மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும்  எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தினை கைவிடுக!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் புதிய சுற்றுச்சூழல் அனுமதிகோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  அறிவித்துள்ளது.

எண்ணூர் மணலியில் வெறும் 20 சதூர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள்,  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள்,  உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள்,  வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் எனச் சூழலை பாதிக்கும் 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

NORTH CHENNAI MAP

10 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையம் மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் புதிதாக 660MW & 660MW அளவிற்கு எண்ணூரில் இரண்டு அனல்மின் நிலையங்கள் வர இருப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.

கடந்த 2019ம் ஆண்டு 130 நாட்களுக்கு மேலாக எண்ணூர் பகுதியில் காற்றின் தரம் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அங்கு செயல்பட்டு வரும் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள் தான். சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105டன் சல்பர் டை ஆக்சைடு ,  24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள்,  மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.

3330MW அளவிலான அனல் மின் நிலையங்களில் இருந்து டன் கணக்கில் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்து அப்பகுதியின் சூழலை கடுமையாக பாதித்துள்ளது.  ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த செப்பாக்கம் போன்ற கிராமங்கள் கூட தற்பொழுது அனல் மின்நிலைய சாம்பலால் சூழப்பட்டு மரம், செடி கூட வளர முடியாத சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய கருவேலம் மரம் கூட இங்கு வளரவில்லை என்றால் இப்பகுதியில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக அப்பகுதி மீன் உற்பத்தியை குறைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் நேரடியாக கேள்விகுறியாக்கியுள்ளது. எண்ணூர், மணலி சூழலியல் சீர்கேட்டினை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் படி அங்கு புதிதாக காற்று மாசுப்படுத்தும் சிவப்பு நிற தொழிற்சாலைகள் துவங்க கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வட சென்னையில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து நீரிலும் காற்றிலும் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகம் பகுதியினை கடுமையாக பாதித்துள்ளதை பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழு அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியாகியிருந்த ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கையின் மூலம் திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவாக நிர்ணயித்துள்ளதைவிட எட்டு மடங்கு வரை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு நுண்துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 5 முதல் 7 ஆண்டுகளை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.

இது மட்டுமல்லாமல் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் அகால மரணம் அடைய நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரைக் காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும். மேலும், 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினாலும் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக  மருத்துவமனைக்கு செல்லும் அபாயம் நிகழக்கூடும். இது நோய்களின் விகிதத்தையும், கூடுதலாக  5700 குழந்தைகளுக்கு ஆஸ்துமாவையும் உண்டாக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக 6820 பேர்  ஆயுட்காலம் முழுதும்  உடல்நலக்குறைபாட்டுடன்  வாழ நேரிடும் எனவும் C40 ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

எண்ணூர்-மணலி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களும், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன . ஏப்ரல் 2019 இல் இருந்து டிசம்பர் 2020 வரை 660 நாட்களில் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும், 418 நாட்கள்  வட சென்னை அனல்மின் நிலையம் 273 நாட்களும், தமிழ்நாடு பெட்ரோலியம் நிறுவனம் 228 நாட்களும் காற்று மாசு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சூழலில்தான் எண்ணூரில் புதிய அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வாழும் வடச்சென்னை பகுதியின் சுற்றுச்சூழல் மேலும் மாசடைந்து அது வாழத் தகுதியற்ற இடமாகவே மாறிப்போகும். ஏற்கனவே இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள் இருக்கும் பொழுது மேலும் புதிதாக அனல் மின் நிலையங்களை எண்ணூரில் அமைப்பது அப்பகுதி மக்களுக்கு செய்யும் மிக பெரிய அநீதி ஆகும்.

எது வளர்ச்சி?

மின்சாரம்-வளர்ச்சி என்ற பெயரில் சுவாசிக்க நல்ல காற்று கிடைக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத்திணறும் நிலைக்கு வட சென்னை மக்கள் ஏன் தள்ளப்பட வேண்டும்?

அனல்மின்சாரம் மூலம் சில நூறு பேருக்கு தற்காலிக வேலை கிடைக்க ஏன் பல ஆயிரம் பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டும் ?

நாட்டுக்கு மின்சாரம் வேண்டாமா ? வளர்ச்சி வேண்டாமா ? என்கிறார்கள்,

ஆம், வேண்டும்தான் ஆனால் பாதிப்புகள் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய பல வழிகள் உள்ளன.  காலாவதியாகிவிட்ட அனல் மின்சார திட்டங்கள் இனியும் வளர்ச்சியில்லை என்கிறது நவீன அறிவியல். வளர்ந்த நாடுகளெல்லாம் சூரிய ஆற்றல் , காற்றாலை மின்சாரம் என புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது, மக்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பு தரும் அனல் மின்சார உற்பத்தி முறையை ஏன் நம் அரசாங்கம் தேர்வு செய்ய வேண்டும்?

காலநிலை மாற்ற பாதிப்புகளை மட்டுப்படுத்தும் நோக்கில்  20,000MW அளவிற்க்கான சூரிய ஆற்றல் மின் திட்டங்களை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை செயல்படுத்தும் போது அனல் மின் நிலையங்களுக்கான தேவையே இல்லாமல் போய்விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

மேலும் புதிதாக அனல்மின் நிலையங்களை கட்டுவது அரசிற்கும் கூடுதல் கடன் சுமையைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே 1,34,000 கோடி கடனில் இருக்கும் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு உடன்குடி அனல் மின் நிலையத்தினால் அடுத்த ஆறு வருடத்தில் மேலும் 29,000 கோடி கடன் ஏற்படும். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு யூனிட் சூரிய ஆற்றல் மின்சாரம் உற்பத்தி விலை 85% ஒரு யூனிட் காற்றாலை மின்சார உற்பத்தி 55% குறைந்துள்ளது. அதே வேளையில் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் எடுக்கும் செலவு அதிகரித்துகொண்டே போகிறது.

எண்ணூர் அனல் மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 6 முதல் 8 ருபாய் வரை ஆகும். ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சூரிய ஆற்றலில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 3ரூபாய்க்கு குறைவாக தான் செலவாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விலையும் குறையும் வாய்ப்பிருப்பதாக கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

இப்படி அரசின் பொருளாதாரத்திற்கு நன்மை தரக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்காமல், மீண்டும் நிலக்கரி  அனல்மின் நிலையங்களை நிறுவுவது மக்களின் ஆரோக்கியத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் செயலாகும். வளர்ச்சியின் பெயரால் ஒரு  மாபெரும் சமூக அநீதியின் கோர முகமாக வடசென்னை மாறியுள்ளது. இந்த அவலத்தைப் போக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இருப்பதால் புதிய அனல்மின் நிலையத் திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இத்திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments