நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்த வன்முறையும் துப்பாக்கிச்சூடும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  இந்த அறிக்கையை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக ப்ரண்ட்லைனில் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

காவலர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் பொதுமக்களை குறிவைத்து சுட்டுள்ளார். அடியாள் போல் சுடலைக்கண்ணு செயல்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளாகவே மறைந்திருந்து மக்களை காவல்துறை சுட்டுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த அளவிற்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையில் அந்த நேரத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அதிகாரிகளை மட்டும் காரணமாக்குவது போதாது.

இப்படுகொலைக்குக் காரணமான அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்தால் இந்த துப்பாக்கிச்சூடு முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் ஆலையின் நலனைப் பாதுகாக்கவே நடந்ததாகத் தெரிகிறது. எனவே இந்த சம்பவத்தில் ஆலை நிர்வாகத்தின்  தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்த சி.பி.ஐ. விசாரணையில் ஒரு காவலருக்கு எதிராகக் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக நடந்த சம்பவத்திற்கு மக்களே காரணம் என்பதுபோல போராடியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து புதிய புலன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவியல் நடவடிக்கை தொடங்க வேண்டும்.  நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments