கரூர் கூட்ட நெரிசல் பலி; கொடும் வெப்பமும் முக்கியக் காரணம்

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்  தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தவிர்த்திருக்கக்கூடிய இத்துயர  சம்பவத்திலிருந்து பொதுச்சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமுள்ளன. உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் எங்களது இரங்கலைத் தெரிவிக்கிறோம். காயமுற்று சிகிச்சை பெறுபவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறோம்.

இந்தியாவில் அண்மைக் காலங்களில் அரசியல், சினிமா, வழிபாடு, கேளிக்கை, விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு  மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம்  நடந்த பூரி ஜெகன்னாதர் யாத்திரை,  திருப்பதி கோயிலில் ஜனவரி மாதம்  ஏற்பட்ட நெரிசல், கோவாவின் லைராய் தேவி கோவிலில் மே மாதம் ஏற்பட்ட நெரிசல், ஜூலையில் உத்தரகாண்ட்டின் மானசா தேவி கோயில் நெரிசல், அலகாபாத் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல், டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல், RCB அணியின் IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசல், புஷ்பா திரைப்பட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல் என நடப்பாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்கள் ஏராளம், அதில் பல உயிர்களை இழந்துள்ளோம். தற்போது  அதிகரித்து வரும் வெப்பமும் உடன் சேர்ந்து விளைவுகளை மேலும் தீவிரமாக்குறது.

புவி வெப்பமயமாதல் காரணமாக நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றம், தமிழ்நாடு  உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . மேலும் தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் நகரமயமாதல், குறைந்து வரும் பசுமைப்பரப்பு போன்ற காரணங்களால் தமிழ்நாட்டின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதனின் அடுத்த நிகழ்வாக கொடும் வெப்ப பாதிப்புகளை(extreme heat stress) தமிழ்நாடு சந்தித்துவருகின்றது .    மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் கொடும் வெப்பத்தின் பாதிப்புகள் பன்மடங்கு அதிகமாகும் தன்மையும் நிலவி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்வில் (6/10/2024) கொடும்  வெப்பத்தினால் நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர். மேலும்  ஐந்து நபர்கள் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த  2024  ஆம் ஆண்டில் விக்கிரவாண்டியில் நடந்த  தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் (27/10/2024) லட்சக்கணக்கான மக்கள் கடும் வெப்பத்தினால் மயக்கமுற்றனர், வெயிலால் சோர்வடைந்து அவதிக்குள்ளாகினர். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த த.வெ.க. வின் மதுரை மாநாட்டிலும் 18 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர் மேலும் பலர் மயக்கமுற்றனர். தமிழ்நாட்டில் இது போன்ற வெப்பம் சார்ந்த துயர நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே இது போன்ற நிகழ்வுகளை ஆய்வுக்குள்ளாக்கி வருகிறோம்.

கரூரில் நடந்த கூட்டநெரிசல் துவங்கும் முன்னரே சுமார் ஆறு மணி அளவில் அங்கு நிலவிய வெப்பம் காரணமாகப் பலர் மயக்கமடைந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. த.வெ.க. தலைவர் விஜய்யின் உரை தொடங்கும் முன்னரே ஒரு பெண் தனது மகளுடன் இறந்ததாகத் தெரியவந்துள்ளது . மேலும், அன்று மதியம்  நடந்த நாமக்கல் பரப்புரையிலும்  த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது பலர் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே கரூர், நாமக்கல் ஆகிய இரு இடங்களிலும் கொடும் வெப்பத்தன்மை (extreme heat stress) நிலவி இருக்க வேண்டும். இக்கொடும் வெப்பத்தன்மை ஏன் இந்த அளவில் காணப்பட்டது, இதனால் மக்கள் ஏன் மயக்கமுற்றனர் என்பது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

ஆய்வின் கட்டமைப்பு

மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.4-37.2 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது மட்டுமே ஆரோக்கியமாகச் செயல்பட முடியும். இந்த சமநிலையை ஏகநிலைமை (homeostasis ) எனக் குறிப்பிடுவர்.  இந்த சமநிலை குலைந்து மனித உடலின் அக வெப்பநிலை மிகவும் அதிகரித்தாலோ குறைந்தாலோ மயக்கம், மரணம் போன்ற விளைவுகள் நிகழக்கூடும். இதன் காரணமாகவே பரிணாம வளர்ச்சியில் மனிதயினம் புறச் சூழலில் நிகழும் தட்பவெப்ப நிலையின் மாற்றத்திற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையைப் பெற்றது . குறிப்பாக தோல் , மூளை , நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகள் மனித உடலில் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளும் வேலையைச் செய்கின்றன.  வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது மனித உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் சூட்டைத் தோல் மூலமாக  வெளியேற்றுகின்றன.  அதன் பின்பு,  வேர்வை சுரப்பிகள் மூலமாக  வேர்வை நீரை வெளியேற்றி உடல்  குளிர்விக்கப்படும். இந்த செயல்பாடு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவிற்குள்ளாகவே செயல்படும்.  புவி வெப்பமயமாகி வருவதன் காரணமாக உள்ளூர் அளவில் உயர்ந்து வரும் வெப்பநிலை நம் உடலின் குளிர்விக்கும் செயல்பாட்டை உருக்குலைத்துள்ளது . கொடும் வெப்பத்தன்மையை (extreme heat stress) அதிக நேரம் எதிர்கொள்வதற்கான திறன் மனித உடலுக்கு இல்லை.

கொடும் வெப்பத்தன்மையின் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக தனித்துவமான ஆய்வுமுறை நமது ஆய்வுக்குழுவால் உருவாக்கப்பட்டது. இதனை புனல் ஆய்வுக்கட்டமைப்பு என அழைக்கிறோம். இவவாய்வு முறையின் முதல் படியாக ஒரு பகுதியில் நிலவிய  கொடும் வெப்பத்தை கணக்கிடுவாதற்கான ஆய்வுகள் உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடின்படி (Universal Thermal Climate Index) மேற்கொள்ளப்படும். இரண்டாம் நிலையில் மனிதர்களுக்கு புறவெப்பச்  சூழலின் காரணமாக மனிதனின் உடல்நிலையில்    நிகழும் மாற்றங்களை JOS3 எனும் மென்பொருளின் உதவியோடு அளவிடப்படும். புனல் கட்டமைப்பின் விளக்க வரைபடத்தை காண பின்னிணைப்பை காணவும்.

கொடும் வெப்பத்தன்மையின் தாக்கத்தை (impact of extreme heat stress) கணக்கிடுவதற்க்காக ஐரோப்பிய ஒன்றியம்  ‘உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு’ (யு.டி.சி.ஐ)  எனும் முன்னெச்சரிக்கை ஆய்வு முறையை உருவாக்கியுள்ளது. இவ்வாய்வு முறையில் ஒரு நிலப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை (temperature), காற்றின் ஈரப்பதம் (humidity), சுற்றுப்புற வெப்பக்கதிர் (mean radiant temperature), காற்றின் வேகம் (wind speed) போன்றவற்றோடு மேலும் சில காரணிகளின் அடிப்படையில் இக்குறியீடு கணக்கிடப்படுகிறது. மனித உடல்மீது வெப்பம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, அவை எந்த   வெப்ப அளவில் நிகழக்கூடும், அவற்றுக்கு எவை காரணமாக இருக்கின்றன என்பதை மேற்கூறிய குறியீடு விளக்குகிறது. உயிர் கொல்லக்கூடிய அளவிலான கொடும் வெப்பத்தன்மையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு இக்குறியீடு உதவுகிறது.

