயற்கை விசாயிகள் நேரடியாகப் பாதிக்கப் படுவர்: மரபணுக் கலப்படம் இயற்கை விவசாயிகளின் இயற்கை விவசாயப் பண்ணை என்ற சான்றை இல்லாமல் போகச் செய்யும். கடுகு புண்ணாக்கைப் பயன்படுத்துவதுகூட அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே மண் வளத்தைப் பேணும் பணியும் பாதிப்புறும். ஆகவே மரபணு மாற்றப்பட்ட கடுகு என்பது இயற்கை விவசாயிகளின் கழுத்துக்கான சுருக்குக் கயிறே ஆகும்.

• தன் மக்கள் எதை உண்ண வேண்டும் என்று அரசு உத்திரவிட முடியாது:

இயற்கையாக மகரந்தச் சேர்க்கை மூலம் நடக்கும் மரபணுக் கலப்படமும், விதைக் கலப்படமும் வணிகர் களின் கலப்படமும் ஒன்று சேர்ந்து ஓரிரு ஆண்டுகளிலேயே மரபணு மாற்றப்பட்ட கடுகு மட்டுமே இந்தியாவில் இருக்கும் என்ற நிலை உருவாகிடும். மரபணு மாற்றப்பட்ட கடுகு அல்லாத ஒன்று தான் தனக்கு வேண்டும் என்று நுகர்வோர் ஆசைப்பட்டாலும் கிடைக்காது. விவசாயிகள் மரபணு மாற்றம் செய்யாத கடுகை விளைவித்திருந்தாலும் அதை சந்தையில் அடையாளம் காண்பதோ அல்லது பிரித்துப் பார்ப்பதோ இயலாத ஒன்று. தான் என்ன உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பது மக்களின் உரிமையாகும். ஆனால் மரபணுக் கலப்படம் காரணமாகவும், பிரித்துக்கட்டும் நிலையில்லாத காரணத்தாலும், லேபிளிங் முறை இல்லாத காரணத்தாலும் மக்கள் அந்த உரிமையை இழக்க வேண்டும். விவசாயிகள் எப்படி மாற்று வாய்ப்புகளற்று இருப்பார்களோ அது போலவே அரசும், விதை நிறுவனங்களும் முடிவு செய்வதையே நாம் உண்ண வேண்டும் என்ற நிலை ஏற்படும். • மரபணு மாற்றுக் கடுகில் பயன்படுத்தப் படும் மரபணுக்கள் குர்ட் தொழில்நுட்ப இனத்தைச் சேர்ந்தவை:

குர்ட் தொழில்நுட்ப வகையென்பது மரபியல் பயன்பாட்டைக் குறைக்கும் வகைத் தொழில்நுட்பமாகும். அதாவது, டி-எச்-எம் 11ன் பெற்றோரில் பயன்படுத்தப்பட்டுள்ள பார்னேஸ் மரபணு ஆண் மலட்டுத் தன்மையை உருவாக்கக் கூடியவை. அதன் காரணமாக பயிர்கள், செடிகளில் ஆண் மலட்டுத் தன்மை உருவாகி அவற்றின் இயல்பான மரபியல் வெளிப்பாடுகள் தடுக்கப்படும். இந்திய தாவர வகையினங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைக் காப்புச் சட்டமானது  (Protection of Plant Varieties & Farmers’ Rights Act)  குர்ட் என்று சுருக்கமாக அழைக்கபடும் மரபணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்தானவை என்கிறது. அதன் காரணமாக இது போன்ற ரகங்களை பதிவுசெய்ய அனுமதியில்லை. மேலும், இந்த மரபணு மாற்றுக் கடுகில் பயன்படுத்தப்பட்டுள்ள மரபணுக்களை யார் தங்களுடைய அறிவுச் சொத்துடைமையாக (Intellectual Properity Right) வைத்திருக்கிறார்கள் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த மரபணுக்களைப் பெறவும், அவைகளை கடுகில் திணிக்கச் செய்வதற்குமான ஒப்பந்தங்கள் என்னென்ன, யாரால் போடப்பட்டது, என்ன கட்டுப்பாடுகள் உள்ளன என்பன போன்ற எந்த விவரமும் மக்கள் முன் வைக்கப்படவில்லை, பொதுவெளியில் இல்லை.

• ஆயுர்வேத மருந்துப் பொருளாக கடுகு இனி இருக்க முடியாது: ஆயுர்வேதத்தில் கடுகும் கடுகு எண்ணெய்யும் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனியாகவும் கூட்டுப் பொருளாகவும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மரபணு மாற்றுக் கடுகு வந்த பின் அதன் தன்மைகள் எப்படி இருக்கும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எவருக்கும் தெரியாது, அவை ஆராயப்படவில்லை.

• மரபணு மாற்றுக் கடுகு தேனீக்களைப் பாதிக்கும்; தேன் தொழில் பாதிப்படையும்: தேனீக்களும் இதர பல பூச்சியினங்களும் கடுகின் மரந்தச் சேர்க்கையாளர்களாக இருக்கின்றன. அவைகளுக்கு நேரும் எந்தவொரு சிறிய இடர்பாடும் விளைச்சலைப் பாதிக்கும். கடுகில் மட்டுமல்ல இதர பயிர்களிலும் கூட. மரபணு மாற்றுக் கடுகான டி.எச்.எம் 11 தேனீக்களைப் பாதிக்கும். மரபணு மாற்று விதை நிறுவனங்களின் நிதி உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகளே இதை நீரூபிக்கின்றன. எனவே தேனீக்களின் தேன் சேகரிப்பும் பாதிக்கப்படும். கடுகு விளைச்சலை 20-25% வரை தேனீக்களால் அதிகப்படுத்த இயலும். ஆகவே தேனீ வளர்ப்பின் மூலம் விவசாயிகள் பெறும் கூடுதல் வருவாயும் பாதிப்படையும். மேலும் மரபணுக் கலப்படம் காரணமாக தேன் ஏற்றுமதி முற்றாக இல்லாமல் போகும். அதுமட்டுமல்லாமல் களைக் கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு இருப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகி, மருந்தாக இருக்க வேண்டிய தேன் மெல்லக் கொல்லும் நஞ்சாக இருக்கும்.

• ஆரோக்கியமான எண்ணெய் நுகர்வா அல்லது அதிக உற்பத்தியா?: இந்தியர்களின் தனி நபர் எண்ணெய் உட்கொள்ளல் இப்போதே பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகம் உள்ளது. இன்னமும் மிகப் பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் உணவில் போதுமான அளவிற்கு எண்ணெய் இல்லை என்பது உண்மையாக இருப்பினும் இதற்கான தீர்வு அதிகம் உற்பத்தி செய்வதில் இல்லை. மாறாக அதிகம் எண்ணெய் சாப்பிடுபவர்கள், அதைக் குறைத்துக் கொள்வதில் உள்ளது. பொது வினியோக முறையை சீராக்குவதும் ஆரோக்கியமான எண்ணெய் பயன்பாட்டை வளர்த்தெடுப்பதும்தான் இன்றைய உண்மையான தேவை. டி.எச்.எம்-11 அல்ல.

• மரபணு மாற்றுக் கடுகு குறித்த விவரங்கள் மர்மமாகவே உள்ளன: இது நாள்வரை மரபணு மாற்றுக் கடுகு குறித்த விவரங்கள், ஆய்வுகள் அதிமுக்கிய ரகசியம் போல் காக்கப்படுகின்றன. கொஞ்சநஞ்சம் வெளிவரும் விவரங்களும் தெளிவற்று உள்ளன. மரபணு மாற்று அங்கீகாரக் குழுவினர் எதை மறைக்க விரும்புகிறார்கள், யாரைக் காப்பாற்ற முயலுகிறார்கள்? உச்ச நீதிமன்றமும், தகவல் உரிமை ஆணையரும் உத்தரவிட்ட பின்னும்கூட விவரங்கள் பொது வெளியில் வைக்கப்படவில்லை.

• மரபணுக் கடுகின் சோதனைகள் திட்டமிட்டே தவறான முறையிலும் பொருத்தமற்ற வகையிலும் அறிவியல் பூர்வமாக இல்லாமலும் உள்ளன: டி.எச்.எம் – 11 என்னென்ன ஆபத்துகளையும் தாக்கங்களையும் கொண்டுள்ளது என்பதைக் கண்டறிவதற்கான பல சோதனைகள் நடத்தப்படாமலேயே உள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையிலான சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அவையும் முறையாகவோ தீவிரத்தன்மையுடனோ நடத்தப்பட்டவில்லை. ஆய்வுகளின் புள்ளிவிவரங்கள் ஒன்றைக் காட்டுகின்றன. ஆனால் முடிவோ வேறொன்றைக் காட்டுகிறது. சில சோதனைகளில் சூழலியல் அடிப்படையில் சாத்தியமே இல்லாத வகையில் ஆய்வுகளின் முடிவுகள் காட்டப்படுகின்றன. ஆய்வுத் தரவுகளை சோதித்ததும் மோசமாக உள்ளது. இதுவரைக் கிடைத்துள்ள சிறுசிறு விவரங்களை சர்வதேச ஆய்வாளர்கள் பரிசீலித்ததில் அறிந்த முடிவு “மரபணு மாற்றுக் கடுகு குறித்த சோதனைகள் தவறான முறையில், தவறான வழியில், அறிவியல் பூர்வமாக இல்லாமல் திட்டமிட்டே தங்களுக்குத் தேவைப்படும் வகையில் நடத்தப்படுள்ளகது என்பதேயாகும்”.

• சார்புநிலை உச்சகட்டத்தில் உள்ளது: இந்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்கியவர்களில் ஒருவரே மரபணு மாற்று அங்கீகாரக் குழுவிலும் இருக்கிறார். தான் உருவாக்கிய கடுகை அனுமதி அளிக்க அவரால் முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டட விவரங்களில் என்னென்ன சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இவரே தீர்மானித்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள கடுகு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் மறுத்துள்ளனர். பாரபட்சமான நிலை, உச்சபட்ச இரகசிய தன்மை, தவறாக வடிவமைக்கப்பட்ட சோதனைகள், அதிலும் தவறான, நம்ப முடியாத வகையிலான ஆய்வு விவரங்கள் என்றுள்ள இந்த மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் வார்த்தைகளை எப்படி நம்ப முடியும்? இந்தக் கடுகு ஆபத்தில்லாதது என்று இவர்கள் கூறுவது எப்படி சரியானதாக இருக்கும்? கொலையாளியே அரசு வழக்கறிஞர். அவரே நீதிபதியாகவும் இருந்துகொண்டு அவர் மீதான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு வழங்கும் நிலையே மரபணு மாற்று அங்கீகாரக் குழுவில் உள்ளது

• உச்சநீதிமன்றத்தின் வல்லுனர் குழு முடியாது என்று ஏற்கெனவே கூறிவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் மரபணு மாற்றும் பயிர்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் பயிரிடல் குறித்த பொது நல வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவுவதற்காக அமைத்த வல்லுனர் குழு அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் இன்னமும் தனது கருத்துகளையும் உத்திரவுகளையும் வழங்க வில்லை. அக்குழுவின் 6 உறுப்பினர்களில் 5 பேர் (அந்த ஒருவர் விதை நிறுவனங்களின் நிதி உதவி பெறுபவர்) இந்தியாவில் களைக் கொல்லிகளைத் தாங்கிடும் பயிர்களுக்கு பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி தடை விதிக்க வேண்டும் மிகத் தெளிவாகத் தெரிவித் துள்ளனர். இந்த ஒரு குழு தான் இப்படிக் கூறியது என்பதல்ல. ஏற்கெனவே தெரிவித்தபடி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவும் இதே ரீதியிலான பரிந்துரையை செய்துள்ளது. மேலும் இவ்விரு குழுக்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட பயிர்களில் எவ்விதமான மரபணு மாற்றங்களும் கூடாது என்று கூறியுள்ளன.

• நட்ட ஈடு பெற வழியில்லை: விவசாயியோ நுகர்வோரோ பாதிக்கப்பட்டால் என்ன வகையில், என்ன வழியில் நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும், யாரால் கொடுக்கப் பட வேண்டும், பாதிப்படையச் செய்தவருக்கு என்ன தண்டனை, மீண்டும் அதுபோல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பன போன்ற விதிகள் உருவாக்கப்படாமலேயே மரபனு மாற்று அங்கீகாரக் குழு மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளித்துள்ளது, அளிக்க முயல்கிறது. மக்களும் உழவர்களும்தான் பாதிப்பின் சுமையைத் தாங்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் களைய நிவாரணம் கிடைக்கச் செய்யவதற்கான வழிமுறைகள் இதுவரை யில்லை. பாதிப்பிற்கு யார் பொறுப்பு, அந்தப் பயிர்களை உருவாக்கியவர்களா, அனுமதி அளித்தவர்களா, விதைகளைத் தயாரித் தவர்களா, விளைவித்த விவசாயியா அல்லது அரசா, என்னென்ன பிரிவுகளின் படி எந்த விதிமுறைகளின், சரத்துக்களின் படி இவை தீர்மானிக்கப்படும் என்பதெல்லாம் முடிவு செய்யப்பட வேண்டாமா?

• இந்த மரபணு மாற்றுக் கடுகு தேவையில்லாத ஒன்று: ஆபத்தான தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஆபத்தான பயிர், விளைச் சலைக் கூட்டுகிறோம் என்ற பெயரில் விவசாயிகள் மீதும் மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. டி.எச்.எம் 11 கடுகால் விளைச்சல் அதிகம் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் மரபணு மாற்றுக் கடுகால் விளைச்சல் அதிகமாகிவிடும் என்பதுமில்லை. மக்களின் வரிப் பணத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளை செலவளித்து யாருக்கும் பயனில்லாத, எவருக்கும் நலன் தராத, மாறாக பாதிப்புகளை மட்டுமே தரும் டி.எச்.எம். – 11க்கு பதிலாக எளிய மேம்படுத்தப் பட்ட பயிரிடும் முறைகள், வேர்த் தொகுதி மேம்பாட்டு முறைகள் (System of Root Intensification (SRI) அல்லது System of Crop Intensification (SCI) என்றழைக்கப்படும் System of Mustard Intensification (SMI)  உள்ளிட்ட பல வழிகளில் இன்றுள்ள விளைச்சலின் அளவை வெகுவாகக் கூட்ட முடியும்.

• இந்தியாவின் எண்ணெய் வித்துக்களின் விளைச்சலையும் எண்ணெய் உற்பத்தியின் அளவையும் மரபணு மாற்றப் பயிர்களின்றியே செய்ய முடியும்: எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசியல் தீர்க்கம் தேவைப்படுகிறது. மரபணு மாற்றுத் தொழில் நுட்பங்கள் அல்ல. முந்தைய பகுதியில் குறிப் பிட்ட பல்வேறு எளிய விவசாய முறைகளும் புதிய அணுகுமுறைகளும் நெல்லிற்கு அடுத்து எண்ணெய்வித்துப் பயிர் என்ற பயிர் சுழற்சி முறையையும் கொண்டு தேவைக்கும் அதிகமாக விளைவிக்க முடியும், உற்பத்தி செய்ய முடியும். தண்ணீர் தேவைப்படும் நெருக்கடியான காலகட்டத்தில் பாசனத்திற்கான உத்திரவாதத்தையும் தெளிப்பு நீர், சொட்டு நீர் போன்ற நவீன உத்திகளையும் விவசாயிகளுக்குக் கொண்டுசேர்த்தாலே அதிக விளைச்சல் நடந்தேறும். ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள் இந்திய விவசாயகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைத்தாலே உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். மேலும் நிலப் பயன்பாட்டு முறைகள் அதிக அளவில் எண்ணெய் வித்துக்களை விளைவிக்க ஆதரவாக இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் நிதி உதவி, விரிவாக்க ஆதரவுகள் வழங்கப்பட்டாலே நல்ல தரமான விளைச்சலை விவசாயிகள் பெறுவார்கள்.

• முடிவாக: நேரடியாகவும் மறைமுக மாகவும் வேறு எந்த முறையிலேனும் மரபணு மாற்றுக் கடுகை நாம் எதிர்த்தாக வேண்டும், தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதற்கான காரணங்கள் ஏற்கெனவே விளக்கப்படுள்ளன. இந்த மரபணு மாற்றுக் கடுகை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பெற்றார் வழி வகைகளை அனுமதித்து விட்டு டி.எச்.எம்-11ஐ மட்டும் அனுமதிக்காமல் இருப்பது போன்ற பின் கதவு வழிகளையும் அங்கீகாரக் குழு முயற்சிக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பெற்றோர்களும் களைக் கொல்லிகளைத் தாங்கும் திறனைக் கொண்டவை என்பதை மறந்துவிடக்கூடாது. பி.ட்டி கத்தரி, பி.ட்டி பருத்தி ஆகியன நாம் ஏன் மரபணு மாற்றுப் பயிர்களை மறுதலிக்க வேண்டும்; அனுமதிக்கக் கூடாது என்பதை நன்கு உறுதிபடுத்தியுள்ளன. பி.ட்டி பருத்தி திருட்டுத்தனமாக விளைவிக்கப்பட்டுவிட்டு, பின் அனுமதி வழங்கப்பட்டது. அதன் மீது வெகுவான மயக்கங்களும் மாயைகளும் கட்டமைக்கப்பட்டன. ஆனால் அனுமதிக்கப் பட்ட 15 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது என்பதை நாம் அறிவோம். விவசாயிகளின் தற்கொலைகள் என்பதற்கு அப்பால் பார்த்தாலும்கூட, ரசாயனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது, இரண்டாம் நிலை பூச்சிகள் முதல் நிலை பூச்சிகளாக மாறிவிட்டன. காய்ப் புழுக்களும் அதிக எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொண்டுள்ளன. பருத்தி விளைச்சல் தேக்கத்தை அடைந்தது மட்டுமின்றி குறைந்தும் வருகிறது. உலகளவில் பருத்தி விளைச்சலில் இந்தியா 72 நாடுகளில் 31வது இடத்தில் உள்ளது. 23 நாடுகளில் மரபணு பருத்தி இல்லாமலேயே இந்தியாவைவிட அதிக விளைச்சலைப் பெற்றுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் வல்லுனர் குழு அண்மையில் செய்த ஆய்வின்படி பி.ட்டி கத்தரி தடைசெய்யப்பட்டது சரியானதுதான் என்று கூறியுள்ளது. இப்படித் தொடர்ந்து கூறிக் கொண்டே போகலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் “எங்களுக்கு மரபணு மாற்றுக் கடுகு வேண்டாம்“ என்று கூறுவதும், மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தத்தைத் தருவதும் தான். சுற்றுச் சூழல் அமைச்சருக்கு நம் ஆழமான, அழுத்தமான முடிவை கடிதமாக தெரிவிக்க வேண்டும். நாம் மட்டுமின்றி நம் சக மக்களையும் எழுதச் செய்ய வேண்டும்.

கடந்த இதழ் தொடர்ச்சி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments