விவசாயத்திற்கான நீரை அண்டை மாநிலங்களிடமிருந்து போராடியும் பெற முடியாமல் விதைத்த பயிரும் கருகிப்போன நிலையில் பல விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து வருகிற சூழலில் விவாசாயியும், சுதந்திரப் போராட்ட வீரருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணுவிடம் அவர் காலத்து விவசாயம் சார்ந்த சூழலியல் பிரச்னைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் உரையாடியது.
கே: சூழலியல் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் ஆர்வம் எப்போது பிறந்தது?
1943ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் முன்பே விவசாயிகளுக்கான போராட்டம் பலவற்றில் கலந்துகொண்டேன். கட்சியில் இணைந்த பின்னர் கூட விவசாய அமைப்புப் பிரிவில்தான் பணியாற்றினேன். அப்போதே விவசாய சங்கங்கள் இருந்தன. அதுதான் என்னை சூழலியல் பிரச்சனைகளுக்கு போராட வைத்த ஆரம்பப் புள்ளி.
அந்த காலகட்டத்தில் உங்கள் பகுதிகள் இருந்த விவசாயப் பிரச்னை என்ன?
ஜூன் 1ஆம் தேதி பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் விவசாயத்திற்காக திறந்து விடப்படும். அப்போது கடைமடைக்கு தண்ணீர் வந்து சேராத போது எங்கள் பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாத சூழல் வரும். அப்போதெல்லாம் அதிக அளவில் தண்ணீரை அணையிலிருந்து திறக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுதான் பெரிய பிரச்னையாக எங்கள் பகுதி விவசாயிகளுக்கு இருந்தது.
1940களில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கான பிரச்சனை என்னவாக இருந்தது?
ப: அப்போது பெரிய மிராசுதாரர்கள், ஜமீந்தாரர்களிடம் மட்டும் தான் விவசாய நிலங்கள் இருந்தன. சாதாரண மக்கள் அந்த நிலத்தில்
புகைப்படங்கள்: கோ.ராஜாராம்
விவசாயம் செய்தனர். அவர்களுக்குள் கூலிப் பிரச்னை அதிகமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. விவசாயத்தைப் பொருத்த வரையில் நெற்பயிர்கள் போடும்போது சில குறிப்பிட்ட காலம் மட்டும் தண்ணீர் கிடைத்தால் போதும். ஆனால் வாழை பயிரிடும்போது வருடம் முழுது நீர்த் தேவைப்படும். இந்த நீர்த்தேவையை பூர்த்தி செய்வது பெரிய சிக்கலாக இருந்தது.
அன்றைய காலத்தில் இருந்த நீர்ப்பாசன முறை பற்றி சொல்லுங்கள்?
அப்போது முக்கியமான நீர்ப்பாசன முறையாக இருந்த ஆற்று நீர்ப்பாசனம் மற்றும் குளத்து நீர்ப்பாசனம்தான். கால்வாய்கள் மூலம் தண்ணீர் நிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆற்று நீர்ப்பாசனத்தைப் பொருத்தமட்டில் தாமிரபரணி ஜூன் 1ஆம் தேதி திறக்கனும், காவேரியில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் நீரைத் திறக்க வேண்டும். ஆடிப்பட்டம் தேடி விதைனு சொல்லுகிறபடி அந்த குறிப்பிட்ட பட்டம் தவறிவிட்டால் மிகப்பெரிய பிரச்னையை விவசாயிகள் சந்திப்பார்கள். இந்தப் பிரச்னையில் 40களில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறேன்.
சுதந்திரத்திற்குபின் விவசாயிகள் சந்தித்த பெரிய பிரச்னைகள் என்னென்ன?
பிரிட்டிஷ் காலத்தில் நிலத்துல பயிர் விளைந் தாலும் விளையாவிட்டாலும் தீர்வை கட்ட வேண்டியது இருந்தது. அதை “Permanent settlement” என்பார்கள். புஞ்சை விளைகிற இடத்தில் இந்த தீர்வை கட்டுவது பெரிய சிக்கலாக இருந்தது. தீர்வை கட்டவில்லை என்றால் வீட்டுப் பொருட்களை ஜப்தி செய்து விடுவார்கள். வீட்டு நிலைக் கதவை பெயர்த்து கொண்டு சென்று விடுவார்கள். அது சுதந்திரத்திற்கு பின்பும் தொடர்ந்தது. 1966ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கோவில் பட்டி தாலுகாவில் தீர்வை கட்ட வில்லை என்று நிலைக்கதவு, ஆடு, மாடுகளை ஜப்தி செய்தார்கள். அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடத்தி னோம். ஜப்தி செய்தவைகளை ஏலத்தில் விடும் இடங்களில்லாம் நாங்கள் அதைத் தடுத்து நிறுத்துவோம். 100 நாட்களுக்குப் பிறகுதான் ஜப்தி செய்தவை திரும்பக் கொடுக்கப்பட்டது.
தற்போதைய சூழலில் காவேரியில் நமது உரிமை எந்த அளவு மீறப்பட்டிருக்கிறது?
காவேரியைப் பொருத்தவரை கிருஷ்ணசாகர் அணையும், மேட்டூர் அணையும் இரு மாநில ஒப்புதலுடன் கட்டப்பட்டது. 1882ல் மைசூர் சமஸ்தானம் இருந்தபோதே ஒரு ஒப்பந்தம் இருந்தது, அதன்படி யார் அணை கட்டினாலும் இரு மாநில ஒப்புதலுடன்தான் கட்ட வேண்டும் என்றிருந்தது. இப்போது அது மீறப்படுவதுதான் ஒரு அடிப்படையான பிரச்னையாக இருக்கிறது. ஆனால் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தும் இந்தப் பிரச்னை தீர்க்க முடியாமல் இருக்கிறது.
தமிழர்களின் தொன்மையான நீர்ப்பாசன முறை தற்போது பிரச்னைக்குண்டானதன் காரணமென்ன?
தமிழகத்தைப் பொருத்தமட்டில் மழை பொழியும் நாட்கள் மிகக்குறைவு. அதனால்தான் நம் முன்னோர்கள் நீரைச் சேமித்து வைக்க 39ஆயிரத்து 500 குளங்களை அப்போதே கட்டி வைத்திருந்தனர். இது தவிர கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் கட்டியிருந்தார்கள். இப்படியாக கிணறு, கேணி, தாங்கல் என்று நீர் கொள்ளும் அளவைப் பொருத்து பல பெயர்களில் நீர் நிலைகள் குறிப்பிட்டிருந்தார்கள். இவை அனைத்தையும் பராமரிக்க குடிமராமத்து, நீராயம் போன்றவை இருந்தன. ஆகவே அப்போது நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் கடமையானது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருந்தது. இப்படியான அமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் சீர்குலையத் துவங்கியது. குறிப்பாக பொதுப்பணித்துறையை விட அதிகமாக இராணுவத்துக்கு பணம் வழங்கியதால்தான் பராமரிப்பின்றி குளங்கள் மேடுதட்டி தூர்ந்து போனது.
சுதந்திரத்திற்குப் பின்பு கூட நீர் மேலாண்மை சீராக இல்லையே?
முழுவதுமாக அப்படிச் சொல்லிவிட முடியாது. சுதந்திரத்திற்குப் பின்பு நாம் பல அணைகளைக் கட்டி புதிய விவசாய நிலங்களைக் உருவாக்கினோம். அதற்குப் பின் வந்த ஐந்தாண்டுத்திட்டங்களில் தொழிற் சாலைகளை பெருக்க அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப் பட்டதன் விளைவாகத்தான் நீர் ஆதாரங்களை வேகமாக இழக்கத் தொடங்கினோம். குடிமராமத்து போல் மக்களே நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நிலை இருந்திருந்தால் நாம் அவற்றைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் பொதுப்பணித்துறை இப்போது மிகச் சிக்கலான துறையாக மாறிவிட்டது. அங்கு தான் அதிகளவில் கொள்ளை நடக்கிறது.
காடு அழிப்பு தற்போது எவ்வளவு முக்கியமான பிரச்னை?
அந்த பிரச்னையும் பிரிட்டிஷ் காலத்தில்தான் தொடங்கியது. மலையில் உள்ள மரங்களை வெட்டி அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றபோதுதான் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டன. தேசிய வனக்கொள்கையின்படி 33 சதவிகித பரப்பு காடாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் 17சதவிகிதம் தான் காடுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் தேயிலை விதைப்பதற்காக மரங்கள் அதிகளவில் மலைகளில் அழிக்கப்பட்டன. அது நமக்கு கிடைக்க வேண்டிய மழை அளவையும் மிகக்கடுமையாக பாதித்தது. மலையில் உள்ள மரங்களில் உள்ள இலை பாறைகளின் மீது விழுந்து மணலுடன் சேர்ந்து பல அடுக்குகளாக அமைந்து குளிர்ந்த சூழலுடன் மழை நீரைத்தேக்கிவைக்கும். காடழிப்பினால் இந்த அமைப்பு பெருமளவில் சீர்குலைந்தது.
ஆற்றுமணல் கொள்ளை தற்போது எவ்வளவு முக்கியமான ஒரு சூழலியல் அமைப்பாக உள்ளது மாறியுள்ளது?
அந்தக் காலத்துல ஆத்தங் கரையோரம் நாங்க மண்ணத்தோண்டி தண்ணீர் குடிப்போம். மேல்பகுதியில் சூடான மணலிருக்கும், அதைத் தோண்டினா கீழே குளிர்ந்த நீரிருக்கும். அதை பனை மரத்து ஓலைப்பட்டையில பிடித்துக் குடிப்போம். அவ்வளவு ருசியா இருக்கும். ஆனால், இப்போது தோண்டுவதற்கு மணல் இல்லாமல் போய்விட்டது. திருவள்ளுவர் ஆற்றைப்பற்றிக் கூறுகையில் “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்பார். அதாவது ஆற்று மணல் என்பது கேணி. அது நீரைச் சேமித்து வைத்து நிலத்துக்குள் நீரை அனுப்புகிறது, அதுமட்டுமில்லாமல் நீரைச் சுத்திகரிக்கும். ஆற்று மீன்வளத்தை எடுத்துக் கொண்டால் காவேரியில் மட்டும் 25 வகையான மீன்கள் இருந்தன. ஆனால், இப்போது 5 வகையான மீன்கள் மட்டுமே உள்ளன. அந்த அளவிற்கு ஆற்றை மாசுபடுத்திவிட்டோம்.
ஆற்று மணலை அள்ளூவதற்கான விதிகள் என்ன? அதிகளவில் அள்ளூவதால் என்ன பிரச்னை?
ஆற்று மணலை அள்ளுவதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு மீட்டர் ஆழம் மட்டும்தான் அள்ள வேண்டும். கரை ஓரத்துல மணல் அள்ளக் கூடாது. ஆற்றுக்குக் குறுக்கே பாதை போடக்கூடாது. இப்படியான எல்லா விதிகளையும் மீறிட்டாங்க. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரல் கொடுக்கிற சாமானியர், அரசு அதிகாரி என்று யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆழமாக மணலைத் தோண்டிவிட்டால் சேறு மட்டும்தான் மீதமிருக்கும். ஆற்றில் வெள்ளம் வரும்போது பாதியளவு நீரை மணல் உள்வாங்கி நிலத்துக்குள் புகுத்தும் செயல் நடக்காமல் போய்விடுகிறது. இதனால் அதிகளவு நீரை இழக்கிறோம். மனிதச் சுரண்டலால் ஆற்று மணல், தாது மணல், கிரானைட், கடற்கரை என எல்லாமே அழிக்கப்படுவதால்தான் நீர் உள்ளிட்ட எல்லா வளங்களுக்கும் அண்டை மாநிலத்தவர்களிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதை எதிர்த்து உறுதியாய் அனைவரும் ஓரணியில் நின்று போராட வேண்டியுள்ளது.
தோழர்.ஆர்.நல்லகண்ணு பேட்டி
பேட்டி: கவிதா முரளிதரன், நிலன்