குளிர்காலம் முடிய இருந்தது. பசிபிக் பெருங்கடலின் முதிர்ச்சியடைந்த சாலமன் மீன்கள் ஒரு பெரிய பயணத்துக்குத் தாயாராகிக் கொண்டிருக்கின்றன. தம்வாழ்வின் இறுதி கடமையாக தம்சந்ததிகளைப்பெருக்க அவை நெடுந்தொலைவு பயணிக்கவேண்டியிருந்தது. அதற்காக அமெரிக்காவின் மேற்காகப் பாய்ந்து கடலில் கலக்கும் எண்ணற்ற ஆறுகளில் ஒன்றான தம் தாய்நதியை அவை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். புவியின் காந்தப்புலத்தையும் சூரியனையும் வழிகாட்டியாகக்கொண்டு கடல்நீரோட்டத்தோடு பலநூறு கிலோமீட்டர்கள் பயணித்து கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக நகர்கின்றன சாலமன் மீன்கள். சரி, நூற்றுக்கணக்கான பெருநதிகளும் கிளைநதிகளும் கடலில் கலக்கும் அந்த நீண்ட கடற்கரைபிரதேசத்தில் ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் பிறந்து வெளியேறிய ஒரு குறிப்பிட்ட நதியை எப்படி கண்டுபிடிப்பது? நதிக்குச்செல்லும் வழியை யாரிடமாவது கேட்டறிய அவற்றிற்கு நதியின் பெயரே தெரியாதே? கூகுள் மேப்பும் வசப்படாத அந்த பரந்து விரிந்த பெருங்கடலின் நீர்ப்பரப்பினுள்ளிருந்து எப்படி நதியைத்தேடுவது. அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆம்! தாயின் வாசம் குழந்தைக்குத் தெரியாதா என்ன? ஒவ்வொரு நதியிலும் இருக்கும் நீரின் வாசத்தின் நுண்ணிய வேறுபாட்டை பயன்படுத்தி தன் நினைவலைகளில் பதிந்திருக்கும் தன் தாய்நதியின் வேதிக்கலவைகளின் மணத்தின் மூலம் அந்த குறிப்பிட்ட நதியின் முகத்துவாரத்தை கண்டுபிடிக்கின்றன சாலமன் மீன்கள்.
எட்டு ஆண்டுகள் கடல் நீரில் வாழ்ந்த மீன்கள் இப்போது நதியின் நன்னீருக்கு இடப்பெயர்ச்சி அடையவேண்டியிருக்கிறது. அதற்கான பயிற்சி இந்த உப்பு அடர்த்தி குறைந்த முகத்துவாரத்தில் தொடங்குகிறது. எண்ணற்ற வேதியல் உயிரியல் மாற்றங்கள் சாலமன் மீன்களின் உடலில் தொடங்குகின்றன. உப்பு அடர்த்தியில் மாற்றம், உயிர்க்காற்றின் அளவில் மாற்றம், நீரின் அழுத்தத்தில் மாற்றம், வெப்பநிலை மாற்றம், என முற்றிலும் ஒரு புதிய சூழலில் ஒரு மிகக்கடினமான நெடும்பயணத்துக்குத் தயாராகின்றன சாலமன் மீன்கள். ஆண் மற்றும் பெண் மீன்களின் உடல் தோற்றம் மற்றும் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றை இனப்பெருக்கத்துக்கும் பயணத்துக்கும் தயார்படுத்துகின்றன.
குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கு கிறது. நதி முகத்துவாரத்தில் பயிற்சி முடிந்ததும் சாலமன்களின் ஓட்டம் தொடங்குகிறது. ஆம்! இதுஓட்டம்தான்! நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மீன்கள் நதியின் பாய்ச்சலுக்கு எதிர்நீச்சல்போட்டு மலையேறத்தொடங்குகின்றன. 1200 கிலோ மீட்டர் நெடிய பயணத்தில் 7000 அடிகள் வரை உயரத்தை அடைய வேண்டும். எதிர்நீச்சல் போட்டபடியே வேட்டையாடிச் சாப்பிட வேண்டும். பெரிய அளவில் ஓய்வுக்கு நேரமோ இடமோ இல்லை. கோடையின் உச்சத்தில் நதிநீரோட்டம் குறைவதற்குமுன் உச்சியை அடையவேண்டும். வேகமான பயணத்தில் இடையிடையே குறுக்கிடும் சிற்றருவிகளில் எம்பிக்குதித்து மேலேற வேண்டும். அதிக பட்சம் 12 அடிகள்வரை எம்பிக்குதிக்கும் சக்தி பெற்றிருக்கும் சாலமன் மீன்கள் சிற்றருவி களின் சீறிப்பாயும் நீரோட்டத்தை எதிர்த்து குதித்து முன்னேறிச்செல்கின்றன.
வெகுதூரத்தில் சாலமன் ஓட்டம் தொடங்கி யிருப்பதை உணர்ந்திருந்த கரடிகள் தம் பனிக் காலத்து நீண்ட உறக்கத்தை முடித்துவிட்டு ஆணும் பெண்ணுமாய் தம் குழந்தை குட்டி களுடன் நதிக்கரைகளில் மீன்களுக்காய் முகாமிட்டிருக்கின்றன. வலுவான கரடிகள் மீன்கள் அதிகம் அகப்படும் சிற்றருவிகளை ஆக்கிரமித்திருக்க துரத்தப்பட்ட கரடிகள் ஆங் காங்கே ஆழம் குறைந்த நீரோட்டங்களில் கண்கள் பனிக்க காத்திருக்கின்றன. குளிர்கால உறக்கம் முடிந்த கரடிகளுக்கு மட்டுமன்று ஓநாய்கள் நீர்நாய்கள் மற்றும் எண்ணற்ற காட்டுயிர்களுக்கு இப்போது ஊட்டச்சத்துமிக்க கடலுணவு தேவைப்படுகிறது. இயற்கையின் உணவு “டோர் டெலிவரி” தொடங்குகிறது. பசியோடு வாய்பிளந்து நிற்கும் கரடிகளின் வாயில் எம்பிக்குதித்து வீழ்கின்றன சாலமன் மீன்கள். நூற்றுக்கணக்கான கரடிகளும் ஓநாய்களும் நதியின் இருபுறமும் பந்தியில் அமர்ந்திருக்க மாபெரும் உணவுத்திருவிழா ஆரம்பித்துவிட்டது. விருந்தின் மிச்சமீதிகள் நதிக்கரையின் இருபுறமும் விருந்தினர்களால் சிதறடிக்கப்படவேண்டும் என்பது நியதி. இந்த கறிவிருந்தின் “மிச்சமும்” விருந்தினர்களின் “எச்சமும்”மனிதவார்த்தைகளில் “கழிவு” எனச்சொல்லப்பட்டாலும் தன் மொத்த நைட்டிரஜன் தேவையில் 24 சதவீதத்தை பூர்த்திசெய்யும் இந்தக் கழிவை நம்பி நதிக்கரையில் வளர்ந்திருக்கும் 500அடி உயர மரங்களுக்கு இவை காணக்கிடைக்கா அமுத உணவுதானே? நதியின் சீற்றமிக்க ஓட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது. ஆங்காங்கே பயணத்தில் இருக்கும் மீன்கள் வழியில் மாட்டிக்கொள்கின்றன. அறுபது சதவீத மீன்கள் கொல்லப்பட இல்லை இல்லை உணவாக மீதி மீன்கள் உச்சியை அடைகின்றன. அங்கே ஏற் கெனெவே நதிக்கரையை வந்தடைந்திருந்த அமெரிக் காவின் மொட்டைத்தலை கழுகுகள் (Bald headed Eagle) அடுத்த பெரும் விருந்துக்காய் தவம் கிடக்கின்றன.
உச்சியை வந்தடைந்த சாலமன் மீன்கள் அடுத்தகட்ட பணிகளில் உடனடியாக ஈடுபடுகின்றன. கூழாங்கற்கள் மிகுந்திருக்கும் தரையில் தம்துடுப்புகளால் கற்களை விலக்கி தண்ணீரின் வேகம் குறைந்த சிறிய பள்ளங்களை உருவாக்குகின்றன. இந்த பள்ளங்களில் பெண்மீன்கள் முட்டையிட ஆண்மீன்கள் தம் உயிரணுக்களை அதன்மீது செலுத்துகின்றன. பெண்மீன்கள் மீண்டும் தம் துடுப்புகளால் கற்களை பள்ளங்களின் மீதுமூட, கற்களின் இடையே உள்ள இடைவெளிகளில் கருவுற்ற முட்டைகள் பாதுகாப்பாக அடைக்கப்படுகின்றன. இது கோடையின் பின்பகுதி. ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்துகொண்டே வருகிறது. மீங்களுக்கு தேவையான உயிர்க்காற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும் போராட்டத்துக்குப்பின் அதிகபட்சம் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக சில ஆண்மீன்கள் மட்டும் கடலுக்குத்திரும்ப மீதம் அத்தனை மீன்களும் உயிரிழக்கின்றன. எங்கும் பெரும் அமைதி நிலவுகிறது.
ஓ! சாலமன் மீன்களே இதற்குத்தான் இத்தனை ஓட்டமாய் ஓடினீர்களா? குவியல் குவியலாய் செத்துக்கிடக்கும் மீன்களின் இறுதிச்சடங்கை தொடங்கி முடிக் கின்றன இயற்கையின் துப்புரவாளர்களான கழுகுகள். இரண்டு மாதங்கள் உறக்கத்தின்பின் முட்டைகளிலிருந்து மீன்குஞ்சுகள் வெளி வருகின்றன. மழைக்காலம் தொடங்கியிருந்தது. நீரோடைகள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் குட்டைகளை இணைக்க மீன்குஞ்சுகள் கடலை நோக்கிய பயணத்தைத்தொடங்கும் நேரம் நெருங்குகிறது.
அவை இப்போது கொஞ்சம் வளர்ந் திருக்கின்றன. இரைகொல்லிகளிடமிருந்து தப்ப இப்போது அவை கூழாங்கற்களின் தோற்றத்தில் தம் உடல்நிறத்தைப் பெற்றிருக்கின்றன. மீண்டும் ஒரு நீண்ட பயணத்தின்பின் கடலை அடையும் மீன்களுக்கு முகத்துவாரத்தில் மீண்டும் கடலில் சூழலைக் கொல்லாது “வாழும் கலை” பயிற்றுவிக்கப்படுகிறது. தொடர்ந்த வேதியல் மாற்றங்கள், உடலமைப்பு, கடலில் வாழ்வத்ர்க்கான தகவமைப்புகளுடன் மீண்டும் கடல்மீன்களுக்கான் வெளிர்நிற உடலமைப்புடன் கடலை அடைகின்றன இளமீன்கள். மழைக்காலத்து புதுவெள்ளத்தோடு மலையின் கனிமங்களையும் நுண்ணூட்டச்சத்துக்களையும் சுமந்துவரும் நீரையும், இளம் சாலமன் மீன்களையும் உண்டு பருக கடலின் நுண்ணுயிர்களான பிளாங்கடங்கள் முதன் சிறுமீன்கள், பெருமீன்கள், நண்டுகள், கடல்பறவைகள், சுறாக்கள், சீல்கள் என ஒருபெரும் கூட்டமே இங்கே முகாம் அமைத்து காத்திருக்கிறார்கள். பெருங்கடலின் அத்தனை உயிர்களுக்கும் சேர்த்து பசித்தால் எப்படி இருக்கும். கடலுக்குத்தான் எவ்வளவு பெரிய வாய்? எத்தனை அற்புதமான நுட்பமான பிணைப்பு. நைட்டிரஜனையும், பாஸ்பரசையும், கந்தகத்தையும் மீனிடம் கொடுத்தனுப்பி மலைகளில் கடைவிரிக்கிறது கடல். பதிலுக்கு தன் கனிமங்களை கடலின் உணவுச்சங்கிலியின் அடிநாதமான பிளாங்கடங்களுடன் பண்டமாற்று செய்கிறது மலை. கடலையும் மலையையும் தொப்புள் கொடியாய் இணைக்கிறது நதி. இப்படி ஆயிரமாயிரம் கொடிகளால் பிணைக்கப் பட்டிருக்கிறது இப்பூவுலகு. கடலின் மீனுக்கு மலையுச்சியில் முட்டையிட எப்படித்தெரிந்தது? மீனின் வருகையை கரடிகளுக்குச் சொன்னவர் யார்? பிணங்கள் விழுமுன்னே கழுகுகள் எப்படி வந்தன? கடலின் இத்தனை உயிர்கள் முகத்துவாரத்துக்கு வந்த மர்மமென்ன? எத்தனை இலட்சம் ஆண்டுகள் பிடித்திருக்கும் இத்தனை நுட்பமான ஒரு சங்கிலிப் பிணைப்பு கட்டப்பட?
இரவும் பகலும் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டடிருக்கிறது கடல். அமேசானுடனும், நைலுடனும், கங்கை யமுனையுடனும் அதிகரிக்கும் தன் உப்புத்தன்மையை சமன்செய்துகொள்ள நன்னீருக்காய் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு தாகத்துடன் காத்திருக்கிறது கடல். பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டபோது மரங்களோ மனிதர்களோ பிறந்திருக்காததால் அவை காகிதங்களில் எழுதிவைக்கப்படவில்லை. நதி கடலின் உரிமை. கடைமடையில் மீன் பிடிக்கும் கொக்கின் உரிமை. பன்னெடுங்காலமாய் அதை நம்பியிருக்கும் பயிர்களின் உரிமை. வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் விவசாயியின் உரிமை. தலைக்காவிரியிலிருந்து கடல்நோக்கி கரைபுரண்டு நுரைததும்ப பால்போல் பொங்கிவருகிறது தாய்நதி. கொள்ளிடத்திற் கப்பால் பாலுக்கு ஏங்கும் சேய்போல தாகத்துடன் நன்னீருக்காய் காத்திருக்கிறது கடல். தாய்க்கும் சேய்க்கும் நடுவே யார் சுவரெழுப்பியது? தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதுதானே முறை? ஏதோ ஒரு தடங்கல், தொடர்ந்து சலசலப்பு, கைகலப்பு, வன்முறை! “அங்க என்ன சத்தம்?” பெருங்கோபத்துடன் கேட்கிறது கடல். யாருடைய நீரை யார் பங்கிடுவது? நதியை அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள். வெட்டவும் இணைக்கவும் அது பொம்மை விளையாட்டல்ல. ஏனெனில் கடலின் சீற்றம் பொல்லாதது!
ஜீயோ டாமின்