தோழர் திருமுருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -பூவுலகின் நண்பர்கள்
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக அரசே முன்னின்று நடத்திய தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்நடவடிக்கை முற்றிலும் கண்டனத்திற்குரியதாகும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல அழிவுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசி வரும் செயல்பாட்டாளர்களை மிரட்டுவது, கைதுசெய்து துன்புறுத்துவது போன்ற செயல்களை தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூட தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயகத்தின் ஆட்சியா? அல்லது போலீஸ் ஆட்சியா? என்று கேள்வியெழுப்பியுள்ளது. அந்த வகையில் தற்போது முற்றிலும் பொய்வழக்குகளின் அடிப்படையில் தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்து அவர்மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.