அழிக்கப்படும் வெள்ளிமலை கோவில்காடு

பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தி தேயிலை தோட்டங்கள் அமைத்து, மரங்களை வெட்டி தேக்கு, தைலம், சீகை போன்ற மரங்களை பயிர் செய்து, கனிமங்கள் எடுக்க தாது சுரங்கங்கள் தோண்டி, யோகா ஆன்மீக மையங்கள் கட்டி யானைகளின் வழித்தடம் அடைத்து, வலுக்கட்டாயமாக பழங்குடிகளை அடித்து வெளியேற்றிவிட்டு மதுகுப்பிகளோடும் நெகிழி குப்பைகளோடும் வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்கு பெயர்தான் இன்று காப்புக்காடு அல்லது பாதுகாப்பான காடு. இந்தப் பேரழிப்புத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும், வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்து இதை அனுமதிப்பதற்கும், மலைக்காடுகளை முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்கும் அரசு உருவாக்கி வைத்திருக்கும் நிர்வாக அமைப்புதான் வனத்துறை. இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பும் வனத்துறை என்ற நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்பும் பல்லாயிரமாண்டுகளாக மலைக்காடுகள் பாதுகாப்பாகத்தான் இருந்தது. குறிஞ்சி நிலத்து பழங்குடி மக்களை மலைக்காடுகள் பார்த்துக் கொண்டன. மலைக்காடுகளை பழங்குடி மக்கள் பார்த்துக் கொண்டனர். காடுகளை, தங்கள் வாழ்வாதார இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறையென்பது பன்னெடுங்காலமாக மக்களின் பண்பாட்டு வாழ்வியலோடு கலந்து நிற்கும் தொடர் செயலாகும். முல்லை மற்றும் மருத நிலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் கோவில் காடுகள் அல்லது சாமி சோலைகள் அல்லது புனிதக்காடுகள் (Sacred Groves) ஒரு சான்றாக அமைகிறது. கோவில்காடு என்பது வனத் துறையின் கீழில்லாது, முழுக்க முழுக்க எளிய மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பாகும். அரசின் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எந்த விழிப்புணர்வு பிரச்சார கூட்டமும் நடைபெறாமலே இத்தனை ஆண்டுகளாக எளிய மக்கள் காடுகளை தங்கள் தெய்வமாக பாதுகாத்து வந்து இருக்கின்றனர்.

பொதுவாக கோவில்காடுகள் நாட்டார் இறைவழிபாட்டோடு நாட்டுப்புறப்புறங்களில் தெய்வங்களோடு இணைக்கப்பட்ட அமைப்பு களாகும். மேலும் எந்த ஒரு கோவில்காடும் புதிதாக நிர்மானிக்கப்பட்டது அல்ல. தமிழகத் தின் (கர்நாடக, கேரளாவிலும் கூட) பல்வேறு பகுதிகளில் இயற்கையான காடுகளுக்கு நடுவில் நாட்டுப்புறக் கோவில்கள் இன்றும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவை பன்னெடுங்காலமாகவே இருந்து வருவபை. ‘இந்தியாவில் கோவில்காடுகள் பற்றிய கருத்துரு வேளாண் காலத்திற்கு முன்பே, மனிதன் அலைந்து திரிந்த நாட்களிலேயே, தோன்றிவிட்டது’  (Kosambi 1962).  ஒரு சிலவற்றை தவிர அந்தந்தப் பகுதிகளில் இயற்கையான தாவர சமூகமே (Community) கோவில் காடாக்கப்பட்டது. கோவில்காடுகளில் இயல்தாவரங்கள் (Native Species)  கோவில்களுக்காக மனிதனால் புதிதாக உருவாக்கப்பட்ட காடுகளை நந்தவனம் அல்லது சாமி தோப்பு என்று அழைக்கலாம். நந்தவனம் பெருந்தெய்வ கோவில்களோடு தொடர்புடையவை. கோவில் நந்தவனங்களில் தாவரங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டன. எனவே நந்தவனங்களில் அயல் தாவரங்களை  (Foreign Species)  பரவலாக காண முடியும். தமிழகத்தின் பெரும்பாலான கோவில் நந்தவனங்கள்பக்திஇய க்கத்திற்குப்பின்புதான்நிறுவப்பட்டனஎன்பதற் குஇலக்கிய, கல்வெட்டு ஆதாரங்கள் பல சான்று பகிர்கின்றன. தமிழர் இறைவழிபாட்டிலும் நாட்டார் வழக்காற்றியியலிலும் கோவில்காடுகள் மிக பழமையான அமைப்பாகும் என்பது தெளிவு. தமிழ்நாட்டில்மட்டும் 448 கோவில்காடுகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மர வழிபாடு மிகப் பழமையான வழக்கங்களில் ஒன்றாகும். மரவழிபாடு ஆரியர்களுக்கு முற்பட்டதாகவும், ஆரியர்களுடன் தொடர் பற்றதாகவும், உலகத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும் கருதப்படுகிறது (Zimmer 1935).  உலகின் பழங்குடி மக்களினங்கள் பலவற்றில் இப்பழக்கம் இன்றும் காணப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் தல விருட்சங்களாக உள்ள தாவரங்கள் பலவும் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏறக்குறைய 127 வகையான தாவரங்கள் பாரம்பரிய மக்களால் வழிபாட்டில் உள்ளது. இதில் ஏறக்குறைய பாதியளவு தாவரங்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டிற்கு உரியதாக உள்ளது. மரங்களையும், மரங்கள், செடிகள், கொடிகள் அடர்ந்த காட்டையும் தெய்வமாக கருதி மக்கள் வழிபாட்டார்கள் என்பது தெளிவு.

மதுரை மாவட்டம் வடக்கு தாலுக்கா, தெற்கு ஆமூர் அஞ்சல், இடையபட்டி ஊரில் அமைந்துள்ளது வெள்ளிமலை காடு. ஏறக்குறைய 460 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்காடு, மதுரை வருவாய்துறை அரசு பதிவேட்டில் “தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக” குறிக்கப்பட்டுள்ளது. முன்பு 700 ஏக்கருக்கும் அதிகாமாக இருந்ததாக சொல்லுகின்றனர் இடையபட்டி ஊர் பெரியவர்கள். வெள்ளிமலை ஆண்டிக்கோவில் சுற்றி அமைந்துள்ளதால் இக்காட்டு பகுதியை வெள்ளிமலைக்காடு என்று அழைக்கின்றனர். வெள்ளிமலை கோவில்காடு பரப்பளவில் தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய கோவில்காடாகும். ஆனால் இன்று இந்திய – திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இராணுவ முகாம் மற்றும் மத்திய பாதுகாப்பு படை முகாம் அமைப்பதற்காக வெள்ளிமலை கோவில்காட்டை அழித்துவிட்டது ஆளும்வர்க்கம். எஞ்சியிருப்பது ஏறக்குறைய 100 ஏக்கர்தான்.

கால்நடடை மேய்ச்சலை தொழிலாக கொண்ட இடையர் குலத்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் வெள்ளிமலை காடு அமைந்துள்ள ஊர் இடையர்பட்டி என்றும் பின்னாளில் இடையபட்டி என்றும் அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் வழி நாம் உறுதிப்பட அறியும் செய்தி ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் அங்கு மேலோங்கி இருந்ததையும், வெள்ளிமலைக்காடு கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக விளங்கியத்தையும் அறிய முடிகிறது. ஸ்காடும்காடுசார்ந்த இடமும் முல்லை திணையாகும். முல்லை திணையில் சுட்டப்படும் காடு என்பது குறிஞ்சி திணையில் உள்ள அடர்ந்த மலைக் காடுகள் போன்றதில்லை. சின்ன சின்ன குன்றுகளை, புதர்காடுகளை உள்ளடக்கிய ஒரு மானாவாரி நிலப்பகுதியாகும். இன்னும் சொல்லப் போனால் முல்லை திணையில் காடு என்பது மானாவாரி காட்டை குறிப்பதாகவும் உள்ளது. இன்றும் வரகு, சோளம், குதிரைவாலி போன்ற தவசங்களை விதைக்கும் வேளாண்மையில் ஈடுப்படும் மக்கள் வேலைக்கு போவதை ‘காட்டுக்கு போகிறோம்’ என்றே கூறுகின்றனர். வயலை வயக்காடு என்கிறோம். முல்லை திணையின் மக்கள் இடையர், இடைச்சியர். முல்லைத்திணை மக்களின் தொழில் வரகு, சாமை போன்ற தவசங்களை விதைத்து வேளாண்மையில் ஈடுபடுவது, மந்தையை மேய்ப்பதாகும். பெரியார் அணை கால்வாய் பாசனம் இடையப்பட்டி பகுதிக்கு வருவதற்கு முன்பு இம்மக்கள் மானாவாரி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முதன்மை தொழிலாக ஆடு வளர்ப்பதும், மேய்ப்பதுமாக இருந்து வந்து இருக்கிறது.

இன்றும் அங்கு பெரும்பான்மை மக்கள் மேய்ச்சல் தொழிலை கொண்டுள்ளனர். முல்லை திணையின் நீர்நிலை காட்டாறு ஆகும். இடையப்பட்டியை அடுத்து, திருவாதவூர் ஊரை கடந்து உப்பாறு என்ற ஒரு காட்டாறு செல்கிறது. முல்லை திணையின் விலங்கு மான், முயல் போன்றவை ஆகும். பறவை காட்டுக்கு கோழி. இடையப்பட்டி வெள்ளிமலை கோவில்காட்டில் முயல், காட்டுக்கோழி, கவுதாரி, காடை போன்ற உயிரினங்கள் இன்றும் வாழ்கிறது. ஆக நம் கண்முன்னே உயிர்ப்புடன் இருந்த முல்லைதிணைஇடையப்பட்டிகோவில் காடும் அதன் பகுதியாகும். நம்கண்முன்னேஉயிர்ப்புடன் இருக்கும் முல்லை திணை இடையப்பட்டி. அந்தஊர்களை சுற்றி மரவழிபாடு பரவலாக காணப்படுகிறது. கடம்ப முனி, தேத்தா மர முனி என ஊர் காவல் தெய்வங்கள் மரவழிபாட்டோடு தொடர்புடையதாக இருக்கிறது. அருகிவரும் நீர்கடம்பம் என்றொரு வகை மரங்கள் அக்காட்டில் இருப்பதை காணமுடிகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நதிகள் பாய்ந்து அரித்த
மலைப்பாறை போன்ற பாறை படிமங்கள் இக்காட்டின் புவியியல் அமைப்புக்கு கூடுதல் சிறப்பு. இக்காட்டின் தன்மையை வறண்ட இலையுதிர் காடுகள் (Dry Decidious Forest) என்று குறிப்பிடுகிறார் மதுரை தியாகராயர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் திரு. பாபுராஜ்.

வெள்ளிமலையாண்டிக் கோவிலும், காடும் இடையபட்டி, தெற்காமூர், சொருக்குளிப்பட்டி ஆகிய மூன்று ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஊர் வழக்கப்படி ஆண்டுத்தோறும் காவலுக்கு பத்தில் இருந்து இருபது பேர் வரை ஆள் போட்டு வெள்ளிமலை காட்டு தாவரங்களையும் பிற காட்டு உயிரினங்களையும் பாதுகாத்து வந்தனர். ஒவ்வொரு தை மாதமும் அறுவடை முடிந்த பின் காட்டுக்கு காவல் இருந்த ஒவ்வொருவருக்கும், மூன்று ஊர்களை சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் தலைக்கட்டுக்கு இரண்டு படி நெல் என்கிற வீதம் கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு ஊதியமாக பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் காடுகளை பாதுகாக்க பாது காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்றும் இந்த பாதுகாவலர்களுக்கு இரண்டு மா நிலம் ஊதியமாக கொடுக்கப்பட்டதையும் பாண்டிய மன்னனின் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. கோவில் காடுகளை பாதுகாக்கும் முறை பழந்தமிழர் மரபாக உள்ளதை அறிய முடிகிறது. வெள்ளிமலை ஆண்டிச்சாமி கோவிலோடு தொடர்புடைய காடு என்பதால் அப்பகுதி மக்கள் பயபக்தியோடு காட்டுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாதவாறு ஊர் கட்டுபாட்டை ஏற்று நடந்தனர். ஊர்களின் கட்டுபாட்டில் இருந்தவரை காடு பெரும் பசுமை பரப்பாக, தங்கள் வாழ்வாதாரத்தின் ஊற்றாக இருந்தது. மரங்களை வெட்டினால், காட்டுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் சாமி தண்டிக்கும் என்கிற ஊர் மக்களின் நம்பிக்கை காலம் காலமாக காட்டை பாதுகாத்து வந்திருக்கிறது. வெள்ளி மலை காட்டில் காவலுக்கு ஆள் இருந்ததால் அந்நியர்களால் மரங்கள் வெட்டவோ உயிரினங்களை வேட்டையாடவோ முடியாது.

அந்நியர்கள் யாரவது மரம் வெட்டும் போது பிடிபட்டால், பிடிபட்ட மரக்கட்டைகள் தெற்காமூர் மந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலத்திற்கு விடப்படும். அதில் கிடைக்கும் வருமானத்தை ஊர் பொது நிதியில் சேர்த்து விடுவார்கள். தங்கள் முன்னோர்கள் காலம் காலமாக தெய்வமாக வழிபட்டு பாதுகாத்து வந்த காடு, சில ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ முகாம்களுக்காக வெட்டி சாய்க்கப்பட்ட போது, அதில் இருந்து ஒரு விறகு துண்டைக் கூட அப்பகுதி மக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக எடுத்துப் போகவில்லை. அவர்கள் அந்த காட்டில் உள்ள ஒவ்வொரு மரத்தையும் தெய்வமாகவே வழிபட்டார்கள். காட்டுக்கு தீங்கு விளைவித்த தங்களை தண்டித்த தெய்வம், காட்டு மரங்களை வேரோடு சாய்த்த ஆளும் வர்க்கத்தை, இராணுவத்தினரை, தங்கள் தெய்வம் ஒன்றும் செய்யவில்லையே என்கிற அவநம்பிக்கை அவர்களிடம் இல்லை. தங்கள் தெய்வம் தன் மக்களை மட்டுமே தண்டிக்கும் உரிமை படைத்திருப்பதாக நம்புகிறார்கள். அவர்கள் தெய்வம் இந்த உலகத்தை நானே படைத்தேன் என்றோ, நான் எல்லாம் வல்லவன் என்றோ, என்னால் எல்லாம் இயலும் என்றோ, இந்த உலக நிகழ்வுகள் எல்லாவற்றையும் நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன் என்றோ எந்த பிரம்மாண்டமான நம்பிக்கைகளையும் ஏற்படுத்தி வைக்கவில்லை. அந்த மக்களை போல தெய்வமும் சாதரணமாகவே இருந்தது. அவர்கள் நம்பிக்கையின்படி ஒட்டு மொத்த வனப்பரப்பும் தெய்வம் குடியிருக்கும் கோவில்தான். அதனால் மக்கள் யாரும் காட்டுக்குள் செருப்பணிந்து செல்வதில்லை. இடையப்பட்டி சுற்றுவட்டார மக்கள் வெள்ளிமலை காட்டை, அந்த புதர்க் காட்டை புனித பூமியாகவே கருதினார்கள். வெட்டுவதற்கென்றே சந்தனம், தேக்கு, செம்மரங்களை வனம் முழுக்க வளர்த்து நிரப்பிக் கொண்டிருக்கிறது வனத்துறை. பணம் தரும் பாத்திரமாக, நாம் உயிர்வாழ தேவையான கருவியாக மரத்தை காணும் பொதுபுத்தி வளர்ந்து வரும் இச்சூழலில் இயற்கை நேசம், பண்பாட்டோடு கலந்திருக்கும் பட்டிகாட்டு மக்களை பார்ப்பது நம் மனதுக்கு அளவற்ற ஆறுதலாக இருக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்ற வரலாறு அறிந்த நாம், எளிய மக்களின் உயரிய பண்பாட்டு வரலாற்றை உணராமல் போய்விட்டோம். மாவோ சொன்னது போல “மக்கள், மக்கள் மட்டுமே அனைத்தையும் படைக்கிறார்கள்”.

