சமீபத்தில் மத்தியில் ஆளும் மோடி தலைமை யிலான பா.ஜ. அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தது. மேலும், மத்திய அரசு இந்த நாட்டை காப்பாற்ற வேண்டு மென்றால், விவசாயமும், மக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்கு நதி நீர் இணைப்பு மட்டுமே தீர்வாகும் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. அந்த திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காகதான் ஜக்கி வாசுதேவ் நதிகளை காப்போம் என்று நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். சென்னைக்கும் வந்த அந்த பயணக்குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவையும் வரவேற்றது. மோடி அரசு அறிவித்துள்ள நதிநீர் இணைப்பு திட்டம், பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை. நதிகள் ஒன்றும் நம்முடைய அண்ணா பல்கலைக்கழகத்தில் அல்லது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் படித்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, அவை ஒன்றும் தண்ணீர் குழாய்கள் அல்ல, நாம் நினைத்தபடி திருப்பிவிட. நதிகள் வெறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்பவை மட்டுமல்ல, அவை ஒரு சூழல் மண்டலம், கலாச்சார பண்பாட்டின் அடையாளம். நதிகள் இந்த பூமிக்கு மிகப்பெரிய சூழல் சேவைகளை (eco system services) ஆற்றுகின்றன. நதிகள் சென்று கடலில் கலப்பது என்பது நதியின் உரிமை, அவை அப்படி சென்று கலப்பது நதிகளுக்காக கிடையாது, இந்த பூமியில் உயிர்கள் தழைத்து வாழவேண்டும் என்பதற்காகதான். நதிநீர் இணைப்பு திட்டம், அரசியல், பொருளாதாரம், நீரியல், சமூகவியல், வாழ்வாதாரம், சமூகம், பல்லூரியம், வனவிலங்கு, பழங்குடியினர், மானுடவியல், புவியியல், இயங்கியல், சூழலியல் என்று பார்வையில் பார்த் தாலும் தேவையற்ற, அவசியமற்ற மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் திட்டம்.
அரசியல் பார்வை:
சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதிகளின் படி (ஹெல்சின்கி விதிகள்), காவேரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமை என்பது “நீர்வழி பாதைக்குள்ள” (lower riparian rights) உரிமை, அப்படி உரிமையுள்ள காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நியாயமாக உள்ள நீரை வழங்குவதற்கு கர்நாடகம் மறுத்து வருகிறது, அதற்கு மத்திய அரசும் துணைபோகிறது. சுமார் 40 ஆண்டுகள் தமிழகம் மேற்கொண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு வழங்கிய பிறகும் “காவேரி மேலாண்மை வாரியம்“ அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. உரிமையுள்ள காவேரியை பெற்றுத்தராத மத்திய அரசுதான், தமிழகத்திற்கு உரிமையே இல்லாத கங்கை நீரை கொண்டு வந்து தரப்போகிறதா? அதுவும் உத்ராஞ்சல், உத்தர பிரதேஷ், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா என ஏழு மாநிலங்களை கடந்து கொண்டு வந்து தரப்போகிறதா? அப்படி கொண்டுவந்து தருவதற்கு அந்த அந்த மாநிலங்கள் ஒத்துக்கொள்ளுமா? இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையே இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள தண்ணீர் தாவாக்களின் எண்ணிக்கை 26. உரிமையே இல்லாத கங்கையை கொண்டுவருவதாக சொல்வதன் மூலம் மத்திய அரசு சொல்ல வருவது என்ன? தமிழ் மக்களே, “கவலைப்படாதீர்கள், உரிமையுள்ள காவேரிக்காக நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உரிமை இல்லாத கங்கையை கொண்டு வந்து நாங்கள் தருகிறோம்“ என்பதன் அர்த்தம் தான் அது. நதிகளை இணைக்க வேண்டும் என்கிற குரல் ஏன் ஒரிசாவிலோ, அல்லது மற்ற மாநிலங்களிலோ எழுவது கிடையாது, தமிழகத்தில் மட்டும் தான் அந்த குரல் ஒலிக்கும், தமிழக மக்களை வஞ் சிப்பதற்காகத்தான் அந்த குரல். யார் யார் எல்லாம் நதி நீர் இணைப்பு (கங்கை காவேரி இணைப்பு) குறித்து பேசுகிறார்களோ அவர்கள் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை தடுக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடியும்.
பொருளாதார பார்வை:
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள், 14 இமயமலை நதிகளை ஒன்றோடு ஒன்றும், தீபகற்ப நதிகளை ஒன்றோடு ஒன்றும் இணைத்து, ஒரு இடத்தில் கங்கை நதியிலிருந்து காவேரியை இணைக்க வேண்டும் என்கிற திட்டத்தை முன்வைக்கிறது. அந்த திட்டத்திற்கு இப்போது சுமார் 7 லட்சம் கோடிகளாகும் என்றும் அறிவித்துள்ளது. உண்மையில் இது சாத்தியமா? இன்றைய கணக்கிற்கு நதிநீர் இணைப்பு திட்டம் முழுவதையும் செய்துமுடிக்க சுமார் 20 லட்சம் கோடி செலவாகும், அதுவும் வருடங்கள் போகப்போக செலவுகள் இன்னமும் அதிகமாகும். திட்ட செலவுகள் அதிகரிப்பதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணம் கூடங்குளம் திட்டம் அலகுகள் 1 மற்றும் 2. கூடங்குளம் திட்டம் ஆரம்ப நிலையில் ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 13,000 கோடிகள், ஆனால் திட்டம் முடியும் போது அதன் செலவு 22,000 கோடிகள் ஆனது. நதிநீர் இணைப்பு முழுவதையும் செய்து முடிக்கும் போது மொத்த செலவுகள் 30 லட்சம் கோடியை கூட தொடலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்சொன்ன திட்ட செலவுகளை தவிர, இந்த திட்டம் அமைக்கப்படும்போது, கட்டப்படும் அணைகள், கால்வாய்கள் மற்றும் ஏனைய அடிப்படை கட்டுமானங்களை பராமரிப்பதற்கு (தூர்வாருவது,செப்பனிடுவது) வருடத்திற்கு சுமார் 2,00,000 கோடிகள் வரை தேவைப்படும். மேலும், மத்திய காவல் படை (CENTRAL RESERVE POLICE FORCE) போல் மத்திய நீர்வள பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு (சிமீஸீtக்ஷீணீறீ ஷ்ணீtமீக்ஷீ யீஷீக்ஷீநீமீ), நதிநீர் இணைப்பிற்காக கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களும், மத்திய நீர்வள பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். அப்படி செய்வதன் மூலம் மட்டுமே அந்த அந்த மாநிலங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணைகள் கட்டுவதும், தங்கள் மாநிலத்தில் புதிதாக வரும் கால்வாய்க்களில் தங்கள் இஷ்டத்திற்கு செய்வதையும் கட்டுப்படுத்த முடியும். நீர் வள பாதுகாப்பு படைக்கு ஆகும் செலவுகள் தனி. இவ்வளவு பணம் செலவழித்த பிறகும் நாடு முழுவதற்கும் தண்ணீரை கொண்டுபோய் சேர்க்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பது தான் பதிலாக வரும். 30 லட்சம் கோடி ரூபாயில் 10% சதவீதத்தை மட்டும், நீர்நிலைகளை மீட்டெடுக்க செயல்படும் செயல்பாட்டாளர்களிடம் கொடுத்தால், எத்தனை நீர்நிலைகளை செப்பனிட்டு, எவ்வளவு tனீநீ தண்ணீரை சேமித்து தருகிறார்கள் என்று பாருங்கள். இந்தியாவின் தண்ணீர் மனிதன் ராஜேந்தர் சிங் 400மிமீ மட்டுமே பெய்யும் மழையை கொண்டு சுமார் 1500 கிராமங்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கொண்டு போய்சேர்த்துள்ளார். நதி நீர் இணைப்பு திட்டம் பொருளாதாரத்தில் பேரழிவை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.
நீரியல் பார்வை:
நதிநீர் இணைப்பை செயல்படுத்த நினைக்கும் அரசுகளும், திட்டத்தை ஆதரிப்பவர்களும் முக்கியமாக சொல்வது இரண்டு காரணங்கள்.
அவை
1. ஆறுகளில் உபரியாக ஓடும் நீரை, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்துவது
2.வெள்ளம் கடுமையாக வரும்போது மற்ற பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்றால், வெள்ள சேதத்திலிருந்து பகுதிகளை காப்பாற் றலாம், தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் நீரை கொண்டுசெல்லலாம்.
முதலாவது காரணத்தை எடுத்து கொண்டு ஆராய்வோம், இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கும் எந்தவொரு நதியிலும் உபரி நீர் கிடையாது என்று மத்திய நீர்வள கமிஷன் தெரிவித்துள்ளது, குறிப்பாக நீரியல் வல்லுனர் மிஹிர் ஷா இதை அழுத்தமாக சொல்கிறார். பிரம்மபுத்ரா நதியில் மட்டும் அஸ்ஸாமிற்கு மேற் பகுதியில் கொஞ்சம் உபரி நீர் ஓடுகிறது, அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், எந்த உபரி நீரை எங்கே கொண்டு செல்வார்கள்? ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன்: சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் வெற்று முழக்கங்களுடன் நடைபெற்ற கிருஷ்ணா-கோதாவரி இணைப்பு நிகழ்வு. கிருஷ்ணா -கோதாவரி இணைப்பு திட்டத்தில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விசயம், கோதாவரியில் உள்ள உபரி நீரை கிருஷ்ணா நதியில் கொண்டு போய் சேர்த்து வளம் கூட்டுவது என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால், கோதாவரி படுகையில் தான் மிகவும் வறட்சியான “மராத்வாடா பகுதி”
வருகிறது. எனவே உபரி நீர் எந்த இடத்திலும் கிடையாது. நதிநீர் இணைப்பு நாம் நினைத்துப் பார்க்கமுடியாத மிகப்பெரிய திட்டம். இதன் கீழ் இமாலய நதிகள் பதினான்கையும் இணைக்க விருக்கிறார்கள். அது போல பதினாறு தீபகற்ப நதிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க விருக்கிறார்கள். தவிர கங்கையையும் காவிரியையும் இணைக்க திட்டமிடுகிறார்கள். இந்த மிக பிரம்மாண்டமான திட்டத்தில் இரண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசுவோம். கென்-பெட்வா நதிகள். இந்த இரண்டு நதிகளும் விந்திய மலையில் பிறந்து வடக்கு நோக்கி பாய்ந்து யமுனையுடன் கலக்கின்றன. ஒரே இடத்தில் உற்பத்தியாகும் நதிகள் என்றால் ஒரே சமயத்தில் வெள்ளமும் இருக்கும் வறட்சியும் இருக்கும். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது கடலூரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, அதற்காக அடையாற்றிலிருந்து கடிலம் ஆற்றுக்கு தண்ணீரை திசை திருப்புவது பொருத்தமானதாக இருக்குமா? நிச்சயம் கிடையாது. அதே போல தான் இரண்டு நதிகளிலும் வெள்ளம் போகும் போதும் எந்த நீரை கொண்டு போய் எந்த நதியில் விடுவது? ஷர்தா-யமுனா இணைப்பிலும் இந்த சிக்கல் இருக்கிறது. நதி நீர் இணைப்புக்கான இன்னொரு முக்கியமான வாதம், வெள்ளம் வரக்கூடிய காலகட்டத்தில் நீரை மடைமாற்றி, வெள்ளத்தின் பாதிப்புகளை குறைத்து நீர் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்து செல்வது. இந்த யோசனையை யார் சொன்னார்கள், எப்படி சொன்னார்கள் என்றே தெரியவில்லை. பிரம்மபுத்ரா நதியின் அகலம் அசாம் மாநிலத்தில் 3.5 கிலோமீட்டர், அதாவது ஒரு கரையில் இருந்து பார்த்தால் இன்னொரு கரை தெரியாது. அந்த அளவிற்கு அகலம் கொண்ட நதியால் வெள்ளத்தை தாங்கமுடியவில்லை, கறைகளை கடந்து மூன்று மடங்கு அதிகமாக போகும் தண்ணீர். அவ்வளவு அகலம் கொண்ட நதிகளை 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் அகலத்தில் கட்டப்படும் கால்வாய்களை கொண்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை உணர்ந்து கொள்ள நாம் ஜி.எஸ்.டி புள்ளியாக இருக்கவேண்டியதில்லை, கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும். இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு கிட்ட தட்ட 41,000 டி.எம்.சி கடலில் சென்று கலக்கிறது, மகாநதியில் மட்டும் 3,000 டி.எம்.சி, இவ்வளவு நீரை மடைமாற்றுவதற்கு நீங்கள் கங்கா போல், பிரம்மபுத்ரா போல் நதிகளை கட்ட வேண்டும், இவர்கள் சொல்வது வெறும் 100 மீட்டர் அகலம் கொண்ட கால்வாய்கள். சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது, கடலுக்கு போன நீரின் அளவு 320 டி.எம்.சி. யோசித்துப்பாருங்கள், 41,000 டி.எம்.சி தண்ணீரின் அளவை. நதிகளை இணைப்பதின் மூலம் அதிகபட்சமாக 10% நீர் மடைமாற்றம் செய்ய முடியும். அதாவது 4,000 டி.எம்.சி நீரை மடைமாற்றம் செய்ய முடியும், அதுவும் வெள்ளம் வரக்கூடிய நாட்கள் என்றால் அதிகபட்சமாக 1000 டி.எம்.சி நீரை மட்டுமே மடைமாற்றம் செய்ய முடியும். சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருந்தால் நீங்கள் 80முதல் 100 டி.எம்.சி நீரை சேமித்து வைக்கமுடியும். இப்போது யோசித்துப்பாருங்கள் இந்தியா முழுமைக்கும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி, செப்பனிட்டு வைத்தால் எத்தனை ஆயிரம் டி.எம்.சி நீரை நீங்கள் சேமிக்க முடியுமென்று ?
இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழலாம், இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரி நீர் இல்லை என்று சொல்லிவிட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 40,000 டி.எம்.சி தண்ணீர் கடலில் சென்று கலப்பதாக சொல்லப்பட்டுள்ளது எப்படி சாத்தியம், அப்படி என்றால் உபரி நீர் இருப்பதாக தானே கொள்ள முடியும் என்கிற நியாமான கேள்வி எழும். உபரி நீர் இல்லை என்று மேலேகுறிப்பிட்டது, சாதாரண நாட்களில், எல்லா நதிகளிலும் இருந்து 40,000 டி.எம்.சி தண்ணீர் கடலில் சென்று
கலப்பதாக சொன்னது வெள்ள காலங்களில், எனவே உபரி நீர் கிடையாது, வெள்ள நீர் வேறு விசயம். வெள்ளம் நல்லது: கரை நல்லது என்று ஒரு விளம்பரத்தில் வரும், அது போல் வெள்ளம் நல்லது. வெள்ளம் வரும் போது அதிகப்படியாக வண்டல் மண்ணை எடுத்துவரும், அப்படி உருவானவை தான் டெல்டா மற்றும் நீர்ப் பிடிப்பு பகுதிகள். இயற்கையான வெள்ளம், டெல்டாவிலும் பிற பகுதிகளிலும் நன்னீரை மீள்நிரப்பு செய்து நிலத்தடி நீரை வளமாக வைத்திருக்க உதவும். திடீரென வெள்ளம் இல்லாவிட்டால், மெதுவாக கடல்நீர் நிலத்தினுள் உட்புகுந்து நிலம் உலர்ந்து பாலைவனமாக மாறும். வெள்ளத்தால் கடைமடை பகுதியில் வந்து விழும் வண்டல் மண், கடல் அரிப்பை தடுத்து நிறுத்தும். வங்காள விரிகுடா படுகை பகுதியில் அதிகமாக நன்னீர் இருப்பது நல்லது, அதனால் தான் நீரில் உப்பின் அளவு குறைந்து, நீர் ஆவியாகி மேகமாகி நமக்கு கோடை மழையை கொண்டு வருகிறது. இதில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் நமக்கு கிடைக்கும் பருவ மழையில் மாற்றம் வரும். வெள்ளம் நல்லது என்றால் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்படுவது சரியான விசயமாக இருக்க முடியும் என்கிற கேள்வி இங்கே எழும். ஒவ்வொரு நதிக்கும் வெள்ள நீர் வடிகால்கள் அல்லது வெள்ள சமவெளிகள் (flood plains) என்று இருக்கும், அதாவது நதியின் அகலத்தை பொறுத்து அந்த சமவெளி பகுதிகளை நிர்ணயித்திருப்பார்கள். மேலை நாடுகளில் இன்னும் ஒருபடி மேலே சென்று கடந்த 100 ஆண்டுகளில் ஒரு ஆற்றில் எந்த அளவிற்கு வெள்ளம் சென்றுள்ளதோ அதை “flood plains” என்று அறிவித்துவிடுவார்கள். அப்படி அறிவிக்கப்பட்டால் என்ன அர்த்தம் என்றால், நதியின் அந்த வெள்ள நீர் வடிகால்களில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. அந்த அளவையும் மீறி சில ஆண்டுகள் வெள்ளம் வரும், அந்த வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து மக்களையும் கால்நடைகளையும் வெளியேற்றி காப்பாற்றும். ஆனால் நடப்பது என்ன? சென்னையில் உள்ள மியாட் மருத்துவ மனையின் காம்பௌண்ட் சுவர் அடையாறு ஆற்றின் வெள்ள நீர் வடிகாலில் கட்டப்பட்டதால் தான் சுவர் இடிந்து நீர் உட்புகுந்து 13 நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டது. அமைந்தகரையில் உள்ள கூவம் ஆற்றின் வெள்ளநீர் வடிகாலில் “அம்பா ஸ்கை வாக்“ கட்டப்பட்டதால்தான் அதன் தாழ்வு பகுதிகள் நீரில் மூழ்கின. அடையாறு ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து விமான நிலையத்தின் இரண்டாவது ஓடு பாதை அமைக்கப்பட்டதால் தான் முடிச்சூர் மூழ்கிப்போனது. இப்படி எல்லா தவறுகளையும் நாம் செய்துவிட்டு, வெள்ளத்தின் மீது பழி போடுவது எப்படி சாரியாக இருக்கும் ? அதிக அளவில் அணைகள் கட்டி, அவற்றில் நீரை அதிகமாக தேக்கினால், நீரின் அழுத்தம் நிலப்பிளவுக்குள் அழுத்தத்தை தந்து, நிலநடுக்கம் வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நிலநடுக்கத்தை அணைகள் தூண்டுகின்றன என்பதை நிறுவ பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன, இதுவரை உலகம் முழுவதும் ஏற்பட்ட 100 நிலநடுக்கங்களுக்கு அணைகளே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக 2008ஆம் ஆண்டு மே மாதம் சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 80,000 மக்கள் உயிழந்தனர். ரிக்டர் அளவுகோலில்7.9 பதிவாகிய அந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிபிங்க்பூ அணை தான் என விஞ்ஞானிகள் தெவித்துள்ளனர்.
அணைகளுக்கான உலகளாவிய அமைப்பின் (world commission on dams) முன்னால், முக்கியமான ஒரு ஆய்வு அறிக்கையை முனைவர். வி.பி. ஜவஹரி தாக்கல் செய்தார். இப்படி அணை களால் தூண்டப்படும் நிலநடுக்க நிகழ்வுகளை“Reservoir-Induced Seismicity (RIS)” என்றே குறிப்பிடுகிறார். எவ்வாறு அணைகள் நில நடுக்கத்தை தூண்டுகின்றன என்பதற்கு “The most widely accepted explanation of how dams cause earthquakes is related to the extra water pressure created in the micro-cracks and fissures in the ground under and near a reservoir. When the pressure of the water in the rocks increases, it acts to lubricate faults which are already under tectonic strain, but are prevented from slipping by the friction of the rock surfaces.” என்று சொல்கிறார்.
மேற்குறிப்பிட்ட ஆய்வுகளில் இருந்து நமக்குத் தெளிவாக தெரியவருவது, செயற்கை அணைகள் நில நடுக்கங்களைத் தூண்டுகின்றன என்பது. நதிநீர் இணைப்பு திட்டத்தில் 36 பெரிய அணைகள் கட்டப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், மழை பொழிவின் தன்மைகள் அதிகமாக மாறி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பருவமழை குறித்து வெளிவந்த முக்கியமான ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றத்தால் இந்த சமயத்தில் அதிகமாக மழை பெய்கின்ற இடங்களில் மழையின் அளவு குறையும் என்றும் அடர் மழை பெய்யாத இடங்களில் அப்படி பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் நதிநீர் இணைப்பின் மூலம் உருவாக்கப்படும் கால்வாய்களால் எந்த பலனும் இருக்காது. இமய மலையில் உள்ள பனி பாறைகளும் வேகமாக உருகி வருகின்றன. இந்த திட்டங்கள் முழுவதும் முடிவடையும் சமயத்தில் கிட்டத்தட்ட 75% பனி பாறைகள் உருகியிருக்கும், கங்கையில் நீர் என்பதே இல்லாமல் போயிருக்கலாம், அப்போது பள்ளத்தில் இருந்து மேட்டு பகுதிக்கு நீரை கொண்டு போக முடியுமா?
ஏற்கனவே தக் ஷின பீட பூமி (deccan plateau) பல இடங்களில் கங்கை சமவெளிப்பகுதியை விட உயரத்தில் உள்ளது, நீரை பள்ளத்திலிருந்து மேட்டு பகுதிக்கு கொண்டு அதிக அளவில் நீரேற்றம் செய்ய வேண்டி இருக்கும், அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும்.. நீரியல் பார்வையில் கூட நதி நீர் இணைப்பு சாத்தியமான திட்டம்தானா என்கிற கேள்வி இப்போது இயல்பாகவே எழும். பதில், நீரியல் பார்வையில் மட்டுமல்ல எல்லா பார்வைகளிலும் அழிவுகளின் தோற்றுவாயாகவே அந்த திட்டம் நிச்சயம் இருக்கும்.
நதி நீர் இணைப்பு திட்டம்
பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்