சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப் போக செய்யும் ஒன்றிய அரசு

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட முக்கியமான மூன்று சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. மேலும் காட்டின் மீது பழங்குடி மக்களுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில் காடு பாதுகாப்பு விதிகள் 2022ஐயும் ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்களுமு, விதிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரானதாக அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல்(பாதுகாப்பு) சட்டம் 1986, நீர்(மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974, காற்று(மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகிய மூன்று சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து 01.07.2022, 30.06.2022, ஆகிய தேதிகளில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 21.07.2022க்குள் மின்னஞ்சல் வாயிலாக கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இத்திருத்தங்களில் சில குற்றங்கள் மற்றும் விதிமீறல்களுக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக விதிகளை மீறுவோர்க்கு ஒரு லட்சம் வரை அபராதமும் மீதிமீறல் தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ரூ 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் என்பதை மாற்றி விதிமீறலுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ 50 கோடி வரையிலும் என்றும் விதிமீறல் தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் செலுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் விதிமீறல் குற்றங்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள சிறைத்தண்டனையானது நீக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக சுற்றுச்சூழல்(பாதுகாப்பு) சட்டம் 1986ன் விதிகளை மீறுவோர்க்கு பிரிவு 15ன் கீழ் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இவ்விரு தண்டனைகளையுமே விதிக்க முடியும். இந்தப் பிரிவில் மாற்றம் செய்து சிறைத்தண்டனை என்பது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு ஏதாவது பெரிய நிறுவனங்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. விதிமீறலுக்கு சிறைத்தண்டனை விதிக்கலாம் என்கிற சட்டப்பிரிவு இருக்கும்போதே இதுதான் நிலைமை. வேதாந்தா போன்று சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்கள் எத்தனை கோடி அபராதமாக செலுத்தியும்கூட தங்கள் சூழல் விரோத செயல்பாடுகளைத் தொடர தயாராகவே இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சிறைத்தண்டனை என்கிற பிரிவை சட்டத்தில் இருந்து நீக்குவதும் சூழல் விரோதக் குற்றங்களில் ஈடுபடும் பணம் கொழித்த நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது போலாகிவிடும்.

இதேபோல ஒரு திருத்தத்தை உயிரினப் பன்மையச் சட்டத்திலும் கொண்டு வர ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அச்சட்டத்தின் பிரிவு 3, 4 மற்றும் 6ஐ மீறினால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மேலும் அத்தவறினால் ஏற்பட்ட சேதம் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்டிருந்தால் இந்த அபராதம் அதற்கு தக்கவாறும் அல்லது இவ்விரண்டு தண்டனைகளுமே சேர்ந்து விதிக்கப்படும். பிரிவு 7ன் கீழான விதிமுறைகள் அல்லது பிரிவு 24 உட்பிரிவு (2)ன் கீழான விதிமுறைகளை மீறினால் மூன்று வருட காலம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் அளவிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்றிருந்தது. தற்போது இந்த தண்டனை பிரிவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி சிறைத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான அபராதங்களை உயர்த்திக் கொண்டே போனாலும் ஒரு ஆலையின் விதிமீறலால் குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இழப்பீடு மற்றும் பாதிப்பிற்கான நிவாரணம் கிடைப்பதேயில்லை. எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக எண்ணூர் கழிமுகத்தில் அனல்மின் நிலைய செயற்பாடுகளால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பிற்கு தொடர்ச்சியாக அபராதம் செலுத்தி வருகிறதே தவிர ஒரு முறை கூட அப்பகுதி மக்களுக்கும் , சுற்றுச்சூழலுக்கும் உண்டான இழப்பு மற்றும் பாதிப்பிற்கான நிவாரணம் கிடைத்ததேயில்லை. ஆகவே, சுற்றுச்சூழல் விதிமீறல் குற்றங்களுக்கான தண்டனைகளில் சிறைத் தண்டனையை நீக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், இப்புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்புப் பகுதிகளில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் ஒரு ஆலையோ, நிறுவனமோ செயல்படுவதற்கு தேவைப்படும் இசைவாணையை வழங்கவோ, மறுக்கவோ, ரத்து செய்யவோ எந்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசே உருவாக்கும். இது மாநில அரசின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாகும். தனது மாநில எல்லைக்குள் தொடங்கப்படும் அல்லது இயங்கி வரும் ஒரு ஆலையை இசைவாணைகள் மூலம் எப்படி கண்காணிக்கலாம் என்பதை மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் இந்தத் திருத்தமும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

அண்மைக் காலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் பல்வேறு திருத்தங்களை அலுவல் உத்தரவாகவே ஒன்றிய அரசு மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முனைந்திருப்பது ஒரு நல்ல மாற்றமாகும். ஆனால், இந்தக் கருத்துக் கேட்பு ஆவணமானது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதும் கால அவகாசம் மிகக் குறைவாக வழங்கப்பட்டிருப்பதும் ஏமாற்றமளிக்கிறது. ஆகவே இந்த கருத்துக் கேட்பு ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு கருத்து தெரிவிக்க உரிய கால அவகாசத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் காடு பாதுகாப்பு விதிகள் 2022( Forest Conservation Rules), காடுகளில் வசிக்கும் மக்களிடம் கலந்தாலோசிக்காமலே காடுகளை அழிப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசிற்கு வழங்கியுள்ளது. முன்னதாக காடுகளை காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு அல்லாத வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானால் Forest Conservation Act 1980ன் கீழ் இரண்டு கட்டங்களாக முன் அனுமதி பெற வேண்டும். முதல் நிலை அனுமதி பெறுவதற்கு முன்பாகவே திட்ட அமைவிடத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் காட்டை நம்பி வசிக்கும் மக்களிடம் ஒப்புதல் பெறுவதும் அந்த ஒப்புதலை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஆராயும் பொறுப்பும் ஒன்றிய அரசுக்கு இருந்தது. தற்போது அப்பொறுப்பில் இருந்து ஒன்றிய அரசு விலகியுள்ளது. இப்புதிய விதிகள், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். வன உரிமைச் சட்டத்தின்படி காடு அல்லது காட்டுயிர் பாதுகாப்பு அல்லாத ஒரு திட்டத்திற்காக காட்டுப் பகுதியை பயன்படுத்த பழங்குடிகள் மற்றும் காட்டை நம்பி வசிக்கும் மக்களின் ஒப்புதல் அவசியம் என்பதை பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் உறுதிபடுத்தியுள்ளன. கடந்த காலங்களிலும் இதுபோல் வன உரிமைச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்ய பல்வேறு முயற்சிகள் நடந்தபோது ஒன்றிய பழங்குடிகள் அமைச்சகமே இதுபோன்ற முயற்சிகள் அனைத்தும் பழங்குடிகள் நலனுக்குத் தீங்காக அமையும் என எச்சரித்திருந்தது. பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வழிசெய்யும் இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஒன்றிய அரசின் முயற்சி கடுமையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் இந்த மூன்று சட்டத்திருத்தங்கள் மற்றும் புதிய காடு பாதுகாப்பு விதிகளில் உள்ள பிரச்சனைக்குரிய பிரிவுகளை ஒன்றிய அரசு கைவிடக் கோரி தங்கள் கருத்த்துக்களைத் தெரிவிக்க வேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 

Proposed Amendment of Environment (Protection) Act, 1986

Forest Conservation Rules, 2022

Proposed Amendment in the Air (Prevention & Control of Pollution) Act, 1981

Proposed  Amendment in the Water (Prevention & Control of Pollution) Act, 1974

 

 

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நவீன்
நவீன்
1 year ago

நம்முடைய பொறுப்புணர்வை உணர்த்தியத்துக்கு நன்றி

இராம மூர்த்தி. கி.
இராம மூர்த்தி. கி.
1 year ago

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானகட்சி பி.ஜே.பி.மக்களுக்கானது அல்ல!