இடையப்பட்டி வெள்ளிமலை காட்டின் பரப்பில் இந்தோ – திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை (IDBP)   முகாம் 50 ஏக்கர் காட்டையும், மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF)  முகாம் 50 ஏக்கர் காட்டையும், தமிழ்நாடு காவல் படை பள்ளி 75 ஏக்கர் காட்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட்டது. 100 ஏக்கரில் சர்வதேச மருத்துவ பரிசோதனை கூடம் அமைக்க திட்டம் அரசுக்கு அனுப்பட்டுள்ளது. வெள்ளிமலை கோவிலுக்கு 25 ஏக்கர் காட்டு பரப்பை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள வனப் பகுதியை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்துக் கொண்டது. இப்போது எஞ்சியிருப்பதோ 120 ஏக்கரும் குறைவான காட்டு பகுதி மட்டுமே. இதனால் மேய்ச்சல் நிலம் குறைந்து கால்நடை வளர்ப்பு செய்து வந்த அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. காட்டின் கிழக்கு பக்கம் உள்ள கிரனைட் குவாரிகளில் இருந்து வெகுண்டெழுந்து வரும் வெடி சத்தமும் அரசு காவல் படை முகாம்களில் இருந்து வருகிற துப்பாக்கிச் சூடு சத்தமும் வன உயிர்களின் வாழ்வியல் சூழலை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

காடு சுருங்கி, வாழும் சூழல் பாதிக்கப் பட்டதால் கூட்டம் கூட்டமாக வெள்ளிமலை காட்டில் திரிந்த நரியும் மானும் தேவாங்கும் ஒ ன் று கூ ட இ ன் று இ ல் ¬ ல எ ன் ப து வேதனையின் உச்சம். தற்போது எஞ்சியுள்ள வெள்ளிமலை காட்டில் 50க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் 30க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களும் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் பறவை ஆர்வலர் திரு. பத்ரி நாராயணன். மரம், செடி, கொடி, புல், புதர், ஒட்டுண்ணி, நீர் தாவரம் என 100க்கும் மேற்பட்ட தாவர வகைகள் வெள்ளிமலை காட்டில் இன்றும் இருப்பதாக கண்டறிந்து சொல்கிறார் தியாகராயர் கல்லூரியின் ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர், திரு.பாபு ராஜ். நரி, தேவாங்கு, பாம்புகள், முயல்கள் இன்றும் காட்டில் வாழுவதாக கூறுகிறார்கள் இடையபட்டி ஊர் பொதுமக்கள். இடையபட்டி, தெற்காமூர், சொருகுளிப்பட்டி, கட்டையம்பட்டி, முக்கம்பட்டி, தச்சநேந்தால், இசலாணி, வரிச்சூர், கருப்புக்கால், காட்டுகுளம்புதூர், வெள்ளக்குப்பான், நெடுங்குளம், பனைக்குளம், ஆமூர் என சுற்றுவட்டார ஊர்களில் கால்நடை வளர்ப்புத்தான் தொழில், அத்தனை ஊர்களில் உள்ள ஆடு மாடுகளுக்கு வெள்ளிமலை காடுதான் மேய்ச்சல் நிலம். வெள்ளிமலைகாட்டைஅழித்து, இராணுவம் மற்றும் காவல்படை முகாம்களை, குடியிருப்புகளை மத்திய மாநில அரசுகள் அமைத்துவிட்டன.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் எழும் தேசிய இன விடுதலை கோரிக்கையை ஒடுக்குவதற்காகவேநடுவண் அரசுஇராணுவமுகாம்களைஅமைக்கிறது. ஒ வ்வொருமாநிலங்களையும்ராணுவமயமாக் கும்போக்கைதீவிரமாகசெயல்படுத்தியவரு கிறது. மேய்ச்சல் நிலமின்றி கால்நடைகளை வளர்க்க முடியாமல் மக்கள் திணறுகிக்கிறார்கள். போதாக்குறைக்கு இராணுவ முகாம்களில், காவல்படை குடியிருப்புகளில் இருந்து வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று பல ஆடு மாடுகள் செத்து மடிகின்றனர். ஒரு பக்கம் மேய்ச்சல் நிலங்களை எல்லாம் ஆக்கிரகித்து கொண்டு, மறுபக்கம் மக்களுக்கு இலவசமாக கால்நடைகளை வழங்குகிறது தமிழக அரசு.

கால்நடைகளை மேய்க்க மேய்ச்சல் நிலமற்ற ஏழை மக்கள் கால்நடைகளுக்கு என்ன தினசரி சுடுசோறா ஆக்கிப்போட முடியும்? சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் அவரை அனைவரும் வெள்ளிமலை காட்டில் உள்ள ஒவ்வொரு தாவரத்தையும் அடையலாம் காணுவது, அதன் மூலிகை, சமையல் பயன்கள் என்ன என்பதை ஒரு தாவரவியல் பேராசிரியரை போல விளக்குவார்கள். அந்த காட்டில் எங்கு தேவாங்கு இருக்கும், எங்கு முள்ளெலி இருக்கும், எங்கு உடும்பு இருக்கும் என்பதை மிக தெளிவாக சொல்கிறார்கள். வெள்ளிமலை கட்டை பற்றிய மக்களின் மரபு சார் அறிவு ஆவணப்படுத்த வேண்டிய ஒரு புதையலாகவும். இடையப்பட்டியில் புதிதாக முளைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் இன்றைய குழந்தைகள் தங்கள் நிலத்தில் இல்லாத அப்பிளையும், சீப்ராவையும், ஜிராஃபிகளையும் பற்றி பாட புத்தகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வகுப்பறையும் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்து மரபியல் அறிவு இப்போது அறுபட்டு நிற்கிறது. இயற்கை சூழலையும் தங்கள் ஆடுமாடுகளையும் நம்பி வேறு எவரையும் சாராது இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்வியலை வந்த மக்கள் இப்போது கூலி வேலைக்கு போகிறார்கள். தங்கள் தெய்வமான காட்டை பாதுகாத்து வந்தவர்கள் இப்போது பாதுகாப்புப்படை குடியிருப்புகள் வாசலில் வாயில் காப்பாளனாக இருமிக் கொண்டே நிற்கின்றனர். பெண்கள் அக்குடியிருப்புகளில் உள்ள அதிகாரிகள் வீட்டுக்கு கழிப்பறை கழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்குமான வேலைகளை செய்கிறார்கள். அதிகாரிகள் குடியிருப்புகள் பெறுக பெறுக தங்கள் விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி நிற்கிறது. பல்லாயிரமாண்டு வேளாண்மையில் இருந்தும், மேய்ச்சலில் இருந்தும் மக்கள் துரத்தப்படுகிறார்கள். தமிழக முதல்வர் பிறந்தநாளுக்கு நடப்பட்ட மரக்கன்றுகளை ஆடுமாடுகள் மேய்கிறது. மரக்கன்றுகளை நட்ட அரசியல்வாதிகளும், தொண்டு நிறுவன தொண்டர்களும் மேய்ச்சல் நிலம் பறிபோன அந்த ஏழைமாடுகளை எதோ தேசதுரோகியைப் போல அடித்து விரட்டிக் கொண்டு இருந்தார்கள். இதுதான் வேலைவாய்ப்பு, இதுதான் வளர்ச்சி. எல்லாம் இவ்வளவுதான். காட்டை அழிக்கும் திட்டத்தோடு வந்த அரசை எதிர்த்து நின்ற மக்களிடம், ஆளும் வர்க்கம் சொன்ன வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற கவர்ச்சியான சொற்கள் தந்த பரிசை நினைத்து நினைத்து அம்மக்கள் இன்றும் வருத்தப்படுகிறார். பஞ்சாயத்து தலைவர் தேர்தல், கிராம நிர்வாக அதிகாரி, காவல்துறை என்ற அமைப்போடு அரசு கிராமங்களுக்குள் புகுந்து தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துகிறபோது, மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள். மக்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பறிக்கப்படுகிறது. ஊர் தலைவர்கள் கூடி முடிவெடுக்கும் ஊர் சபை, ஊர் கட்டுப்பாடு, ஊர் பண்பாடு என எல்லாம் உடைந்தது சிதறுகிறது. ஊர் கட்டுப்பாடு என்னவென்பதை அறியாத புதிய தலைமுறையினர் வந்துவிட்டனர். புனித காட்டுக்குள் இப்போது புது புது மதுக் குப்பிகளை அதன் சிதறிய சில்லுகளை, நெகிழி பைகளை பார்க்க முடிகிறது. பாரம்பரிய இனக்குழு வாழ்வியலை இழந்து மக்கள், உலகமயமாக்கல் நகர மயமாக்கல் என்றொரு புதிய பாழ் கிணற்றுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

மதுரையை மையமாக கொண்டு சூழலியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் நாணல் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

தமிழ்தாசன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments