தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்; ஒன்றிய, மாநில அரசின்  அலட்சியமே முக்கியக்  காரணம்

பட்டாசு
Picture: Indian Express Tamil

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி பகுதியில் “வனஜா” என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வந்த பட்டாசு ஆலை பல்வேறு விதிமீறல்களுடன் இயங்கி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முதற்கட்ட விசாரணையில் விதிமுறைகளை மீறி விடுமுறை நாளில் சிறிய அறைகளில் அதிகம் பேரை வைத்து வேலை வாங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வெடிபொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சில நாட்கள் முன்பு வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டிலும் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்வதும் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பட்டாசு ஆலை விபத்துகளைப் பொறுத்தவரை பெரும்பாலான விபத்துகள் விதிமீறல்களால்தான் நிகழ்கின்றன. விதிகளின் படி வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்யக்கூடாது. பட்டாசு  தயாரிக்கப்படும் கட்டிடங்களுக்குள் எல்லா பக்கமும் வாசல்கள், சன்னல்கள் இருக்க வேண்டும். முக்கியமான இவ்விரண்டு விதிகளும் மீறப்படுவதால் அதிக விபத்துகள் நேர்கின்றன. மேலும் பெரிய நிறுவனங்கள் விதிகளுக்குட்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளை விடுமுறை நாளாகக் கடைபிடிக்கின்றன. அன்று வேலை இல்லாதத் தொழிலாளர்களை சிறிய அளவிலான விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலையில் அமர்த்துகின்றன. இத்தகையை விதிமீறல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.

பட்டாசு ஆலை தொழிலானது அண்மைக் காலமாக குவாரி மாபியா போன்றதாக மாறி வருகிறது. தமிழ் நாட்டில் இயங்கும் குவாரிகள்தான் சுற்றுச்சூழலையும், பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் துளி அளவுக்குக் கூட பொருட்படுத்தாமல் இயங்கி வரும் ஒரு தொழிலாக உள்ளது. எந்த விதிமுறைகளையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம், எவ்விதச் சட்டங்களும் எங்களுக்குப் பொருந்தாது, எந்த அரசும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்கிற அலட்சியமான போக்கு குவாரி உரிமையாளர்கள் மத்தியில் நிலவுவது போன்றே பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் நிலவுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ் நாட்டில் உள்ள குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கும் ஒன்றிய அரசின் கீழான ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனத்திற்கும் (PESO) பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. NGT உத்தரவின் அடிப்படையில் ஆலைகளை ஆய்வு செய்யச் சென்ற மாநில மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகளைத் தங்கள் ஆலைக்கும் அனுமதிக்கக் கூடாதென திட்டமிட்ட உரிமையாளர்கள் 411 ஆலைகளை மூடி வைத்தனர். இதனால் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் போனது. ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுமதிக்க மறுக்கும் ஆலைகளை உடனடியாக சீல் வைத்து மூட NGT உத்தரவிட்ட பிறகே ஆலைக்குள் ஆய்வு நடத்தப்பட்டது.

பட்டாசு ஆலைகளைப் பொருத்தவரையில் ஆலைகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும் PESO அனுமதி பெற்றும் இயங்கி வருகின்றன. NGT பிறப்பித்த உத்தவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த 320  பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டு 22 ஆலைகளை விதிமீறல் காரணமாக மாநில அரசு மூடியுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பசுமைத் தீர்ப்பாயத்தில் தகவல் தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனத்தால்(PESO) அனுமதி வழங்கப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில்தான் இதுவரை அதிக விபத்துகள் நடந்துள்ளதாக PESO மீது தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு வைத்தது. “பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும் சட்டப்படி மாவட்ட நிர்வாகம்தான் 6 மாதத்திற்கு ஒருமுறை பட்டாசு ஆலைகளை சோதித்து அறிக்கை வழங்க வேண்டும்” என தமிழ்நாடு அரசு மீது PESO குற்றஞ்சாட்டியது. இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றன.

பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர் நிகழ்வாகிவிட்ட நிலையில், சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும், தொழிலாளர்களின் உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தமிழ்நாட்டில் தடை செய்வதே சரியாக இருக்கும். பழைய தேவையில்லாத மூடப் பழக்கங்களை கைவிட்டு தற்போதைய சூழலுக்கு உகந்த விஷயங்களைப் பின்பற்றும் சமூகமே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். தமிழ் சமூகம் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என விரும்புகிறோம். பட்டாசு வெடிப்பது ஒரு காலத்திலும் தமிழர்களின் கலாச்சாரமாக இருந்ததில்லை. பட்டாசு வெடிப்பது நமது பண்பாடு இல்லை; அது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொண்டாட்டம்.

பட்டாசு வெடிக்கும் பொழுது ஆர்சனிக், லித்தியம், காட்மியம், கந்தகம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம்,தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன. இதே நச்சுகள்தான் பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உடலிலும் கலந்து அவர்களின் ஆயுட்காலத்தை குறைக்கிறது.

பட்டாசு தடை பற்றிப் பேசும் பொழுதெல்லாம், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இங்கு எழுப்பப்படுகிறது. பட்டாசுகளை வெடித்து சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று கூச்சலிடுகிறார்கள் திடீர் மனிதாபிமானிகள். தாம் செய்யும் சூழல் சீர்கேட்டிற்கு தம்மைத்தாமே ஏமாற்றச் சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு இது. உண்மையில் பட்டாசுகளால் உடல்நலம் உருக்குலைந்து அவர்களின் எதிர் காலத்தையும், சில சமயங்களில் உயிரையும் இழந்து நிற்கும் முதல் நபர்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்தான்.  தொழிலாளர் உரிமை மீறல், அதிகப்படியான உழைப்புச் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் முறை என பல குற்றங்கள் அங்குதான் நடைபெறுகிறது. பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்றால் உண்மையில் அவர்களை வேறு தொழிலுக்கு மாற்ற அரசு முயல வேண்டும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

  1. NGT உத்தரவுப்படி உடனடியாக விதிமீறி செயல்படும் ஆலைகளை மூட வேண்டும்.
  2. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவானது பட்டாசு தொழில் அதிகம் நடைபெறும் இடங்களில் உள்ள மக்களின் சமூக நிலையை ஆய்வுக்குட்படுத்தி அவர்களுக்கான மாற்றுப் பொருளாதார வாய்ப்புகளை நீண்ட கால அளவில் செயல்படுத்திடப் பரிந்துரைகள் அளிக்க வேண்டும்.
  3. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments