நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாடு முன்னேற்றம்

ஐக்கிய நாடுகள் சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின்(SDG) 2020ஆம் ஆண்டு நிலை குறித்த அறிக்கையை நிதி ஆயோக்  நேற்று (03-06-2021)  வெளியிட்டது.

“இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை: 10 ஆண்டுகால செயலின் கூட்டாண்மை” என்ற தலைப்பிலான அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

SDG என்பது மொத்தம் 17 இலக்குகளை கொண்டு வளர்ச்சியை அளவிடுவதாகும்.  அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா வரையறுத்த பொதுவான வரையறைகளுள் மொத்தம் 232 குறியீடுகள் உள்ளன. இதில் இந்தியாவுக்குப் பொருந்தும் 115 குறியீடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு கணக்கிடப்பட்டதில், தமிழ்நாடு 2020ஆம் ஆண்டிற்கான வரிசைப் பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.   கடந்த ஆண்டைப் போலவே இந்த் ஆண்டும் கேரள மாநிலம்  பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இமாச்சல பிரதேசமும் தமிழ்நாடும் பகிர்ந்து கொண்டுள்ளன. கடைசி இடத்தை பீஹார் மாநிலம் பெற்றுள்ளது.  பீஹார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிஷா ஆகிய மாநிலங்களைவிட லட்சத் தீவுகள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இலக்கான வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு 86 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இரண்டாவது இலக்கான பசியைப் போக்குதலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.  மூன்றாவது இலக்கான உடல்நலம் மற்றும் நல்வாழ்வு என்பதில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்துள்ளது.  நான்காவது இலக்கான தரமான கல்வி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவத்தில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 12ஆம் இடத்தில் இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆறாம் இலக்கான சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தில் 2019ஆம் ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2020ஆம் ஆண்டில் 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  ஏழாம் இலக்கான அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதில் தமிழ்நாடு 2019ஆம் ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் முதல் இடத்திற்கு வந்துள்ளது. மின்சார வசதி மற்றும் எரிவாயு வசதி பெற்ற வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த இலக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

எட்டாவது இலக்கான மரியாதையான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு ஆறாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒன்பதாவது இலக்கான தொழிற்சாலை மற்றும் உட்கட்டமைப்பில் பதினான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பத்தாவது இலக்கான ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் பதினாறாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.

 

பனிரெண்டாவது இலக்கான நிலையான நகரங்களும் சமூகமும் என்பதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது. நிலையான உபயோகித்தலும் அதன் தயாரிப்புகளும் என்கிற பிரிவில் பதினொன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. காலநிலை  நடவடிக்கைகள் எனும் இலக்கில் தமிழ்நாடு பதினொறாவது இடத்தில் உள்ளது. கடல் வளப்பயன்பாட்டில் மொத்தமுள்ள ஒன்பது மாநிலங்களில்  தமிழ்நாடு கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. நிலம் மற்றும் அதில் வாழும் உயிர்கள் பாதுகாப்பு தொடர்பான இலக்கில் பதினாறாவது இடத்தையும் அமைதி, நீதி மற்றும் திடமான உள்கட்டமைப்புகள் குறித்த இலக்கில் பதினேழாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சில இலக்குகளில் தமிழ்நாடு பின் தங்கியதற்கு காரணங்களாக உள்ள குறியீடுகள் குறித்து பார்க்கலாம். பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 10 லட்சம் பேரில் 15.5 ஆக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு 15.6ஆக அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதிகள் உள்ள பள்ளிகள் தொடர்பான குறியீடு 2019ஆம் ஆண்டில் 99.89 ஆக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 98.39 ஆக மாறியுள்ளது. உற்பத்தியாகும் கழிவு நீரில் 32% கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பி நிலையங்கள் 2019ஆம் ஆண்டில் இருந்த  நிலையில் 2020ஆம் ஆண்டில் வெறும் 25.68% கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது.

அபாயகரமான கழிவுகள் உற்பத்தியில் 2019ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 5.52 டன் உற்பத்தியான நிலையில் 2020ஆம் ஆண்டில் 17.26 டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால், இதே நேரத்தில் அபாயகரமான கழிவுகள் மற்சுழற்சி செய்யும் குறியீடு 2019ஆம் ஆண்டில் 16.9ஆக இருந்த  நிலையில் 2020ஆம் ஆண்டு மறுசுழற்சி அதிகரித்து 48.23 ஆக அதிகரித்துள்ளது. அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 2019ஆம் ஆண்டில் 4.26ஆக இருந்த நிலையில் இது குறைந்து 2020ஆம் ஆண்டில் -8.16ஆக உள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குதல், பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்தல், பெண்களுக்கு சராசரி மாத வருமானம், வேலைவாய்ப்பின்மையை குறைத்தல், இணைய பயன்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு அதிகரித்தல், மரங்களின் எண்ணிக்கை, காடுகள் பரப்பளவு அதிகரிப்பு போன்ற குறியீடுகளில் தமிழ்நாடு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

முழு அறிக்கை மற்றும் தகவல் பலகை

https://sdgindiaindex.niti.gov.in/assets/Files/SDG3.0_Final_04.03.2021_Web_Spreads.pdf

https://sdgindiaindex.niti.gov.in/#/state-compare?goal=14&area=IND033&timePeriod=2020

 

இதையும் படிங்க.!