யு.டி.சி.ஐ 38oC க்கும் அதிகமாக இருந்தால் அதனை மிகவும் ஆபத்தான நிலை என்று வரையறுக்கின்றனர். தொடர்ந்து 1 முதல் 2  மணி நேரத்திற்கு இந்நிலை நீடித்தால் மிகுந்த அயர்ச்சி அல்லது மயக்கம் உண்டாகும். இப்படிப்பட்ட கொடும் வெப்ப தன்மையினால் மூச்சுத்திணறல், வெப்ப வாதம் போன்றவையும் உண்டாகும்.  இக்குறியீடு 46oC க்கு மேல் இருந்தால் இறப்பு நேரும் அபாயமும் உள்ளது. பின்னிணைப்பில் யு.டி.சி.ஐ பற்றிய அறிவியல் விளக்கப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் நிலவும் யு.டி.சி.ஐ அளவீடை கண்டறிந்தபின் JOS3 போன்ற மென்பொருள்களைக் கொண்டு ஒரு நபர் மீது வெப்பத்தின் தாக்கத்தின் அளவை உறுதி செய்ய முடியும். வெப்பம்  அதிகரிக்கின்றபோது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை , குறிப்பாக  அக நிலயில் நிகழும் வெப்ப உயர்வு, இதய துடிப்பு, வியர்வை அளவு  போன்றவற்றை இவ்மென்பொருள் கணக்கிடுகிறது. மேற்கூறிய வெப்ப நிலைக்குறியீட்டு அளவுகளால் மயக்கமோ இறப்போ ஏற்பட்டதா என்பதை கண்டறிய  இந்த JOS3  மென்பொருள் உதவுகிறது.

உடலின் அக வெப்பநிலை 38.5 – 39.5oC வரை எட்டினால்  மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படும் . அதேபோல அக வெப்பநிலை  40 – 41.5oC வரை எட்டினால் வெப்ப வாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படும்.  ஒரு நபர் கொடும் வெப்பத்தன்மையின் தாக்கத்தை எதிர்கொள்ளும்போது போதிய அளவில் நீர் அருந்தாவிட்டாலோ போதிய இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றாமல் இருந்தாலோ ஆபத்தை உண்டாக்கும் . குறிப்பாக நீரிழப்பு, சிறுநீரக அழுத்தம் போன்றவை உண்டாகும். மேலும் இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களின் அளவு வேகமாக அதிகரிக்கும்.  இதன் தொடர்விளைவாக மூளையில் உள்ள முக்கிய நச்சுதன்மையி லிருந்து மனிதர்களை பாதுகாக்கும் Blood-Brain Barrier எனும் அமைப்பு சிதைந்துபோகும்.  இப்படியான சூழலில் 39oC அகநிலை  வெப்பநிலையிலேயே வெப்ப வாதமோ அல்ல பிற மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

 

உடலின் அக வெப்பநிலை  விளைவு
    38.5 – 39.5oC    மயக்கம் , தலைசுற்றல், சோர்வு
    40  – 41.5oC   வெப்ப வாதம், மாரடைப்பு , பல்லுறுப்பு செயலிழப்பு
    39 oC (Blood Brain Barrier breached)   வெப்ப வாதம், மாரடைப்பு மற்றும் பிற

 

நிகழ்வின் தொகுப்பு 

செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காலை 8.45 மணிக்கு நாமக்கலிலும் மதியம் 12 மணிக்குக் கரூரிலும் மக்களைச் சந்திப்பாரென அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவாரென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8.45 மணிக்குதான் அவர் சென்னையிலிருந்தே விமானத்தில் புறப்பட்டார்.

பிற்பகல் 2.30 மணியளவில் நாமக்கல்லில் பரப்புரை நடக்குமிடத்தை  இடத்தை த.வெ.க. தலைவர் விஜய் அடைந்தார். அதற்குள், அங்கே பலரும் மயக்கமடையத் தொடங்கினர்.  பெரும் கூட்டம், போதுமான நிழல், உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாததால் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு முக்கிய சாலைகள் கூடும் இடமாக உள்ள  அவ்விடம் போதுமான வெளியேறும் வசதிகள் இல்லாத இடமாக இருந்தது.

இந்நிலையில் காலை 9 மணியிலிருந்தே சிறிது சிறிதாகக் கரூரின் வேலுசாமிபுரத்தில் மக்கள் கூடத் தொடங்கியிருந்தனர். 4 மணிக்குப் பிறகு மக்கள் மிக அதிகமாகக்கூடிய நிலையில் 7 மணியளவில்தான் த.வெ.க. தலைவர் அப்பகுதிக்கு வந்துள்ளார். அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் நடக்கவிருந்த இடத்திற்கு வந்தனர். அவர் அங்கு வந்தடையும்போது கூட்டம் 30000 எண்ணிக்கையைக் கடந்திருந்தது.

27.9.2025 அன்று கரூரில் மதியவேளையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது இயல்பைவிட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இந்த தட்பவெப்பநிலை மற்றும் பிற காரணங்களால் அங்குக் கொடும் வெப்பத்தன்மை நிலவியது. சில இறப்புகள் த.வெ.க. தலைவர் பேசத் தொடங்கும் முன்னரே நிகழத் தொடங்கியதாகச் செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். காலையிலிருந்து காத்திருந்ததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்   களைப்படைந்திருந்த மக்கள் பிரச்சார வாகனத்திற்கு இடமளிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், கூடவே வெப்ப வாதத்தாலும் (heat stroke)  பலியாகியுள்ளனர்.

ஆய்வு முடிவுகள்

நாமக்கலிலும் கரூரிலும் இந்த நிகழ்வின் போது சிறிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், கூட்ட அடர்த்தி ஒரு சதுர மீட்டருக்கு 4 பேருக்கு அதிகமாக இருந்துள்ளது.  இன்னும் அதிகமாக இருந்தது. இதனை  ’critical crowd condition’ என்று கூறலாம்.

இக்கட்டத்தில், கூட்டநெரிசலில்  உள்ள ஒவ்வொரு நபரும் சுமார் 200W அளவிலான  வெப்பத்தை வெளியிட்டுருக்கக்கூடும் . இதன் காரணமாக சுமார் 3:30 மணிக்கு பின்பு  அப்பகுதியில் மனித உடல்களிலிருந்து வெளியான வெப்பத்தின் அளவு சுமார் 800 W/m2 (ஒரு சதுர மீட்டருக்கு 800 வாட்) வரை இருந்திருக்கக்கூடும்.  இந்த வெப்ப அளவு என்பது மதியவேளையில் சூரியனில் இருந்து வந்தடையும் வெப்பத்திற்கு ஈடானதாகும். ஆனால் சூரிய ஒளியைப்போல  ஒரே திசையில் இல்லாமல் மக்கள் கூட்டத்தின்  உள்ளே  பரவும் .

 

இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு அவர்களின் உடலை குளிர்விப்பதற்கான போதிய சூழல் இல்லாமல் இருந்ததும் காற்றோட்டம் இல்லாமல் போனதும் அவர்களை ஆபத்தான நிலைக்கு கொண்டுசென்றது.

 

அன்றைய நாளில் கரூர் மற்றும் நாமக்கலில் சுமார் வினாடிக்கு 4 மீக்கும் அதிகமான அளவில் காற்று வீசியது.  இதன் காரணமாக அப்பகுதியிலிருந்த மக்களுக்கு கொடும் வெப்பத்தன்மையின் தாக்கம் கணிசமாகக் குறைந்திருக்கு வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. காரணம் பெரிய அளவிலான கூட்டம் ஒரு சிறிய பகுதியில் கூடியிருந்ததே. சுற்றிலும் கட்டிடங்கள் அமைந்திருந்ததானால் காற்றின் ஓட்டமும் தடைபட்டிருந்தது .  இந்த நிலைமை கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு நிகழ்வுப் பகுதிகளிலும் காணப்பட்டது. மேலும் மக்கள் மிக அருகாமையில் இருந்த காரணத்தினால் உடலை குளிர்விப்பதற்கான எவ்வித வாய்ப்பும் இன்றி போனது. பெரும் கூட்டநெரிசலின் காரணமாக காற்று வீசும் தன்மை மிக குறைந்த அளவில் இருந்தது.

அப்பகுதியில் இருந்த மக்களின் உடலில் இருந்து வெப்பத்தை தனிப்பதற்க்காக  வியர்வை வெளியேறியபோதும் கூட்ட நெருக்கடியின் காரணமாக அவை உடலை குளிர்விக்கவில்லை.  இதன் காரணமாகவே பலர் மயக்கமடைந்தனர்.   மக்களின் உடலில் இருந்து வெளியேறிய வியர்வை அப்பகுதியின்  ஈரப்பதத்தை சுமார் 5% மேலாக  அதிகரித்திருக்கக்கூடும் . இதன் காரணமாக கொடும் வெப்பத்தன்மையும் அதிகரித்திருக்கும்.

கொடும் வெப்பத்தன்மை குறித்த ஆய்வு (நாமக்கல்) 

27.9.2025 அன்று நாமக்கலில் திரண்டிருந்த மக்கள் காலை 10  மணி முதல் மதியம் 3   மணி வரை, அதாவது சுமார் 5 மணி நேரம், கொடும் வெப்பத்தன்மை (யு.டி.சி.ஐ > 38 டிகிரி செல்சியஸ்) உள்ளாகி உள்ளனர்.  அன்றைய தினம் மதிய வேளையில் சூரிய கதிரியக்கத்தன்மை அதிகபட்சமாக சுமார் 816 W/m2 ஐ எட்டியிருந்தது.

நாமக்களில் 27.9.2025  அன்று நிலவிய யு.டி.சி.ஐ மற்றும் மயக்க நிகழ்வு குறிப்புகள்

இதன் விளைவாக நாமக்கல்லில் சுற்றுப்புற வெப்ப கதிரியக்கத்தன்மை (Mean Radiant Temperature)  மிக அதிக அளவை எட்டியது.  மேலும் சூரியக்கதிரின் நேரடித் தாக்கம் (Direct irradiation) மற்றும் குறைவான காற்றோட்ட நிலை ஆகியவற்றினால் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கொடும் வெப்பத்தன்மை நிலை (யு.டி.சி.ஐ > 38 டிகிரி செல்சியஸ்) உருவானது.  அதிகபட்சமாக அன்றைய தினம் யு.டி.சி.ஐ 42.6 டிகிரி செல்சியஸ்ஐ எட்டியது . இந்த அளவு என்பது ஒரு நபரை இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மயக்கமடைய செய்யக்கூடிய வெப்ப அளவாகும்.

ஆய்வின் படி நாமக்கல்லில் பிற்பகல் சுமார் 1 மணியளவில் மக்கள் மயக்கநிலை அடைந்திருக்கக்கூடும்.  மேலும் , பிற்பகல் சுமார் 2.35 மணிக்குத் த.வெ.க. தலைவர் விஜய் வரும்போதும், மாலை 4 மணிவரை இந்த நிலை நீடித்து இருந்திருக்க  வேண்டும். ஊடக செய்தியும் இந்த முடிவோடு ஒன்றி போகிறது.  இந்தக்கூட்டத்தில் கொடும் வெப்பத்தை எதிர்கொண்ட நபர்கள் அன்றைய தினம் மோசமான விளைவுகளை எதிற்கொண்டிருக்கக்கூடும்.

இந்த கூற்றை சரிபார்க்க, அன்றைய தினம் காலை 11 மணி அளவில் நிலவிய சூழலை JOS3 செயலி உதவியுடன் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அக்கூட்டத்தில் ஒரு ஆண் பங்கேற்றிருந்தால் அவர் மீது எத்தகைய தாக்கம் நிகழ்ந்திருக்கக்கூடும்  என்பது ஆராயப்பட்டது. அதனுடய ஆய்வு முடிவுகளை கீழே காணவும்:

இந்த ஆய்வு முடிவின் படி அன்றைய தினம் சுமார் 1:00 – 3:00 மணி அளவில் நாமக்கலில் கூடியிருந்த பெரும்பாலான மக்களின் உடல் வெப்பநிலை சுமார் 38.5 – 39.5°C  வரை எட்டியிருக்கக்கூடும் என கணிக்கப்பட்டது. இந்த அளவு என்பது மக்களை மயக்கமடைய செய்யக்கூடிய அளவாகும். த.வெ.க. தலைவர் விஜய் சுமார் 2:35 உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாகவே சுமார் 1 மணி அளவில் மக்கள் மயக்கமடைய துவங்கினர். அதே போல அவர் உரையாற்றிக்கொண்டு இருக்கும்பொழுதும் மக்கள் மயக்கமுற்றனர் . நிகழ்வு இன்னும் சிறிது நேரம் நீடித்திருந்தால்,  40°C அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் எதிர் கொண்டிருக்கக்கூடும். இது இன்னும் மோசமான நிலையை உருவாக்கியிருக்கக்கூடும்.

கொடும் வெப்பத்தன்மை குறித்த ஆய்வு (கரூர்)

27.9.2025 அன்று கரூரில் காத்திருந்த மக்களும் கொடும் வெப்பத்தை எதிர்கொண்டனர். சூரிய கதிரியக்கத்தன்மை மதியம் சுமார்  794 W/m2 ஆக நிலவியது. இதன் காரணமாக அதிக அளவிலான சுற்றுப்புற வெப்ப கதிரியக்கத்தன்மை (Mean Radiant Temperature) ஏற்பட்டது.

பிற்பகல் சுமார் 3:30 மணி அளவில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் சுமார் 20,000 ஐ தாண்டியது.  இதன் விளைவாக அப்பகுதியில் சராசரி கூட்ட அடர்த்தி ஆனது ஒரு சதுர மீட்டர் அளவில் 4 நபர்கள் என்கின்ற அளவை எட்டியது.  இந்த கூட்டம் கூடிய காரணத்தினால் காற்றோட்டம் கணிசமாகக் குறைத்திருக்கக்கூடும்.  இதனால் கொடும் வெப்பத்தன்மையும் (UTCI > 38 டிகிரி செல்சியஸ்) அதிகரித்தது. இதனால் காலை சுமார் 12 மணி முதல் மாலை 5 மணிவரை 5 மணி நேரம் கொடும் வெப்பத்தன்மையின் (யுடிசிஐ > 38 டிகிரி செல்சியஸ்)  தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகி உள்ளனர்.

கரூரில் 27.9.2025  அன்று நிலவிய யு.டி.சி.ஐ மற்றும் மயக்க நிகழ்வு குறிப்புகள்

 

அன்றைய தினம் கரூரில் சுமார் 12 மணியிலிருந்து 5 மணி வரை கொடும் வெப்பத்தன்மையின் தாக்கம் நிலவியது ஆய்வின் முடிவில் தெரிகிறது. மேலும் அப்பகுதியில் சுமார் 3:30 மணி அளவில் மக்கள் கூட்டதின் பெருக்கத்தின் காரணமாக கூட்ட நெரிசலும் உண்டாகியுள்ளது. இதன் விளைவாக சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5:30 மணி அளவில் மக்கள் மயக்கம் அடைய துவங்கினர்.

த.வெ.க. தலைவர் விஜய் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு பெண்ணும் அவரது மகளும் இறந்ததாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் அன்றைய தினம் அக்கூட்டத்தில் ஒரு தாயும் அவரது குழந்தையும் பங்கேற்றால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் உண்டாகியிருக்கக்கூடும் என்பதை JOS3 மென்பொருள் உதவியுடன் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் கீழே காணலாம்:

  1. தாய், வயது 35

2. குழந்தை, வயது 15

ஆய்வின் முடிவின் படி அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஓர் பெண்மணியும் அவரது குழந்தையும் 3:30 மணிக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டரை  மணிநேரம்  கொடும் வெப்பத்தன்மையை எதிர்கொண்டிருக்கக்கூடும் என்று தெரியவருகிறது .

குறிப்பாக   3:30 மணி முதல் 6:00 மணி வரை அக்கூட்டத்தில் இருக்க நேர்ந்தால் அங்கு நிலவிய கொடும் வெப்பத்தன்மையின் காரணமாக அப்பெண்மணி மற்றும் அக்குழந்தையின்  உடல் அக வெப்பநிலை 40°C  அளவைத் தாண்டிவிடும். இதன் காரணமாக வெப்பவாத தாக்குதலிற்கு உள்ளாவர். மேலும் அவர்களின் உடல்கள் அதன் சீர்தன்மையை இழந்து மரணித்திருக்கக்கூடும்  .

மேலும் இவ்வாய்வு முடிவுகளை உறுதி செய்ய பிரேத பரிசோதனை பகுப்பாய்வு  முடிவுகள் நமக்குத் தேவையாக உள்ளன. இதுவரை கரூர் துயர நிகழ்வில் மரணமடைந்த நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை பொது வெளியில் இல்லாத காரணத்தினால் இந்த ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டுப்பார்ப்பதற்கான சூழ்நிலை இல்லாததை இங்கு பதிவு செய்கிறோம்.

ஊடக செய்திகளின் மூலம், விஜய் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே  பலரும் மூச்சுத்திணறல்  மற்றும் உடல் சோர்வு காரணமாக மயக்கமுற்றனர் என்பது தெரியவருகிறது. அதனால் அன்றைய தினம் அக்கூட்டதில் பங்கேற்ற ஓர் இளைஞருக்கு என்ன பாதிப்பு உண்டாகக்கூடும் என்பதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. JOS3 மென்பொருள் உதவியுடன் ஒரு 25 வயது இளைஞர் அக்கூட்டத்தில் மயங்கியிருந்தால் அவர் என்ன பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பார் என்பதைக் கீழே காணலாம்.

ஆய்வின் முடிவின் படி சுமார் 6:30 அளவில் அப்பகுதியில் இருந்த ஒரு இளைஞரின்  உடல் அக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவிர்க்கு எட்டியிருக்கக்கூடும்.  இந்த நிலை என்பது வெப்ப வாதம் மற்றும் மாரடைப்பை உண்டாக்கக்கூடியது.  இத்தகைய நிலை அப்பகுதியில் அன்றைய தினம் நிலவிய காரணத்தினாலேயே பலர் மயக்கமுற்றிருக்கக்கூடும்.

அதற்கு பின்பாக விஜய் அவர்களின் வருகையின் காரணமாக மேலும் கூட்டம் அதிகரித்தது. அதனால் ஏற்பட்ட கூடுதலான கூட்டநெரிசல் காரணமாகவும் ஏற்கனவே வெப்பத்தாக்கத்தால் சோர்வுற்றிருந்த மக்கள் அதிக அளவில் மயக்கமடைந்திருக்க கூடும். இதன் விளைவாக கூட்டநெருக்கடி உண்டாகிருக்கக்கூடும்.  மேலும் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகுவதற்கான காரணிகளாக அமைந்திருக்கலாம்.

27.09.2025 அன்று கரூரிலும் நாமக்கலிலும் கொடும்வெப்பத்தன்மையின் தாக்கம் நிலவியது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது. அதே வேளையில், நாங்கள் அவ்விடங்களின் மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டோம். அந்த இடங்களில் இருந்த மக்கள் எவ்விதமாக நடந்துக்கொண்டனர், அவர்களின் உடல் மீது எவ்வளவு காற்று பட்டது போன்ற தகவல்களில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். அதே சமயத்தில்,  அங்கு நடைபெற்ற மயக்கங்கள் மற்றும் வெப்ப வாதங்கள்  கொடும் வெப்பத்தன்மையின் காரணமாகத்தான் நிகழ்ந்தன என்பது  தெளிவாகியுள்ளது.

பேரணிக்கு வந்த மக்கள் வேறுபட்ட உடல் மற்றும் மனநிலை கொண்டவர்கள்.  இவர்களுள் உடல் திடமாக இருப்பவர்களால் சாதாரண மனிதர்களை காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிக அக வெப்பநிலையை தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் அவர்களாலும் கொடும் வெப்பத்தன்மையை ஒரு குறிப்பிட்ட நேரம் வரையே தாக்குப்பிடிக்க முடியும்.

புதைபடிவ எரிபொருள்களை மனித இனம் அதிக அளவில் எரிப்பதனால் புவி வெப்பமடைந்து வருகிறது.   இதனால் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலை நீடுக்கும் பட்சத்தில்  கொடும் வெப்பத்தன்மை நிகழ்வுகள் இன்னும் அதிகரிக்கும். அவற்றின் வீரியமும் அதிகரித்துக்கொண்டே போகும்.  மேலும், நகரமயமாதலினால் ஏற்படும் வெப்பத்தேக்கம் போன்ற காரணிகளால் சமூகக்கூட்டங்கள் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு மாறிவுள்ளன.   எனவே, தமிழ்நாட்டில் மக்கள் கூடுவதற்கான பாதுகாப்பான வரம்புகள் பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளன என எடுத்துக்கொள்ளலாம்.

கோரிக்கைகள்:

அரசியல் கட்சிகள் தங்களை நம்பி வரும் மக்களின் பாதுகாப்பை முதன்மையாக வைத்து மட்டுமே இனி கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

  1. அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளை வெப்பநிலை சார்ந்து ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள், ஆய்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  2. மக்களை அதிக நேரம் குறுகலான சாலைகளில் கூரை/பந்தல் வசதியின்றி நிற்கவைத்து அதன் பின்னர் தலைவர்கள் வந்து சந்திக்கும் வகையில் திட்டமிடப்படும் Road Show தடை செய்யப்பட வேண்டும்.
  3. பொதுவாக அதிக வெப்பம் நிலவக்கூடிய பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் திறந்தவெளி பொதுக்கூட்டங்களைப் பகலில் அனுமதிக்கக் கூடாது.
  4. மாலை 6 மணிக்கு மேலாகவோ அல்லது உள்ளரங்கக் கூட்டங்களுக்கோ அனுமதி வழங்கலாம்.
  5. அப்படியேப் பகலில் அனுமதி வழங்கினாலும் போதுமான நிழற்கூரை/பந்தலுடன் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரத்திற்கு 2 லிட்டர் எனும் அளவில் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  6. ஒன்றிய அரசு கொடும் வெப்பத்தன்மையை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஓர் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
  7. கொடும் வெப்பத்தன்மை அளவிடுவதற்கான ஆய்வுகளை இந்திய வானிலை மையம் மற்றும் பிற ஆராய்ச்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
  8. கொடும் வெப்பம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய வானிலை மையம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  9. கொடும் வெப்பத்தன்மையைக் கணிப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய வெப்ப நிலைக்குறியீடு (Universal Thermal Climate Index) முறையை இந்திய வானிலை மையம் பயன்படுத்த வேண்டும்.
  10. அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளில் கொடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் குளிர்விப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.

மதுரை மாநாட்டில் நடந்த கொடும் வெப்பத்தன்மை குறித்த ஆய்வை இங்குக் காணலாம்: https://poovulagu.org/statements/extreme-heat-study-tvk-conference/

தொடர்புக்கு

அனு மணி

பிரியா சுரேஷ்

நிகழ்

9445236388

பின்னிணைப்பு : புனல் கட்டமைப்பு

புனல் கட்டமைப்பு என்பது நிகழ்வு நடந்த இடத்தில் மக்களின் செயல்பாடுகள், வெப்பச்சூழல் முதலிய கள அறிக்கைகளைக் கொண்டு அன்று நிலவிய உலகளாவிய வெப்ப  நிலைக்குறியீட்டை(Universal Thermal Climate Index).  கணக்கிடுகிறது இது கொடும் வெப்பத் தன்மையைக் குறிக்கும் முக்கிய குறியீடாகும். மேலும் இக்கட்டமைப்பு JOS3 போன்ற வெப்பஉடலியல் மென்பொருள்களைப் பயன்படுத்தி மேற்கூறிய UTCI கணக்கீடுகளை உறுதி செய்கிறது.

 

பின்னிணைப்பு :  யு.டி.சி.ஐ அறிவியல் விளக்கப்படம் 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments