தங்க சுனாமியும் நெய்தலின் ஆன்மாவும் – சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்

       என் விடலைப் பருவம் மீனவ கிராமத்தின் வாசனைஅடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற் கரை வாழ்க்கையில் வருடத்தை மீன் வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளைமீன், அயிலை, நெத்திலி, கூனி, இரால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளாத்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம்.

ஒவ்வொரு மீனின் வருகையின் போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் நீங்கள் ‘கவிச்சி’ என்னும் ஒற்றைச் சொல்லில் எளிமைப்படுத்திவிடக்கூடும். நூற்றுக் கணக்கான மீனினங்கள் பாரை, அயிலை, வஞ்சிரம் என மூன்று நான்கு பெயர்களாய்ச் சுருங்கிப்போனது. மடி வலை இழுக்கும் பருவங்களில் பலசாதி மக்களும் அலை வாய்க்கரையில் மீன்வாங்கு வதற்காகக் கூடுவார்கள்.

நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது எங்களுக்குக் கிடைக்கும் சிறுமீன்களை, பிடித்த நண்டுகளை அவர்கள் கொண்டுவரும் பனங்கிழங்கு, மாம்பழம், மாங்காய் முதலியவற்றுக்குப் பண்டமாற்று செய்து தின்போம். மூங்கில் கூடை களிலும் பனையோலைக் கடவங்களிலும் ஆண்களும் பெண்களும் அலைவாய்க்கரையில் மீனைக் கொள் முதல் செய்து சைக்கிளிலும் தலைச்சுமையாகவும் உள்ளூர்களுக்குக்கொண்டு சென்று விற்பார்கள். பெரும்பான்மை மீனவக் குடும்பங்களுக்கு உள்ளூர் மாற்றுச்சாதி மக்களில் உயிரக்காரர்கள் இருந்தனர்.

இங்கிருந்து துள்ளத் துடிக்க மீன்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அங்கிருந்து பண்டிகைக் காலங்களில் நெல், தேங்காய், கருப்புக்கட்டி, புளி வகையறாக்கள் அன்புப் பரிமாற்றமாக இங்கு வரும். மடிவலைக் காலத்தில் பட்சி பறவை பதினெட்டு சாதிக்கும் மனம்குளிர மீன் கிடைக்கும்.

இந்த சுகமான அனுபவங்கள் எல்லாம் வெறும் பழைய நினைவுகளாகச் சுருங்கிப் போய்விட்டது. எனது கிராமம் எனக்கே அந்நியப்பட்டுப் போன சுமையாக மனதை அழுத்துகிறது. மார்கழி மாதக் கடலில் குளித்து, பகல் வெயிலில் மணலில் புரண்ட நாட்கள் எல்லாம் வெறும் கனவாகிப் போனது. பசுமை, வெண்மைப் புரட்சிகளைத் தொடர்ந்து நீலப்புரட்சி (கடலுணவு/மீன் உற்பத்தியில் புரட்சி) வந்தது. பசுமைப்புரட்சி விவசாயத்தை வளர்க்கவில்லை, விவசாயியையும் வாழவிடவில்லை. விவசாயிகள் நிலங்களைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ப்புற அகதிகளானார்கள், அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள்.

நீலப்புரட்சி முழக்கத்திலும் பசுமைப்புரட்சி நாயகர்களின் குரல்தான் கேட்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது கடலடியில் போடப்பட்ட கண்ணி வெடிகளை அரித்துப் பொறுக்கி எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இழுவைமடி (டிராலர்) தொழில் நுட்பத்தை நார்வேக்காரர்கள் இந்திய அதிகாரிகளின் கையில் மீன்பிடித் தொழில்நுட்பம் என்று சொல்லி ஒப்படைத்துச் சென்றுவிட்டனர். நமது பாரம்பரிய மீனவர்கள் கையில் அந்தத் தொழில்நுட்பம் திணிக்கப்பட்டது.

1960களில் தமிழ் நாட்டு மீன்வள அமைச்சர் லூர்தம்மாள் சைமன் வெளிநாட்டிலிருந்து கொணர்ந்து இங்கு அறிமுகம் செய்த திலேப்பியா மீன் இங்குள்ள நன்னீர் மீன்வளத்துக்குப் பெரும் சவால் ஆனது. 2005 வாக்கில் மைய அரசு/மாநில அரசுகளின் ஆதரவுடன் பெப்சிகோ கொணர்ந்த கப்பாஃபைகஸ் (வெளிநாட்டுப்)பாசி வளர்க்கும் திட்டம் இராமேசுவரம் உள்ளிட்ட தமிழகக் கடற்கரைகளின் சூழலியலைக் காவுவாங்கியது. கடல்/மீன்வளக் கொள்கை வகுப்பாளர்கள் பாரம்பரிய மீனவர்களின் குரலை என்றுமே கணக்கில் கொண்டதில்லை.

மே 2014 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நேரத்தில் கடலோர வாக்கு வங்கியைக் குறிவைத்து அரசியல் கட்சிகள் மூன்று வாக்குறுதிகளை வெளியிட்டன. அவை: 1. மத்தியில் மீன்வள அமைச்சகம், மீனவர்களைப் பழங்குடிகளாக அறிவிப்பது, 2. தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்புத் தருவது.

பத்தாண்டுகளுக்கு முன்பு கடற்கரை மக்களின் மீதான கவன ஈர்ப்புத் தீர்மானமாக சுனாமி நிகழ்ந்தது. கடல் திரண்டு நிலத்தை மூழ்கடித்து, ஆயிரக்கணக்கான மனித உயிர்களையும் உடமை களையும் விழுங்கி மீண்ட அடியோடு, நிலத்திலிருந்து கடலை நோக்கி ஒரு ‘கருணைச் சுனாமி’ கிளம்பி நெய்தல் சமூகங்களை மூழ்கடித்தது. சில மணி நேரங்களில் கடல் நிகழ்த்திச் சென்றுவிட்ட சுனாமியைவிட, இந்த ‘கருணைச் சுனாமி’ இழைத்த துயரங்கள் மிகவும் கொடுமையானவை.

உதவிகள் என்னும் பெயரால் இம்மக்களை அணுகிய தொண்டு நிறுவனங்களும் ரெடிமேடு திட்டங்களுடன் அணுகிய அரசு அதிகாரிகளும் தங்கள் மேட்டிமைப் பார்வையால் நிகழ்த்திய சேதங்கள் அதிகம். ‘மீனவர்களுக்கு இது தங்க சுனாமி!’ என்று பிறசாதி மக்கள் பொறாமைப்பட்டார்கள். சுனாமி யாருக்கு ஜாக்பாட்டைக் கொண்டு வந்தது, யாருக்கு இழப்பை விட்டுச் சென்றது என்பதைக் கூர்ந்து கவனிக்கும் பொறுமை யாரிடமும் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள மே 2014 தேர்தல் வாக்குறுதிகளாகட்டும், கடந்த 10 ஆண்டுகளில் மைய, மாநில அரசுகள் வகுத்த மீன்வள/கடல் கொள்கைகளாகட்டும், சுனாமி மறுகட்டுமானம் ஆகட்டும்எல்லாவற்றிலும் மேட்டுக்குடி ஆதிக்க மனோபாவத்தைக் காண முடிந்தது.

உதாரணமாக, தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொழிலுக்கும் உத்தரவாதம் அளிப்போம் எனத் தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட பாஜக இப்போது அதிகார மையத்தில் இருக்கிறது. கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று மைய அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இப்போது பதில் மனு அளிக்கப் பட்டுள்ளது. மீன்வளத்திற்கு தனி அமைச்சகம் மைய அரசில் வேண்டும் என்பதும்கூட மீனவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் முனைப்பினால் அல்ல. அதிகாரிகளின் கையிலிருக்கும் அதிகாரத்தைத் துறைவல்லுனர்கள் கைப்பற்றிவிட விரும்புவதன் விளைவுதான்.

