சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – 2022

Image:PIB

காலநிலை மாற்றம் என்கிற வார்த்தை மட்டுமே சில இடங்களில் தெளிக்கப்பட்டு, செயல்பாடுகளில் எதுவுமே இல்லாத ஒன்றிய நிதி நிலை அறிக்கை.

காலநிலை மாற்றம் குறித்தான பல அறிவிப்புகளை கிளாஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதையெல்லாம் செயல்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எரிசக்தித் துறையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே காலநிலை மாற்றப் பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் எனும் பார்வையை நிதிநிலை அறிக்கை முன்வைக்கிறது.

இதற்காக சூரிய ஆற்றல் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவையும் கூட வர்த்தகம் சார்ந்த திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் அம்சம் இவற்றில் மையமாக இல்லை. மேலும் காலநிலை மாற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Conservation) தொடர்பான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. உண்மையில் சுற்றுச்சூழலை பாதிப்புக்கு உள்ளாக்கும் அறிவிப்புகளே அதிகமாக உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பல்வேறு அமைப்புகளை சிதைக்கும் அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் உள்ளது. குறிப்பாக திட்டங்களுக்காக காடுகள், காட்டுயிர், கடற்கரை மண்டலம், சுற்றுச்சூழல் அனுமதிகளை பெற ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்க கூடிய அமைப்புகளான மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை, கடலோர ஒழுங்காற்று வாரியம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் இதன் மூலம் நீர்த்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நடவடிக்கை TSR.சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரையின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக TSR.சுப்பிரமணியம் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட போது அவை நிராகரிக்கப்பட்டது. இப்படி நிராகரிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை செயல்படுத்த முனைகிறது ஒன்றிய அரசு. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தான அனைத்து அம்சங்களும் நீர்த்துப்போகும்.

நதிநீர் இணைப்பு குறித்தான அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை அமைப்புகள் மாறிவருகின்ற சூழலில் நதிநீர் இணைப்பு திட்டம் என்பது நிலத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் வன்முறையாகும். இது சூழலியல் சிக்கல்களை அதிகரிக்கவே செய்யும். மேலும் கோதாவரி – பெண்ணையாறு – காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி விட்டது. கோதாவரி தொடங்கி காவிரி வரை பல மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு இத்திட்டம் மூலம் தண்ணீர் வழங்குவதை கர்நாடகா கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையான காவிரி நீரையும், பெரியாறு நீரையும் கொடுக்காமல் கோதாவரி தண்ணீரைக் கொண்டு வருவோம் என்பது ஒன்றிய அரசு நீண்ட காலமாக கூறிவரும் பொய்யாகும்.

இந்த நிதிநிலை அறிக்கை ஒரு புறம் காலநிலை மாற்றம், சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டு இன்னொருபுறம் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் நதிநீர் இணைப்பு திட்டங்களை முன்மொழிவது முற்றிலும் முரணாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

25,000கி.மீ தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நெடுஞ்சாலைக்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. WRI-World Resource Institute வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 2014-2018 வரை பா.ஜ.க ஆட்சி காலக்கட்டத்தில் இந்தியாவில் அழிக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை சுமார் 1.2 லட்சம் ஹெக்டர். ஒரு அளவுக்காக ஒப்பிட்டால் கொல்கத்தா நகரத்திற்கு இணையான பரப்பளவு கொண்டு காடுகளை நாம் இழந்திருக்கிறோம். 2009-2013 UPA ஆட்சி காலத்தில் நாம் இழந்த காடுகளின் எண்ணிகையை விட 36% அதிகம். நெடுஞ்சாலைத் திட்டம் , நதிநீர் இணைப்பு திட்டம், அணை கட்டுமானம் என வளர்ச்சி திட்டங்களின் பெயராலேயே தான் காடழிப்பு நிகழ்த்தப்பட்டது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ராணுவ தளவாடங்கள், பெரிய பெரிய திட்டங்கள் இவைதான் வளர்ச்சி என்கிற சித்தாந்தம் 2000த்தோடு காலாவதியானது. இது 2022, இயற்கை கட்டமைப்புகள், சூழல் தொகுதிகள், சூழலியல் மண்டலங்கள் இவற்றை பாதுகாப்பதும் விரிவாக்க அனுமதிப்பதுமே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சரியான முன்னெடுப்பாக இருக்கும்.

https://www.indiabudget.gov.in/

இப்படி பெரிய பெரிய திட்டங்களை அறிவித்திருப்பதன் மூலம் காலநிலை மாற்றம் என்ன செய்யப்போகிறது என்பதை கூட ஒன்றிய அரசு புரிந்துகொண்டிருக்கிறதா? என்கிற ஐயப்பாடும் எழுகிறது. இந்தியாவின் புவி அறிவியல் துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெளிவாக அறிவித்துவிட்டது, “வரும் ஆண்டுகளில் இந்தியா பல பேரிடர்களை சந்திக்கும்” என்று, இந்த நிதிநிலை அறிக்கையில் வரக்கூடிய பேரிடர்களை சந்தித்து நம்மை தகவமைத்து கொள்ள எந்த அறிவிப்பும் இல்லை, பேரிடருக்கு பின்னான வாழ்வியலை மீட்டுருவாக்கம் செய்யவும் எதுவுமே இல்லை. மொத்தத்தில் “காலநிலை மாற்றம்” என்று வார்த்தை ஜாலத்தை வைத்து மட்டும் அதை கையாள முடியாது.

‘கிளாஸ்கோ’ மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்த பஞ்சமிர்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு தேவையான கொள்கைகள், விதிமுறைகள் போன்றவை அறிவிக்கப்படவில்லை. கிளாஸ்கோவில் இந்திய பிரதமர் மோடி, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மின் உற்பத்தி 5 லட்சம் மெவாட்டாக இருக்கும் என்றும் இந்தியாவின், உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50% புதைப்படிம எரிபொருள் இல்லாதவற்றில் இருந்து பெறப்படும் என்கிற அறிவிப்பிற்கான எந்த ஒரு தொடக்கமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்தியாவில் அதி ஆற்றல் கொண்ட சூரிய மின்தகடுகளை உற்பத்தி செய்வதற்கான, “செயலாக்கத்தின் மூலமான ஊக்கத்தொகை” (Performance linked incentive) மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உதவும். இது ஒரு மேம்போக்கான அறிவிப்பாகவே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கங்கை நதி கரையை ஒட்டி இயற்கை வேளாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் அமைப்புகள், திட்டங்கள் குறித்தான விவரங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அறிவியல் சார்ந்து இவை எப்படி நடைமுறைப்படுத்தப்பட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சுகாதாரத் துறைக்கு போதிய நிதி அதிகரிப்பு இல்லாதது, கோவிட் போன்ற பெருந் தொற்றுகளிலிருந்து அரசு இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீட்டை குறைந்திருப்பது கிராமப்புற பொருளாதாரத்தை முழுவதும் சிதைக்கும் வேலையே.
மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை சுற்றுச்சூழல் பார்வையில் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments