காவிரி ஒரு நடுநிலைப் பார்வை

காவிரி நதிநீர் பிரச்சனை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், தற்போது மிகப் பெரிய அரசியலாகவும், இனப் பிரச்சனையாகவும் விசுவரூபம் எடுத்துள்ளது. இரு மாநிலங்களின் பிரச்சனையை சற்று நடுவுநிலைமையோடு இக்கட்டுரையில் ஆராய்வோம்.

தமிழகத்தின் பார்வை

* காவிரிநீரை வைத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக நெல்சாகுபடி செய்து வருவது தமிழக விவசாயிகள் தான். நதிநீர் உற்பத்தி ஆகும் இடத்தை விட பாரம்பரியமாக அதை பயன்படுத்துவோருக்கு தான் முதல் உரிமை.

* கர்நாடக அரசு மத்திய அரசை மீறி தடுப்பணைகளை கட்டி வருகிறது. அந்த தடுப்பணைகளின் நீர்மட்ட அளவு பற்றி வெளிப் படையான தகவல் எதுவும் கர்நாடக அரசு வெளியிடவில்லை.

* கர்நாடகம், தமிழகத்தை சம பங்காளியாக தான் பார்க்க வேண்டும். வெள்ள நீரை தள்ளி விடும் இடமாக பார்க்கக்கூடாது.

*நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதித்து ஒரு போதும் தண்ணீர் விடுவது கிடையாது.

* தமிழகத்திற்கு காவிரி தான் முக்கியமான நதி ஆனால் கர்நாடகவிற்கு கிருஷ்ணா மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து நிறைய நதிகள் உள்ளன. கர்நாடகம் சட்டவிரோதமாக குடிநீர் மற்றும் பாசனம் என்ற பெயரில் பல துறைகளுக்கு தண்ணீரைத் திருப்பி உள்ளது. இவை தமிழக மக்கள் கர்நாடகம் மீது வைக்கப்படும் குற்றசாட்டு ஆகும். கர்நாடகத்தின் பார்வை;

* தமிழகத்தில் நிலையான விவசாயம் இல்லை

* தமிழகம் தண்ணீரை வீண் செய்து கடலில் கலக்கவிடுகிறது.

* கர்நாடகத்திற்கு தென்மேற்கு பருவ மழை செப்படம்பர் மாதத்தோடு முடிந்து விடுகிறது ,ஆனால் தமிழகத்திற்கோ வடகிழக்கு பருவ மழை மேலும் இருப்பதால் தமிழகத்திற்க்கு தண்ணீர் நிறைய இருக்க வாய்ப்பு உள்ளது.

*தமிழகத்தின் விவசாய தேவையை விட கர்நாடகத்தின் குடிநீர் தேவை தான் முக்கியம் என்கிறது கர்நாடக அரசு. இப்படி இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றசாட்டை வைக்கின்றனர் முதலில் இரு மாநிலங்களின் காவிரிப் படுகை நிலபரப்பை பற்றி பார்ப்போம்.

கர்நாடகத்தின் வடிகால் குறிப்புகள்

கர்நாகத்தில் காவிரி நதி17% கிருஷ்ணா நதி 59% வடிகிறது. கர்நாகடத்தில் வருடாந்திர சராசரி மழை 1152 Mm. Area 19179 sqkm

தமிழ்நாட்டின் வடிகால் குறிப்புகள்

வருடாந்திர சராசரி மழை 958mm area 130060 sqm
தற்போது காவிரியில் 740 டிஎம்சி தண்ணீர் உள்ளது. (அறுபது விழுக்காடு கணக்கில).

இந்த அளவு கோதாவிரியின் துணை நதியை விட சிறியது.

கிருஷ்ணாவில் தோரயமாக 2100 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

கோதாவாரி, கிருஷ்ணா நதியை ஒப்பிடும் போது காவிரி சிறிய நதிதான்.

கர்நாடகத்தின் முக்கியமான 11 அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு740.89 tmc.

இவை அனைத்தும் மத்திய அரசை மீறி கட்டபட்ட அணைகள். ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய அணைகளின் ஒட்டுமத்த கொள்ளளவு 190.11 Tmc..

காவிரியின் நிலபரப்பு: தமிழ்நாட்டில் 43856sqkm

கர்நாடகத்தில் 34273sqkm.கேரளாவில் 2866 sq km. புதுச்சேரியில் 160sqkm நடுவர் மன்றத்திம் தீர்ப்பின் படி

தமிழ்நாடு:  419tmc (512 வேண்டும் என்று கோரியுள்ளது இது), கர்நாடக: 270,tmc (465tmc கோரியுள்ளது).

கேரளா: 30, மற்றும்

புதுச்சேரி: 7

ஆக நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அந்த 419 டி.எம்.சியிலிருந்து

190 டிஎம்சி யை கர்நாடகம் தமிழகத்திற்கு விடவேண்டும். ஆனால் கர்நாடக அரசு ஒரு பொழுதும் அதற்கு தயராகயில்லை.

காவிரி தான் தென்கர்நாகடத்தின் உயிர் நாடி என்றாலும் அதே காவிரி நான் ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிர் நாடி.

கர்நாடகத்தின் நிலபரப்பு 1.5% தமிழத்தை விட பெரியது.

ஆனால் கர்நாடகத்தின் மக்கள் தொகை 6.4 கோடி தமிழகத்தில் 7.7 கோடி.

அதிகமான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ற மழை பெய்யாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருந்தாலும் கர்நாடகத்திலும் சில சிக்கல்கள் உள்ளது. கிருஷ்ணா நதியிலும் ஆந்திராக்கும் கர்நாடகத்திற்கும் பிரச்சனை தீர வில்லை என்பது வேறு கதை. ஆனால் காவிரி பிரச்சனை அளவிற்க்கு கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை வெடிக்கவில்லை என்பதற்கும் பெரிய அரசியல் இருக்கிறது.

மேலும் கர்நாடகத்தில் மிகவும் மையப் படுத்தப்பட்ட வளர்ச்சி. பெங்களூர்மைசூரில் தான் அதிகமாக தொழில் வளர்ச்சி
உள்ளது. பெங்களூரின் மக்கள் தொகை 1991ல் 41 லட்சம் தற்போது 96 லட்சமாக உள்ளது.அதில் 15லட்சம் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமிழகத்தின் விவசாய தேவையை விட பெங்களுரின் குடிநீர் தேவை தான் முக்கியம் என வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் பெங்களூருக்கு செல்லும் காவிரி தண்ணீரில் 50℅ நீர் வீணடிக்கபடுகிறது. இதை சரி செய்ய அந்த அரசும் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. கர்நாடக அரசு இந்த மையபடுத்தபட்ட வளர்ச்சியினாலும் காவிரி பிரச்சனை உண்டாகி உள்ளது என்பதை உணர வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு மாநிலங் களிலும் விவசாய முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி கர்நாடகாவில் ஐந்து மடங்கு உயர்த்தபட்டுள்ளது. கரும்பு தீவிர தண்ணீர் பயிராகும்  (water intensive crop)

துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கர்நாடகமும், தமிழ்நாடும் தான் கரும்பு சாகு படியில் மூன்றாவது, நான்காவது இடத்தில் இருக்கின்றன. மேலும் கர்நாடக மலபிரபா நதியிலிருந்து 4லட்சம் லிட்டர் தண்ணீரை பெப்ஸிக்கு விற்கிறது என்ற குற்றசாட்டு உண்டு. தமிழ்நாடு அதற்கு மேலாக ஒரு நாளிற்கு 15லட்ச லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றை சுரண்டி பெப்ஸிக்கு விற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இரு மாநிலமும் நீர்மறுலர்ச்சி, நீர் மேலாண்மையில் பின்தங்கியே உள்ளது. காவிரிக்காக அடித்துகொள்ளும் இருமாநிலமும் காவிரி மாசடைவதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தை போலவே பெங்களூரை சுற்றி உள்ள எல்லா ஏரிகளும் மாசடைந்துள்ளது. பெங்களூரின் மிகவும் மாசடைந்த ஏரியான பெல்லாந்தூர் ஏரியிலிருந்து வந்து சேரும் நீர் தான் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள 20லட்ச மக்களுக்கு குடிநீராக அமைகிறது.

நொய்யல் ஆற்றின் ரத்துபாளையம் அணையை எந்த ஒரு விவசாயியுமே திறக்க விரும்பமாட்டார்கள். அணை முழுக்க ரசாயன கழிவுகள் உள்ளன. இதை தடுக்க தமிழக அரசும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இப்படி அடிப்படையான எந்த ஒரு பிரச்சினையையும் அனுகாமல் இருப்பது இரண்டு மாநில அரசிகளின்.மெத்தன போக்கை காட்டுகிறது. இதர்கிடையில் நதி நீர் இணைப்பு,கடல் நீர் சுத்திக்ரிப்பு போன்ற சூழலியலுக்கு எதிரான திட்டங்கள் சில அறிவு சீவிகளால் முன்னிருத்தப்படுகிறது. கடல்நீர் சுத்திகரிப்பில் 100MLD  தண்ணீர் கிடைக்க 500-600கோடி செலவாகும், அதுவும் கடல் வளத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு தீர்வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் ஓரளவு பிரச்சினையை சரி செய்யலாம். ஆனால் மத்திய அரசு ஆதரவு தெரிவிக்காது. ஏன் என்றால் காவிரியை நம்பி இருக்கும் குளிர்பான நிறுவனங்கள் இழுத்து மூடப்பட வாய்ப்பு உள்ளது.காவிரியில் கொட்டப் படும் கழிவுகளை நிறுத்த வேண்டும் என்றால் ரசாயன தொழிற்சாலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஆக மேலாண்மை வாரியம் மிகவும் தேவையான ஆனால் கடினமான ஒன்றாகிவிட்டது.

மணல் கொள்ளையை தடுக்கவேண்டும்.காவிரி மணல் கோரமாக சுரண்டப்பட்டதால் நதியின் பிடிப்பு தன்மை மிகவும் குறைந்தவிட்டது. தண்ணீர் தீவிர பயிர்கள்அதிகம் வர பசுமைப் புரட்சியும் ஒரு முக்கிய காரணம். இது அனைத்தையும் தாண்டி காவிரி பிரச்சனை இனப்பிரச்சனையாக உருவெடுத் துள்ளது. பெங்களூரில் 15லட்சத்துகும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வது அங்குள்ள கன்னட இன வெறியர்களுக்கு உறுத்தலாக உள்ளது. ஆக அவர்களின் கன்னடமயமாக்கல் முயற்சிக்கு காவிரி பிரச்சினையை வைத்து இனவெறியை தூண்டிவிடுவது ஒரு புது யுத்தி. சூழலியல் பிரச்சனை இனப்பிரச்சனையாக உறு வெடுக்கும் என்பதற்கு காவிரிதான் சிறந்த எடுத்துக்காட்டு.

உணர்ச்சிரீதியாக இப்பிரச்சனையை அணுகினால் ஒரு போதும் தீர்வு கிடைக்காது என்பதே உண்மை. அதே “கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரை கூட தமிழகத்திற்கு தர முடியாது” என வன்மமாகக் கூறியது இப்பிரச்சனையை உணர்ச்சி ரீதியாக அணுகியதுதான் காரணமே. அந்த உணர்ச்சி வெறி தூண்டிவிடுவதற்க்கு நிறைய அரசியல்வாதிகளும் இயக்கங்களும் உள்ளன. ஊடங்களில் காவிரி பிரச்சனையை பற்றி பேசும் போது நீர்நிலை நிபுணர்களை வைத்து பேசுவதற்க்கு பதிலாக அரசியல்வாதிகளை வைத்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மாற்றங்கள் தேவைப்படுகிறது. நிலத்தடி நீர் மேலான்மை, சொட்டு நீர்ப் பாசனம், ஒருங் கிணைந்த நீர் பண்ணை, தண்ணீர் மறுசுழற்ச்சி, ஏரிகளை தூற்வாருதல் போன்ற முயற்சிகளை எடுக்கவேண்டும். அதுவும் பெங்களூரில் உள்ள மையபடுத்தப்பட்ட வளர்ச்சி பிரச்சனையை கர்நாடக அரசு யோசிக்க வேண்டும். இரு மாநிலங்களும் குறுகிய தண்ணீர் தேவை  (water extensive crop) பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். நிபுணர்கள் நிறைந்த நிலையான காவிரி நீர் மேலாண்மை வாரியாம் அமைக்க வேண்டும். அதற்கு மேலாக நீர் மேலாண்மைக்கு தங்கள் அரசியல்வாதிகளை மக்கள் வற்புறுத்தவேண்டும். காவிரி பிரச்சனையில் இரு மாநில விவசாயிகளும், உள்ளூர் மக்களும் உணர்ச்சிவசபடாமல், சூழலியல் சார்ந்து அறிவுசார்ந்து முடிவு எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இல்லையென்றால் நாமும் உணர்ச்சிவசபட்டு சில அரசியல்சக்திகளுக்கும், இனவாதிகளுக்கும் இறையானல் காவிரி ஒரு போதும் விடுபடமாட்டாள்.

மோகன்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments