விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.
விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் Plaster of Paris (PoP)-ஆல் செய்ய ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும். PoP மற்றும் இரசாயன வண்ணப்பூச்சுகளைக் கொண்ட சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
PoP-ஆல் செய்யப்படும் சிலைகளில் ஜிப்சம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். சிலைகளுக்கு பூசப்படும் ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் மற்றும் கார்பன் உள்ளிட்ட வேதிப்பொருட்களும் கல உலோகங்களும் கலந்திருக்கும். இவற்றை இயற்கையான நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைகின்றன.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட பல உச்ச நீதிமன்ற. உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 12.05.2020 அன்று விநாயகர் சிலைகலை உற்பத்தி செய்வது, வழிபாட்டிற்கு நிறுவுவது, நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக விரிவான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த மனு மீது 24.01.2024 அன்று விரிவான உத்தரவு ஒன்றைப் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்திருந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் செயலாளர் தலைமையில், பொதுத்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையாளர், மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அனுமதிக்கப்பட்ட (Notified) நீர்நிலைகளில் சூழலுக்குகந்த மட்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளைக் கரைப்பவர்களிடன் சிலைகளின் உயரத்தைப் பொறுத்துக் கட்டணம் நிர்ணயிக்கும்படியும், அறிவிக்கப்படாத (Unnotified) நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பவர்களுக்கு சட்டப்படி விதிக்கப்படும் அபராதம் குறித்து விநாயகர் சதுர்த்திக்கு 2, 3 மாதங்களுக்கு முன்பே விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் இக்குழுவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 8 மாதங்களாக இந்த உத்தரவின் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில்,” It is submitted that, with respect to some of the other directions especially determining the fee for immersion of idols and penalties for violations, the enforcement of the same requires a statutory process as it involves the public right of religion and public sentiments. Therefore, it is submitted that given the sensitive nature of the issue involving the right to religion of the public at large, while strictly continuing to ensure monitoring of pollution norms, several other aspects are being continued to be implemented with an approach of cooperation from the public and no tolerance for pollution”. எனக் கூறியுள்ளது.
அதாவது” சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பது வழிபாட்டு உரிமை மற்றும் பொதுமக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், பெரும்பான்மையான மக்களின் வழிபாட்டு உரிமையுடன் தொடர்புடையதால் இவ்விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி மாசுபாடு கண்காணிப்பை பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிரப்படுத்தி வருவதாகவும்” கூறியுள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயம் செய்ய சட்டமியற்ற வேண்டும் எனவும் இப்போதைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறியுள்ளது. சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள், வண்ணப்பூச்சுகளால் விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யத் தடை இருக்கும் நிலையிலும் அவை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இச்சூழலில், வழிபாட்டு உரிமையும், பொதுமக்களின் உணர்வும் பாதிக்கும் என்பதால் கட்டணம் வசூலிக்காமல் விடுவது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். சிலைகளைக் கரைப்பதற்காக கட்டணம் வசூலிப்பது என்பது வழிபாட்டு உரிமை சம்மந்தப்பட்டது கிடையாது. அது “மாசுபடுத்துவோரே அதற்கான இழப்பீட்டைக்(Polluters Pay Principle)” கொடுப்பது ஆகும். இதைப் பசுமைத் தீர்ப்பாயமே தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளபடி கடவுளை வழிபடும் நடவடிக்கைகளைத் தடுத்தால்தான் அது வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்டது. ஆனால், சூழலை மாசுபடுத்தும் வகையில் பிள்ளையார் மட்டுமல்ல எந்த கடவுளைக் கரைப்பதும் “மாசுபாடு” சம்மந்தப்பட்டது மட்டுமே ஆகும். வருவாய் நிர்வாக ஆணையரகமும், மாசு கட்டுப்பாடு வாரியங்களுமே தங்களிடம் இருக்கும் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கானத் தொகையை நிர்ணயம் செய்யவேண்டும்.
மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீர்நிலைகளுக்கு ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்ப்பது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறுப்பு மட்டுமில்லை. நகராட்சி நிர்வாகத்துறை, வருவாய் நிர்வாகத்துறை, பொதுத்துறை ஆகிய துறைகளுக்கும் இம்மாசுபாடைக் கட்டுப்படுத்துவதில் பொறுப்புகள் உள்ளன என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்திற்கு உரிய கவனம் செலுத்தி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல், பாரம்பரிய வழிகளில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
Status report PCB 2024
.