இந்திய அரசு தகுதிவாய்ந்த இளைஞர்களை கலாச்சாரப் பரிமாற்றத்துக்காக சோவியத் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வந்தது. வெளிநாட்டு மக்களின் பண்பாட்டு அடையாளங்களை நம்நாட்டவர்கள் புரிந்துகொள்வது இதன் நோக்கமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் வாழும் இந்தியா போன்றதொரு பரந்த நாட்டில் ஒருகோடி மக்களை உள்ளடக்கிய கடலோர இனக்குழுக்களைக் குறித்து அரசு அறிந்து கொண்டது ஒன்றுமில்லை என்பது சுனாமி மறு கட்டுமானச் சூழலில் வெட்டவெளிச்சமானது. இதைவிட வருத்தம் தரும் எதார்த்தம் என்னவெனில் அறிந்துகொள்ள எவரும் அக்கறைப்படவும் இல்லை என்பதுதான். நெய்தலின் ஆன்மாவைத் தரிசித்திராதவர்களே அம்மக்களைக் குறித்துக் கருத்துச் சொல்கிறார்கள். தீர்ப்பிடுகிறார்கள், கொள்கை வகுக்கிறார்கள்.

தமிழ் நாட்டுக் கடற்கரையானது, தொழிற்சாலைகளால், ஆக்கிரமிப்புகளால் காயப்பட்டதைவிட ஒட்டுமொத்தப் புறக்கணிப்புகளால் நேர்ந்த படுகாயங்களே அதிகம். ஒரு முதல் தலைமுறை மீனவராக கடற்கரையைக் குறித்து நான் பெற்றிருக்கும் புரிதல் வெறும் 20 விழுக்காடுதான். ஆழிப்பேரிடர் மறுகட்டுமானத்தின் பிரத்தியேக சூழலில் இந்தப் புரிதலை என்னளவில் விசாலப்படுத்த முயன்றேன். ஒரு சகபயணியாக, விவாதக் களங்களில் பங்கேற் பாளனாக, கள ஆய்வாளனாக, எழுத்தாளனாக, தொகுப்பாளனாக மட்டுமின்றி கடலோர எழுத்துகளைப் பதிப்பிப்பவனாக இந்தப் பத்தாண்டுகளில் கடற்கரை வாழ்வு குறித்து எனக்குக்கிடைத்த புரிதலை முன்முடிவுகளின்றிப் பகிர்ந்துகொள்வதே இத்தொடரின் இலக்கு. இனி நீங்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.

* * *

சுனாமிப் பேரிடருக்குப் பின்னான பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் நேர்ந்திருக்கும் மாற்றங்களையும் இப்போதைய சூழலையும் சரியாய்ப் புரிந்துகொள்வதற்கு சில பின்னணித் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படும். அடிப்படையில், நெய்தல் நில வாழ்க்கையைக் குறித்த புரிதல் வேண்டும். மருதநிலம் என்னும் அடையாளம் சிதைந்து தொழில் பேட்டைகள், ரியல் எஸ்டேட், நான்குவழிச் சாலைகளால் அது கூறுபடுத்தப்பட்டது.

விவசாயம் பெருமுதலீடு/ஏகபோகத் தொழிலாகவும், சில்லரை வணிகத்தின் சந்தைப் பிணைப்புகள் ஒழிந்து சந்தை ஏகபோகமாகவும் உருக்கொண்டுவிட்டது. குறிஞ்சி/முல்லை நில வாழ்வுகுறித்த அக்கறை மருதநிலத்தில் இல்லாதது போலவே நெய்தலைக் குறித்த புரிதலும் இல்லாமல் போனது. ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழும் இம்மூன்று பிரிவு மக்களுக்கிடையில் இன்றும் மிகப்பெரிய இடைவெளி நீடித்து வருகிறது. உலகமயச் சூழலில் திணை சார்ந்த வாழ்க்கைமுறையில் சீரணிக்க முடியாத மாற்றங்கள் நேர்ந்துவிட்ட நிலையில் அரசு இயந்திரங்கள் மீனவர்களை இயந்திரத்தனமாகவே கையாண்டு வருகிறது.

இந்தியக் கடல்களில் அந்நியக் கப்பல்களுக்கு மீன்பிடி அனுமதி, வெளி நாடுகளிலிருந்து மீன் இறக்குமதிக்கு அனுமதி, பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி அறிவிப்பு (Marine Prote cted Areas), கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலோர மேலாண்மை அறிவிக்கை (2011), மீன்வள மசோதா (2009), பாரம்பரிய மீனவர் வாழ்வாதார உரிமை மசோதா (2009), மீன்பிடி தடைச் சட்டம் (2001), கடலோர நட்சத்திரப் பண்ணைச் சுற்றுலா விடுதி கள், சேதுக் கால்வாய்த் திட்டம், கடலோர அணுமின்/அனல்மின் நிலையங்கள், கனிம மணற்கொள்ளை, நாசகார தொழிற்சாலைகள், கச்சத்தீவுச் சிக்கல், மீன் சந்தை ஏகபோகம், வெளிநாட்டுப் பாசி வளர்ப்புத் திட்டம், பொருத்தமற்ற மீன்பிடி உயர்தொழில்நுட்பங்களின் திணிப்பு, வணிக/தொழில்/தனியார் துறைமுகங்களின் படையெடுப்பு, மீன்பிடி கட்டமைப்புகள்/அடிப்படை வசதிகள் பற்றாக்குறை… கடலோரச் சிக்கல்களின் பட்டியல் இப்படி நீண்டுகொண்டே போகிறது.

சுனாமிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கடலோர மக்களிடம் என்ன இருந்ததோ இல்லையோ, அவர்கள் மடிநிறைய பிரச்சினைகள் இருந்தன. மீன்வளத்தை வளர்ப்பதில் அரசுகள் காட்டிய முனைப்பில் சிறு அளவுகூட மீனவர் வளர்ச்சியில் காட்டவில்லை. வெளியே தெரிந்த மினுமினுப்பை விலக்கிவிட்டுப் பார்த்தால் அடித்தள மீனவர்களின் வாழ்க்கை பற்றாக்குறையின் குறியீடாகவே இருந்தது. வடதமிழகக் கடற்கரைகளில் உதிரித் தலைவர்களின் ஆதிக்கம்; தென்தமிழகக் கடற்கரைகளில் மத நிறுவனங்களின் முற்றாண்மை.

sunami 3502004 சுனாமியில் தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் உயிரிழந்தோர் 8000பேர். இதில் 75 விழுக்காடு உயிரிழப்பு (6063) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி யிலும் (824) கடலூரிலும் (615) அதிக எண்ணிக்கையில் மாண்டனர். இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உயிர்ச்சேதமும் பொருளிழப்பும் பெரிதாக நேராமல் போனதற்குக் காரணம் இலங்கைத் தீவும் மன்னார், பாக் நீரிணை பகுதியில் அமைந்திருக்கும் பவளப்பாறைகளும் கடலடித் திட்டுகளும்தான். மன்மோகன்சிங் தலைமையில் பொறுப்பிலிருந்த மைய அரசு எதைக் குறித்தும் கவலைகொள்ளாமல் சுனாமி அதிர்வு களிலிருந்து கடலோர மக்கள் விடுபடு முன்னமே ஏப்ரல் 2005இல் சேது கால்வாய்த் திட்டத்துக்கு மதுரையில் கால்கோள் இட்டது.

என் கடலோரப் பயணங்களின் ஒரு பகுதியாக 2008 நவம்பரில் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் கடற்கரைகளுக்குச் சென்று அங்கு மீனவர்கள், பெண்கள், தலைவர்களைச் சந்தித்து உரையாடினேன். அவர்கள் எல்லோருமே சேதுக்கால்வாயின் பாதகங்களையும் சாத்தியமின்மையையும் தெளிவாகச் சுட்டிக்காட்டினர். சேது திட்டப் பகுதியில் 13 மீன்பிடி துறைமுகங்களை அமைக்கப் போவதாக அரசு சொல்லிக்கொண்டிருந்தது. காலச்சுவடு இதழில் (ஜனவரி, 2009) நான் விரிவாக எழுதியிருந்தது போலவே, அத்திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. கால்வாய் தோண்டத் தொடங்கியபோது இராட்சத இயந்திரத்தின் தோண்டும் கருவி மணலுக்குள் சிக்கிக்கொண்டது.

அதன் ஒரு முனை மேல்நோக்கிக் குத்திட்டு நிற்கிறது. சில மீனவர்களையும் ஒரு படகையும் காவுவாங்கிவிட்டது. தோண்டிவிட்டுப் போன இடங்களில் மீனவர்களால் தொடர்ச்சியாக வலைபோட முடியவில்லை. மீன்பிடி துறைமுகங் களை மட்டுமே நிறுவித் தருவதாய்ச் சொல்லும் அரசின் திட்டம் சிறுதொழிலில் ஈடுபடும் பாரம்பரிய மீனவர்களைப் புறக்கணிக்கும் அரசியலே.

கடற்கரையையும் கடல்வளத்தையும் பாதுகாப் பதாய்ச் சொல்லி, மைய அரசு பல்வேறு சட்டங் களையும் அறிவிக்கைகளையும் கொணர்ந்திருந்தது. ஆனால் அவற்றின் நிகர விளைவுகள் நேரெதிராய் அமைந்தன.

1991இல் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை வந்தது. அதன்படி கடலோர மாநிலங்களின் கடல் ஏற்ற எல்லைக் கோட்டை (High Tide Line) வரையறை செய்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்; இதில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பெருமுதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அந்த அறிவிக்கையின் பற்கள் 26 முறை பிடுங்கப்பட்டன திருத்தங்கள் என்னும் பெயரில்.

1991இல் உருவாக்கப்பட்ட புதிய மீன்வளக் கொள்கையின் அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கை 1993இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995இல் உலக உணவு, வேளாண் கழகம் (Food & Agricultural Organisation, UNO ) பரிந்துரைத்த ‘பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகளை’ப் புறக்கணித்து ‘கூட்டு முயற்சி’ (Joint Ventures ) என்னும் பெயரில் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மீன்பிடி உரிமைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தது. ஏறத்தாழ 20 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தியாவின் முற்றுரிமைப் பொருளாதார மண்டலக் கடற்பகுதி (Exclusive Economic Zone)) அந்நிய முதலாளிகளின் ஏகபோகமானது.

1991இல் இந்திய மீனவர்கள் உரிமை கொண்டிருந்த மீன்பிடி கப்பல்களின் (2328 மீட்டர்) எண்ணிக்கை 191. பிறகு இந்த எண்ணிக்கை 46 ஆகத் தேய்ந்தது. தேசிய மீன் தொழிலாளர் பேரவையின் நீண்ட போராட்டங்களைத் தொடர்ந்து மைய அரசு ‘முராரி (விசாரணைக்) குழுவை’ நிறுவியது. இந்தியக் கடல்களில் அந்நிய முதலீட்டைத் தடைசெய்தல் உள்ளிட்ட முராரி குழுவின் 21 பரிந் துரைகளில் (1997) ஒன்றைக்கூட மைய அரசு இன்றுவரை பரிசீலிக்கவில்லை.

ஜாயின்ட் வெஞ்சர்ஸ் திட்டம் (1991) அறிமுகமாவதற்கு முன்னால் போக்குவரத்து அமைச்சகத்தின் (Surface Transport) பிரிவான கப்பல் வணிக வளர்ச்சி நிதிக்குழு, இந்திய மீனவர்கள் மீன்பிடி கப்பல்களை உரிமைகொள்ள உதவியாக இந்தியக் கப்பல் கடன் முதலீட்டு நிறுவனத்துக்கு 73 கோடி கடனுதவி வழங்கியிருந்தது. ஜாயின்ட் வெஞ்சர்ஸ் திட்டம் அறிமுகமானபோது இந்தக் கடன் திட்டமும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆழ்கடல் மீன்வளத்தை அறுவடை செய்துவந்த பல்லாயிரம் பாரம்பரிய மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு அந்நிய முதலாளிகள் அவ் வளத்தைக் கொள்ளையிட வகைசெய்யும் இரட்டைத் திட்டமாக ஜாயின்ட் வெஞ்சர்ஸ் திட்டம் அமைந்துபோனது.

(தொடரும்)

 

– வறீதையா கான்ஸ்தந்தின்

பூவுலகு, செப்டம்பர், 2014 இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments