தமிழ்நாட்டின் முதல் உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.51 எக்டர் பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள டங்க்ஸ்டன் கனிமத் தொகுதியை அணில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தின் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
Press Release_Press Information Bureauஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்துள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் தொகுதியானது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக(Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதியின் சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கருதி 21.11.2022 அன்று அரசாணை எண் G.O. Ms. No.201 வாயிலாக தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அந்த அரசாணையில் இப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக்கோயில்கள் இருப்பதாகவும், அரிட்டாபட்டி உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாகவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
arittapatti heritageஇந்த நிலையில்தான் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட புல எண் 379/1, 379/2 ஆகிய பகுதிகளையும் செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நடுவளவு, தெற்கு வளவு, செட்டியாபட்டி, சண்முகநாதபுரம், அரிட்டாபட்டி, கூலானிப்பட்டி, எட்டிமங்கலம் மேற்கு, நாயக்கர்பட்டி, மாங்குளம் கிழக்கு ஆகிய கிராமங்களின் வீடுகள், நிலங்களைக் கொண்ட 2015.51 எக்டர் பரப்பளவிலான பகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை / ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும் இந்த கனிமத் தொகுதிக்குள் வருகின்றன. கனிமத் தொகுதிக்குள் வரும் பெருமாள்மலையில் புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டுப் பூனை, மரநாய் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.
2018-2019 காலத்தில் இந்திய புவியியல் நிறுவனத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி அலகினால் மேலூர் தாலுக்காவில் உள்ள மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வள்ளலாப்பட்டி, சில்லிப்பியபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் கனிமவளம் குறித்த ஆய்வு (Reconnaissance survey for tungsten and associated mineralisation in Melur – Terkutteru – Muthuvelpatti areas of Melur taluk, Madurai district, Tamil Nadu. SR_TN_01 – Block-1 – Nayakkarpatti.) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில்தான் இந்த ஏல நடவடிக்கை நடந்து முடிந்துள்ளது.
15830_21. MBS_Nayakkarpatti Tungsten Block corrected on 23.02.2024
இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு இக்கனிமத் தொகுதி வழங்கப்பட்ட உத்தரவை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான எவ்வித அனுமதியோ, இசைவாணையோ வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறோம்.