மேற்குத் தொடர்ச்சி மலையை அச்சுறுத்தும் சுரங்க நெடுங்சாலைத் திட்டம்

மலை

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் எடமன் வரையில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தின் புளியரையில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து இரு வழிகளிலும் 11மீ உயரம் கொண்ட சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டு எல்லைக்குள் தேவைப்படும் 3.60 எக்டர் காப்புக்காட்டிற்கான அனுமதிகோரி தமிழ் நாடு வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

இச்சாலையின் முதல் கட்டத்தில்  6.5 கி.மீ. தூரத்திற்கு ஏற்கெனவே இருக்கும் சாலை விரிவாக்கப்படுகிறது. 16.366 கி.மீ. தூரத்திற்கு புதிதாகச் சாலை அமைக்கப்படுகிறது. இப்பகுதியை தமிழ்நாட்டில் செங்கோட்டை கணவாய் என்று அழைக்கின்றனர். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 5100 கோடி. இத்திட்டத்திற்கு 210 எக்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 48 எக்டர் காப்புக்காடுகளாகும். இதில் நான்கு இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன. வடக்குப் பகுதியில் அமையவுள்ள சுரங்கம் 10.179 கி.மீ. நீளத்திற்கும், தெற்குப் பகுதியில் அமையவுள்ள சுரங்கம் 10.103 கி.மீ. நீளத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுரங்கமும் 11 மீட்டர் உயரம் கொண்டது. ஆரியங்காவு வழிவே பயணிக்கும் புளியரை முதல்  எடமன் வரையிலான 22.866 கி.மீ. சாலையில் 18.96 கி.மீ கேரளாவிலும் 3.906 கி.மீ. சாலை தமிழ்நாட்டிலும் வருகிறது.

தமிழ்நாட்டு எல்லைக்குள் அமையவுள்ள சாலையில் புளியரை காப்புக்காட்டில் 1.255 கி.மீ. தூரமும் 2.651 கி.மீ. காடு அல்லாத பகுதியுமாக உள்ளது. புளியரை காப்புக்காட்டில் அமைக்கப்படவுள்ள சாலையானது இருபக்கமும் 1.260 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதையாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை அமைந்தால் இதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்போகும் முதல் சுரங்கச்சாலையாக இருக்கும். ரயில் பாதைக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

10 கி.மீ. தூரத்துக்கான சுரங்கப்பாதை  உட்பட 22.866 கி.மீ. சாலையும் ஒன்றிய வன அமைச்சகத்தால் அறிவிக்கை செய்யப்பட்ட அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பகத்திற்குள் வருகிறது. இது யுனெஸ்கோ  அமைப்பின் மனிதரும் உயிர்மண்டலக் காப்பகமும் (Man and the Biosphere (MAB)) எனும் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி  மலையும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள 5432.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பாகமாக  ஒன்றிய அரசு 2001ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இக்காப்பகம்  2,254 வகையான தாவரங்களைக் கொண்டுள்ளது இவற்றுள் 405 இனங்களை இங்கு மட்டுமே காணமுடியும். இப்பகுதி குறிப்பாக ஏலக்காய், நாவல், ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பயிர்த் தாவரங்களின் தனித்துவமான மரபணு களஞ்சியமாகவும் திகழ்கிறது.

இக்காப்பகம் சுமார் 79 வகையான பாலூட்டிகளுக்கு வாழிடமாக உள்ளது, அவற்றில் 20 உயிரினங்கள் ஓரிட வாழ்விகளாகும்; 88 வகையான ஊர்வன, 45 வகையான நீர்நில வாழ் உயிரினங்கள்,  46 வகையான மீன் இனங்களும் உள்ளன. மொத்தம் 337 வகையான பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 20 பறவையினங்கள் ஓரிட வாழ்விகளாகும். மேலும் இச்சுரங்கமானது பெரியார் கானுயிர் சரணாலயத்தை தெற்கிலிருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் முக்கியமான புலிகளின் வழித்தடத்தை வெட்டிக் கடக்கிறது. யானைகளும் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன.

மறைந்த சூழலியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையிலான நிபுணர் குழு தயாரித்த்த மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுச்​சூழல் வல்லுநர் குழுவின் அறிக்கையும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Connecting Tiger Populations For Long-Term Conservation’ எனும் அறிக்கையும் இச்சுரங்கச் சாலைத்திட்டம் அமையவுள்ள செங்கோட்டை கணவாய் புலிகள், யானைகள் ஆகியவற்றின் இடம்பெயர்வுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் குறிப்பிடுகிறது.

10கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்க கடினமான மலைகளை வெடிவைத்துத் தகர்க்க வேண்டியிருக்கும். இது அப்பகுதியில் தீவிரமான நில அதிர்வை ஏற்படுத்தக்கூடும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்த விண்னப்பத்தில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. குறிப்பாகச் சுரங்கம் அமைக்கும் இடத்தின் புவியியல் நிலைத்தன்மை, சுரங்கப் பணிகளால் அப்பகுதியில் ஏற்படும் நீரியல் பாதிப்புகள், நில் அதிர்வின் தாக்கம், உயிர்ப்பன்மையத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள், நிலச்சரிவு அபாயம் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் எதுவும் வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. இத்திட்டத்திற்கான 23,500 மரங்கள் வெட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பகுதியில் இத்தனை மரங்களை வெட்டுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மாதவ் காட்கில் போன்ற அறிஞர்களின் எச்சரிக்கைகளைப் கண்டுகொள்ளாத காரணத்தால் ஒவ்வொரு பருவமழைக் காலங்களின் போதும் கேரளாவில் நிலச்சரிவு ஏற்படுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இவற்றை மனதில் கொண்டு காடுகளுக்கும் கானுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இத்திட்டத்திற்குத் தமிழ் நாடு அரசு வனத்துறை அனுமதி வழங்கக் கூடாதெனக் கோருகிறோம்.

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
8 Comments
Oldest
Newest Most Voted
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்
4 months ago

சாலை வசதி தேவைதான் அதேசமயம் காப்பு காடுகளையும் பல ஆயிரம் மரங்களை யும் அழித்து பல்லுயிர் களின் வாழ்வாதாரத்தை சிதைத்து சாலை அமைப்பதற்கு பதில் மாற்று வழி கண்டறிய வேண்டும்

Suresh
Suresh
4 months ago

Who is the person don’t have other works to think & planning these type of deas by scratching the nature

P Ganeshram
P Ganeshram
4 months ago

100% தவறு.

T.R.Parthasarathy.
T.R.Parthasarathy.
4 months ago

What this poovulagil nanbargal was doing dmk period Almost all the hills are blasted and valuable minerals were looted by all dmk functionaries
During that time this organisation has closed all its holes.
Now elections are on the way and therefore attacking center.
Every educated person knows about Sunderrahan activities.

D p Muralidhar
D p Muralidhar
4 months ago

Don’t allow

அரசு
அரசு
4 months ago

நாட்டின் வளர்ச்சிக்காக ரோடுகள் தேவை தான் ஆனால் அந்த அந்த பகுதியிலேயே மண் மனித வாழ்வியல் கெடாத தொழிகள் உருவாக்க வேண்டியதானே???இல்ல பலய ரோட்டையே சரி செய்தால் என்ன?????ஏன் இயற்கையை அழிக்க வேண்டும் கேவலம் மனித இனத்துக்காக ஆயிரம் ஆயிரம் உயிர் அழிய வேண்டுமா????

Last edited 4 months ago by அரசு
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்
4 months ago

வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும் எதிராக போராட்டம் நடத்துவதும் கூடாது. இயற்கை வளங்களை பாதுகாப்பதும் நம் தலையாய கடமை. அதே நேரத்தில் குறைந்த அளவில் இடர்பாடுகள் ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை வரைவு செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டியது அரசின் கடமை. மேற்கு தொடர்ச்சி மலையில் கொங்கன் ரயில்வே வழித்தடம் அமைத்தது போல 20 முதல் 25 கி.மீட்டர் தூரம் குகை அமைத்தால் யானைகள் மற்றும் புலிகள் இடப்பெயற்சி வழித்தடங்களுக்கு பழுது ஏற்படாது.

Sivasubramaniam
Sivasubramaniam
4 months ago

What is being saved through this project?