கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கமும் சுற்றுச்சூழல் அபாயங்களும்

Image: CCVL

கடலூர் மாவட்டம் சிப்காட் வளாகத்திற்குள் ஏற்கெனவே அமைந்துள்ள கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கும் அதே நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் கடற்பகுதியில் அமைந்துள்ள கடல் முனைய வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 20 MLD கடல் நீரிலிருந்து உப்பு நீக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்குமான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 19.12.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, இங்குப் பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களை கையாளக்கூடிய பெரிய சிவப்பு வகை நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பூச்சிக்கொல்லி, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து, ரசாயனம் மற்றும் PVC தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

கடலூர் சிப்காட்க்கு அருகாமைப் பகுதிகளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாமானிய ஏழை எளிய மக்கள் இத்தொழிற்சாலைகளின் ஏற்படும் தொடர் காற்று, நீர் மாசுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனினும் இத்தொழிற்சாலைகளில் விதி மீறல்களும், விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன.

மத்திய மாசுபாட்டு வாரியத்தினால் கணக்கிடப்படக்கூடிய CEPI Score (Comprehensive Environmental Pollution Index) எனும் மாசுபாட்டிற்கான மதிப்பெண் அடிப்படையில் கடந்த இரண்டு முறையும் கடலூர் சிப்காட் பகுதி மிகவும் மோசமான (Critically Polluted Area) மற்றும் மோசமான மாசுபாடு (Severely Polluted Area) உள்ள பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிம சேர்மங்கள்(VOLATILE ORGANIC COMPOUNDS- VOC)  குறித்து ஓராண்டு காலம் ஆய்வு செய்து அதன் தாக்கம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வெளியிட்டிருந்த அறிக்கையில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் வாழக்கூடியவர்களுக்கு 2000 மடங்குப் புற்றுநோய் தாக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளதாகத் தெரிவித்திருந்தது. 

இச்சூழலில் கடலூரில் ஏற்கனவே காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்குக் காரணமான Chemplast Cuddalore Vinyls Limited (CCVL) நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மிகவும் அபாயகரமான ரசாயன மூலப் பொருளான VCM (Vinyl Chloride Monomer) கொண்டு PVC ரெசின் உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், தனது PVC உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 6 லட்சம் டன்னிலிருந்து 12 லட்சம் டன்னாக உயர்த்த உள்ளது. இதற்காக 12 லட்சம் டன் VCM (Vinyl Chloride Monomer) ரசாயனத்தை கடலின் இருந்து கொண்டு வரவும்,  7 லட்சத்தி 50 ஆயிரம் டன் VCM ரசயனத்தை தொழிற்சாலையிலே உற்பத்தி செய்வதற்கும் அதற்கான கட்டுமானங்களை உருவாக்கவும் விண்ணப்பித்துள்ளது. மேலும் இதற்குத் தேவையான நீரை கடலிலிருந்து எடுத்துப் பயன்படுத்துவதற்காக நாள் ஒன்றிற்கு 2 கோடி லிட்டர் நீரை (20MLD) கடலிலிருந்து எடுத்துச் சுத்திகரிக்கும் அளவிற்குப் பிரம்மாண்ட கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைக்கவுள்ளது.

CHEMPLAST தொழிற்சாலை விரிவாக்கத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள்:

VCM ரசாயனத்தால் அபாயம்:

VCM என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த, எரியக்கூடிய வேதிப்பொருள் மற்றும் இது மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது. VCM ரசாயனத்திற்கு மனித உடல் வெளிப்படுவதால் எலும்புகள் மென்மையாதல், விரல்கள் சிதைதல், தோல் சிக்கல்கள், ஆண்மைக்குறைவு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் மூச்சுத் திணறல், கல்லீரல் பாதிப்பு மற்றும் ஆஞ்சியோசார்கோமா எனப்படும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படக்கூடும். இவ்வேதிப்பொருள் மிகவும் ஆபத்தானது என்பதால் பொதுவாகச் சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுவதில்லை. கெம்பிளாஸ்ட் நிறுவனம் ஆண்டிற்கு 12 லட்சம் டன் VCM-ஐ கப்பல்கள்மூலம் இறக்குமதி செய்து, கடலுக்குள் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தனது கடல் முனையம் வழியாகச் சுமார் 3.5 கிலோ மீட்டர் பைப் அமைத்துத் தனது தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறது. VCM அதிக ஆவியாகும் தன்மை மற்றும் மிகக் குறைந்த பற்றவைப்பு வெப்பநிலை காரணமாக, அதன் சிறிய கசிவுகூட வெடிப்புக்கு வழிவகுக்கும். இக்கொடிய வேதிப்பொருளைக் கொண்டு செல்லும் குழாய் சித்திரப்பேட்டை, ராசாப்பேட்டை, தம்மனாம்பேட்டை, சொத்திக்குப்பம், நடுத்திட்டு மற்றும் நொச்சிக்காடு கிராமங்கள் வழியாகச் செம்மான்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைக்குச் செல்கிறது. கடல் கட்டமைப்பு, குழாய் மற்றும் சேகரிப்பு தொட்டிகள் என எதில் கசிவு ஏற்பட்டாலும் இக்கிராமத்தைழ் சேர்ந்த மக்கள் உடனடியாகப் பாதிக்கப்படுவார்கள்.  

 

 

மிகவும் வெடிக்கக்கூடிய எரிபொருளான, அம்மோனியம் பெர்குளோரேட் அதிக அளவில் தயாரிக்கும் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை கெம்பிளாஸ்ட் தொழிற்சாலைக்கு அடுத்தப்படியாக அமைந்துள்ளது. VCM என்பதும் மிகவும் ஆவியாகக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருள். பாண்டியன் கெமிக்கல்ஸ் அல்லது கெம்பிளாஸ்ட் இரண்டு தொழிற்சாலைகளில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டாலும் கூட அது மற்றொன்றில் வெடிப்புகளைத் தூண்டி பத்து கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள கிராமங்களில் பேரழிவை உண்டாக்கக்கூடும். பெரியளவிலான VCM தீவிபத்தைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

இந்நிலையில் ஆண்டிற்கு 12 லட்சம் டன் VCM ஐ கடலிலிருந்து மக்கள் வசிப்பிடம் வழியாகப் பைப் மூலம் தொழிற்சாலைக்குக் கொண்டு வருவதும், அதே போல் 1.83 லட்சம் டன் Ethylene  &  6.33 லட்சம் டன்  Ethylene Dichloride ஆகிய மூலக்கூறுகளைப் பைப் மூலம் கொண்டு வந்து தொழிற்சாலையிலேயே  7.5 லட்சம் டன் VCM உற்பத்தி செய்ய அனுமதி வேண்டும் எனக் கெம்பிளாஸ்ட் நிறுவனம் கோரியிருப்பது அப்பகுதி மக்களிடம் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கெம்பிளாஸ்ட் சார்பில் சமர்பிக்கப்பட்டிருக்கும் EIA அறிக்கையிலேயே  VCM சேகரிப்பிலும், Ethylene கையாளுவதிலும் அதிக விபத்து அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

காற்று மாசு :

ஏற்கனவே செயல்பட்டு வரும் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் மொத்தம் 11 புகைபோக்கிகள் உள்ளன, தற்போது விரிவாக்கத்தின் பொது மேலும் புதிதாக 25 புகை போக்கிகள் நிறுவப்படும். ஜெனரேட்டர் செட்கள், பாய்லர்கள், எரிவுலைகள்,  எரியூட்டிகள், நிலக்கரி சேகரிப்பு நிலையம், நிலக்கரி ஏற்றும் கன்வேயர், பி.வி.சி. பேக்கிங் பிரிவு, VCM, EDC, Ethylene சேமிப்பு தொட்டிகளுக்கான அவசரகால வென்ட் எனத் தொழிற்சாலையின் பல செயல்முறை அலகுகளின் 35 புகைபோக்கியிலிருந்து நுண்துகள் PM 2.5, PM 10, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு,  கார்பன் மொனாக்சைடு, ஹைட்ரஜன் க்ளோரைடு, ஹைட்ரோகார்பன்கள்,  எத்திலீன் மற்றும் VCM போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறும்.

ஆலை விரிவாக்கதிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள EIA அறிக்கையில் காற்று மாசுபாட்டு தர நிர்ணய அளவுகளுக்கு உட்பட்டுதான் காற்று மாசு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் கடலூரில் இயங்கிவரும் சிவப்பு நிற நிறுவனங்கள் தொடர்ந்து காற்று மாசு விதிமீறல்களில் ஈடுபடுவது ஊர் அறிந்த ஒரு விஷயம். அப்படி மாசு கட்டுப்பாடு வாரியத்தல் நிர்ணயிக்கப்பட்ட காற்று மாசு அளவுகளுக்கு உட்பட்டே கெம்பிளாஸ்ட் ஆலை நச்சு வாயுக்களை வெளியிடுகிறது என்றுகூட வைத்துக்கொள்வோம். கடலூர் சிப்காட்டில் இயங்கும் எல்லாத் தொழிற்சாலைகளின் அத்தனை புகைபோக்கிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் வெளியேறும் நச்சுப் புகையின் Cumulative impact அப்பகுதி மக்களின் உடல்நிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். ஏற்கனவே காற்று மாசால் மோசமாகப் பாதிக்கபட்டு வரும் கடலூர் சிப்காட் பகுதியில் மேலும் புதிதாக 25 புகைபோக்கி கொண்டு நச்சுப் புகையினை வெளியேற்றுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.    

கடல் வள பாதிப்பு :

கெம்ப்ளாஸ்ட் தனது மூலப்பொருட்களைக் கடல் வழியே இறக்குமதி செய்ய 14 ஹெக்டர் பரபளவில் கடல் கட்டமைப்புகளைக் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டார் தொலைவில் கட்டத் திட்டமிட்டுள்ளது. இக்கடல் முனையத்திலிருந்து பைப் மூலம் ETHYLENE, ETHYLENE DICHLORIDE, VCM போன்ற ஆபத்தான பொருட்கள் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தொழிற்சாலை செயல்பாடுகளுக்குத் தேவையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய நாள் ஒன்றிற்கு 2 கோடி லிட்டர் (20 MLD) தண்ணீரை சுத்திகரிக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் கெம்பிளாஸ்ட் அமைக்கிறது, இதனால் அப்பகுதி கடல் வளம் அழியும் அபாயம் உள்ளது. இச்சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் நீரைவிட மூன்று மடங்கு அதிக நீர் கழிவாக மீண்டும் கடலில் வெளியேறும்.  இக்கழிவுநீர் கடல் நீரை விட அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதனால் இது அக்கடல் பகுதியின் உயிர்ப்பன்மயத்தை பாதிக்கும். இதனால் கடலூரில்  உள்ள 43 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 46,000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  

பிற சுற்றுச்சூழல் தாக்கங்கள்: 

இத்திட்ட அமைவிடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதியில் 45.48% (17332.8 ஹெக்டர்)  விவசாய நிலங்களாகவும்,  40.82% (15557.5 ஹெக்டர்) நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களாகவும் உள்ளன அப்பகுதியில் உள்ள 60% மக்கள் விவசயாத்தைப் பிரதானமாக நம்பி உள்ளனர். இச்சூழலில் கெம்பிளாஸ்ட் நச்சு ஆலை விரிவாக்கதினால் அப்பகுதி சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

திட்ட அமைவிடத்திற்கு மிக அருகாமையில் வெறும் 72 மீ தொலைவில் உப்பனாறு இருக்கிறது. இதுமட்டும் இல்லாமல்  கடல்மூலம் கொண்டு வரப்படும் ETHYLENE, ETHYLENE DICHLORIDE, VCM போன்ற ஆபத்தான மூலப் பொருட்களைக் கொண்டுச் செல்லும் குழாய் உப்பனாறு வழியாகச் செல்கிறது. இதற்காக உப்பனாறுக்கு குறுக்கே 384மீட்டருக்கு ஒரு பாலம் அமைத்து அதன் மீது இக்குழாய் கொண்டுசெல்லப்படும் என EIA அறிக்கையில் தெரிவிக்கபட்டிருக்கிறது. உப்பனாறு ஆற்றுப்படுகை ஏற்கனவே அதிக வெள்ள அபாயம் மிக்கதாக அண்ணா பல்கலைக்கழக கிளைமேட் ஸ்டுடியோ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வெள்ள அபாயமுள்ள உப்பனாற்றின் குறுக்கே அபாயகரமான ரசாயனப் பொருட்களைக் குழாய்மூலம் கொண்டு செல்வதை அனுமதிக்கக் கூடாது. சிப்காட் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வாழ்வாதாரமாக இந்த உப்பனாறு திகழ்கிறது. இத்தொழில் திட்டத்தால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. புயல்கள், அதிதீவிர மழை, கடலரிப்பு போன்ற காலநிலை பேரிடர்களால் அதிகம் பாதிப்படையும் பகுதியாகக் கடலூர் இருக்கிறது. இது போன்ற பேரிடர் காலங்களில் VCM & Ethylene கொண்டு செல்லும் குழாய்களையும்,   சேகரிப்புத் தொட்டிகளையும் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பது கடினம் என்பதால் இத்திட்டத்தை கடலூரில் அனுமதிக்கக் கூடாது. 

சட்டத்திற்குப் புறம்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்.

19.12.2025 அன்று முதலில் காலை 11 மணிக்கு நடக்கவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமானது சிப்காட் வளாகத்திற்குள் ஏற்கெனவே அமைந்துள்ள கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கானது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance- EC)  மட்டும் அவசியம். அடுத்ததாக அதே இடத்தில் காலை 11.30 மணிக்கு நடக்கவிருப்பது, அதே நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் கடற்பகுதியில் அமைந்துள்ள கடல் முனைய வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 20 MLD கடல் நீரிலிருந்து உப்பு நீக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம். இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance – EC) மற்றும் கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி (Coastal Regulatory Zone- CRZ) ஆகிய இரண்டுமே அவசியம். 

இவ்வாறு கடற்பகுதி மற்றும் நிலப்பகுதி ஆகியவற்றில் அமைக்கப்படவுள்ள இரண்டு வெவ்வேறான திட்டங்களுக்கு ஒரே நாளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது முறையற்றதாகும். அதிலும் குறிப்பாக முதல் திட்டத்திற்கான கால அவகாசமானது 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கெனவே சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைகளால் அப்பகுதி மக்கள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளைச் சந்தித்து நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கியிருப்பது ஏற்புடையதல்ல.

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 (Environmental Impact Assesment Notification 2006 – EIA) மிகத் தெளிவாக ஒரு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியவுடன் திட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதி, அத்திட்டம் குறித்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வின் சுருக்கத்தையும் (EIA Summary) விரிவாக மக்கள் முன்பு எடுத்துரைக்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்குக் கூடுதல் தகவல்களையோ விளக்கங்களையோ கேட்க வாய்ப்பளிக்க வேண்டும். அனைவரும் முழுமையாகத் தங்கள் கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்பட வேண்டும். இதற்குக் கால அவகாசம் கிடையாது ஒரு நாளுக்குள் முடியவில்லை என்றால் அதற்கு மேற்பட்ட நாட்கள் கூடக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தலாம். அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர் அவற்றைத் தொகுத்து மக்கள் முன்பு வாசித்துக் காண்பிக்க வேண்டும்.

11 மணிக்கு ஒரு திட்டத்திற்கான கூட்டத்தையும் 11.30க்கு மற்றொரு திட்டத்திற்கான கூட்டத்தையும் நடத்தினால் எப்படி சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 கூறும் நடைமுறைகளின் அடிப்படையில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த முடியும்? ஒரே நாளில் இரண்டு திட்டங்களுக்கான கூட்டங்களை நடத்துவது மக்களைச் சனநாயகமான நடைமுறையிலிருந்து ஒதுக்குவதுக்குச் சமமானதாகும். இது திட்டம்குறித்த அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத சூழலை உருவாக்கும்.

ஆகவே, டிசம்பர் 19ஆம் தேதி சட்டத்திற்குப் புறம்பாக நடக்கவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

  • பிரபாகரன் வீரஅரசு
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted