தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் புதிய சுற்றுச்சூழல் அனுமதிகோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு அருகே அம்பத்தூர் தாலுகா எர்ணாவூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் காலாவதி ஆனதால் கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்திற்கு மாற்றாக மற்றும் விரிவாக்கமாக மேலும் இரண்டு அனல்மின் நிலைய அலகுகளை அமைக்க திட்டமிட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க அலகிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது. பின்னர் இந்த அலகின் உற்பத்தித்திறன் 600லிருந்து 660 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு மிக உய்ய அனல்மின் நிலையத் திட்டமாக மாற்றப்பட்டது. இந்த அலகிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் காலமான 10 ஆண்டுகளில் 703 கோடி செலவிடப்பட்டு வெறும் 17% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.
மீதமுள்ள கட்டுமானப் பணிகளை முடிப்பதற்காக நான்கு ஆண்டுகள் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை கடிதம் எழுதி இருந்தது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு இந்த அனல் மின் நிலையத்திற்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தது. இதனை ஏற்று புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு தமிழ்நாடு மின்சாரத் துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தில் இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடம் குறித்த ஆய்வு மற்றும் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
தொடக்கத்தில் இந்த கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்க மறுத்தது. ஆனால், ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத் துறையால் எண்ணூர் விரிவாக்க அனல் மின்நிலையம் அமைக்கப்படும் அதே இடத்திற்கு மிக அருகில் மற்றுமொரு அனல்மின் நிலையம் அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று இருப்பதாலும் இந்த இரண்டு அனல் மின் நிலையங்கள் இப்பகுதியில் வர விருப்பதை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் அறிந்திருப்பததாலும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியமற்றது என வலியுறுத்தியதன் பேரில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு மீண்டும் புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.
இந்த சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ன் உட்பிரிவு 7(III)ற்கு எதிரானதாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டது.
Ennore-judgment
இத்த்தீர்ப்பில் ஒரு திட்டம் அமைக்கப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது முக்கியமானதாகும். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வது அவசியம் இல்லை. எனவே 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் அனுமதி ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்குள் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 இன் படி இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி திட்டம் குறித்த பொது மக்கள் கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மாற்றி அமைத்து மீண்டும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்து அக்குழுவின் பரிந்துரையின் பேரில் கூடுதல் நிபந்தனைகளோடும் புதிய அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அதனடிப்படையில் தற்போது இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
ExeSumTamTangedco251121 (1)
இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள், வாகன தொழிற்சாலைகள், மிகப்பெரிய குப்பை கிடங்கு, நிலக்கரி சேமிப்பிடங்கள் என சூழலை பாதிக்கும் 38 தொழிற்சாலைகள் என்னூர் மணலி பகுதியில் அமைந்துள்ளன.
ஏற்கனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாய வழக்கு எண் OA NO.256/2020ல் வடசென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அப்பகுதியின் தாங்குதிறன் என்ன? என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை தீர்ப்பாயம் அமைத்திருந்தது. எண்ணூர்,மணலி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் ஏற்கெனவே செயல்பட்டும் வரும் அனல்மின் நிலையங்களால் கடுமையாக மாசடைந்ததைக் கருதிதான் இப்படி ஒரு கருத்தை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மேலும் அப்பகுதியில் புதிய அனல்மின் நிலையங்கள் அவசியமா?
அங்குள்ள தொழிற்சாலைகளால் வாழத்தகுதியற்ற இடமாக வடசென்னை மாறிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவரும் இச்சூழலில் மீண்டும் அப்பகுதியில் புதிதாக அனல் மின் நிலையம் கட்டுவது எண்ணூர் மக்களுக்கு செய்யும் மிக பெரிய அநீதியாகும். ஏற்கனவே 3,330MW அளவுக்கு செயல்பட்டு வரும் வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகம் பகுதியினை கடுமையாக பாதித்துள்ளதை பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழு அளித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின் மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. முக்கியமாக அப்பகுதி மீன் உற்பத்தியை பாதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக கேள்விகுறியாக்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு 130நாட்களுக்கு மேலாக எண்ணூர் பகுதியில் காற்றின் தரம் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகியிருந்த ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கையின் மூலம் திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண் துகளின் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவுகளாக நிர்ணயத்துள்ள அளவுகளை விட நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த அளவிற்கு நுண் துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் சில ஆண்டுகளை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மும்பை, டெல்லி, பெங்களூருவை விட சென்னையில் தான் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது என சமீபத்தில் வெளியான C40 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105டன் சல்பர் டை ஆக்சைடு , 24டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், 3.5 டன் சாம்பல் மற்றும் அதிகளவிலான கார்பன் மோனாக்சைடு ஆகிய மாசுகள் காற்றில் வெளியேறுகிறது. இந்நிலையில் ஏற்கனவே 3,330MW அளவில் அனல் மின் நிலையங்கள் இயங்கி கொண்டிருக்கும் எண்ணூர் பகுதியில் மேலும் புதிதாக அனல் மின் நிலையம் கொண்டு வரும் திட்டத்தினை அப்பகுதி சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலன் கருதி அரசு கைவிட கேட்டுக்கொள்கிறோம்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அநீதியை மட்டுமே சந்தித்து வரும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நேரமிது.
திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய: http://www.tnpcb.gov.in/pdf/ph/EIARptTangedco251121.pdf