திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக இருந்துவரும் வேளையில் 2016 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பதிலீடு செய்யும் புதிய விதிகளுக்கான வரைவை (Solid waste Management Rules) பொதுமக்களின் கருத்தறிவதற்காக ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த கருத்துக்கேட்புக்கான அவகாசம் 07.06.2025 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
முந்தைய விதிகள் வெளியிடப்பட்டு 8 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாம் காலநிலை மாற்றம், திடக்கழிவுகளின் சூழல் மற்றும் உடல்நலத் தாக்கம் போன்ற ஏராளமான புதிய பாடங்களைக் கற்றிருக்கிறோம். திடக்கழிவுகளை அவற்றின் உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவது காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் முன்நிபந்தனையாக மாறியிருக்கிறது. கட்டுப்பாடற்ற நெகிழி உற்பத்தியின் விளைவாக நச்சு நுண்ணெகிழித் துகள்கள் மனித உடலில் மூளை வரையில் ஊடுருவி இருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம். குப்பைகளை எரித்து அழிக்கும் திட்டமானது எத்தனை அபாயகரமானது என்பதை உணர்த்தும் ஆய்வுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த பின்னணியில் வெளியாகும் புதிய விதிகள், பழைய விதிகளைவிடக் கடுமையானதாகவும் சூழல் நலனையும் மனித நலனையும் அதிகம் கருத்தில்கொள்வதாகவும் இருக்க வேண்டிய சூழலில் – அவை மோசமான அளவில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருப்பதோடு அபாயகரமான புதிய வாசல்களையும் திறந்து விட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2024 இன் வரைவில் காணப்படும் பாதகமான சில அம்சங்களை மட்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறோம்.
• கழிவுகளை, அவை உற்பத்தியாகும் இடத்திலேயே மேலாண்மை செய்யும் பரந்துபட்ட திடக்கழிவு மேலாண்மைக்கு மாற்றாக மையப்படுத்தப்பட்ட சூழல்விரோதத் திட்டங்களை இது ஊக்குவிக்கிறது.
• குப்பைகளை அவற்றின் உற்பத்தியிலேயே கட்டுப்படுத்தும் (உதாரணமாக, பொட்டலங்களை மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சிக்கு ஏற்றபடி வடிவமைப்பது போன்றவை) எந்த நடவடிக்கைகளும் வலியுறுத்தப்படவில்லை.
• திடக்கழிவு மேலாண்மையின் மிக முக்கிய அங்கமான – பெருமளவிலான திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு உள்ளாகக் காரணமாக இருக்கும், குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளர்கள், அவற்றை வகைபிரிப்போர், மறுசுழற்சி செய்வோர் போன்றோரை இது முற்றிலுமாகப் புறந்தள்ளியிருக்கிறது.
• புற்றுநோய்க் காரணியான டயாக்சின்களை உருவாக்கும் குளோரின் கலந்த நெகிழிக் குப்பைகளை எரிவுலைகளில் எரிக்கக் கூடாது என்ற 2016 ஆம் ஆண்டின் விதி நீக்கப்பட்டிருக்கிறது.
• குப்பைகளிலிருது வரும் துர்நாற்றம் போன்றவற்றுக்கான அனுமதிக்கப்பட்ட வரம்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
• மிகமோசமான சூழல் பாதிப்புகளை உருவாக்கும் – குப்பை மேலாண்மைப் படிநிலையின் கடைசியாகக் கருதப்படும் குப்பை எரிவுலைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை கட்டாயம் என்பதுபோன்ற இடத்தைப் பெற்றிருக்கின்றன.
• திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
காலநிலை மாற்றம், நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, நில மாசுபாடு உள்ளிட்டத் தீவிர சூழல் பிரச்சினைகளோடு நெருங்கியத் தொடர்புகொண்டிருக்கும் திடக்கழிவுகளைக் கையாள்வதற்கான விதிகளில் ஒன்றிய அரசு செய்திருக்கும் மாற்றங்கள் சூழல் – சுகாதாரப் பிரச்சினைகள் இன்னும் தீவிரமாக அதிகரிக்கவே வழிவகுக்கும். ஆகவே, இந்த இணைப்பில் தரப்பட்டிருக்கும் விரிவான பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டு (https://docs.google.com/document/d/1gSCRWLhBIG-2X4GhSdE41vCNj6TPAEhK/edit) திடக்கழிவுகளை முழுமையாகத் திறம்படக் கையாளும் திறன்மிக்க – சூழலுக்குப் பாதுகாப்பான கொள்கைகளை வடிவமைக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
இந்த கருத்துடன் உடன்படும் சூழல் அமைப்புகள், இயக்கங்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdUp-4bdC-1tF57xLbGk4Mdd9NLGtQj7vCmfNF_AXNE-YFIRg/viewform இந்த இணைப்பில் இருக்கும் கோரிக்கையில் கையெழுத்திடக் கோருகிறோம்.
1735217430
