இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது.

பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

காற்று மாசு இந்தியர்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கிறது என்ற ஆய்வறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் காற்றின் தரத்தினை நிகழ் நேரத்தில் கணிக்கவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பதற்காகவும் இந்தியாவின் முதல் “ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த நிதிநிலை அறிக்கையின்போதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

G.O_ NO. 115_27-Nov-2021 6.06 pm (1)

காற்று மாசை கண்காணிப்பதோடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை கண்காணிக்கவும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் (hazardous waste), மருத்துவ கழிவுகள் (bio medical waste) மற்றும் மீன் கழிவுகள் (e-waste) ஆகியவை முறையாக கையாளப்படுகிறதா என்பதனையும் இந்த  ஒருங்கிணைந்த மையம் கண்காணிக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 17 மாவட்டங்களில் தலா ஒரு தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. பெருகி வரும் தொழிற்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் காற்று மாசுபாடு அதிகரிப்பது மனித சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. அப்படியான சூழலில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும். தமிழ்நாடு அரசின் இந்த உயிர் காக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ் தூத்துக்குடி திருச்சி போன்ற நகரங்களில் இணைக்கப்பட்டிருந்தாலும்,சென்னை, கடலூர், மேட்டூர் போன்ற காற்று மாசடைந்து தமிழ்நாட்டின்  நகரங்கள் தூய்மை காற்று திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களுக்கு தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு மையங்கள் அமைப்பதன் மூலமாக காற்றின் தரத்தை கண்காணிக்கவும், காற்றின் தரம் மோசமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பெரிதும் உதவும்.

இது மட்டுமின்றி ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நடத்திவரும் இணையவழி சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கண்காணிப்பு அமைப்பான OCMMS- Online Consent Management and Monitoring System, இணையவழி புகார் மற்றும் குறைதீர்ப்பு மையம், இணைய வழி சட்ட முன்னெடுப்பு தகவல் பரிமாற்ற மையம் ஆகியவையும்  இந்த ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மையத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மக்களின் உயிர் காக்கும் முயற்சியாக அமைந்த ஒரு அறிவிப்பை சாத்தியமாக்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– பிரபாகரன் வீர அரசு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments