நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் அனுமதி(Wildlife Clearance) கேட்கும் TIFR விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்

பல்லுயிர் வளமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருவதை அனைவரும் அறிவோம். பூவுலகின் நண்பர்கள் சார்பில் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுத் தீர்ப்பில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியில்லாமல்(NBWL)  திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

 

திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்கிற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மே 20ஆம் தேதி இத்திட்டத்திற்கான காட்டுயிர் வாரிய அனுமதிகோரி தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH விண்ணப்பித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இத்திட்டத்தை  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி  Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கூறிய போதிலும் திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என்று மாற்றி  தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து நேரடியாக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருந்தது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும்  தவிர்த்து விட்டு பிற பகுதிகள் அனைத்தையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த எண்ணுகிறது. 2018ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு எதிராக மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரைக்கும் நடைபயண போராட்டம் ஒன்றை மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தை அப்போதைய திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தார்.

மாநில அரசிடம் காட்டுயிர் வாரிய அனுமதி கோரப்பட்டிருக்கும் இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கின்ற வனத்துறை அனுமதியினையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு  அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் அனுமதி செய்யப்படும் வகையில் தீர்ப்பைப் பெறவும் தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த அறிக்கை வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments