ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு.
ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு.
தமிழ்நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் நன்றி
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் தொடர் விதிமீறல் நடவடிக்கைகளின் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் 18.08.2020 அன்று உறுதி செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது வேதாந்தா நிறுவனம். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிகோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தது.
ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ் நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 6ம் தேதி, தமிழ் நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளருக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம், சில ஆலை பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தவிட்டுள்ளார். இதன்படி 10.04.2023 அன்று ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து வேதாந்தா நிர்வாகத்தை ஆலைக்குள் கழிவுகளை அகற்றுவதற்காக அனுமதிக்கக் கூடாதென ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக 11.04.2023 அன்று பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில் “கழிவுகளை அகற்றும் பணிக்காக வேதாந்தா நிர்வாகத்தை மீண்டும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிப்பது ஆலைக்கெதிராக போராடிய மக்களுக்கும் உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் அநீதியாகும். மாறாக கழிவுகளை அகற்றும் பணியை வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று அரசே செய்துவிட்டு அதற்கான செலவுத் தொகையை ஸ்டெர்லைட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி ஆட்சியர் 29.05.2023 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தொழிழ்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாரி வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற்பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இக்குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடைபெறவுள்ள கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும். எத்தனை பணியாளர்கள், எத்தனை எந்திரங்கள், வாகனங்கள் இப்பணியில் பயன்படுத்தப்படவுள்ளது என்கிற விரிவான திட்டத்தை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று அவ்வேலைக்கான ஒப்புதலை உள்ளூர் மேலாண்மைக் குழுவே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பணிகளை மேற்கொள்பவர்கள் ஆலையின் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆலைக்குள் பணியாளர்கள், வாகனங்கள் நுழைவதையும் வெளியேறுவதையும் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும், கழிவுகள் அகற்றப்பட்ட பின்னர் வாகனங்கள், எந்திரங்களுக்கான அனுமதியை மேலாண்மைக் குழு ரத்து செய்யும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வேதாந்தா நிர்வாகம் முக்கியமான மூன்று கோரிக்கைகளையும் எழுப்பியிருந்தது.
அவை
- ஸ்டெர்லைட் ஆலையின் கட்டிட, கட்டமைப்பு பாதுகாப்பை மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அனுமதி.
- ஆலையில் உள்ள உதிரிபாகங்கள்/உபகரணங்களை வெளியே எடுத்துச் செல்வதற்கான அனுமதி.
- ஆலை வளாகத்தில் செயலற்ற நிலையில் கிடக்கும் இயந்திரங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதி.
இந்த மூன்று கோரிக்கைகளையுமே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முற்றிலுமாக மறுத்துள்ளார் என்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான காரணங்களையும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு,
30.06.2018 முதல் 25.04.2022 வரையிலான காலத்தில் மட்டும் உள்ளுர் மேலாண்மைக் குழுவின் மேற்பார்வையில் ஆலையிலிருந்து 14 வகையான அபாயகரமான பொருட்களை பாதுகாப்பாக அகற்றியுள்ளோம். ஆலையில் எஞ்சியிருக்கும் கிப்சம் கழிவுகளை அகற்ற தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலைக்கு மிக அருகே வேறு தொழிற்சாலைகளும், மக்கள் வசிப்பிடங்களும் இல்லாததால் ஆலைக்கு எவ்வித பாதிப்புமில்லை என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆலை 5 ஆண்டுகளாக மூடியே இருப்பதால் கட்டிட, கட்டமைப்பு பாதுகாப்பை மதிப்பீட்டாய்விற்காக யாரையும் உள்ளே அனுமதித்தால் உயிரிழப்பை ஏற்படுத்தவல்ல விபத்துகள் ஏற்படும் வாய்ப்பிருப்பதால் அக்கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு ஏற்கெனவே வேதாந்தா நிறுவனம் அபராதமாக செலுத்திட ரூ.100 கோடிக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை வந்தால் அந்த அபராதததை நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கும் ஸ்டெர்லைட் ஆலையால்தான் காற்று மாசு ஏற்பட்டது என்பது குறித்து கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ஆலையில் தற்போது உள்ள இயந்திரங்களை ஆய்வு செய்து அதை ஆதாரமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். எனவே ஆலைக்குள் உள்ள இயந்திரங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதியை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
பூவுலகின் நண்பர்களும் தூத்துக்குடி பொதுமக்களும் முன்வைத்த கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்கள் மற்றும் பூவுலகின் நண்பர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கழிவுகளை அகற்றும் பணியை முற்றிலுமாக வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும் தூத்துக்குடி மக்களையும், நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்தி 15 பேரின் படுகொலைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை இடித்து அகற்றுவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஆகவே, உச்சநீதிமன்றத்தில் இதனை முன்னிறுத்தியே தமிழ்நாடு அரசு தனது வாதங்களை முன்வைக்க வேண்டுமெனக் கோருகிறோம்.