சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு.
தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்ப்பட்ட உத்தரவை திரும்பப் பெற பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு மற்றும் இசைவாணை புதுப்பித்தலின் (Renewal of Consent) கால அவகாசத்தை அதிகரித்து உள்ளது. இதன்படி சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளாகவும் கால அவகாசத்தை அதிகரிக்குமாறு (மொத்த கட்டணத்தை கட்டும் பட்சத்தில்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இது சிறு, குறு வணிகங்கள் எளிதாக அமைவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்குமான முன்னெடுப்பு என்று அரசு கூறியுள்ளது.

TNPCP ORDER

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளின்படி, தொழிற்சாலைகள் மாசு குறியீட்டின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு. பச்சை, வெள்ளை என்று 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கான இசைவாணை – Consent to Establish (CTE) எனப்படும். தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை – Consent to Operate (CTO) எனப்படும், இது சிவப்பு தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளும் செல்லுபடியாகும். அதன் பிறகு இந்த இசைவாணை புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படி புதுப்பிக்கப்படும் இசைவாணை – Renewal of Consent (RCO) என்று வழங்கப்படுகிறது.

இந்த புதுப்பித்தல் காலமானது சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒருமுறையும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு, கழிவுநீர் சுத்தகரிப்பு மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு நெறிமுறைகளை வாரியத்திற்கு திருப்தி தரும் வகையில் செயல்படுத்தும் காலம் வரை ஆண்டுக்கு ஒருமுறையும், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பச்சை வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், அதே நேரத்தில் மொத்த கட்டணத்தையும் கட்டும் பட்சத்தில், சிவப்பு/ஆரஞ்சு/பச்சை தொழிற்சாலைகள் 5/10/14 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத் தேவையில்லை எனவும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய நெறிமுறைகள் கூறுகின்றன. ஆனால், நடைமுறையில் சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு ஓராண்டும், ஆரஞ்சு, வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கு இரண்டு ஆண்டுகளும் இசைவாணை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வகை தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பித்தலிலும் கால அவகாசம் முறையே 5/10/14 ஆண்டுகள் வழங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை சார்பில் வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேற்படி கால அவகாசத்தை நீட்டியிருப்பது நிச்சயமாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிக்கவே செய்யும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொழிற்சாலைகளின் அலட்சியப் போக்கு அதிகரிக்கும்.

குறிப்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பெரிய அளவிலான சிவப்பு வகை தொழிற்சாலைகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வும், மாதத்திற்கு ஒருமுறை மாதிரிகளையும் சேமிக்கிறது. அதிக மாசுக்களை வெளியிடும் “17 category” தொழிற்சாலைகளான அனல்மின் நிலையங்கள், பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திரிப்பு, உரம், பூச்சிக்கொல்லி, தோல், சிமெண்ட் தொழிற்சாலைகளில் மாதம் ஒரு முறை ஆய்வையும், மாதிரிகள் சேமிப்பையும் மேற்கொள்கிறது. இந்த ஆய்வுகளில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அப்படி மாசு ஏற்படுத்தும் குறிப்பிட்ட நிறுவனம் இசைவாணையின் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வாரியத்தை அணுகும்போது மேற்கண்ட விதிமீறல்களை சரி செய்தால் மட்டுமே இசைவாணையை நீட்டிக்க முடியும் என்கிற ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியும்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது தனது இசைவாணையை புதுப்பிக்கக்கோரி 2018ஆம் ஆண்டு வாரியத்தை அணுகியபோதுதான் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டி இசைவாணை வழங்க மறுப்பு தெரிவித்தது மாசுக் கட்டுப்பாடு வாரியம். ஒரு வேளை இப்படியாக விதிகளை மீறி மாசு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் மறுசீரமைப்பு செய்ய முடியாத அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

வாரியத்தின் பொறியாளர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் ஆலைகள் விதிமீறுவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என அரசோ, வாரியமோ இந்த உத்தரவை நியாயப்படுத்தலாம். ஆனால், இந்த வாதம் சரியில்லை என்பதற்கு வாழும் உதாரணமாக வடசென்னை அனல்மின் நிலையம் பக்கிங்காம் கால்வாயிலும், எண்ணூர் கழுவேலியிலும் சாம்பல் கழிவுகளை கொட்டி ஏற்படுத்தி வரும் பேரழிவுகள் உள்ளது. எத்தனையோ நீதிமன்ற உத்தரவுகள், பசுமைத் தீர்ப்பாய தீர்ப்புகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய எச்சரிக்கைகளைத் தாண்டியும் வடசென்னை அனல்மின் நிலையத்தால் இன்னமும் கூட சாம்பல் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருகின்றன. இசைவாணை புதுப்பித்தல் காலம் வரும்போது மட்டுமே இந்த சட்ட விதிமீறல்களை சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பு வாரியத்திற்கு கிடைக்கும். ஐந்து, பத்து மற்றும் பதினான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் நிச்சயமாக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுகளால் மட்டும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்க முடியாது.

கடந்தாண்டு வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வெளியானபோது திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தன. அந்த வரைவு அறிவிக்கையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நடைமுறைகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் பல்வேறு திருத்தங்கள் இடம் பெற்றிருந்தது. அதற்கு ஒத்ததொரு உத்தரவாகதான் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இந்த உத்தரவை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

’எளிதாக தொழில் செய்தல்’ என்பதை ஊக்குவித்தால் மட்டுமே புதிய தொழில் முதலீடுகளை மாநிலத்தில் ஈர்க்க முடியும். புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், எளிதாக தொழில் செய்தல் என்கிற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் துளியளவு சமரசத்தையும் அரசு செய்யக் கூடாது என்பது பூவுலகின் நண்பர்களின் கருத்தாகும். தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஏற்கெனவே பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

மேலும் ஊழலும், லஞ்சமும் மலிந்ததொரு துறையாகவும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையும் அப்போது கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த பொருட்களுமே ஆகும். இப்படி ஒரு நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமரசம் செய்து கொள்ளும் வகையிலான இந்த உத்தரவை திரும்பப் பெற்று இசைவாணை வழங்குதல் மற்றும் புதுப்பித்தலில் பழைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என தமிழ் நாடு அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments