சட்டவிரோதத் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

ex post facto சுற்றுச்சுழல் அனுமதி முறையை ஒன்றிய அரசே திரும்பப் பெற வேண்டும்!

 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006, திட்டங்களைத் தொடங்கும் முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது. பெரும் முதலாளிகளுக்குப் பலனளிக்கும் வகையில் திட்டத்தைத் தொடங்கிய பின்னர் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்கிற வகையில் ஒன்றிய அரசு இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திருந்தது. அத்தகைய உத்தரவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் கடந்த மே மாதம் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இத்தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் இத்தீர்ப்பு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் நிறைந்ததாகும். இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அத்திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக திட்ட நிறுவனம் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனம் கட்டப்படவிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல்நிலையில் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளை குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் (Mitigation Measures), போன்றவற்றை விரிவான ஆய்வு செய்து பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கப்பெற்ற நிபுணர் குழு அதை ஆய்வு செய்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின்  நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கவோ, இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். சுற்றுச்சூழல் சட்டத்தின்படி ஒரு திட்டத்தைத் தொடங்கிய பின்னர் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ex post facto முறையில் பெற முடியாது.

ஆனால், உரிய முன் அனுமதி பெறாமல் பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இத்தகைய சட்டவிரோதத் திட்டங்களுக்கு பிந்தைய அனுமதி அளிக்கும் வகையில் 2017ல் ஒரு அறிவிக்கையையும் 2021ல் ஒரு அலுவல் உத்தரவையும் ஒன்றிய அரசு வெளியிட்டது. இதன்படி முன் அனுமதி பெறாதத் திட்டங்களுக்கு உரிய அபராதத் தொகை செலுத்தி பின் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதனை எதிர்த்து வனசக்தி என்கிற அமைப்பு தொடுத்த வழக்கில்தான் மே மாதம் உச்ச நீதிமன்றம் ex post facto முறையிலான அனுமதி சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.

வரவேற்கத்தகுந்த இத்தீர்ப்பை எதிர்த்து பெரும் கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இம்மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், உஜ்ஜல் பூயான், கே. வினோத் சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு 18.11.2025 தனது தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் மே மாதம் வழங்கப்பட்ட வனசக்தித் தீர்ப்பைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். நீதிபதி உஜ்ஜல் பூயான் தனது தனித் தீர்ப்பில் வனசக்தித் தீர்ப்புகளுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மே மாதம் வழங்கப்பட்ட வனசக்தித் தீர்ப்பைத் தொடர அனுமதித்தால் நாடு முழுவதும் பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பல்வேறு பொதுமக்களுக்கு முக்கியமான திட்டங்கள் முடங்கிப் போகும் அபாயம் இருப்பதால் அத்தீர்ப்பைத் திருமப் பெறுவது அவசியம் எனக் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருத்தமட்டில் திட்டங்களுக்கான அனுமதியையும் சட்ட விதிமீறலையும் பண விரயம் என்கிற அடிப்படையில் பார்ப்பதே தவறானதாகும். பொருளிழப்பையும் தாண்டி இச்சட்டவிரோத திட்டங்கள் வெறும் அரசின் கட்டுமானத் திட்டங்கள் மட்டுமானவை அல்ல. சுற்றுச்சூழலில் மீட்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிகள், சுரங்கங்கள் மற்றும் நச்சு வெளியேற்றும் ஆலைகள் போன்றவையும் இத்தீர்ப்பால் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. தனியார் நிறுவனங்களின் முதலீடுகளைப் பாதுகாத்து இயற்கை வளங்கள் மீதான சுரண்டலுக்கே இத்தீர்ப்பு வழிவகுக்கும்.

இம்மனுக்கள் மீது நீதிபதி உஜ்ஜல் புயானின் தனித் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “வனசக்தித் தீர்ப்பு மீது ஒன்றிய அரசு எவ்வித சீராய்வு மனுவும் தாக்கல் செய்யாத நிலையில் அத்தீர்ப்பை ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தம். சில இடையீட்டு மனுக்களின் கோரிக்கையை ஏற்று வனசக்தித் தீர்ப்பை மொத்தமாகத் திரும்பப் பெற எவ்விதக் காரணமும் எழவில்லை.

கொடிய டெல்லி புகைமூட்டம் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அபாயங்களை தினமும் நமக்கு நினைவூட்டுகிறது என்பதை நான் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.  நாட்டின் உச்சபட்ச அரசியமலைப்பு நீதிமன்றமான உச்ச நீதிமன்றமானது , இந்திய அரசியலமைப்பின் படியும், அதன் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களின்படியும்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டதாகும். சுற்றுச்சூழல் தொடர்பான நல்ல சட்ட நெறிமுறைகள் இந்த நாட்டில் உருவாகியுள்ள நிலையில், அதிலிருந்து பின்வாங்குவதை ஏற்க முடியாது, அதுவும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காத நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் அடிப்படையில் இதைச் செய்ய முடியாது” என நீதிபதி உஜ்ஜல் பூயான் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் வனசக்தித் தீர்ப்பை திரும்பப் பெறுவதற்கு வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி உஜ்ஜல் பூயான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது தீர்ப்பில் கூறுகையில் “மறுசீராய்வு தீர்ப்பானது ஒரு அறியாமையிலான கருத்து வெளிப்பாடாகும். இது சுற்றுச்சூழல் சட்ட நெறிமுறைகளின் அடிப்படைகளையே கவனத்தில் கொள்ளவில்லை. முன்னெச்சரிக்கை கொள்கை என்பது சுற்றுச்சூழல் சட்ட நெறிமுறைகளின் அடித்தளமாகும். மாசுபடுத்துபவரே இழப்பீட்டிற்கான அபராதத்தை செலுத்துதல் எனும் Polluters Pays என்பது இழப்பீட்டுக் கொள்கை மட்டுமே. மாசுபடுத்துபவர் செலுத்துதல் கொள்கையை நம்பி முன்னெச்சரிக்கை கொள்கையை புறக்கணிக்க முடியாது. மறுசீராய்வு தீர்ப்பு பின்னோக்கி செல்லும் ஒரு படியாகும்.” எனக் குறிப்பிட்டு வனசக்தித் திர்ப்பிற்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மே மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிக மிக முக்கியத்துவம், வாய்ந்ததாகும். மீண்டும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்குப் பிந்தைய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நாட்டின் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் இக்கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு முன்வைக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments