கொதிக்கும் தமிழ்நாடு; உச்சகட்ட அபாயத்தில் 11 மாவட்டங்கள்

கொதிக்கும் தமிழ்நாடு;  உச்சகட்ட அபாயத்தில் 11 மாவட்டங்கள்

வேகமெடுக்கும் நகரமயமாக்கலால் அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் வேகமெடுத்துள்ள நகரமயமாக்கலால் மாநில முழுவதுமுள்ள பல்வேறு வட்டாரங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதாக மாநிலத் திட்டக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கை நகரமயமாக்கலுக்கும் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் உள்ள முக்கியமான தொடர்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

07.07.2025 அன்று மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தத்திற்கு இடையேயான தொடர்பை விளக்கும் ’Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and Climate Interactions in Tamil Nadu’ எனும் அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பலவேறு அதிர்ச்சியளிக்கக்கூடிய தரவுகளைக் கொண்டுள்ளது.

இவ்வறிக்கையானது மாநில திட்டக் குழுவின் தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் வெப்பத் தணிப்பு உத்தி 2024 ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கையானது தமிழ்நாட்டிலுள்ள  வட்டார அளவிலான வெப்ப வெளிப்பாடு தொடர்பான  விரிவான  பகுப்பாய்வை வழங்குகிறது.  நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக நகரமயமாக்கல் மற்றும் காடழிப்பு ஆகியவை புவி வெப்பமயமாதலுக்குப் பங்களிப்பதையும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை (Urban Heat Island) அதிகரிப்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதிகரிக்கும் கட்டிடங்கள் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் அளவிலான காலநிலையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நீண்ட காலமாக பூவுலகின் நண்பர்கள் முன்வைத்து வரும் பல்வேறு புவி வெப்பமயமாதல் குறித்த வாதங்களுக்கு அறிவியல் பூர்வமாக வலு சேர்க்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ளது.

இவ்வாய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். சென்னையின் கட்டப்பட்ட பகுதி 1985 ஆம் ஆண்டில் அதன் மொத்தப் பரப்பில் 48% ஆக இருந்த நிலையில்  2015 ஆம் ஆண்டில் 74% ஆக அதிகரித்துள்ளது.  இது 30 ஆண்டுகளில் 26% உயர்வைக் குறிக்கிறது. இது நகரமயமாக்கலானது சென்னையின் வெப்பநிலை அதிகரித்ததற்கு முக்கியக் காரணி என இவ்வாய்வு குறிப்பிடுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் வளர்ச்சித் திட்டங்களைக் குவிக்காமல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி அவசியம் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வெப்ப அழுத்தத்தின் உச்சகட்ட அபாயத்தில் 11 மாவட்டங்கள்.:

தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 389 வட்டாரங்களில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வட்டாரங்களில் தீவிர வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

சென்னை, கன்னியாகுமரி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சியும் அதிகரித்திருப்பது இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 94 வட்டாரங்களில், 64 வட்டாரங்கள் தற்போது அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன.  சென்னை, கரூர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் 25 வட்டாரங்கள் நீண்ட கால அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் வெப்ப உயர்வைச் சந்திப்பதால் இம்மாவட்டங்கள் வெப்ப அபாயத்தின் உச்சத்தில் உள்ளன. இம்மாவட்டங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

அதிகரித்து வரும் வெப்பத்திற்கு நகரமயமாதல் ஒரு முக்கியக் காரணி என ஆய்வு கூறுகிறது.  கட்டடப் பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.  சில மாவட்டங்களில் வெப்பநிலை மாநில சராசரியை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

நகரமயமாக்கல் மற்றும் உயர்ந்த வெப்ப நிலைகளுக்கு இடையிலான தொடர்பானது குறிப்பாக இயற்கையாக அமைந்த நீர்நிலைகள் சுருங்கிவிட்ட அல்லது முற்றிலும் மறைந்துவிட்ட பகுதிகளில் அதிகம் காணப்பட்டுள்ளது. குன்றத்தூர், சோழவரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போன்ற வட்டாரங்களில் இருந்து கிடைத்த கள அளவிலான சான்றுகள், பாரம்பரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகள் மறைந்து வருவதால் உள்ளூர் வெப்பமயமாதல் போக்கு  அதிகரிப்பதாக அறிக்கை கூறுகிறது.  இந்நீர்நிலைகள் அழிக்கப்பட்டதால் இயற்கையான வெப்ப ஒழுங்குபடுத்திகளாக அவற்றால் செயல்பட முடியவில்லை. இதனால் நகர்ப்புற சூழலின் வெப்பம் அதிகரித்து நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை மோசமாக்குகிறது என்கிறது இவ்வறிக்கை.

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்படவுள்ள 2172.73 எக்டர் நிலத்தில் 576.74 எக்டர் அதாவது 26.54% நீர்நிலையாகும். வேளாண் நிலங்களுடன் சேர்த்தால் மொத்த திட்டப்பகுதியில் 90% ஈர நிலமாகும்.  நீர்நிலைகளை அழித்து நகரத்தை விரிவாக்கிக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால்தான் ஸ்ரீபெரும்புதூரில் வெப்பநிலை அதிகரித்ததாக இவ்வறிக்கை கூறுகிறது. அதே ஸ்ரீபெரும்புதூரில்தான் பரந்தூர் விமான நிலையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மீஞ்சூர் ஆகிய பகுதிகள் முக்கியமான வெப்பக் குவிப்பு மண்டலங்களாக மாறியிருப்பதால் இப்பகுதிகளில் வெப்பத்தைக் குறைக்கத் தவகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

உயரும் குளிர்கால வெப்பம்:

தமிழ்நாட்டின் அதிகம் குளிர் நிலவும் பகுதிகளில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் குளிர்கால வெப்பநிலையானது சராசரியாக 1 °C உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் குளிர்கால வெப்பநிலை சராசரியாக 1.5 °C உயர்ந்துள்ளது. இது உலகளாவிய புவி வெப்பமயமாதல் போக்கைப் பிரதிபலிக்கிறது.

மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்:

கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் 17 மலைப்பகுதி வட்டாரங்களில் வெப்பநிலை உயர்ந்ததற்கு நகரமயமாக்கலும் காடழிப்புமே முக்கியக் காரணம் என்கிறது இவ்வறிக்கை. அதனால்தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் கொண்டு வரப்படும் சில கட்டுமானத் திட்டங்களை நாங்கள் தீவிரமாக எதிர்க்கிறோம். தமிழ்நாடு மின்வாரியமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளை அழித்து கோதையாறு, சில்லஹல்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களின் புனல் மின் திட்டங்களை அமைக்கத் திட்டமிட்டிருப்பதை நாம் இந்நேரத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்:

சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், கரூர், திருச்சி, மற்றும் மதுரை உள்ளிட்ட அடர்த்தியான நகரங்களில் இரவு நேர நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இந்நகரங்களில் இரவு நேர வெப்பநிலையானது 2000-2005 மற்றும் 2018-2023 இடையேயான காலங்களில் 4 °C உயர்ந்துள்ளது.  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இரவு நேர வெப்பநிலை 2 °C வரை உயர்ந்திருப்பதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. அதிக வெப்பத்தைப் பகலில் உள்வாங்கிய மனித உடல் இரவின் குளிர்ச்சியில் தன்னைக் குளிர்வித்துப் புத்துணர்வு அடைவதுதான் இயல்பு. இரவு நேர வெப்பமும் அதிகரிப்பதால் உடல் தன் வெப்பத்தைக் குளிர்விக்க முடியாமல் போகிறது. இது பல்வேறு உடல் நலப் பாதிப்புகளை சத்தமின்றி ஏற்படுத்தவல்லது.

உலகளாவிய வெப்ப செளகரியக் குறியீடூ (UTCI):

Universal Thermal Confort Index என்பது காற்று வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், சூரியக் கதிர்வீச்சு, மழைப்பொழிவு ஆகிய காரணிகளைக் கொண்டு மனிதரின் உடலில் வெப்பம் ஏற்படுத்தும் அசெளகரியத்தை அளவிடும் ஒரு நடைமுறையாகும்.

இந்த UTCI ஆனது 9 °C முதல் 26 °C வரையிருந்தால் மனித உடலில் வெப்ப அழுத்தப் பாதிப்பு இருக்காது. 26 °C – 32 °C இருந்தால் நடுத்தர அளவு பாதிப்பும், 32 °C – 38 °C இருந்தால் வலுவான பாதிப்பும் 38 °C – 46 °C இருந்தால் மிக வலுவான பாதிப்பும் 46 °Cக்கு மேலிருந்தால் அதி தீவிர பாதிப்பும் இருக்கும் என்கிறது ஐரோப்பிய Climate ADAPT நடைமுறை.

இவ்வாய்வின்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் UTCI அளவீட்டின்படி வலுவான வெப்ப அழுத்தத்தில் (Strong Heat Stress) இருப்பதாகவும் சில பகுதிகள்  மிக வலுவான வெப்ப அழுத்த பாதிப்பை நோக்கி நகர்வதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு UTCI ஆனது நடுத்தர வெப்ப அழுத்தப் பாதிப்பு (Moderate Heat Stress) என்கிற நிலையிலே இருந்ததால் இந்த உயர்வானது வெப்ப அதிகரிப்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

கட்டிடப் பரப்பு வேகமாக அதிகரித்து வரும் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் UTCI உயர்ந்து வருவதாக இவ்வாய்வு குறிப்பிடுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ள்டக்கிய பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதி, மதுரை, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழிற்சாலைப் பகுதிகள் திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகியப் பகுதிகளில் UTCI உயர்ந்து வருவதாக இவ்வாய்வு குறிப்பிடுகிறது.

மேற்குறிப்பிட்ட பகுதிகள் மக்கள்தொகை அதிகரித்தல், பசுமைப் பரப்பு குறைதல், மனித நடவடிக்கைகளால் அதிக வெப்பம் உமிழப்படுதல், நிலப்பயன்பாடு மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் UTCI உயர்கிறது. கடலோர மாவட்டங்களில் அதிக ஈரப்பதம் நிலவக்கூடும் என்பதால் அங்கு UTCI உயர்வது கடும் விளைவை மனித உடலில் ஏற்படுத்தும். நீண்ட நேரம் வலுவான வெப்ப அழுத்தத்தை எதிர்கொண்டு திறந்தவெளியில் வேலை செய்யும்போது உடல் குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், குழந்தைகள், வயதானோர், பெண்கள் ஆகியோருக்கு UTCI உயர்வு கடும் உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்படாத நகரமயமாக்கலால் அதிகரிக்கும் வெப்பம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.  இந்நெருக்கடியைச் சமாளிப்பதற்கான சில பரிந்துரைகளையும் இவ்வாய்வறிக்கை தெரிவித்துள்ளது. அவை அனைத்தையும் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்தி மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஜூன் 5, 2025 அன்று நடந்த உலக சுற்றுச்சூழல் நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ” நம்முடைய கனவு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் கிடையாது அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பதுதான்”  எனப் பேசினார். முன்பு நடந்த தமிழ் நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவில் பேசியபோது “அரசின் திட்டங்கள் அனைத்தையும் காலநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்” என்று கூறினார்.

முதல்வரின் சொற்களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளும் சூழலைப் பாதிக்கும் அழிவுத் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments